Search This Blog

Tuesday 3 December 2013

சொத்து...!!!



செத்து மடிந்தும் உலவும்
பித்து பிடித்த வாழ்வதில் - உள்ளம்
குத்துப்பட்டுக் குதறுப்பட்டு தளர்ந்தாலும்
பூங்கொத்து போல் மலர்ந்தது
பெத்து எடுத்த கண்மணிகள்
முத்துக் கொட்ட சிரித்த போதினிலே...

பத்து உடன் பதினைந்தாய் நிலையில்லா
சொத்து யாவும் போயினும் ஒளி வீசும்
முத்துக்கள் ஆகி வந்த என்
வித்துக்கள் என்றும் நிலையான
சொத்துக்கள் எனக்கு...!!!


அலையில்லா கடல் உண்டோ
தலையில்லா மனிதருண்டோ??
துன்பம் இல்லா வாழ்வுண்டோ...??
இன்பம் இல்லா குழந்தையுண்டோ..??
அள்ளி எடுத்து பருகும் அமுதசுரபிகள்
துள்ளி வரும் பாதம் முகர்ந்து என் வலிகளை
தள்ளி வைக்கின்றேன் தொலை தூரத்தில்...

கொஞ்சி பேசும் பிஞ்சு மொழி
விஞ்சி நிற்கின்றது விம்மல்களைதாண்டி....
வலிகள் பிரசவித்த கண்ணீரோடு
வசந்தங்களை கொட்டும் மழலைகளை
வாரி அணைத்திட அரும்பும் ஆனந்த கண்ணீரும்
மாரி மழையாகி சொத்தாகி போனது...!


செந்தாமரையின் மலர்ச்சி கொண்டு
ரோஜா இதழின் மென்மை கொண்டு
நடை பயிலும் மலர்த்தோட்டங்கள்
தடை இன்றி சிரிக்கும் வரை வாட்டம்
காண்பேனோ...??


மாதுளம் முத்து பற்கள் கொண்டு மெல்ல
நறுக்கி பதம் பார்க்கும் இன்ப வலி தந்து
முகம் மூடி ரசிக்கும் கிளியே...!
கண்ணீர் கொண்டால் கண் பொத்தி
விளையாடும் மான் குட்டியே...!
எந்தன் குயில்களின் மழலை இசை இன்றி
சிறப்படைவதில்லை எனக்கான கவிதையும் கானமும்..


கோடி என்ன கொட்டி கொடுத்தாலும்
கொஞ்சிப்பேசும் வண்ண குஞ்சுகளுக்கு ஈடாகுமோ???
சொத்தான என் முத்துக்களை விட
சொத்து என்று உளதோ இவ்வுலகில்...???



அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "சொத்து " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/





2 comments:

  1. வணக்கம்
    பிள்ளைச்செல்வம் என்றால் எப்போதும் மகிழ்ச்சிதான்.. கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. /// துன்பம் இல்லா வாழ்வுண்டோ...??
    இன்பம் இல்லா குழந்தையுண்டோ..?? ///

    வரிகள் சிறப்பு... உண்மை...

    படங்கள் அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete