Search This Blog

Thursday 31 July 2014

நிம்மதி...!



சொட்டு சொட்டாய் கண்ணீர்...!
நட்டு வைத்த செடியினை ஒத்து
பட்டு விடாமல் தழைத்து ஓங்கிய துன்பம்..!
கொட்டு கொட்டென்று மாரி மழையாய்
கொட்டிய குண்டு மழை...!
தட்டுப்பாடாய் போய்
ஒட்டு மொத்தமாய் காணாமல்
விட்டுப்போன நிம்மதி...!


தொட்டு வைத்த குங்குமத்தின் வாசம்
விட்டு மறையாத தருணத்தில்
சட்டுப்புட்டென எகிறி வந்த சன்னம்
முட்டி மோதி அவனை சாய்த்து விழுத்த...
பட்டுத்தெறித்த குருதியால் உடல் எங்கும்
குங்குமம் அள்ளி வைத்து இறுதியாக....
பயணித்த அவன் பயணம் இன்னும்
முற்றுப்பெறவில்லை...

 இதயம் பிளந்து ஊசல் ஆடிய உயிர் கண்டு
 உதயம் தொலைத்தவள் அவள்...!
நெற்றி தொட்டு பார்த்து அருகில் அவனின் கரம்
பற்றி பேசுவதாய் எந்நேரமும் ஒரு நிகழ்வு
வற்றிப்போன கண்களில் வறண்ட கண்ணீர்
மருந்திற்கும் இல்லாது போன துயரம்...!

தள்ளாடும் வயதில் இந்நிலை கண்ணுற்று
தவித்திருக்கும் அவன் பெற்றோர் தொலைத்தது
தங்கள் அருமை மகனை மட்டுமல்ல

பறந்து வந்த எறிகணைக்கும் துரத்தி வந்த கிபிருக்கும்
பரந்து விரிந்த தேசமெல்லாம் சுற்றித்தப்பி வந்து
இடைத்தங்கல் முகாமிலும் வதைபட்டு தொலைத்தது
இருப்பிடத்தை மட்டுமல்ல..

 

புகைப்படம் ஏந்தி வீதிக்கு வீதி யாசித்து தேடும்
புதல்வர்களும் பெற்றோர்களும் மனைவிகளும்
தொலைத்தது காணாமல்போன அவர்களின் உறவுகளை மட்டுமல்ல

இதயம் இன்னும் நிற்காமல் துடிக்கத்தான் செய்கின்றது
இருளோடு போராடும் முதுமையில் நிகழ் கால
நினைவின்றி கடந்த காலத்தில் உயிரற்ற கணவன்களுடன் வாழும்
நினைவற்றவர்களை நினைத்து வெதும்பும் நிகழ்காலப்பெற்றோர்கள்
தொலைத்து விட்டது "நிம்மதி" என்பதையும் கூடவே...

லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "நிம்மதி" என்ற தலைப்பில் இன்று (31.07.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


No comments:

Post a Comment