Search This Blog

Friday 15 February 2013

காதலர்கள் மட்டுந்தான் காதலிக்கின்றார்களா..??


"காதலர் தினம், காதலர் தினம்" என்று முகப்புத்தகத்தில் பேசாத முகங்கள் இல்லை. ஒரு வழியாக காதலர் தின ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நிறைவடைந்து விட்டது. வழமையாக இந்த காதலர் தினத்தினை காதலர்கள் கொண்டாடி மகிழ்வதைத்தான் நான் பார்த்திருக்கின்றேன். அதுவும் நம் ஊரில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து மறைத்து காதலர் தின வாழ்த்து அட்டைகள்பரிசு பொருட்களை கொள்வனவு செய்து தம் அன்புக்குரியவர்களிடம் சேர்த்து ஒரு திண்டாட்டத்துடன் காதலர்தின கொண்டாட்டம் கொண்டாடும் காதலர்கள் தொடங்கி தம்மை மறந்து  எல்லோர் முன்னிலையிலும் தம் காதலை கொண்டாடும் காதலர்கள் வரை நிறைய காதலர் தினங்களை கண்ணுற்ற எனக்கு இந்த ஆண்டு காதலர் தின அனுபவம் மிக்க வித்தியாசமான அனுபவம் என்பதை விட காதலர்தினம் காதலர்களுக்கு மட்டுமல்ல என்பதையும் புரிய வைத்தது என்றும் கூட கூறலாம்.
ஆம். தாய்லாந்தில் காதலர்தின கொண்டாட்டங்கள் காதல் செய்யும் அனைத்து பராயத்தினராலும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இரு நாட்களுக்கு முன்பு வீதியெங்கும் சிவப்பு மயமாகவே காணப்பட்டது. சிவப்பு இதய பொம்மைகளும், சிவப்பு ரோஜாக்களும், சிவப்பு நிற பரிசுப்பொதிகளும் கண்ணை பறித்தன. ஆனால் இவற்றை சின்னஞ் சிறு சிறார்கள் தொடங்கி வயதான முதியவர்கள் வரை போட்டி போட்டுக்கொண்டு வாங்கியதை மிக்க ஆச்சரியமாய் பார்த்த எனக்கு நேற்றைய தினம் அதாவது காதலர்தினத்தன்று இங்கு உள்ள ஒரு சிறுவர் பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே பள்ளிச்சிறுவர்கள் அனைவரும் தம் சீருடையிலும் அழகிய அவர்களின் கன்னங்களிலும்  இதய வடிவிலான ஸ்டிக்கர்களை  ஒட்டி இருந்ததுடன் தமது கைகளில் பரிசு பொதிகளுடன் காணப்பட்டனர். வியப்போடு அவர்களை நோக்கிய நான் எமது ஊரில் மட்டும் இப்படி பாடசாலைக்கு போனால் என்ன கதிஎன்று மனதுக்குள் எண்ணியவாறு அந்த பட்டாம்பூச்சிகளின் சிறகடிப்புக்களை இரசித்துக்கொண்டிருந்தேன்.

 காலை ஆராதனைக்காக ஒன்று கூடிய அவர்கள் தேசிய கீதம் இசைத்து முடிந்ததும் ஒரே குரலில் ஹப்பி வலன்டைன் டே என்று கத்தியதில் பள்ளியே அதிர்ந்தது. அதன் பின் ஒவ்வொருவராய் தம் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி தம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.ஆசிரியர்களும் மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு இனிப்புக்களை வழங்கி கட்டியணைத்து தம் அன்பினை பரிமாறிக்கொண்டனர். சிலர் அன்பு என்னும் தலைப்பில் கவிதைகள் படித்தனர். ஆசிரியர்களும் சிலர் உரை ஆற்றி அன்பை போற்றினர்.   கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் தம் அன்பினை பகிர்ந்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்த அவர்களால்  அந்த பாடசாலை புது மெருகோடு காணப்பட்டது .ஆக மொத்தம் அன்புக்குரியவர்களை திக்கு முக்காட வைத்து கொண்டிருந்த அந்த சின்னஞ் சிறுசுகள் பார்த்து கொண்டிருந்த என்னையும் திக்கு முக்காட வைத்தனர். 

காதல் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பது நானறிந்த உண்மை எனினும். பெப்ரவரி 14 என்பது காதலர்களுக்கானது என்ற என் நினைப்பை நேற்றைய காதலர் தினம் பொய்யாக்கியது. அது காதலர்களுக்கான தினம் அல்ல காதலிப்பவர்களுக்கான தினம். ஆம் பெற்றோரை காதலிக்கும் குழந்தைகளும் ஆசிரியர்களை  காதலிக்கும் மாணவர்களும் அயலவர்களை நண்பர்களை என்று அனைத்து உறவுகளையும் நேசிக்கும் அன்பு உள்ளங்கள் தம் தூய  அன்பினை வெளிப்படுத்தும் நாளாகவே தாய்லாந்து மக்கள் இந்த காதல் தினத்தினை கொண்டாடுகின்றனர்.


உண்மையில் சிந்தித்து பார்த்தால் வலன்டைன்  தினம் என்று தானே அழைக்கின்றார்கள். இரு காதலர்களின் மேல் உள்ள அன்பினால் அவர்களை காப்பாற்றி அவர்களுக்காக உயிர் கொடுத்த வலன்டைன் பாதிரியாரின் பெயரால் அவரின் நினைவாக இந்த தினம் கொண்டாட படுகின்றதென்றால் அது நிச்சயமாக அந்த பாதிரியார் உயர்வாக போற்றிய அன்பினை வெளிக்காட்டவே அன்றி வேறு எதற்கு..?? 


தமிழில் நாம் தான் காதலர் தினம் என்கின்றோம்?? உண்மையில் காதலர்களுக்குரிய தினம் என்றால் ஆங்கிலத்தில் லவர்ஸ் தினம் என்றல்லவா அழைக்க வேண்டும்?? ஏன் வலன்டைன் தினம் என்கின்றார்கள்..?? சக உயிர்களிடத்தில் அன்பு செலுத்தி இரு யிர்களை காப்பாற்றி உயிர் துறந்த பாதிரியார் வழியில் எல்லோரிடமும் அன்பு செலுத்தி மகிழ வேண்டும்  என்று இந்த தினத்தினை நாம் ஏன் கருதக் கூடாது?? காதலர்கள் மட்டுந்தான் காதலிக்கின்றார்களா??  

உறவுகளை, பெரியோரை, சக மனிதர்களை, அயலவர்களை என்று வேற்றுமை இன்றி எல்லோரிடமும் அன்பு செலுத்தி மகிழ்ந்தால் குறைந்து தான் போய்  விடுவோமா? சரி, அதற்காக பத்து வருசமா முட்டி மோதிட்டு இருக்கிற பக்கத்து வீட்டு காரனுக்கு அன்பை காட்டுகின்றேன் பேர்வழி என்று போய்  இனிப்பை கொடுத்து அவனை களி தின்ன வைத்து விடாதீர்கள்.

உம் என்று முகத்தை வைத்து கொண்டு எம்மில் பலர் இருக்கின்றார்கள். காலை  வேலைக்கு போனோமா மாலை வீடு வந்தோமா என்று தமக்கு தாமே பேசிக் கொண்டு இருக்கும் அவர்கள் இந்த ஒரு நாளிலாவது கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் இனிப்பாய் இருந்தால் தான் என்ன?இந்த ஒரு நாளை முன்னுதாரணமாய் கொண்டு வாழ்க்கை முழுக்க எல்லோரிடமும் அன்பாயிருங்கள் எல்லோரையும் காதலியுங்கள் காதலித்துக்  கொண்டே இருங்கள்...!!!(தப்பா ஏதும் புரிந்து கொள்ளாதீங்கோள் மக்காள் )

நன்றி தாய்லாந்து குழந்தைகளுக்கு...

என்றும் அன்புடன் 
அரசி  

2 comments:

  1. சகோதரி... அருமையான கருத்து..பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... காதல் என்பது இப்ப்ழுதெல்லாம் காமத்துடன் மட்டும் தொடர்புபடுத்தப்பட்டு வருவது கலைக்குரியது. காதல் எதிலும் ஏற்படலாம் என்பதைப் பலர் மறந்தே போனார்கள்... நீங்கள் அதை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறீர்கள்....இதே கருத்தில் கடந்த வருடம் நான் ஒரு கவிதை எழுதினேன்.. சென்று படித்துப் பாருங்கள்.. உங்கள் கருத்தையும் தெரிவித்து செல்லுங்கள்... :)

    http://poonka.blogspot.co.uk/2012/03/blog-post.html

    ReplyDelete
  2. உங்களின் வரவிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி... உங்கள் கருத்து முற்றிலும் உண்மை....!!! பதிவுகளை படித்து விட்டுப்போவதோடு சரி.நடைமுறையில் யாரும் செயற்படுத்த முன்னிற்பதில்லை சகோதரி..!!!

    ReplyDelete