Search This Blog

Wednesday 20 August 2014

மழலை மொழி..!


இடிந்து போன எந்தன் இதயத்தை
இசையொன்று  தட்டிச்சென்றது..!

இமயம் தாண்டிய இடர்களை வென்றது..!
இதமாய் இன்பம் அள்ளித்தந்தது..!

இந்தியம் அடக்கிய ஞானம் தந்தது..!
இரட்டிக்கும் உணர்வுகளை அள்ளிக்கொடுத்தது..!

இடலை கடந்து என்னை இயக்கும்
இசையாய் உள்ளத்தை வென்றது...!

வசை மொழிகள் யாவும்
இசை மொழிகள் ஆகியது - மழலைகள்
அசை போடும் சின்ன மொழியால்
திசை தெரியா வனத்தில் தவித்தவள்
பசை போல ஒட்டிக்கொண்டேன் வாழ்வோடு...

மொழிகள் பேதங்கள் கடந்து
ஆழிகள் தாண்டிய தேசம் யாவும்
விழிகள் மலைக்க வைக்கும் மழலை மொழி...!

கட்டிப்போட்ட இசையாய்
சுட்டிகள் பேசும் மொழியிது..!

வெட்டிய இதயம் ஒன்று சேரும்
தட்டிப்பெசும் மழலை மொழியில்

பட்டி தொட்டி எங்கும் இலவசமாய்
முட்டி மோதாமல் கிடைத்திடும் மொழி

வட்டி இன்றி குட்டிகள் தரும் சொத்து இது
எட்டி நின்று வேடிக்கை பார்க்க வைக்கும் -கோடி
கொட்டிகொடுத்தாலும் ஈடாகாது....!

எபோலா தீநுண்ம நோய் (Ebola virus disease)

எபோலா தீநுண்ம நோய் (Ebola virus disease) (EVD) அல்லது எபோலா குருதி ஒழுக்கு காய்ச்சல் (Ebola hemorrhagic fever) (EHF) என்று எபோலா தீ நுண்மத்தின்நான்கு வகைகளால் மனிதரில் ஏற்படும் நோய் பெயரிடப்பட்டுள்ளது. இது ஓர் உயிருக்கு கேடு விளைவிக்கும் கடுமையான நோயாகும். கடுமையானகுருதி இழப்பு ஏற்பட்டு நோய்வாய்ப்பட்ட பத்து பேரில் சராசரியாக ஐந்து முதல் ஒன்பது பேர் உயிரிழக்கின்றனர்.

1976ஆம் ஆண்டு ஆபிரிக்காவின் சையர்நாட்டின் எபோலா ஆற்றங்கரையில் இத்தீநுண்மம் முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு எபோலா தீநுண்மம் என்ற பெயர் ஏறபட்டது. சையர், கோட் டிவார்சூடான் ஆகிய நாடுகளில் இத்தீநுண்மம் பற்றுவதற்கான தீவாய்ப்புள்ளது. உலக சுகாதார அமைப்பு இத்தீநுண்மத்தை தீவாய்ப்புக் குழு 4இல் இட்டுள்ளது.

இத்தீநுண்ம நோய் வாய்ப்பட்ட நோயாளியின் நீர்மங்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு அவற்றின் மூலமாக தீ நுண்மம் உட்செல்கிறது. இது காற்றின் மூலமாகப் பரவுவதில்லை. எபோலா நோயுற்றவர்கள் ஏராளமாக குருதி இழப்பர். அவர்களது வயிற்றுப் போக்கிலும் வாந்தியிலும் குருதி இருக்கும். கடுமையான நோயுற்றவர்களின் மூக்குகாதுகள் மற்றும் ஆண்/பெண்குறிகளிடமிருந்து குருதி ஒழுகும். இந்த நீர்மங்கள் மற்றவர்கள் நோய் பற்றிக்கொள்ள காரணமாக அமைகின்றன.

ஒருவருக்கு எபோலா பற்றும்போது முதல் அறிகுறிகள் மற்ற நோய்களை ஒத்திருக்கும். காய்ச்சல், உடல் தளர்ச்சி, தலைவலி, வயிற்றுவலி, மூட்டுவலி மற்றும் தொண்டைவலி ஆகியன முதல் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளால்மலேரியா அல்லது குடற்காய்ச்சல் நோயென தவறாக எண்ணப்படுவதுண்டு. பின்னர் நோய் தீவிரமாகி குருதி இழக்கத் தொடங்குகின்றனர். இந்நிலையில் அதிர்ச்சி, குறைந்த குருதி அழுத்தம், விரைவான நாடித்துடிப்பு (இதயத் துடிப்பு), மற்றும் உறுப்புகளுக்கு குறைந்த குருதி வழங்கல் ஆகியன அறிகுறிகளாகும். இவற்றால் உறுப்புக்கள் செயலிழக்கத் துவங்குகின்றன. இதனை உறுப்பு செயலிழப்பு என்கின்றனர். மேலும் நோயாளியின் உடலை இறுக்கமாக்குவதால் படுக்கையிலேயே இருக்க வேண்டியதாக உள்ளது.

இந்த நோய் தீ நுண்மத்தால் உண்டாவதால் மருந்துகள் இல்லை. ஆயினும் நோயாளிகளுக்கு நோயைத் தாங்க தகுந்த மருத்துவ ஆதரவு அளித்தால் உடலின் எதிர்ப்பாற்றலால் பலர் உயிர் பிழைக்கின்றனர். எபோலா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குருதி இழப்பினால் நேர்ந்த நீர்ம இழப்பைச் சரிகட்ட அவை தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வர வேண்டும். மருத்துவமனையில் சிரைவழி நீர்மங்கள், குருதி ஆகியனவற்றைக் கொடுப்பதுடன் குருதி அழுத்தம், சுற்றோட்டத் தொகுதி சீர்மை ஆகியவற்றிற்கான மருந்துகளும் அளிக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் பலர் எபோலா வாய்ப்பட்டால் அதனை தடுக்க மருத்துவர்களும் அரசும் விரைந்து செயல்படுகின்றனர். நோயுற்ற மக்களை தனிமைப்படுத்தி மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கின்றனர். நோயாளிகள் வெளியேற்றும் நீர்மங்கள் நோய் பரவாதவாறு கழிக்கப்படுகின்றன.
தற்போது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வெகுவாக பரவி வருகின்றது. கினியாவில் தொடங்கிய இந்த நோய் லைபீரியா, சியாராலேபான், நைஜீரியா ஆகிய நாடுகளுக்கும் வேகமாக பரவி மக்களின் உயிரை பறித்து வருகிறது.
இக்கொடிய வைரஸ் காய்ச்சலுக்கு 1,229 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லைபீரியாவில் எபோலா நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு வெஸ்ட் பாயிண்ட் என்ற பகுதியில் நோய் கடுமையாக பாதித்துள்ளது. எனவே அங்குள்ள மருத்துவமனைகளில் தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் பரிசோதிக்கப்படாத மருந்துகளை பயன்படுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து லைபீரியாவில் எபோலா தாக்கிய 3 டாக்டர்களுக்கு பரிசோதிக்கப்படாத மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதில் அவர்கள் குணம் அடைந்துள்ளதாக தலைபீரிய கவல் தொடர்பு மந்திரி லீவிஸ் பிரவுன் தெரிவித்துள்ளார்.

நன்றி : விக்கிபீடியா


Monday 18 August 2014

போலி...!



பிறந்து வந்த வாழ்வில்
பிரிந்து போன உறவுகள் பல..

அன்பு நிறைந்த உயிரோ?
உயிர் நிறைந்த இதயமோ...?

உவமையால் வடிக்க முடியாத
உயிர்கள் பல பிரிந்தும் நான்
உயிர் வாழ்கின்றேன் போலியாக..

எந்தன் வாழ்வில் சாதிக்க முடியாதவைகளை
எந்தன் வரிகளில் சாதிக்கின்றேன் போலியாக...

நம்பிக்கை என்பதை எனக்குள்
நட்டு வைக்க வரிகள் போராடுகின்றன...!

நலிவுற்றுப் போகும் உள்ளத்து
நம்பிக்கை போலியாக வடிவம்
பெற்று நிற்கின்றது வரிகளில் மட்டுமே...!

எந்தன் விருப்பங்கள் போல் வாழ்வில்லை
எந்தன் வரிகளை விருப்பத்தின் படி
எழுதித்தள்ளுகின்றேன்...!

தடுக்க யாரும் இல்லை...!
தலை எழுத்தை கிறுக்கியவன் வந்தும்
தடுக்க முடியாது...!

விதி என்று சொல்லி
சதி செய்து எட்டி உதைக்க முடியாது
வரிகளில் வாழும் எந்தன்
வளமான போலி வாழ்வினை....

எந்தன் நேர்மறை எண்ணங்களை
எதிர்மறை செயற்பாடுகள் ஆள்வதில்
வென்று விடுகின்றன...!

நம்பிக்கை வீணாய் போகின்றது
நடுவானில் அமைதியாக சஞ்சரிக்க துடிக்கின்றேன்...!

 

மரணித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டு
மரணிக்கின்றேன் தினமும்

மயானம் வரை செல்லும் உடல் தீயில் பொசுங்கியும்
மறுநாள் கண்முன்னே தான் இருக்கின்றது..!
மறுபடியும் கனவில் தான் செத்தேனோ?
மரணச்சடங்கு கூட போலியாகிப்போனது எனக்கு..




வீணாய்ப்போனது....!

வாழ்வின் எல்லையில்.....
ஒற்றைக்கால் நுனியில் - நின்று
ஒப்பாரி வைக்கின்றேன்...!

உயிர்கள் இரண்டின்
உன்னதம் தெரிந்து
உடைந்து நிற்கின்றேன்...!

பணம் என்ற காகிதத்தின் மாயம்
குணம் அற்ற உறவுகளின் சாயம்
வெளுத்து நாளாயிற்று...!

உணர முடியாத பலவற்றை உணர வைத்த
உலகத்திற்கும் காலத்திற்கும் நன்றிகள் கோடி...!

நலிந்து போகாத எந்தன்
நம்பிக்கையின் கை பற்றி
நடக்கின்றேன் என் இலட்சியம் நோக்கி....

நடைப்பிணமான இவள்
நடை முடிவுறும் நேரம்
பிணமானால்....???

பிரிவு தாங்காது
பிஞ்சுகள் கதறினால்
ஐயகோ....!!!!

ஆதலால்....

பிரித்து எடுத்து செல்லுகின்றேன்
பிஞ்சுகளையும் என் கூடவே....
பிணத்துடன் பிணமாக அவர்களும் இருக்கட்டும்....!


   

Thursday 7 August 2014

கலைந்து போன கூட்டில் இருந்து - நிலை
குலைந்து போன குஞ்சுகள் போல கத்தும்
எங்கள் குரல் கேக்குதா...!

நிமிர்ந்து நின்றோம் உயர்ந்து வந்தோம்...
சரிந்து விட்டோம் குற்றுயிராய் கிடக்கின்றோம்...!

வரலாற்றை தட்டிப்புரட்டினால்
வடுக்களும் வஞ்சகங்களும்
வரிசை கட்டி நிற்கின்றன....!

வசை மொழிகள் இங்கே மலிந்து கிடக்க
வாழ்த்துக்கள் மருந்திற்கும் தட்டுப்பாடாய்...

புன்னகைக்க யாருமில்லை - இதயத்தை
புண்ணாக்கி பந்தாட கூட்டமாய்
காத்திருப்போர் அதிகம் தான்

சற்றும் எதிர்பார்க்கவில்லை
சடுதியான இந்த துன்பம்
சல சலப்பின்றி நீட்சியாய்
அரை தசாப்த காலத்தை தொட்டு நிற்கின்றது
அசை மீட்கின்ற கடந்த கால கணங்கள்
பந்தாடி செல்கின்ற உள்ளத்துக்கு  நன்றாகவே
உணர்த்துகின்றது காலத்தின் வெற்றியான
பந்தாட்டத்திற்கு உகந்த பந்து எங்கள் வாழ்வு என்றே...!

Wednesday 6 August 2014

உறக்கம்...!

உருமாறிய காலம்
உருக்குலைந்த தேசம்
உண்மை நெடுநாளாய் ஆழ்ந்த
உறக்கத்தில்.....

உறக்கமின்றித் தவிக்கும் விழிகள்
உண்மை என்னவென்று
உரைத்திட யாருளரோ???
உலகமே அங்கலாய்ப்பில்.....

உணர்வு கட்டுக்கடங்காமல்
உச்சி முதல் உள்ளங்கால்வரை
உலகம் எங்கும் பொங்கி எழுகின்றது...!

உலகத்தமிழ் உணர்வாளர்கள் தேசியம்
உரிமை என்றெல்லாம் போராட்டம்...!
உறங்கும் உண்மை அசராது தொடர்ந்து
உறங்கிக்கொண்டே இருக்கின்றது....!

உறக்கம் கலைக்க முயலும்
உணர்வாளர்களுக்கு உண்மை
உறங்கும் இடம் பொருள்
உரைத்திட யாருமில்லை....!

உண்மையின் உறக்கத்தால்
உலகம் நம்பும் நவீன வேசங்கள்
உருத்தெரியாமல் ஆகிட

உறங்கும் உண்மை சுயமாய்
உடைத்து எழுந்து வருமா - அன்றி
உலகத்தை வெறுத்து நிரந்தரமாய்
உறக்கத்தில் ஆழ்ந்து மண்ணோடு
உருக்குலைந்து மக்கிப்போகுமா??

உலகத்தமிழ் மக்கள் கொண்ட நம்பிக்கை
உருக்குலைந்தாலும் உறங்கும் உண்மை
உருவெடுத்து உலகம் எங்கும் உரக்க
உரைக்கவிருக்கும் செய்தியால்
உடைந்திடும் உள்ளங்கள் அதிகம் தான்....!
உள்ளங்கள் உடையும் என்பதற்காய்
உண்மை நெடுநாள் உறங்கிடப்போவதில்லை....!

உடைத்து நெஞ்சம் வெடித்துப் போகும்
உண்மை விரைவில் செவியில் சேரட்டும்....!
உலகம் எங்கும் உறக்கம் கலையட்டும்...!
உண்மை இனியாவது உலகை ஆளட்டும்..!


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "உறக்கம்" என்ற தலைப்பில் இன்று (06.08.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


பிஞ்சு...!

அஞ்சிய தருணங்களையும் மலையாய்
விஞ்சிய துன்பங்களையும் அள்ளிப்போட்ட
பஞ்சுக்குவியலாய் காற்றிலே பறக்க வைத்து....

கொஞ்சிப்பேசி நெஞ்சம் நிறைந்து நிற்கும் பிஞ்சுகள்....!
கெஞ்சி நாடி தடவி சிமிட்டி சிரிக்கும் இளம் பிஞ்சுகள்...!

கஞ்சம் கொண்ட உள்ளமாய் இரண்டாய் அளந்து கொண்டதேனோ...?
வஞ்சம் இன்றி வகை தொகையாய் இல்லம் நிரப்பி கொள்ள
நெஞ்சம் அங்கலாய்ப்பது காலங்கடந்த அறிவன்றோ..?
பஞ்சம் ஆகிய நிம்மதி வாழ்வில் தஞ்சம் கொண்டவனின் பிரிவை
நெஞ்சம் நினைத்திட அனுமதிக்காத பிஞ்சுகளின் வதனங்கள்..!

கவலை நீக்கிகளாக
கருணையின் பிறப்பிடங்களாக
களிப்பின் ஊற்றுக்களாக
கண்ணான முத்துக்களாக
கனிவுடன் என்னுள் வித்தாகி
கரும்பினை ஒத்து வாழ்வில் இனிக்கும்
கனியின்  பிஞ்சுகள்

விடாது தொடர்ந்த இடர் கண்டு நஞ்சான நெஞ்சம்
படாது படர்ந்த வலிகள் பிஞ்சுகளால் கொஞ்சம்
தொடாது போவதும் அவர்களின் கள்ளச்சிரிப்பால் தானோ...