Search This Blog

Thursday 25 October 2012

உயிரை கசக்கி பிழிந்து உலர்த்தி சலவை செய்யும் உயிர் இயந்திரங்கள்...!!!


மனிதங்கள் மரத்து மரமான யுகத்தில்..
மரணத்தை நேசிக்கும் மனிதர்களில் ஒன்றாய் நானும்,
மனித வாசம் அற்ற இருட்டில் தனியாக நீயும்,
தவற விட்ட வாய்ப்பு ஒன்றால் 
தனியாக அந்நிய தேசமதில்....
தடைகளை தாண்டியும்,,,
தலை குப்புற விழுந்து எழுந்தும்,,,
தமிழனின் தலைவிதியிலிருந்து
தப்புமா எம் தலைகள் மட்டும்..??
தவிப்பு ஒன்றே எமக்கு எந்நாளும் சொந்தம்...!!! 
இளநீர் குடித்தவன் மரமேறி விட்டான்..!
இடையில் வந்து கோம்பையை தூக்கி...
இளிச்சவாயர்களாய்  இன்றும் நாம்....!
இன்னும் எத்தனை காலமோ....???
இருளோடு எம் வாழ்வு 
இரண்டறக்கலந்து விட்டது....!
மின்மினியின் ஒளி கூட..
மிகத்தொலைவிலும் இல்லை...!
கடந்து போன தருணங்கள்...,
கலைந்து போன நினைவுகள்...,
கனவாகிப்போன நிஜங்கள்....,
கண் துடைப்பில் உறவுகள்....,
துடி துடித்து உயிரை விட்டபடி..
துளித்துளியான கண்ணீரோடு மட்டும்..
துருவங்கள் ஆக்கப்பட்ட  உறவுகளாய் நாம்...!!!
உயிருக்கு பயந்து...
உறவுகளை பிரிந்து ஓடோடி வந்தால்,,,
உதைக்கின்றார்களே...
உண்மை தெரியாமல் இங்கும்..!!!
உயிரை கசக்கி பிழிந்து
உலர்த்தி சலவை செய்யும்
உயிர் இயந்திரங்கள்...!!!

உலகத்தை  அறிந்திடா  மானிடங்கள் இவை..!!
உணர்ச்சிகள் உணர்வுகளும் செத்து 
உயிரற்ற உடலங்களாக... 
உலவி  வீரம் காட்டும் இவர்களை விட
உயிர்களை கொல்லும் இலங்கை இராணுவம்
உயர்வானது...!!!
உணர்வுகளை கொன்று,,, 
உறவுகளை பிரிக்கின்ற,,, 
உன்னதமான இராச்சியத்தின் தடுப்பு மையத்தை விடவும் 
உயிர் வதை பூஸா முகாமும் நாலாம் மாடியும்,,
உயர்வானது...!!!
அரசி 

Monday 1 October 2012

காட்டிக்கொடுக்கின்றது என்னுள்ளிருக்கும் உன் இதயம்...!!!



விழி கொண்டு நோக்கிட முடியா
விதியா இது...?
விழியாவது பேசி ஆற்றுப்படுத்த  முடியா.
விதியா இது...?

உருவம் ஒன்று மட்டும் நிழலாடுகின்றது...!
உன்னை காணும் துடிப்பில் எட்டி எட்டி நோக்கும் என்னை.
உருகும் மனதோடு அங்கும் இங்கும் அந்தரிக்கும்
உன் தவிப்பை காணுகின்ற என் கண்களில் நீரில்லையே,,

இதயம் கனம் தாங்காது வெடித்தாலும்..
இந்த பேதையை தாங்கி கொள்ள அருகில் தானும் - உனக்கு 
இடமளிப்பார்களா ?

உன் மனதை தாங்கி வரும் 
உன் எழுத்துக்கள் நிறைந்த மடலை காண
ஓடோடி வருகின்றேன் மணித்தியால 
ஓட்டங்களை கடக்கும் பேருந்தில் ஏறி..

கருவிலும் இடுப்பிலும் சுமக்கும் மழலைகளின்
சுமையை விட நெஞ்சில் 
சுமக்கும் உன் சுமை அதிகமாய்..
என்னை பற்றிய சுமைகளை 
சுமந்து கொண்டிருக்கும் உன் 
சுமைகளையும் சேர்த்து 
சுமப்பதாலோ ...??

கைமாறி வரும் என் மனது உன்னிடமும், உன் மனது என்னிடமும்
கை சேர்வதற்கிடையில்....
அல்லாடி போய் விடுவேன்
அந்தரத்தில்....

காட்சி கொடுக்கும் முகத்தினை விட 
காட்டாத உன் அகம் தெட்டதெளிவாக தெரிகின்றது..
காட்டும் சைகையில்  புரிகின்ற  உன் வேதனையையும் 
காட்டிக்கொள்ளாமல் தவிக்கும் உன் தவிப்பையும்..
காட்டிக்கொடுக்கின்றது என்னுள்ளிருக்கும்  உன் இதயம்...!!! 

அர்த்தமற்ற பிரிவுகளும் சிறைகளும் 
அடிக்கடி எம்மை
அரவணைப்பதற்கு நாம் இழைத்த 
அநீதி தான் என்னவோ??
அகதி என்பதை - எமக்கு 
அந்தஸ்தாக 
அளித்தது யார்??
யார் இழைத்த 
அநீதி இது..???

 அரசி