Search This Blog

Saturday 31 October 2009

இரவுக்கு.., நான் தோழன்..!! எனக்கு.., இரவு தோழன்..!!




காதலிக்கின்றேன், என்பாள் பொய்யே..!! 
காதலனே..! கண்ணாளனே..! என்பாள் பொய்யே..!!

நீயின்றி நானில்லை என்பாள் பொய்யே..!! 

நீர், நிலம், காற்று, சுற்றும் பூமி.. நீதான் என்பாள் பொய்யே..!

இதயத்தில் நீதான் என்பாள் பொய்யே..!! 

இதயத்துடிப்பே,, உனக்காகத்தான் என்பாள் பொய்யே..!!

உன் முகம் பார்க்காமல்,,, உயிர் வாழ மாட்டேன் என்பாள் பொய்யே..!! 

உலகமே எதிர்த்தாலும் உன்னோடு தான் என் வாழ்வென்பாள் பொய்யே..!!

பிரிந்து செல்லாதே.. என்பாள் பொய்யே..!! 

பிரியமான காதலா..! என்பாள் பொய்யே..!!

சிரித்து சிரித்து,, அழுவாள் பொய்யே...!! 

அழுது அழுது,, சிரிப்பாள் பொய்யே..!!

கை பிடித்து நடந்து, வந்ததும் பொய்யே..!! 

கண்ணீரில் என்னை கரைத்ததும் பொய்யே..!!

குதூகலித்து, பேசியதும் பொய்யே..!! 

குறுஞ்செய்தி சேவைகளும் பொய்யே..!!

"வருகின்ற திங்கள் திருமணம்,," என்பாள் உண்மையே..!!

"வரப்போகின்ற கணவன், வெளிநாட்டில்" என்பாள் உண்மையே..!!

"வருந்தாதே நண்பா,, "என்பாள் உண்மையே..!!

"வந்து விடாதே திருமணத்திற்கு,," என்பாள் உண்மையே..!!

இதயம் சுக்கு நூறாகி நிற்பேன் நான் மட்டுமே...!! 

இல்லறத்துணையுடன்,, இனிமை காண்பாள் அவள் மட்டுமே..!!


பொய்யை விலக்கி, உண்மையை தெரிந்தெடுக்க - நான்  

நீரை விலக்கி, பாலை உண்ணும் அன்னப்பறவை இல்லையே...!! 
ஏமாந்து விட்டேன் நான் - அதனால் 
ஏம்பலித்து தினம் துடிக்கின்றேன்..!! 




இருட்டினில் மட்டும் மெல்லக்கசியும் என் கண்ணீர்..!! 
இலவம் பஞ்சு தோற்று விடும் - என் 
இதயத்தின் மென்மையோடு..!! 
இருளோடு நான் மட்டும்  தனியாக !!
இரவுக்கு.., நான் தோழன்..!! எனக்கு.., இரவு தோழன்..!!




" அரசி நிலவன் "




குறிப்பு : விவேகசிந்தாமணியில் உள்ள "வெம்புவாள் விழுவாள் பொய்யே..." என்ற பாடலைத்தழுவி எழுதப்பட்டது ஆகும்.  

உறங்கவில்லை என் விழிகள்...!!!


என் உயிரோடு உயிராகி...
என் உணர்வோடு உறவாடி...
என் உதிரத்தில் உறைந்த உறவு ஒன்று ,
என் உயிர் நீங்கி போனதால்,
உறங்கவில்லை என் விழிகள்...!!!


" அரசி "

உயிரின் பிரிவும்….! உறவின் பிரிவும்…!

உடலைப்பிரிந்து சென்ற,
உயிர் ஒன்று மீள..
உடல் சேராது என்ற,
உண்மையை..,
உணர்ந்து கொள்ளும் வரை,
உயிரை உருக்குலைக்கும் பிரிவுத்துயரானது,
உள்ளம்…!
உணர்ந்து கொண்டதும் ஆறி விடும்…

உள்ளத்தை விட்டுப்பிரிந்து சென்ற,
உறவானது..!
உலகத்தில் எங்கோ ஓரிடத்தில்..
உயிரோடு வாழும் போது - அந்த
உயிரான உறவு! எப்போதாவது மீள
உறவாகிடுமா?? என,
உள்ளத்தில்...
உண்டாகும் யுத்த களத்தில்..
உயிரானது மரணித்து மீண்டும்,
உயிர்த்தெழுகின்ற... பிரிவுத்துயரானது,
உயிர் துறக்கும் வரை ஆறாது...!

"அரசி"

உயிரோடு கலந்தவளடி நீ...!!!!!




சுண்டி விட்டால் உதிரம் வரும் வெள்ளையடி..நீ..!!
மிளகாய் கடித்தவள் போலாகின்றாய்..
என் வதனம் கண்டால்...,
கோபம் கொண்டல்ல... நாணம் கொண்டு...!!!
சந்திக்க வரும் தருணமெல்லாம்...
சங்கடப்பட்டே காலத்தை போக்கிடுவாய்...!
சுற்றி முன், பின் கண்களை அலைய விடுவாய்..!
உன் திருட்டு விழிகளால்..., ஊரையே கூட்டிடுவாய்..!
உன்னை பார்த்தால், எனக்கும் வியர்த்து கொட்டும்..!!!

உதட்டின் அசைவாலே,, என் வினாவுக்கு விடையளிப்பாய்..!
உன் கண்களின் மொழி படித்து, பட்டமும் பெற்றுவிட்டேன்..
உன் பல்கலைக்கழகத்தில்...!!!
இன்னும் நான் ஒரு வேலை இல்லா பட்டதாரி தான்...!!
எப்போது நியமனக்கடிதம் கொடுப்பாய்...?
உன் கணவன் என்ற பதவிக்கு...!!!

உண்டி சுருங்கிய அழகிய...,
உயிரோவியமடி...நீ..!!!
உள்ளத்தால் குழந்தையாக...,
உருவத்தால் காதலியாக...,
உணர்வால் மனைவியாக...,
உயிரோடு கலந்தவளடி நீ...!!!

"அரசி " 

Sunday 25 October 2009

அவள் கன்னி அல்ல,, கன்னி அல்ல...ஒரு கண்ணி...!!!!


















காரிகையின் காதலை நம்பி,
காத்திருந்தேன் கன காலம்!
காணாமல் போய் விட்டாள் - என்
காதலை பொய்யாக்கி விட்டு....

காலம் செய்த கோலம் என்று,
பொய்யுரைக்க மாட்டேன்...!
காதலி செய்த நாடகம் என்று,
மெய்யுரைக்கவும் மாட்டேன்...!

மாறாக........

என்னோடு வாழ அவளுக்கு..,
அதிஷ்டம் இல்லை என்பேன்..!

என் புன்னகையின் அழகை,
ரசிக்க தெரியாதவள் என்பேன்..!

என் கவிதைகள் அவள் மேல் கொண்ட,
எண்ணற்ற காதலை புரிந்து கொள்ளாதவள் என்பேன்..!

என் ஆண்மையின் மென்மையினை..,
உணர முடியாதவள் என்பேன்..!

என் குழந்தை உள்ளத்தை...,
அறிந்து கொள்ளத்தெரியாதவள் என்பேன்..!

கண்ணீர் வடிக்கும் என் இதயத்தை...கூட,
கண்டு கொள்ள முடியாத குருடி என்பேன்..!

அவள் கன்னி அல்ல,, கன்னி அல்ல...
என்னை தாக்க வந்த....
கண்ணி என்பேன் கண்ணி என்பேன்..!!!

" அரசி "

இரட்டிப்பாக்கி விடு...! இரவலனான அவன்,, வாழும் காலத்தினை...!!!




இதய நோய் என்று சொல்லி வந்தவன்...
இலட்சங்கள் பலவற்றை அபகரித்து விட்டு - என்
இதயத்துடிப்பினையும் அதிகமாக்கி விட்டான்...
இறைவன் என்றொருவன் இருந்தால்..,
இரட்டிப்பார்க்க வேண்டும் அவன் ஆயுளினை...!

நாளை நடக்கும் சங்கதி தெரியாமலேயே - அவன்
பொட்டென்று உயிரை விட்டு போய் விடக்கூடாதே...

அடுத்தவனை ஏமாற்றி அதில் உயிர் வாழும்,
அவனுக்கு அவஸ்தை என்றால் என்ன என்று,
அடித்து, உதைத்துக்கூற முடியாது...!

அன்பாக எடுத்து சொல்லி புரிய வைக்க,
அவன் ஒன்றும் ஆறறிவு ஜீவனல்ல...!

சுயமாக சிந்திக்க அவனுக்கு...,
சுய புத்தியும் இல்லையே...!

பட்டுணர வேண்டும்..! அதற்கு அவன்,
பலகாலம் வாழ வேண்டும்..!

தன் செயலை எண்ணி வெட்கப்பட்டு,,
தன்னை தானே வெறுத்து...,
தனக்குத்தானே காறித்துப்பி..,
தற்கொலை செய்யும் வரை...,
தப்பித்து விட அனுமதிக்காதே...இறைவா..!!

இதயத்துடிப்பினை சமனாக வழங்கி...,
இரட்டிப்பாக்கி விடு...!
இரவலனான.. அவன் வாழும் காலத்தினை...!!!

" அரசி "

யார் புரிய வைப்பார்கள்???







நட்ட நடு சாமத்திலே
பசியின் கொடுமை வயிற்றை தாக்க
துப்பாக்கியோடும்.. இராணுவ பூட்சுகளோடும்
போராடி ஓய்ந்த மேனி வலியால் துவள,
அரை உயிரோடு துடிக்கின்றான்..
கனவுகளோடு, தன் வாழ்வினையும் தொலைத்த
கன்னித்தமிழன் ஒருவன்..!


மனம் விரும்பியவளை..
மாலையிட்டுக்கொள்ள,
மாமாங்கப்பிள்ளையார் கோவிலுக்கு,
மஞ்சள் தாலியுடன் சென்றவனை,
மடக்கிப்பிடித்து ஒரு துரோகக்கும்பல்..!


கிழக்கிற்கு புதிதாக ஊடுருவிய
“வடக்கின் புலி” என்று முத்திரை குத்தி,
தெற்கின் “பூஸா” விற்கு புரமோஷன்
வாங்கி வந்தவர்களில் இவனும் ஒருவன்..!


ஒவ்வொரு கணமும் செத்துப்பிழைக்க வைக்கும்
சித்திரவதையை விட..
மரணத்தை அதிகமாக,
நேசிக்கும் உயிர்களில் இவனும் ஒருவன்..!


கிழக்கு மாகாணத்திற்கு காதல் செய்ய சென்ற,
இந்த அப்பாவியை கொடுமைப்படுத்துபவர்களுக்கு
யார் புரிய வைப்பார்கள்...???
"கோர்ட் சூட்" அணிந்து
பாதுகாப்பின் உச்சத்தில்
பாராளுமன்றம் சென்று வருவது..
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் புலி என்று ..!




"அரசி "




தொலைந்து போய் விட்டாள் அவள்....!!!



சித்தரித்து வைத்த
சித்திரம் ஒன்று
சிரித்தபடி என் முன்னே நிற்க..
சிலிர்த்து விட்டேன்…நான்..!!

பார்த்து பார்த்து அடியேன் இதயமதில்
செதுக்கி வைத்த சிற்பம் கண் முன்னே
உயிருடன் கண் சிமிட்ட..
உயிரோடு சிலையானேன்.. நான்..!!

சற்றும் தாமதிக்காது அந்த அழகோவியம் – என்னை
அண்மித்து தன் காதலை செப்பியது…!
நானோ,, 
எதோ ஒரு உலகம் சென்று திரும்பினேன்..!
சொப்பனமன்று என்று அறிவு உணர்த்தினாலும்,,,
அதை உணர மறுத்தது இதயம்..!
இதயம் உணர்ந்தபோது அவள்
சென்று விட்டாள் தொலைதூரம்..!
வாயைப்பிளந்து நின்ற என்னை,
சுற்றி நின்ற கூட்டம் மொய்ப்பதற்குள்,
ஓட்டமெடுத்தேன் அவளை நோக்கி...
நம்மூரைப்போல சோதனைச்சாவடிகள் இல்லாத
காரணத்தினாலோ என்னவோ...? அவள்
அடைந்து விட்டாள் தன் இருப்பிடத்தை
வெகு விரைவாக…

மின்னலாய் வந்து சென்றவளின்
நினைப்பால்.... 
ஒரு இரவுப்பொழுது..ஓர் யுகமாகி… 
உறவுகள் அன்னியமாகின…!
துள்ளி எழுந்த போது… புலரவில்லை காலைப்பொழுது..!
கண் விழித்து காத்திருந்து கன்னியவளை,
கண்ட போது….அந்தி சாய்ந்தது மாலைப்பொழுது..!
கரம் பிடித்து காதலை சொன்னேன்..!
கட்டியணைத்து முத்தமிட்டேன்…!

என்னை விட புண்ணியம் செய்தவன்
எவனுமில்லை…
என்றிருந்தேன்.. மமதையுடன்..!
எண்பது நாட்களில்…
என்னை விட "பைத்தியக்காரன்"
எவனுமில்லை,,,
என்றுணர்த்தி விட்டு,
தொலைந்து போய் விட்டாள் அவள்....
இன்னொரு ஆண் மகனின் வாழ்வை
தொலைக்க……………


"அரசி "

Saturday 24 October 2009

அடங்கா மண்ணிலே... அமைதியாய் துயில் கொண்டிருப்பேன்..!!!




இலட்சியங்கள் கனவாகி விடுமோ...??
இரவுகள் விடியாது போகுமோ...??

காத்திருந்து...,
காலங்கள் அழிந்தது..!
காதலன் காற்றோடு கரைந்து போனான்..!

சொந்தங்கள் சிதறி...
சொர்க்கம் ஏகின..!
சொல்ல வார்த்தை இல்லை..
சொப்பனத்திலும் அழுகை தான்..

கால் போன போக்கிலே,
காடு மேடெல்லாம் நடந்து...,
பித்து பிடித்தவள் போல,
பிதற்றி பிதற்றி வந்தேன்...!

பிஞ்சுகளை பிய்த்து போட்ட எறிகணை,
பேதை என்னை விட்டு வைத்தது ஏனோ..??
உறவுகள்.. உயிரை விட்ட கிபிரின் குண்டுக்கு - நான்
உயிர் தப்பியது ஏனோ..??

இடைத்தங்கல் முகாமில் வந்து...,
இடிபடுவதற்காக....,உயிர் மீண்டு வந்தேனோ...??
இதற்கு...நான் என் மண்ணுக்கு,
உரமாகி போயிருக்கலாம்..!

அடங்கா மண்ணிலே...!
அமைதியாய் துயில் கொண்டிருப்பேன்..!
அன்பு மண்ணிலே...! உயிர்
அடங்கி போயிருப்பேன்...!!!

உணர்வை உயிர்ப்பித்து,,
உயிரைக்கொடுத்து...,
உடலை மண்ணுக்கு தந்திருப்பேன்...!
உண்மையோடு நான் தூங்கி போயிருப்பேன்..!

மாறாக...

உணர்வை இழந்து...,
உடலை வருத்தி....,
பொய்மையோடு போராடி,,
உயிரோடு மரணித்து கொண்டிருக்கின்றேன்...!!!.

" அரசி "

Friday 9 October 2009

முல்லையில்.... கடற் பறவைகளின் கூச்சல்...!!!


கரிகாலன் ஆட்சியிலே - நாம்
கட்டுமரம் ஏறி போகையிலே..
கடலலைகள் தாலாட்டிடுமே...!
கண்குளிர நிலா மகளை ரசித்து, ரசித்து..
கன மீன்களை அள்ளிடுவோமே...!

சுறாக்கள் எம் வலையில் சிக்க முன்,
டோறாக்களின் பார்வையில் சிக்காது,
திரும்பிடுவோம் கரையை நோக்கி...



தம்பிமாரின் விசைப்படகில்..
தலை நிமிர்ந்து பறக்கும்,
தாயகக் கொடியின் அணிவகுப்பு.. கடற்
தாயினை பெருமை கொள்ள வைக்குமே...!

இன்று...

காலனவன் ஆட்சியிலே...!
கட்டுமரம் கரையிலே...!
கட்டப்படாமல் கிடக்க..
கடற் பறவைகளின் கூச்சல் மட்டும்...,
கேட்கின்றது...காதுகளில்..!

கரைக்கு வராத மீன்களை எண்ணி, இந்த கூச்சலோ..??
கரை ஒதுங்கும் தமிழனின் சிதைந்த பாகங்களை..,
கண்டு எழுந்த கூச்சலோ...??

என்னுயிர் நீங்கி,,, நீ விழி மூடாதே..!!



சொந்தமே...!!!
சொந்த மண்ணில் காணாமல் போனவனே....!
காணாமல் போனோர் பட்டியலில் 
காத்திருப்பது... 
உன் பெயர் மட்டுமா..?
என் உயிரும் அல்லவா...??


என்னை வழியனுப்பி சென்ற நீ..!
அன்னை இல்லம் ஏகாமல் மறைந்தாயோ..??


இடியென இறங்கிய செய்தி, என் செவி வழியே..
இதயத்தை தாக்கியதும் அதிர்ந்தேன்...!


சட்டென்று போயிருப்பேன்..!
பொட்டென்று உயிரை நீக்கி...,
எங்கே...
உயிர் மீண்டு வந்து- நீ 
என்னைக்கண் தேடுவாயோ...?
எண்ணிக்காத்திருக்கின்றேன்...!
எண்ணியபடி நாட்களை...
உன்னை நெஞ்சிலும் - உன்
உயிரினைக்கருவிலும் சுமந்தபடி..


கண்ணா..!
கல்லறையில் உன்னை விதைத்திருந்தால், அங்கே
கண்மூடித்துயில் துயில் கொள்ளும் - உந்தன்
காலடியில் மலர்களைத்தூவி...,
கண்ணீர் விட்டு கதறியிருப்பேன்...!

அனலோடு சங்கமமாகி - நீ 
அருவமாகி போயிருந்தால் 
அன்பே உன் உடலின் சாம்பலை 
புனலோடு கரைத்து - நானும் 
புனித மண்ணுக்குள் 
புதைந்து போயிருப்பேன்...! 


கண்ணுக்கு தெரியாமல் - நீ
கலைந்து போனாயோ..?? 
காரணம் இன்றி கயவரால்
கடத்தப்பட்டாயோ..?

தலை கோதி முத்தமிட்டு சென்றவனே...!
தனிமையில் தவிக்கின்றேன்..!
உன் நிலை எண்ணி....


எவ்விடம் ஏகினாயோ...??
என்னையும் அழைத்திடு..!

என்னுயிர் நீங்கி,,,
என்றைக்கும் - நீ 
விழி மூடாதே..!!




- அரசி நிலவன் -