காதல்...!! இது ஒரு சிறிய வார்த்தை தான் ஆனாலும் இது மிக்க ஆழமானது. இந்த சின்னஞ்சிறிய ஒரு சொல்லிலே ஒரு அகராதியே அடங்கியுள்ளது என்பதை எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூற வேண்டும். யார் வேண்டுமானாலும் காதலிக்கலாம். ஆனால் உண்மையான காதலை உணருபவர்கள் இன்று இந்த உலகத்தில் எத்தனை பேர்??
காதல் கொண்டு உயிருக்கு உயிராய் அன்பு வைத்து,, அந்த காதலே நிறை வேறாமல் போன பின் காதலை வெறுப்பதோ...அன்றி தூற்றுவதோ...காதலை புரிந்து கொண்டலாகாது. அதாவது ஒருவர் தாம் கொண்ட காதல் ஆனது ஏதோ ஒரு விதத்தில் திருமணத்தில் முடியாமல் போகும் போது...காதலை வெறுத்து, காதல் மீதே வெறுப்பு கொள்ளுதல் என்பது அவரின் அறியாமையே... காதல் புனிதமானது என்று பலரும் கூறுவர். என்னை பொறுத்த வரை காதல் ஆழமானது.
காதலை பற்றி கருத்து கூறுங்கள் என்று கேட்டால், காதல் இனிமையானது, சுகமானது என்று காதலித்து கரம் பிடித்தவர்கள் கூறுவார்கள்..அதே நேரம் காதல் வலி மிகுந்தது...கண்ணீரைத்தருவது என காதலை தொலைத்து விட்டு தாடியுடன் நடமாடும் பல இளைஞர்கள் கூறுவார்கள்.
உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை கூறின், என்னுடன் வேலை பார்த்த நண்பன் ஒருவன் ஒரு பெண்ணை காதலித்தான்..உயிருக்கு உயிராக காதலித்தான்.அவளே தான் உலகம் என்று சுற்றி சுற்றி வந்தான்.ஆனால் அவளோ இவனின் பணத்திற்கும் பகட்டிற்குமே ஆசைப்பட்டு இவனை சுற்றி சுற்றி வந்தாள்.ஒரு கட்டத்தில் இவனை விட பெரிய இடம் ஒன்று அவளை களவாடிச்சென்றது. பிறகென்ன வழமை போல் நல்லவனான இவன் எல்லா கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையானான். கல்வி பாதி வழியில்...வேலையில் கவனமின்மை... என தொடர்ந்தது.
இதற்கெல்லாம் மூல காரணம் அந்த பெண் தான் தவிர காதல் அல்ல. காதல் பாவம் ஒரு உயிருள்ள கண்ணுக்கு தெரியாத உணர்வு. அவன் கொண்ட காதல் தப்பல்ல...காதலித்த பெண்ணே தப்பானவள். அதன் பின் அவன் காதலர்களையும் தூற்றுவான். காதலையும் தூற்றுவான். அலுவலகத்திற்கு காதலர் தினத்தன்று பல வாழ்த்து மின்னஞ்சல்கள் வந்த போதெல்லாம் மிக்க கோபம் கொண்டு எல்லொரையும் ஏசினான். எல்லோரும் அவனை பரிதாபமாய் பார்த்த போதும் எனக்கு அவன் மேல் கடுங்கோபமே ஏற்பட்டது.
”உன் கோபத்தை நீ காதலித்த பெண் மேல் காட்டு. காதல் மேல் காட்டாதே..காதல் என்ற பயணத்தில் நீ தேர்ந்தெடுத்த வழி தான் தப்பானதே தவிர பயணம் தவறானதல்ல. இதற்கு மேலும் காதலை வைய்ந்தால் நீ வெறும் சடப்பொருள்...காதலை புரிந்து கொள்ள தெரியாத அறிவற்றவன் என்றே எண்ணுவேன்..” என்றேன். அவன் அமைதியானான். அவனால் வேறு எதுவும் பேச முடியாதே. காரணத்தை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.
மகிழ்ச்சியாக இருந்தால் இனிமை என்றும்..துன்பமாக இருந்தால் வலி என்றும் உரைப்பது உலக நியதி...! இதுவே, காதலின் வலியையும் பிரிவையும் ஒருங்கு சேர அனுபவித்து கொண்டு காதல் மிக்க இனிமையானது என்று ஒருவர் கூறினால் என்ன ஆகும்? இது காதல் தோல்வியின் உச்ச கட்டம் அல்லது அவருக்கு பித்து பிடித்து விட்டது என்றே உரைப்பார்கள்.
காதலித்து விட்டோமே என்பதற்காக எதிர்ப்புக்களை மீறி காதலில் வெற்றி கொள்வதாய் நினைத்து திருமணம் முடித்து அதன் பின் பலரின் கண்ணீரை சம்பாதிப்பது அல்ல காதலின் உண்மையான வெற்றி...!
பிரிந்து விட்ட காதலை எண்ணி தினம் கண்ணீர் வடித்து சுற்ற உறவுகளையும் சோகத்தில் ஆழ்த்துவதல்ல காதலின் வெற்றி...!
உண்மையான காதல் வெற்றி என்பது, எந்த வலியிலும், பிரிவிலும், எத்தனை ஆண்டு கடந்தாலும் உடலின் ஒவ்வொரு உதிரத்தின் அணுவிலும் அதே காதல் ஊறியிருப்பது தான். நிராகரித்து சென்று விட்ட காதலனோ காதலியோ எங்கிருந்தாலும் நிச்சயம் அவர்களை இதயத்தில் இருத்தி மானசீகமாய் காதலித்து, அவர்கள் வெறுத்தாலும் அவர் தம் முகத்தினை எண்ணி பூரிக்கும் காதல் தான் உண்மையான காதல் வெற்றி..!!!
இங்கு இருவரும் அருகருகே இல்லாவிடினும் உயிரோடு இரண்டறக்கலந்து விட்ட காதல் எப்போதும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும்...! இந்த காதல் வெற்றியை தமதாக்கி கொண்டவர்கள் இன்று எத்தனை பேர்??
உலகத்துக்கு தெரியாத உன்னதமான வெற்றி இது...!!
உலகம் இதை தூற்றும்...! மிக இலகுவாக Love Failure அதுதான் இப்படி என்று இகழ்ந்து விட்டு போவதுண்டு. இந்த அவச்சொல்லுக்கு அஞ்சி பல பெண்கள் குடும்பத்திற்காகவும் சமூகத்திற்காகவும் திருமணத்தை புரிந்து கொண்டு பின் முதல் காதலை மறக்க முடியாமல் த்த்தளிப்பதும், காலப்போக்கில் மறந்தும் போவதுண்டு. ஆண்களோ அல்லது பெண்களோ ஒரு சிலரே திருமணத்தை வெறுத்து தனிமையில் வாழ்வதுண்டு. அவர்களின் மனம் காதலில் வெற்றி கொண்டதாய் தான் என்றுமே இருக்கும். உலகம் எப்படி அவர்களை நோக்கினும் அவர்கள் காதலின் வெற்றியை தமதாக்கிக்கொண்ட காதல் சாம்ராச்சியத்தின் முடி சூடா மன்னர்கள்...!!!
உண்மையில் என் தனிப்பட்ட கருத்துப் படி காதல் ஒரு சமுத்திரம். அதை எல்லோரும் வேடிக்கை பார்க்கலாம், மெல்ல கால் நனைக்கலாம். கொஞ்சம் துணிவிருந்தால் அதன் மேல் பயணமும் செய்யலாம். ஆனால் எல்லோராலும் ஆழக்கடல் போய் முத்துக்குளிக்க முடியாது. அது ஒரு சிலராலேயே அது முடியும்.
இன்று காதல் என்ற பெயரில் பல ஏமாற்று வேலைகளும், கலாச்சார சீர்கெடுகளும் நடைபெறும் அதே வேளை உண்மை காதலும் உயிர் வாழ்கின்றது என்பதில் சிறு நிம்மதியே. இருந்தாலும் அதிகமான காதல் வெறும் புஷ் வாணங்களாகி விடுவதால் இன்றைய கால கட்டத்தில் உண்மைக்காதலுக்கு கூட மதிப்பு இல்லாமல் போய் அவற்றை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை உருவாகி உள்ளமை வேதனைக்குரிய கசப்பான உண்மையாகும்.
பின்னூட்டங்களுக்கு.....
http://www.facebook.com/notes/arasi-kavithaikal/katal-vei/290369018403