Search This Blog

Wednesday, 20 May 2015

பெண்ணாய் பிறந்த பிறப்பை எண்ணி பெரும் வேதனைப்பட்டிருப்பாய்....!!

வித்தியா...!
உந்தன் நினைப்பிலே விம்முகின்றது
உள்ளமடி.....!


உந்தன் முகம் காணும் போதெல்லாம்
உயிர் மரணிக்கும் வலி
உணருகின்றேன்..!


உன்னை எனக்குத் தெரியாது
உள்ளம் ஏனோ பதறுகின்றது
கணமும்.....

நீ துடித்த துடிப்பும் அவஸ்தையும்
மனக்கண்ணில் ஓட ஆற்றுப்படுத்த
முடியாமல் தோற்றுக் கலங்குகின்றேனம்மா..!

எத்தனை மணி நேரம் போராடினாயோ....??
என்ன என்ன நினைத்திருப்பாய்...!
பெண்ணாய் பிறந்த பிறப்பை எண்ணி
பெரும் வேதனைப்பட்டிருப்பாய்....!!

பெருமையடைந்த பதினெட்டு வருடங்களை
ஒற்றை நொடியில் வெறுத்து அழுதிருப்பாய்...!

உன்னிடத்தில் இருந்து சிந்திக்கின்றேன்...!
உன்னிலையில் இருந்து உணருகின்றேன்....!

நினைத்து பார்க்க முடியா கொடும் வேதனையடி....
நிறுத்திட முடியாமல் தடுத்திட முடியாமல்
கதறித் துடித்துப் போராடிப் போராடி
வேதனைப்பட்டது உன் அங்கம் மட்டுமல்ல
அந்த சின்னஞ் சிறிய இதயம் கூடவே

மனிதப் பேரவலம் ஒன்றின் நினைவேந்தலை
நினைவு கூரும் வேலைப்பளுவில் உன்னை
நினைக்கப் பலருக்கு நேரமில்லையாம்.....!!!

வேற்றினத்தவன் எம்மை தாக்கி அழித்தமைக்கு
ஆண்டாண்டு காலமாய் கோஷம் எழுப்பி வருகின்றோம்..!
என்ன நீதி கிடைத்து விட்டது????

எம்மினத்திற்குள் எங்கள் தலைமுறையினை
கடித்துக் குதறும் பேய்களை விரட்ட முடியாத
கையாலாகாதவர்கள் ஒற்றைப்படுகொலைக்கு
எதையும் கிழிக்க முடியாத எம்மால்
பேரவலம் ஒன்றிற்கு எதிராய்
என்ன தான் சாதிக்க இயலும்...???

உறங்க முடியாமல் கல்லறையில்
ஊமையாய் கண்ணீர் விடுகின்றாயோ...??

உனக்கு நேர்ந்த கொடுமையினை
எண்ணி திகைத்து வெருண்டு துடித்து
உருளும் உன் நிலை கண்டு துடிக்கின்றதடி
உள்ளம் வெகுவாக.....

என்ன என்ன நினைத்தாயோ..??
எப்படி எல்லாம் துடித்தாயோ..??

அன்புச்சோதரியே.....!
அழும் குரல் கேட்குதடி
அருகிலே யாருமின்றி - உனக்கு
நேர்ந்த கொடூரத்தை யாருக்கும்
சொல்லியழ முடியாமல்
தவியாய்த் தவிக்கின்றாயோ....?

உந்தன் தாய்மண்ணின் மடியில் - கண்
உறங்கிக் கொள்ளடி கண்மணியே
உந்தன் செவிகளை தீண்டும் நற்செய்தி
உனக்காக விரைந்து வருமடி...!

உந்தன் கண்ணீரும் துடிப்பும் கதறலும்
உருமாறும் விரைவில்.....!
உணர்த்திடும் உலகிற்கு....
பெருஞ்சாபமாகிடும்....!

உனக்கு இழைத்த பெருங்கொடூரத்திற்கு
ஈனப்பிறப்புக்களின் வம்சம்
கருவறுக்கப்படுவதாக.....!

எந்த உணர்வில் உன்னை கசக்கிப்போட்டார்களோ??
அந்த உறுப்பினை அடித்து கொய்து போடுக..!
பார்த்து பார்த்து ஏங்கிப் போகுமாறு அறுத்து எறிந்து
அழுகி நாற்றம் அடிக்க அடித்து உதைத்து
முச்சந்தியில் அம்மணமாக்கி
யாவரையும் காறித்துப்ப விடுக.......!

இதுவும் போதாது....
இன்னும் இன்னும் வேண்டும்...!
இழி பிறப்புக்களை
எட்டி உதைத்து தப்பி மிதித்து
எப்படியாகினும் உயிரோடு வைத்து
மெல்ல மெல்லக் கொல்க....!

அவள் துயரம் அடங்குமா???
அவள் மீண்டு வருவாளா??
அவள் வரவே மாட்டாள்....!!!
அவளைத்தான் மானபங்கப் படுத்தி
உலகம் எங்கும் விற்று விட்டார்களே???
எப்படி மீண்டு வருவாள் வித்தியா???

4 comments:

 1. சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
 2. புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
  இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 3. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 4. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.Tamil News

  ReplyDelete