Search This Blog

Tuesday 12 November 2013

நிலாச்சோறு...!!!


அரிக்கன் லாம்பின் மண்ணெய்
அரிதாகிய காலமதில் பிரகாச ஒளியாக
அம்புலியின் கொடையாக  மின்சார ஒளி..!

பால் நிலவின் களிப்பில் வெண் முற்றம் எங்கும்
பாடி ஆடி விளையாடி ஓய்ந்திருக்கும் வேளை....


அன்பெனும் தேன் கலந்து அமுது
அள்ளி வைப்பாள் அன்னையவள்....
அடிபட்டு ஓடித்திரிந்து உண்டெனத்தின்போம்

பலா இலையின் வாசம் உறிஞ்சி
நிலா அதன் பால் ஒளியில்
உலா வரும் நினைவுகள்
கோடி கொட்டிக்கொடுத்தாலும்
மீண்டிடாது....!!!


புல் பூண்டும்...
புழு பூச்சியும்...
புடையனும் - அம்
புலியின் ஒளியில் மறந்து போகும்...!
புளுகுடன் சிரித்து
புரையேறும் நிலாச்சோறு
அன்னையவளின் உச்சி தட்டலால்
உள்ளிறங்கிடும் ...!

எண்ணி எண்ணி சிரித்து கொள்ள - இன்று
எமக்கு உரித்தான நினைவுகள் இவை...


உற்று உற்றுப்பார்த்து
உள்ளங்கை மூடிப்பார்த்து
நிலாமகளின் அழகினையும்
நிலாச்சோற்றுடன் சேர்த்து உண்டு
களிப்புற்ற குழந்தைப்பருவங்கள்..!!

களிப்படையுமா இன்றைய குழந்தைகள்...??
நிலவே நீ தூரமாய்....
நிலாவின் ஒளியும் தொடுகையற்று
நில்லாமல் போன நிலாவே ஓடி வா...
இல்லாமல் போன முற்றமும் சோறும்
மனங்களில் இருந்தும்....
நிலா தூரமாய் தானே.....


அடுக்கு மாடிக்கட்டிடங்களில்
அம்புலி வருவானோ...??
அண்ணாந்து பார்த்து பூத்தது விழிகள்..!
அன்னையவளின் அமுது எண்ணி
அங்கலாய்க்குது மனம்....!

பால் ஒளியும் வெண் மணலும்
கண்ணுக்குள் முடங்கியபடி....
மண்ணை கண்ணால் பார்த்து
வருடங்கள் ஆகிவிட்டன....!
நிலவின் ஒளியில் உண்ட
நிலாச்சோறு தொண்டைக்குழிக்குள்...
நினைவாய்.....
நின்று விக்கி சிக்கித்தவிக்கின்றது....!!


அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "நிலாச்சோறு" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

No comments:

Post a Comment