Search This Blog

Thursday, 18 September 2014

பயணம்....!!!பாதி வரை நடந்து வந்தும் ஓய்வில்லை...
வாழ்வினை கடந்து முடிய  இயலவில்லை....

ஓய்வில்லை ஓட்டத்திற்கு
ஓயவில்லை  பயணம்....!

திசைமாறிய  பயணம் ஒன்றால்
திக்குத்தெரியாமல் போன வாழ்க்கை....!

நழுவ விட்ட பயணம் ஒன்றால்
நடு வழியில் பிரிந்து நிற்கும் உறவுகள்....!

பயணங்கள் முடிவதில்லை - எமக்கு
பயணமே தொடங்கவில்லை இன்னும்....

தொடங்காத பயணத்தில் சிக்கி நெரிபட்டு
மூச்சு திணறி மூர்ச்சையாகி போயாச்சு....!

வாழ்க்கை என்னும் பயணத்தில் பயணிக்கவென்றே
வரிசையாகி நிற்கின்றோம்...

காலங்கள் பயணிக்கின்றன
வரிசைகள் நகரவில்லை....!

கால்கள் பயணித்த தூரம் அளந்தால்
காலம் யாவும் எங்கள் காலடியில் தான்

உள்ளம் பயணிக்கும் பயணம் ஒன்றே....!
உண்மை என்பேன்  மனதை வென்றே....!

உருக்குலைந்து போன நெஞ்சத்தின்
உக்கி மண்ணாய் போன நம்பிக்கையில்
உலகம் பயணிக்கின்றது பரிகசித்தபடி...

உருண்டு செல்லும் உலகின் பயணத்தில்
உருளாமல் நகராமல் எனது பயணம் மட்டும்
உடும்புப்பிடியாய் பற்றி நிற்கும் கோலம் என்ன....?
உணர்வற்றுப்போய் அசையாமல் காலம் நிற்பதென்ன...?

கடந்து விரையும் காலத்தின் பயணத்திலும்
அடித்து செல்லும் அலையின் பயணத்திலும்
முடித்து செல்லும் வாழ்வின் பயணத்திலும்
துடித்து விரையும் மரணத்தின் பயணத்திலும்....

படித்து கொண்டேன் கேட்டு அறிந்து கொண்டேன்
பயணங்கள் முடிவதில்லை மட்டுமல்ல
பயணங்கள் தொடங்கிடாமலும்
பயணங்கள் முடிவதில்லையும் என


வறுமை....!!!


படர்ந்து கிடக்கும் வானத்தை அண்ணாந்தாள்
பரவிக்கிடந்த மேகக்கூட்டங்கள் எங்கே?
இவள் நிலை எண்ணி எங்கோ ஒளிந்தனவோ...?

சுட்டெரிக்கும் சூரியனின் வெம்மை தாங்கிடாமல் 
முன்னிரவின்  பால் நிலவில் குளிக்க காத்திருந்தாள்...! 

பசியும் களைப்பும் பறந்தோடிடும்
பகலாகி போகும் அந்த குடிசையும் 

பரந்த வானம்  இங்கே வெறுமை கொண்டு   
பட்டினி போடுகின்றது அவள் வறுமை போன்று 

வறுமையால் சுருங்கிய உண்டி 
வெறுமையால் தவித்து பழக்கமாயிற்று....! 

நீர் நிரம்பிய வயிறு
நீண்டு செல்லும் இரவின் பயணத்தில்
நின்று தாங்கிடுமோ?

பால்நிலவின் ஒளியை பருகிட காத்திருந்தாள் 
பார் மூடிய இருளிளில் வானம் விழி முட்டி 
ஓவென்று அழுது கொண்டே இருக்கின்றது
ஓலமிட்ட மேகங்கள்  
ஒன்றோடொன்று கட்டியணைத்து
ஒப்பாரி வைக்கின்றது...! 

பட்டினி கிடக்கும் அவளின் 
பரிதவிப்பை எண்ணி அழுது வடிக்கின்றன...!

பாவி இவள் என்று பாவம் பார்த்து கதறுகின்றன.
பாவி மழையே உன் கண்ணீரில் குடிசை மிதக்கும் 
பரிதாபம் அறியாமல் யாருக்காய் அழுது தீர்க்கின்றாய் 
பதறி எழுந்து நீரில் விறைக்கும் வெறுமை கொண்டவளை 
பாழாய்ப்போன இயற்கையும் வறுமைதனை உணர்த்துகின்ற கொடுமை....!

வானத்தின் கண்ணீரோடு அங்கே அவள் கண்ணீரும் சேர்ந்து  
நீர்மட்டம் உயரந்தது  
வெறுமையும் கருமையும் கொண்ட இரவின் நீட்சி 
வறுமையின் சாட்சிகளாகி வானம் வரைக்கும் 
உரத்து கூ றியது....!

ஏனோ உலகம் இன்னும் உணரவில்லை
அமைதியாக தூங்குகின்றது....!
சிறுமை குணம் கொண்டதால் 
வறுமை பெற்று வரும் இன்றைய உலகம்...!

அருமை விளங்கிடாத  
எருமை  மானிடம் சிந்தி சிதறும் பருக்கையின்  
பெருமை உணரந்திடும் இந்த 
வெறுமை கொண்ட உண்டிகள் மட்டுமே...!  

Monday, 8 September 2014

மனமாற்றம்


உனக்கும் எனக்குமான இடைவெளி ஆயிரம் மைல்கற்களை தாண்டி நிற்கின்றது.....!
உள்ளங்கள் அணுக்களின் பிணைப்பை வென்ற இணைப்பில் இணைந்திருகின்றது....!

உணர்ந்து கொண்டும் ஏன் அடம்பிடிக்கின்றாய்...!
உயிர் வதை பெற்றிட ஒற்றைக்காலில் நிற்கின்றாய்..!

நம்பிக்கைகள் உன்னை நட்டாற்றில் கை விட்டு 
சென்றுவிட்டதாக கலங்கித் தவிக்கின்றாய்...!

உன்னை மூடியிருந்த கறை மெல்ல மெல்ல நீங்கிப்போவதும்,
உன் மேல் கொண்ட தவறான புரிதல்கள்,
உன்னைப்பற்றிய வதந்திகள் பறந்தடித்து ஓடுவதும் 
உந்தன் விடியலுக்கான அறிகுறி என்பதை 
நீ அறியாமல் இருப்பதேனோ??

உருக்குலைந்த உந்தன் உருவத்திற்குள் ஒரு 
உன்னதமான உள்ளம் உண்டென்பதை 
உலகம் மெல்ல மெல்ல அறிந்து கொண்டு வருகின்றது என்பதை அறியாயோ....!

உனக்கே உனக்காய் உயிர் கொண்ட உறவுகளாய் நாம் இருக்க
உயிர் பறிக்கும் களம் நாடி செல்ல ஏன் துடிக்கின்றாய் உயிரே??

உயிரும் உடலுமாய் போனவனே 
உன்னை தடுப்பதில் காட்டும் வேகத்தின் காரணம் அறியாயோ???
முண்டியடித்து உயிர்ப்பலி ஆகிடத் துடிப்பது நியாயமோ??

போராட்டங்களும் எதிர்நீச்சலும் பொருளற்று போக விடாதே...!
காத்திருப்புக்களும் கண்ணீரும் கலைந்து போக விடாதே...!

முழுவதுமாய் தோற்று விடுவேன்....!
முடித்து செல்லாதே இடைநடுவில்.......

பாதை தவறி நாம் பயணிக்கவில்லை....
பாதைகள் தடுக்கப்பட்டு
பயணம் இடைநிறுத்தப்பட்டு
பரிதவித்து நின்று போராடுகின்றோம்...!

நேர்மைக்கும் சட்டத்திற்கும் கிடைத்த சன்மானங்கள்
எங்கள் விழிகளில் கண்ணீராய் வலிகளில் உதிரங்களாய்
நிறைந்து போய் கிடக்கின்றது....!

அவமானங்களும் தூற்றல்களும் புறந்தள்ளுகைகளும்
மலிந்து கிடக்கின்றது மனங்களில் ரணங்களாக....

மறந்து சென்றிடாதே
மனதை வென்று இங்கே பொறுத்திரு....
மனிதம் அற்றுப்போன உலகில்
மனதை வெறுத்துக்காத்திரு...

கடந்த கால கறை துடைக்க விரைந்து வரும்
எதிர்காலம் பறை சாற்றும் விரைவில் உன் புகழை...

எழுந்து நில்...!
எமன் உன் காலடியில் வலை விரிக்கின்றான்....
விழுந்து விடாதே அவன் வலையில்....

மனமாற்றம் நீ பெற்றிட வேண்டும் என்று 
மனமுருகி மன்றாடுகின்றேன் ....