Search This Blog

Thursday 31 July 2014

நிம்மதி...!



சொட்டு சொட்டாய் கண்ணீர்...!
நட்டு வைத்த செடியினை ஒத்து
பட்டு விடாமல் தழைத்து ஓங்கிய துன்பம்..!
கொட்டு கொட்டென்று மாரி மழையாய்
கொட்டிய குண்டு மழை...!
தட்டுப்பாடாய் போய்
ஒட்டு மொத்தமாய் காணாமல்
விட்டுப்போன நிம்மதி...!


தொட்டு வைத்த குங்குமத்தின் வாசம்
விட்டு மறையாத தருணத்தில்
சட்டுப்புட்டென எகிறி வந்த சன்னம்
முட்டி மோதி அவனை சாய்த்து விழுத்த...
பட்டுத்தெறித்த குருதியால் உடல் எங்கும்
குங்குமம் அள்ளி வைத்து இறுதியாக....
பயணித்த அவன் பயணம் இன்னும்
முற்றுப்பெறவில்லை...

 இதயம் பிளந்து ஊசல் ஆடிய உயிர் கண்டு
 உதயம் தொலைத்தவள் அவள்...!
நெற்றி தொட்டு பார்த்து அருகில் அவனின் கரம்
பற்றி பேசுவதாய் எந்நேரமும் ஒரு நிகழ்வு
வற்றிப்போன கண்களில் வறண்ட கண்ணீர்
மருந்திற்கும் இல்லாது போன துயரம்...!

தள்ளாடும் வயதில் இந்நிலை கண்ணுற்று
தவித்திருக்கும் அவன் பெற்றோர் தொலைத்தது
தங்கள் அருமை மகனை மட்டுமல்ல

பறந்து வந்த எறிகணைக்கும் துரத்தி வந்த கிபிருக்கும்
பரந்து விரிந்த தேசமெல்லாம் சுற்றித்தப்பி வந்து
இடைத்தங்கல் முகாமிலும் வதைபட்டு தொலைத்தது
இருப்பிடத்தை மட்டுமல்ல..

 

புகைப்படம் ஏந்தி வீதிக்கு வீதி யாசித்து தேடும்
புதல்வர்களும் பெற்றோர்களும் மனைவிகளும்
தொலைத்தது காணாமல்போன அவர்களின் உறவுகளை மட்டுமல்ல

இதயம் இன்னும் நிற்காமல் துடிக்கத்தான் செய்கின்றது
இருளோடு போராடும் முதுமையில் நிகழ் கால
நினைவின்றி கடந்த காலத்தில் உயிரற்ற கணவன்களுடன் வாழும்
நினைவற்றவர்களை நினைத்து வெதும்பும் நிகழ்காலப்பெற்றோர்கள்
தொலைத்து விட்டது "நிம்மதி" என்பதையும் கூடவே...

லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "நிம்மதி" என்ற தலைப்பில் இன்று (31.07.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


Wednesday 30 July 2014

ஊதுகுழல்..!

ஆரவாரமாய் வரவேற்கின்ற கோயில் திருவிழா
ஆடை காட்டி பகடு காட்ட வென்றே ஒரு சாரார்
மேடை போட்டு இசைமழை கொட்ட ஒரு சாரார்
சாடை காட்டி காதல் பண்ணவென்றே  இளம் பராயத்தார்
நடை பழகி நகை நட்டு மினுக்க ஒரு சாரார்
மடை திறந்த சனத்திரள் வெள்ளத்தில் அபகரிக்கவேன்றே
படை எடுத்து வரும் ஒரு சாரார்
கொடை ஆகி போன வறுமை வாழ்விற்கு சிறு வெளிப்பாக
கடை போட்டு கச்சான் வித்து கடன் அடைக்க வென்று ஒரு சாரார்
தடை இன்றிய வீதியில் அங்காடிகள் பரப்ப ஒரு சாரார்
படை எடுத்து வந்து அலை மோத என்றே ஒரு சாரார்

கடந்து போன திருவிழாவில் தவறிப்போன ஆசை
கட்டாயம் கச்சான் வித்து வாற காசில இந்த முறை தம்பியின்
கனவு நிறைவேற்றுவேன் என்ற அசையாத நம்பிக்கையில்
கசங்கிய உடையோடு பாசக்கார அண்ணனாய் ஒருவனும்
எதிர்பார்த்த திருவிழா இனிதே வந்தது...
ஏங்கி ஏங்கி தவித்தவன் அள்ளி அள்ளி விற்றான்
தூங்கி வழிந்த விழிகள் மலர்ந்து கொண்டது

ஓடிச்சென்றான் ஆசையுடன் வாங்கினான்
பாடி ஆடி சென்றான் பாங்குடனே தம்பிக்கு
பக்குவமாய் கையில் கொடுத்தான்....
பரிவுடன் அணைத்தான்....

தம்பியின் மகிழ்வுக்கு எல்லையில்லை
தவித்து ஏங்கிய அந்த ஊதுகுழல் கைகளில்
அளித்த அண்ணனுக்கு ஆசையாய் ஒரு முத்தம்
அன்பின் மழையில் நனைந்தான் அண்ணா

ஊதுகுழலில் தம்பியின் மூச்சு இனிமையாய் ஒலித்திட
ஊதுகுழலாய் அண்ணனின் இதயம்  சந்தோஷ சாரலை
ஊதிக்கொண்டே இருந்தது....!






Monday 28 July 2014

மரியாதை...!!!

கல்விக்கும் கற்றவனுக்கும் உரித்தான
கற்பு என்னும் மரியாதை இன்று அறிந்தே
கடத்தல் செய்யப்படுகின்ற உண்மை...

கல்விக்கான மரியாதை இடம்மாறி
கரை மாறி நின்று சிரிக்கின்றது....!

விலையாகி போகும் கணக்கற்ற மரியாதை
விழுத்தி விடுகின்றது கற்றவனை ஆழக்குழியில்....

மாண்பு பெற்ற கல்வி கொண்ட மரியாதை
மாண்டு போனது பணத்தால் இன்றைய உலகில்....

வைத்தியர் ஆகின்றான் விலங்கியல் கற்காதவன்....!
வற்றிப்போன குளத்தில் தொடர்மாடி கட்டுபவனை
பொறியியலாளன் என்கின்றது பணம்...!

பொறிமுறை அறிந்து கற்றவனும் பொறியியலாளன் - பணத்தில்
பொறி வைத்து பட்டம் பெற்றவனும் பொறியியலாளன்.

மரியாதை இங்கே அல்லல் படுகின்றது
மடிந்து போனாலும் பாழாய்ப்போனோர்
மரியாதையினை விடுவதாக இல்லை..!

பெரியோருக்கும் இல்லை முதியோருக்கும் இல்லை
பெண்மைக்கும் இல்லை மென்மைக்கும் இல்லை

அட மனிதத்திற்கே இங்கே மரியாதை இல்லை....!
அழிந்து போவது மரியாதையா அன்றி  மனிதமா..?

கேள்விக்குறியுடன் மரியாதை
கேட்பாரற்று மெளனித்து உறங்குகின்றது....!


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மரியாதை" என்ற தலைப்பில் இன்று (28.07.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/