Search This Blog

Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Thursday 7 November 2013

தேன்சுவை....!!!


தித்திக்கும் தேன் சுவையாய்
திகட்டாத தீந்தமிழ் - எட்டுத்
திக்கும் இசைபாடி இனிக்கும் இசைத்தமிழ்..!!

நாவிற்கும் செவிக்கும் சுவையள்ளி வழங்கி
நாற்திசையும் பரந்து நிற்கும் நற்றமிழ்...!!

அழகு தமிழ் , பைந்தமிழ் , பண்டைத்தமிழ் ,
தேன்தமிழ் , செந்தமிழ் , வண்ணத்தமிழ் ,
இளமைத்தமிழ் , இன்பத்தமிழ் , கொஞ்சுதமிழ்
உயிரிலும் மேலான உணர்வுத்தமிழ்...!!!

உயிராய்,, மூச்சாய்,, மெய்யாய்,, பேச்சாய்,,
வாழ்வாய்,,தேனாய்,, இனிப்பாய்
தமிழாய் என்றும் உணர்வாய் தமிழே நீயே...!!

உமிழ் நீரின் விழுங்கலிலும்
தமிழ் உச்சரித்துப்போகும் அதிசயம்..!!
குமிழ் நீரின் உடைதலிலும் ஒலிக்கும்
தமிழ் நாதம் அதிசயம்..!!


தமிழின் தேன் சுவை பருகி
தமிழால் தாகம் தணிந்து
தமிழனாய் வாழ்ந்து வீழ்வது அரிதல்லவோ..!!!

அகரம் கொண்டு "ன"கரம் முடியும்
சிகரம் கொண்ட செந்தமிழைப்பேச
என்ன புண்ணியம் செய்தேனோ...??




தங்கத்தமிழ் மேல் காதல் கொண்டு - கொஞ்சிப்பேசும்
கொஞ்சு தமிழில் மோகம் கொண்டு
திளைத்துக்கிடக்கின்றேன் நித்தமும்..

தமிழின் தேன் சுவையின் மயக்கத்தில்
அதன் அன்புத்தொடுகையில்
தடக்கி விழுந்து எழுந்து
உணர்ச்சி பெறுகின்றேன் கணமும்
உணர்வுத்தமிழின் மகிமையால்....


அழகிற்கு அழகு சேர்க்கும்
"ழ" கரம் செவிகளில் விழுந்து
நாவில் புரண்டு எழும்போதெல்லாம்
இன்பத்தமிழின் தேன் சுவை
ஊறிப்பரவும் உடல் எங்கும்...!!

தமிழின் சுவை பாட
தகுதி உண்டோ எனக்கு...
தமிழைப்பாடுவதால் யான்
தரம் உயர்த்தப்படுகின்றேன்...!!
தமிழே உன்னால் தான்
உயிர் ஊட்டப்படுகின்றேன்...!!


அஞ்சித்தினம் வாழ்ந்தாலும்
மிஞ்சிப்போகும் அச்சத்தினை
கொஞ்சு தமிழின் தேன் சுவை...!!!



அரசி நிலவன்






லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "தேன்சுவை" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/









Friday 9 October 2009

என்னுயிர் நீங்கி,,, நீ விழி மூடாதே..!!



சொந்தமே...!!!
சொந்த மண்ணில் காணாமல் போனவனே....!
காணாமல் போனோர் பட்டியலில் 
காத்திருப்பது... 
உன் பெயர் மட்டுமா..?
என் உயிரும் அல்லவா...??


என்னை வழியனுப்பி சென்ற நீ..!
அன்னை இல்லம் ஏகாமல் மறைந்தாயோ..??


இடியென இறங்கிய செய்தி, என் செவி வழியே..
இதயத்தை தாக்கியதும் அதிர்ந்தேன்...!


சட்டென்று போயிருப்பேன்..!
பொட்டென்று உயிரை நீக்கி...,
எங்கே...
உயிர் மீண்டு வந்து- நீ 
என்னைக்கண் தேடுவாயோ...?
எண்ணிக்காத்திருக்கின்றேன்...!
எண்ணியபடி நாட்களை...
உன்னை நெஞ்சிலும் - உன்
உயிரினைக்கருவிலும் சுமந்தபடி..


கண்ணா..!
கல்லறையில் உன்னை விதைத்திருந்தால், அங்கே
கண்மூடித்துயில் துயில் கொள்ளும் - உந்தன்
காலடியில் மலர்களைத்தூவி...,
கண்ணீர் விட்டு கதறியிருப்பேன்...!

அனலோடு சங்கமமாகி - நீ 
அருவமாகி போயிருந்தால் 
அன்பே உன் உடலின் சாம்பலை 
புனலோடு கரைத்து - நானும் 
புனித மண்ணுக்குள் 
புதைந்து போயிருப்பேன்...! 


கண்ணுக்கு தெரியாமல் - நீ
கலைந்து போனாயோ..?? 
காரணம் இன்றி கயவரால்
கடத்தப்பட்டாயோ..?

தலை கோதி முத்தமிட்டு சென்றவனே...!
தனிமையில் தவிக்கின்றேன்..!
உன் நிலை எண்ணி....


எவ்விடம் ஏகினாயோ...??
என்னையும் அழைத்திடு..!

என்னுயிர் நீங்கி,,,
என்றைக்கும் - நீ 
விழி மூடாதே..!!




- அரசி நிலவன் -