Search This Blog

Friday, 15 February 2013

காதலர்கள் மட்டுந்தான் காதலிக்கின்றார்களா..??


"காதலர் தினம், காதலர் தினம்" என்று முகப்புத்தகத்தில் பேசாத முகங்கள் இல்லை. ஒரு வழியாக காதலர் தின ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நிறைவடைந்து விட்டது. வழமையாக இந்த காதலர் தினத்தினை காதலர்கள் கொண்டாடி மகிழ்வதைத்தான் நான் பார்த்திருக்கின்றேன். அதுவும் நம் ஊரில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து மறைத்து காதலர் தின வாழ்த்து அட்டைகள்பரிசு பொருட்களை கொள்வனவு செய்து தம் அன்புக்குரியவர்களிடம் சேர்த்து ஒரு திண்டாட்டத்துடன் காதலர்தின கொண்டாட்டம் கொண்டாடும் காதலர்கள் தொடங்கி தம்மை மறந்து  எல்லோர் முன்னிலையிலும் தம் காதலை கொண்டாடும் காதலர்கள் வரை நிறைய காதலர் தினங்களை கண்ணுற்ற எனக்கு இந்த ஆண்டு காதலர் தின அனுபவம் மிக்க வித்தியாசமான அனுபவம் என்பதை விட காதலர்தினம் காதலர்களுக்கு மட்டுமல்ல என்பதையும் புரிய வைத்தது என்றும் கூட கூறலாம்.
ஆம். தாய்லாந்தில் காதலர்தின கொண்டாட்டங்கள் காதல் செய்யும் அனைத்து பராயத்தினராலும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இரு நாட்களுக்கு முன்பு வீதியெங்கும் சிவப்பு மயமாகவே காணப்பட்டது. சிவப்பு இதய பொம்மைகளும், சிவப்பு ரோஜாக்களும், சிவப்பு நிற பரிசுப்பொதிகளும் கண்ணை பறித்தன. ஆனால் இவற்றை சின்னஞ் சிறு சிறார்கள் தொடங்கி வயதான முதியவர்கள் வரை போட்டி போட்டுக்கொண்டு வாங்கியதை மிக்க ஆச்சரியமாய் பார்த்த எனக்கு நேற்றைய தினம் அதாவது காதலர்தினத்தன்று இங்கு உள்ள ஒரு சிறுவர் பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே பள்ளிச்சிறுவர்கள் அனைவரும் தம் சீருடையிலும் அழகிய அவர்களின் கன்னங்களிலும்  இதய வடிவிலான ஸ்டிக்கர்களை  ஒட்டி இருந்ததுடன் தமது கைகளில் பரிசு பொதிகளுடன் காணப்பட்டனர். வியப்போடு அவர்களை நோக்கிய நான் எமது ஊரில் மட்டும் இப்படி பாடசாலைக்கு போனால் என்ன கதிஎன்று மனதுக்குள் எண்ணியவாறு அந்த பட்டாம்பூச்சிகளின் சிறகடிப்புக்களை இரசித்துக்கொண்டிருந்தேன்.

 காலை ஆராதனைக்காக ஒன்று கூடிய அவர்கள் தேசிய கீதம் இசைத்து முடிந்ததும் ஒரே குரலில் ஹப்பி வலன்டைன் டே என்று கத்தியதில் பள்ளியே அதிர்ந்தது. அதன் பின் ஒவ்வொருவராய் தம் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி தம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.ஆசிரியர்களும் மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு இனிப்புக்களை வழங்கி கட்டியணைத்து தம் அன்பினை பரிமாறிக்கொண்டனர். சிலர் அன்பு என்னும் தலைப்பில் கவிதைகள் படித்தனர். ஆசிரியர்களும் சிலர் உரை ஆற்றி அன்பை போற்றினர்.   கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் தம் அன்பினை பகிர்ந்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்த அவர்களால்  அந்த பாடசாலை புது மெருகோடு காணப்பட்டது .ஆக மொத்தம் அன்புக்குரியவர்களை திக்கு முக்காட வைத்து கொண்டிருந்த அந்த சின்னஞ் சிறுசுகள் பார்த்து கொண்டிருந்த என்னையும் திக்கு முக்காட வைத்தனர். 

காதல் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பது நானறிந்த உண்மை எனினும். பெப்ரவரி 14 என்பது காதலர்களுக்கானது என்ற என் நினைப்பை நேற்றைய காதலர் தினம் பொய்யாக்கியது. அது காதலர்களுக்கான தினம் அல்ல காதலிப்பவர்களுக்கான தினம். ஆம் பெற்றோரை காதலிக்கும் குழந்தைகளும் ஆசிரியர்களை  காதலிக்கும் மாணவர்களும் அயலவர்களை நண்பர்களை என்று அனைத்து உறவுகளையும் நேசிக்கும் அன்பு உள்ளங்கள் தம் தூய  அன்பினை வெளிப்படுத்தும் நாளாகவே தாய்லாந்து மக்கள் இந்த காதல் தினத்தினை கொண்டாடுகின்றனர்.


உண்மையில் சிந்தித்து பார்த்தால் வலன்டைன்  தினம் என்று தானே அழைக்கின்றார்கள். இரு காதலர்களின் மேல் உள்ள அன்பினால் அவர்களை காப்பாற்றி அவர்களுக்காக உயிர் கொடுத்த வலன்டைன் பாதிரியாரின் பெயரால் அவரின் நினைவாக இந்த தினம் கொண்டாட படுகின்றதென்றால் அது நிச்சயமாக அந்த பாதிரியார் உயர்வாக போற்றிய அன்பினை வெளிக்காட்டவே அன்றி வேறு எதற்கு..?? 


தமிழில் நாம் தான் காதலர் தினம் என்கின்றோம்?? உண்மையில் காதலர்களுக்குரிய தினம் என்றால் ஆங்கிலத்தில் லவர்ஸ் தினம் என்றல்லவா அழைக்க வேண்டும்?? ஏன் வலன்டைன் தினம் என்கின்றார்கள்..?? சக உயிர்களிடத்தில் அன்பு செலுத்தி இரு யிர்களை காப்பாற்றி உயிர் துறந்த பாதிரியார் வழியில் எல்லோரிடமும் அன்பு செலுத்தி மகிழ வேண்டும்  என்று இந்த தினத்தினை நாம் ஏன் கருதக் கூடாது?? காதலர்கள் மட்டுந்தான் காதலிக்கின்றார்களா??  

உறவுகளை, பெரியோரை, சக மனிதர்களை, அயலவர்களை என்று வேற்றுமை இன்றி எல்லோரிடமும் அன்பு செலுத்தி மகிழ்ந்தால் குறைந்து தான் போய்  விடுவோமா? சரி, அதற்காக பத்து வருசமா முட்டி மோதிட்டு இருக்கிற பக்கத்து வீட்டு காரனுக்கு அன்பை காட்டுகின்றேன் பேர்வழி என்று போய்  இனிப்பை கொடுத்து அவனை களி தின்ன வைத்து விடாதீர்கள்.

உம் என்று முகத்தை வைத்து கொண்டு எம்மில் பலர் இருக்கின்றார்கள். காலை  வேலைக்கு போனோமா மாலை வீடு வந்தோமா என்று தமக்கு தாமே பேசிக் கொண்டு இருக்கும் அவர்கள் இந்த ஒரு நாளிலாவது கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் இனிப்பாய் இருந்தால் தான் என்ன?இந்த ஒரு நாளை முன்னுதாரணமாய் கொண்டு வாழ்க்கை முழுக்க எல்லோரிடமும் அன்பாயிருங்கள் எல்லோரையும் காதலியுங்கள் காதலித்துக்  கொண்டே இருங்கள்...!!!(தப்பா ஏதும் புரிந்து கொள்ளாதீங்கோள் மக்காள் )

நன்றி தாய்லாந்து குழந்தைகளுக்கு...

என்றும் அன்புடன் 
அரசி  

Thursday, 14 February 2013

முத்தி நிலை அடைந்தாலும் முற்றுப்பெறாது இந்த காதல்...!!!
முன்னிரவுகளில்
முகம் பொத்தி விம்மி அழுத நினைவுகள்...!
முகமூடி போர்வைக்குள்ளே 
முடங்கி வாழ்ந்த பலாத்கார கொடிய வாழ்வு...!

முகப்புத்தகத்திலும் என்னை 
முடக்கி வைத்திருந்த உன் மனதை எண்ணி 
முள்ளாய் குத்திய  தருணங்கள்...!

முழுவதுமே முகவரி அற்று போய் விடுகின்றது...!!!
முதன்முதல் எம் காதலில் வந்த "காதலர் தினத்தில்"
முதன்முதலாய் நீ தொலைபேசியில் இட்ட 
முத்தச்சத்தம் காதுகளில் ஒலிக்கும் போது.....


முடிவாகிப்போனது நீயன்றி என் காதலல்ல...!!! 
முணு முணுத்து கொண்டே தான் இருக்கின்றது - என்னுள்  
முடங்கி போயிருக்கும் மெளனக்காதல்...!!!

முத்தி நிலை அடைந்தாலும் 
முற்றுப்பெறாது இந்த காதல்...!!!  
முடித்து சென்ற உனக்கு 
முடிவிலி பற்றி அறிந்திட தெரியாதே...!

முன் ஜென்ம பந்தமோ என்றாய்...!
முத்தே பவளமே வைரமே என்றாய்...!
முட்டாளே என்ற நீ இன்று - என் 
முகம் கூட மறந்திருப்பாய்...!!! 

காலங்கள் கடந்தாலும் 
காதல் கசங்கி போய் விடவில்லை...!
காதல் என்றுமே அழியாதது....!!!
காதலின் அடிப்படை அறிவற்ற உன்னை கொண்டு 
காதலை கணக்கிட முனைவது அறியாமை..! 

காதலன் என்ற தகுதி அற்ற - நீ 
கணவனாய் இன்னொரு புது பதவியை 
காசை கொடுத்தா இரந்தா பெற்றாய்??

காதலர் தினம் நினைவற்று போய்
கால் போன போக்கிலே - நீ 
காலி வீதியெங்கும் அலைவதாய் கேள்வி...!!!


காசை கொடுத்து உன்னை விலைக்கு வேண்டியவளுக்கு 
காட்டுகின்றாயோ விசுவாசம் என்று மனம் எண்ணினாலும் 
காலத்தால் காதல் சொல்லும் பழிவாங்கல் என்கின்றது அறிவு...!!! காலம் வரைக்கும் காதல் வாழத்தான் செய்கின்றது...!!! காதலுக்கு "உயிர்"  இருக்கத்தான் செய்கின்றது...!!!

அரசி  

Monday, 4 February 2013

இங்கிலாந்தில் இங்கிலீசு இரண்டாம் மொழியாகி இருந்திருக்கும் ..!!!மனித எச்சங்கள் மண்ணுக்குள்
மலிவாக கிடைக்கின்ற 
மகத்தான நாட்டில்  
சிங்களமும் புத்தமும் 
சிறுபான்மையை தின்கின்ற கொடுமை 
சிங்காரச்செந்தமிழ் படுகொலையாகும் அவலம் 
சிவனை துரத்தி புத்தன் தியானிக்கும் வன்மம் 
சிங்க(ள)த்து கொடியின் பறப்பின் பின்னே..!!!  


 

ஆயுதங்களை கண்டதும்
ஆகாயப்பறவைகள் எச்சங்களை துப்பியதும் 
ஆண்டவனின் இருப்பிடங்கள் 
அகதி முகாம்களாகியதும் 
ஆங்கிலேயனுக்கு பிற்பாடே...!!!
மண்ணுக்குள் இருந்து 
மண்டையோடுகள் முளைப்பதும் 
மண்ணை விற்று  
மக்களை ஏய்க்கும் குள்ளநரி மந்திரிமார் 
மாற்றானுக்கு குடை பிடிப்பதற்காய் 
மழை பெய்ய வைப்பதும் 
வெள்ளையனை கலைத்த பிற்பாடே..!!! கோலோச்சும் நாட்டு மக்களை 
கொன்றொழிக்க கொடுங்கோலர்,
கொத்து கொத்தாய் குண்டுகளையும்  
கொடிய நச்சு வாயுக்குண்டுகளையும் 
கொட்டிய கொலை வெறித்தனம்..!!
கொடுக்கப்பட்ட சுதந்திரம் என்ற 
சொல்லின் பிற்பாடே...?? 
ஆங்கில பிரபுக்களின் ஆட்சியில்  
ஆங்கிலமும் மேலைத்தேய கலாச்சாரமும் 
வெட்ட வெளிச்சமாய்  புகுத்தப்பட்டது 
ஆலயங்கள் இடிக்கப்பட்டது தான் 
வெள்ளையனின் ஆட்சியில் 
வெள்ளை வான் கடத்தல் இல்லை..!
வெட்டுப்புள்ளி விவகாரம் இல்லை..! 
விலை வாசி ஏற்றமும் இல்லை..! 

 
முள்ளுக்கம்பிக்குள் முடக்கப்பட்ட 
முதுகெலும்பு அற்ற வாழ்வு...!!!
அத்திவாரக் கல்லுக்கு பதில் 
அப்பாவித்தமிழனின் என்புக்கூடு..!! 
காணாமல் போனவன் 
மரண சான்று பெறுகின்றான் 
அகழ்வாராச்சியால்...!!

இலங்கையர் என்று ஒன்றுபட்டு 
இருவேடமிட்ட சிங்களவனை நம்பியதற்கு    
தனியே வெள்ளைத்துரைகளை 
தட்டி கேட்டிருந்தால் 
வெள்ளையனை வேட்டி  கட்ட வைத்திருப்பான் 
வெள்ளைத்தமிழன்...!!!
இங்கிலாந்தில் இங்கிலீசு 
இரண்டாம் மொழியாகி இருந்திருக்கும்..!!!

இருந்தவற்றை தொலைத்து ஆண்டியான
இளிச்சவாய் தமிழன் - இன்று 
இலங்கையில் ஏதோ கொண்டாடுகிறானாம்..!!! 
நடு வானில் பறப்பது சிங்க கொடியல்ல
நலிந்து போய்விட்ட தமிழனின் இயலாமை...!!!
சிங்களவன் கொண்டாடி மகிழ்வது 
வெள்ளையன் கொடுத்த விடுவிப்பை அல்ல
வீரத்தமிழனின் தற்காலிக வீழ்ச்சியை...!!!

நாற்பத்தேழுகளின் பின்னோக்கிய
நாட்களை விட மோசமான காலத்தை நோக்கி 
நகருகின்ற தமிழனுக்கு எதற்கு இந்த தினம்?

நன்றி கெட்ட மனித பச்சோந்திகள்..!
நரிபுத்தி கொண்டு சிங்களத்தை 
நக்கிப்பிழைக்கும் கட்டாக்காலிகள்- இவர்கள்   
நாளை புலி வாலும் பிடிப்பார்கள் ...!!!