Search This Blog

Wednesday 6 November 2013

திறந்தவெளி...!!!



விதைகள் விதைக்கப்பட்டு
விருட்சங்களாகி வானுயர
பரந்தவெளியாகி படர்ந்த தேசம்
திறந்த வெளியாகி கட்டாக்காலிகள்
வாசம் செய்யும் மடமாகியதோ...???

அரண்களும் இல்லங்களும்
அழகாய் உழுது பண்படுத்தப்பட்ட
திறந்தவெளி மைதானமாய்
சுற்றி சுற்றி உலா வருபவர்களின்
விழிகளுக்கு இனிய
விருந்தாக்கப்படுகின்றது....!!


வாழ்விடங்களும் வெளிகளாக...
வாழ்க்கையும் வெறுமையாக...
வாழும் நெஞ்சங்கள் மட்டும்
குறுகிப்போய் பரந்த வெளியில்
பரந்து விரிந்து கிடக்கின்றது...
திறந்த வெளியாக....


வெளிப்படையாய்  சுதந்திரம் அடித்து துரத்தி
வெளியேற்றப்படுகின்றது....!
வானம் பார்த்த பூமியாக
வாரிசுகள் பரந்தவெளி வணங்கா மண்ணில்
அண்ணாந்து வாய் பிளந்து  அங்கலாய்த்தபடி....
அடி உதையும் பகையும் ,மீறினால் இருட்டறையும்
அளந்து கொடுக்கப்பட்ட வாழ்வு எங்களுக்கே எங்களுக்காய்
திறந்து கிடக்கின்றது.....!

யாவும் இங்கே கொட்டிக்கிடக்கின்றது....!
யாரும் இங்கே எதுவும் நிகழ்த்தலாம்...!
யாரும் வரலாம் யாரும் போகலாம்..! 
யாம் வாழும் தேசம் 
யாரும் அறியாமல் இல்லை...!
யாவருக்கும் தெரியாத ஒன்று 
யான் உரைக்கின்றேன் கேளுங்கள்...!!
யாருக்கும் உரைக்க வேண்டாம்....!!!
யாம் வாழ்வது திறந்தவெளி
சிறைச்சாலையில்....!!!


காலையில் எழுந்து இரவு வரை எதுவும் செய்யுங்கள்
காவல் காப்பவர்களின் கண் முன்னால் தான் எல்லாமே...!

அசையாமல் நிற்கும் இயந்திரத்துப்பாக்கி
அனைத்தையும் அளவெடுத்து கொள்ளும்...!!

அரங்கேறும் அசம்பாவிதம்...
அடிக்கடி மறைக்கப்படும்...!

காவலின் உச்சத்தில்
காட்டிக்கொடுப்புக்கள் தாராளம்....!

வன்முறைகளும் வன்புணர்வுகளும்
வன்னி மண் வரை வரிசை வரிசையாக....
சீருடைகளின் கண்காணிப்பில்
சீராக தான் இடம்பெறுகின்றது....!!

திறந்தவெளியாகிப்போன ஈழத்தில்
திறந்து கிடக்கின்ற தமிழ்ப்பெண்களின் மானம்...!
உலகை சுற்றி வலம் வருகின்றது...
உண்மைக்கு நீதி கிடைக்கும் என்று நம்பி....

உத்தமர்களே....!!!
திறந்து காட்டாதீர்கள் எங்கள் மானத்தினை....
திறந்த வெளியில் நிர்வாணமாய் உணர்கின்றோம்...!!
திருந்தாத உள்ளங்கள் திருந்திடப்போவதில்லை..!!
திருத்தி விடப்போவதில்லை யாரும் - எம்மை
திரும்பி பார்க்கவும்  யாருமில்லை....!!
திறந்தவெளியில் என்றும் நிராதரவாய் நாம் -உள்ளம்
திறந்து மரத்து மரணித்து துடித்து கிடக்கின்றோம்....!!!



அரசி நிலவன்






லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "திறந்தவெளி" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/





No comments:

Post a Comment