Search This Blog

Saturday 16 November 2013

அரவணைப்பு....!!!


என் சிரிப்பின் கன்னக்குழியாய்..
என் கண்ணீரின் விம்பமாய்...
என் வெற்றிகளின் படிகளாய்....
என் தோல்விகளின் எழுதலாய்....
எல்லாமாய் எந்தையாய் தாயாய்...

உனக்காய் நீ வாழ்ந்ததில்லை...
உயிர் கொடுத்து உதிரம் கொடுத்தவள் அன்னை என
உலகம் போற்றும் அன்னைகளிலிருந்து
உயர்ந்து நிற்கின்றாய் பல படிகளால்....!!!
உயிரான உறவொன்று நீங்கிப்போயினும்
உயிர் கொடுத்து உருக்குலைந்தாய் எமக்காக...


குறை ஒன்று உரைப்பேனா....?
குடிசையிலும் உன் அன்பால்
குன்றின் மேல் தீபமாய் காத்தவளே...!!

எண்ணி எண்ணி தினம் உவகை கொள்வேன்...!
என் தாயவளின் அன்பு கிடைக்க என்ன பேறு பெற்றேனோ??

கலங்கும் விழி கண்டு
கடுகதியில் விரைந்து
அரவணைக்கும் அன்னை உன்னை
அடுத்த பிறவியிலும் அன்னையாக
அடைய வேண்டும் நான்...!!!


அம்மா என்றழைத்து அரவணைக்கும் ஆறுதலில்
அண்டத்தின் அசைவுகள் அறியாமல் போய் விடுவேன்...
அம்மா நீ இல்லா காலமதை நினைத்தும் பார்க்க முடியவில்லை..
அதற்கு முன்னே நான் இல்லாமல் போக வேண்டும்...
அன்னையின் அரவணைப்பில் அமைதியாய்
அவள் மடி கொண்டு உயிர் நீங்கிப்போயிட வேண்டும்....!!!



அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அரவணைப்பு " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


1 comment:

  1. மழலை மொழியில் என்னை மறந்தேன்

    அழகிய வரிகள்

    ReplyDelete