Search This Blog

Tuesday 5 November 2013

தேரோட்டம்...!!!


நடு வீதியில் இழுத்து விடப்பட்டு
நெடு நாளாய் அநாதரவாய்
சடு குடு ஆட்டத்தில் சிக்கிய  தமிழீழத்தேர்...!

வடுக்களாகிப்போன தமிழ் நெஞ்சங்கள்
தேடுகின்றன...
காணாமல் போய்விட்ட
வீற்றிருந்த தெய்வமதை...
நடு வீதி தேர் இருப்பிடம் திரும்பாமல்
நாலாண்டுகளாய் வெறும் பார்வைக்கு....

சுரண்டப்படுவதும் பிடுங்கப்படுவதுமாய்
அழகிழந்து போனது மட்டுமன்றி...
விழி கொண்டு நோக்க முடியா வண்ணம்
அலங்கோலமாய் மழையிலும் வெயிலிலும்...
வெந்து நைந்து நொந்து நுலாகிப்போய்....

வடம் பிடித்து வந்தோர்களும்
வஞ்சகமாய் சிதைக்கப்பட்டும்
புதைக்கப்பட்டும்
இரையாகிப்போயினர் காட்டேரிகளுக்கு...


போராடி களம் கண்டோர்
தேராடி வளம் காணாமல்..
வேரோடிச்சென்று பிடுங்கப்பட்டு
காட்சிகளுக்கு கருப்பொருளாக.....
காண்பிக்கப்படுகின்றார்கள்
ஊசலாடும் உயிருடன்....

முடி சூட்ட எண்ணியிருந்த தமிழர்களின்
முடிக்குரிய தெய்வம் எங்கே..??
கயவர்களால் களவாடப்பட்டதா...??
வஞ்சக தேசம் நீங்கி தொலைவிலா??
அன்றில் வானம் ஏகிப்போனதுவோ?
துளைத்தெடுக்கும் துப்பாக்கிகளைப்போன்று
துப்பறியும் மனிதர்கள்....!

மெல்ல மெல்ல உக்கிப்போய்
மண்ணோடு மண்ணாகிப்
போகும் நிலையினை
போனால் போகுதென்று கூட
கண்டு கொள்வார் யாருமில்லை...
தேரோட்டம் காண அங்கலாய்க்கும் எமக்கு
தேரின் நிலை பற்றி எள்ளனவேனும்
எண்ணமில்லை....!

தேரின்றி தேரோட்டம் காண முடியுமோ???
உக்கிப்போன தேர்
விக்கி விக்கி அழுதபடி - உள்ளுக்குள்
நமட்டுச்சிரிப்பும் சிரிக்கின்றது..!
பிய்ந்து போன துணிகளோடும்
தொய்ந்து போன வடங்களோடும்
தேரோட்டம் காண தேரும் ஆயத்தம்....!
வடம் பிடிக்கத்தான் யாருமில்லை....!
பாவம் கடவுளர்களும் அதிகமாய்...
தேரில் நிற்கத்தன்னும் இடமில்லை....!

அந்தோ சக்கரங்கள் உருளுகின்றன.....!
இம்மியளவும் தேர் அசையவில்லை...
இன்றைய தேரோட்டம்
இதுதானோ????



அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "தேரோட்டம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

  

1 comment:

  1. ஊர்கூடி வடம் பிடித்தும்
    அச்சாணி அசையவில்லை...
    நொந்தது மனம்
    தந்தது வேதனை....
    ஆயினும் வடம் பிடித்த கைகள்
    தளர்ந்து விடவில்லை...
    இழுப்போம்...
    தேரினை நிலைநிறுத்தும் வரை...
    அருமையான உணர்ச்சிமிகு கவிதை சகோதரி...

    ReplyDelete