Search This Blog

Saturday 6 December 2014

குடிமக்கள்...!!!

நாங்கள் இலங்கை குடிமக்கள்
நாடிழந்து வீடிழந்து 
நாதியற்று அலைகின்ற குடிகள் 

உலகின் உயர் சனநாயக 
தேசத்தின் குடிமக்கள் யாம்...

குடிமக்கள் மீதே 
குலை குலையாய் 
குண்டுகளை வீசி 
குடல்களை பிடுங்கி எடுத்து 
குழி பறித்த நாட்டின் 
குடிமக்கள் யாம்....!

எம்பி வந்த கொத்துக்குண்டும் 
எரிகுண்டும் பல்குழல் 
எறிகணையின் பரவலும் 
பதம் பார்க்காத தேசம் இல்லை 

படையெடுத்து பாய்ந்து 
பதம் பார்த்த சன்னங்கள்
பட்டு ஓடிய உதிரம் குடித்து 
பயில்வானாகிய அரசு....!

குடிமக்களை 
கூட்டு சேர்ந்து 
குதறிப் போட்டு 
எக்காளம் போட்ட 
ஒரு தேசத்தின் 
குடிமக்கள் யாம் தான் 

புதைத்து போட்ட 
புதைகுழிகள் மேல் 
தண்டவாளமிட்டு 
புகைவண்டி ஓட விட்டு 
புன்னகைக்கும் இனவாத 
தேசத்தின் குடிமக்கள் யாம் 

கைகோர்த்து யுத்தம் செய்திட்ட 
தேசங்களின் உதவி பெற்று தான் 
புனரமைப்பும் புனர்வாழ்வும் 
அங்கே
அரங்கேறும் விசித்திரம்....

அடக்கடவுளே 
அநியாயம் 
அந்தோ பரிதாபம் 
அங்கே இப்பதங்களுக்கு
பஞ்சமும் இருக்காது. 

புதைகுழிக்குள் மாண்டு போன 
சுதந்திரம் மாற்றீடாக  
புகைவண்டியாகவும்  உயர் வேக 
நெடுஞ்சாலையாகவும்
கையளிக்கப்படுவதை  
அங்கலாய்ப்போடு நோக்கும் 
அப்பாவி குடிமக்கள் யாமே...

மனிதாபிமானம் நியாயம் ஜனநாயகம் 
மரணித்த தேசத்தில் குடிமக்களாய் யாம் 
இன்னமும் குதறுப்பட்டபடி குற்றுயிராய் 
கிடக்கின்றோம். 

மறுவாழ்வு புனர்வாழ்வு யாவும் இனிதே 
மறுசீரமைக்கப்படுகின்றதாம் - குடிமக்களை கொண்டே 
மறக்காமல் வாக்குமூலமும் வாங்கப்படுகின்றதாம் 

எங்கள் தேசம் எங்கள் வாழ்வு எங்கள் கையில் இல்லை 
ஆனாலும் நாங்கள் இலங்கை தேசத்தின் குடிமக்கள்  






உவர்ப்பு....!

நிறைந்து கிடக்கும் பணம்...!
நிதி முட்டிய வீட்டில் உப்பும்
நிறைவாகவே இருக்கின்றது..!

நிரை நிரையாக நோய்களும்
நிதியினை போன்று நன்றே
நிறைந்திருக்கின்றது...!

நிம்மதியாக சுவைக்க முடியவில்லை
உவர்ப்பினை....

உழைத்துக் கொட்டிய பணத்தால்
உவர்ப்பினை விலை கொடுத்து
வாங்கிடத்தான் முடியவில்லை..!


நிறைந்து வழியும் வறுமையின் கோரத்தில்
நின்று நிதானிக்க நேரமில்லை...!

உப்பின் இருப்பிற்கும் வழி இல்லை...
வியர்வை சிந்தி  உழைத்து களைத்த
கூலிக்காரனின் பழைய சாதம்

சேர்க்காத  உப்பினால்
உவர்க்கத்தான் செய்கின்றது...!

சிந்திடும்  வியர்வையின் உவர்ப்பின் சுவையோ
வழிந்திடும் கண்ணீரின் சுவையோ....?