Search This Blog

Saturday 9 November 2013

நிர்வாணமாய் இணையம்...!


முகப்புத்தகம் முகம் மூடிக்கிடக்கின்றது..!!
நிலைச்செய்திகள் எங்கும் நிர்வாணமாய்
நிலைகுலைந்த நிலையில்....

நடு வீதியில் நிர்வாணமாய் இணையங்களும்....!!
வெள்ளைத்துணி போர்த்தி விடத்தான் யாருமில்லை...!
வெள்ளைத்துணி போர்த்தி வருபவளை உலகிற்கு
வெளிச்சம் போட்டு காட்டி
வெட்கமின்றி எழுதித்தள்ளும் இணைய ஊடகங்களே...!!
அவ்வப்போது புது வெளியீடாய்
அங்கங்கள் விளங்க வெளியிடும் காட்சிகள்...

படுகொலையாளிகளும் காரண கர்த்தாக்களும்
பார்த்து ரசிக்கவோ...???

யாருக்கு வெளிச்சம் போட்டு
யாசிக்கின்றீர்கள்...??
தமிழச்சியின் மானத்தை விற்று....

நான்காண்டாய் விதம் விதமாய் - சனல்
நான்கில் நாறிப்போகின்றது எங்கள்
உறவுகளின் மானம்....!!!

நாதியுண்டோ..??
ஐ. நாவும் சர்வதேசமும்
ஒப்புக்கும் தட்டி கேட்கவில்லை....!!
ஒலி வடிவத்தில் தொடங்கி
ஒளி வடிவமாய் காட்டி....இருக்கின்ற மானமும்
இல்லாமல் போவது தான் மிச்சமோ??

வல்லரசுகளும் சொல்லரசுகளும்
நாடுகள் கடந்து போன அரசுகளும்
அறிக்கைகள் தீர்மானங்கள் மாநாடுகள் என
அவ்வப்போது பொழுது போக்கி போகும் காலம் இது ...!!!
அரசியல் ஆளும் தேசத்தில் நீதிக்கு விலை ஏது..??
காணொளி என்ன..?
கற்பழிப்பு கொலைக்காட்சிகளை நேரலையாய்
ஒளிபரப்பினாலும் துடித்து சாகும் வரை நின்று
ரசித்துப்போகும் உலகின் கண்களுக்கு....
ரணத்தின் வலி தெரிந்திடாது...!
ரசிப்பதற்கு எங்கள் சகோதரி விலை மகளல்ல...!
எங்களுக்காய் உழைத்து மடிந்த உயிர் மகள்...!

உரிமை இழந்தோம் உடமை இழந்தோம்
உயிரும் இழந்தோம் மானத்தையும்  ஏன்
பறிக்கின்றீர்கள் ஊடகங்களே...!!

நந்திக்கடலில் நரிகளால்
வேட்டையாடப்பட்டவளை
நன்றாக முகப்பில் சித்தரிக்கின்றீர்கள்...!!!


உயிர் நீங்கி போனவளின் ஆத்மா
ஊடகங்களில் பிரதான காட்சிகளாய்
அசிங்கப்படுவதையும் - மீண்டும்
அவள் கற்பழிக்கப்படுவதையும்
கண்ணுற்றால் துடி துடித்து
மறுபடியும் மரணித்துப்போவாள்..!
நரக வேதனையாய் உணர்ந்திடுவாள்...!
நரிகளின் கையில் குதறப்பட்டதை விட
ஆயிரம் மடங்கு கதறிப்போவாள்...!

காட்சிகளை நோக்கவே மனம்
திடமாயில்லை....!!
தலைப்பினை நோக்கி
கண்ணீருடன் தலை குனியவே
தமிழன் எண்ணுவான்...!!
தலைப்புச்செய்தியாக்கி
தமிழர் மானத்தை விலை பேசவல்ல...!!



அரசி நிலவன்

1 comment:

  1. விந்தை மனிதர்க்கு எல்லாமே வேடிக்கைதான். தங்கள் சகோதரியாக மாற்றான் வீட்டுப் பெண்ணை நினைத்தால் இப்படி செய்யமாட்டார்கள். பிணத்திலும் வியாபாரம் பார்க்கும் கூறு கெட்ட ஊடகங்கள்..!!
    ஆதங்க வரிகள் அருமை.

    ReplyDelete