Search This Blog

Monday 3 March 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 9 - இறுதிப்பாகம் )


தொலைந்து போன நாட்களை தோண்டி எடுக்க முடியாது அல்லவா ? அவை கொடுத்த பிரிவுகளும் வலிகளும் அட்சய பாத்திரத்து அமுதம் போன்று அள்ள அள்ள குறையாமல் நினைத்து நினைத்து கண்ணீர் சிந்தச் சிந்த அதிகரித்தே செல்லுமே தவிர குறைவதில்லை. 

மதுரனுக்கு தொடருகின்ற துன்பம் ஆனது தொலைந்து போகாமல் அடம்பிடித்து கொண்டு அவனையும் குடும்பத்தினரையும் ஆட்டம் காண வைத்துக்கொண்டே இருக்கின்றது. 

என்ன வழிகளில் தீர்வைத் தேடினாலும் அவை யாவும் அவனுக்கு எதிராகவே முடிவை கொடுப்பதும் சில சமயம் எதிர்பாராத விதமான முடிவுகளை கொடுப்பதுமாய் நகரும் காலம் அவர்களுக்காய் செதுக்கப்பட்டு இருக்கின்றது எனலாம். 

ஆம்..! 

மீள்குடியேற்ற  நாட்டுக்கான அமெரிக்காவின் நேர்காணல்கள் முடிவுற்று மருத்துவ பரிசோதனைகளும் சாதகமான நிலையில் மதுரனினதும் நிலாவினதும் அமெரிக்க வழக்கு நிலுவை நிலைக்கு தள்ளப்பட்டதன் காரணம் மதுரன் தடுத்து வைக்கப்பட்டிருந்த தடுப்பு மையத்தில் உள்ள ஒரு சிலரது மோசமான நடவடிக்கைகள் ஆகும். அதன் பின்னணியில் கனேடிய அரசு உள்ளது என்பதனை எவராலும் நம்ப முடியாது.

மதுரனுக்கு நினைத்தாலே இந்த துன்பத்திலும் சிரிப்பு தான் ஏற்படும். இந்தளவிற்கு துரத்துகின்ற கனேடிய அரசின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தான் தகுதியானவனா? என்பது அடிக்கடி அவனிடம் எழும் வினாவாகும். பணத்தினையும் காலத்தையும் வீணடிக்கும் இவர்களை நினைத்து கோபத்தை விட அவனுக்கு ஏளனமே அதிகமாக ஏற்படுகின்றது.

மதுரனுக்கு அமெரிக்க மருத்துவ பரிசோதனை முடிவுற்றது அறியாமல்  தடுப்பு மையத்தில் இருந்த ஒரு சிலர்  மதுரனின் குடி நீரில் தூக்க மாத்திரைகளோடு போதை மருந்தினையும் கலந்து வைத்திருந்தார்கள். அதனை அறியாத மதுரன் அந்த நீரினைப்பருகி மயக்கமானான். ஒரு நாள்  பூராவும் முழு மயக்கமான அவனை தாய்லாந்து காவல்துறை வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதித்தது.

மதுரனின் மருத்துவ அறிக்கையின் பிரகாரம் ஐ நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் ஆனது கொலை முயற்சி என்னும் சந்தேகத்தில் பாங்காக் குடிவரவு தடுப்பு மையத்தில் விசாரணை நடாத்தியதில் குட்டு வெளிப்பட்டு தமிழர்கள் சிலர் அங்கிருந்து விலங்கிடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். அது சதித்திட்டம் என்பது ஐ நா அறிந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு விசாரணையும் ஆரம்பித்து மீள்குடியேற்ற நடவடிக்கையினையும் தற்காலிகமாக நிறுத்தியது.

ஏற்கனவே மருத்துவ பரிசோதனை முடிவுற்று சாதகமான முடிவை பெற்ற மதுரன் விமான பயணச்சீட்டிற்கு காத்திருக்க, அவனது உடலில் மயக்க மருந்து மற்றும் போதை கலந்திருப்பதாக உறுதிப்படுத்திய மருத்துவ அறிக்கையினை அங்கிருந்த தன்னார்வ தொண்டு நிறுவன தாதி 
அமெரிக்க மீள்குடியேற்ற அமைப்புக்கு(Resettlement Support Centre - RSC) அனுப்பி தனது சேவையினை கனேடியர்களுக்கு செவ்வனே செய்தாள்.

தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு மிகத்துரிதமாக செயலாற்றும் அமெரிக்க மீள்குடியேற்ற அமைப்பு அந்த மருத்துவ அறிக்கையின் காரணமாக ஏற்கனவே வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட மதுரனுக்கு மீண்டும் வழக்கினை நிலுவையில் வைத்துக்கொண்டது. 

மதுரனின் நிலையினையும் நிலாவின் துயரத்தினையும் விளங்கி கொண்ட ஐ நா உடனடியாக அவர்களது வழக்கினை அமெரிக்காவிடமிருந்து வாபஸ் பெற்று நியூசிலாந்திற்கு ஒப்படைத்தது. நியூஸிலாந்து மதுரனுக்கு மிகத்துரிதமாக இரு வாரங்களில் வழக்கினை ஏற்று நேர்முகத்தேர்வினை நடாத்தியது. நேர்முகத்தேர்வின் போது அந்நாட்டு அதிகாரி நிலாவிடம் " உங்களின் வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. நீங்கள் மிகவும் அவசரமான நிலையில் உள்ளீர்கள் என்று ஐ நாவால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள். ஆகவே இன்னும் இரு வாரங்களில் மருத்துவ பரிசோதனை இடம்பெற்று  நீங்கள் நியூஸிலாந்திற்கு உள்வாங்கப்படுவீர்கள் " என்றுரைத்து அந்நாட்டு சட்ட திட்டங்கள் நடைமுறைகள் பற்றி விளக்கமளித்துமிருந்தார்.

பயணத்திற்கு ஆயத்தமாகிய நிலா இரு வாரங்கள் கடந்த பின் ஒரு வித பயத்தில் உறைந்தாள். ஆம்..! இரு வாரங்களாகியும் அவர்களை  மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கவில்லை. நியூஸிலாந்தினால் வழக்குகள்  ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஏனையவர்களுக்கு விமான பயணச்சீட்டும்  வழங்கப்பட்டு விட்டது. நிலாவிற்கும் மதுரனுக்கும் எந்த  வித பதிலும் கொடுக்கவில்லை.

எனவே ஐ நாவிடம் சென்று விசாரித்த நிலாவிடம் "நியூசிலாந்து உங்களை நிராகரித்து விட்டது" என்றும் காரணம் தெரியவில்லை என்றும்  கூறிய ஐ நா மீண்டும் அவர்களது வழக்கு நெதர்லாந்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று நிலாவிற்கு நம்பிக்கை கூறி அனுப்பியது. மீண்டும் ஒரு மாத இடைவெளியில் நெதர்லாந்தும் நிராகரித்து விட்டது என்ற ஐ நா அதிகாரிகள் நிராகரிப்பிற்கான காரணம் தெரியாமல் குழம்பிய போதும் மதுரனோ நிலாவோ குழம்பிக்கொள்ளவில்லை.

ஐ நாவானது மிகவும் மனிதாபிமான முறையில் மதுரனுக்கு சார்பாக நடந்து கொண்டது. அதாவது ஒரு நாடு நிராகரித்து இன்னுமொரு நாட்டிற்கு பரிந்துரை செய்யப்படுவது என்பது கல்லில் நார் உரிப்பது போன்று கால இடைவெளி அதிகமான ஒரு செயற்பாடாகும். ஆனால் மதுரன் மற்றும் நிலாவின் நன்னடத்தை காரணமாக ஒரு வருடத்திற்குள் மூன்று நாடுகளுக்கு பரிந்துரைத்த ஐ நாவால் ஏனோ கனேடிய அரசிற்கு எதிராக குரல் கொடுக்க முடியவில்லை.அத்துடன் கனேடிய அரசின் குற்ற சாட்டு உண்மை எனில் ஐ நா மதுரனை அகதி என்ற நிலையில் இருந்து நிராகரித்திருக்கும். (ஏற்கனவே முதல் பாகங்களில் இது பற்றி நன்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளது.)

அமெரிக்கா ஒரு மீள்குடியேற்ற வழக்கினை ஏற்றுக்கொள்வது என்பது மிகப் பெரிய விடயமாகும். எத்தனையோ நடைமுறைகளின் பின் பல நேர்காணல் பரிசோதனைகளை நடாத்தியே அது ஒருவரை தன் நாட்டிற்குள் உள்வாங்கிக்கொள்ளும்.


அமெரிக்கா நிராகரித்த பலரை மேற்குறிப்பிட்ட அந்நாடுகள் ஏற்றுக்கொள்ளும் போது அமெரிக்காவே ஏற்றுக்கொண்ட மதுரனின் வழக்கினை நெதர்லாந்தோ நியூஸிலாந்தோ நிராகரிக்க வேண்டிய தேவை இல்லை. இந்த இடத்தில் இதனை வாசிப்பவர்கள் நிச்சயம் புரிந்து கொள்ள முடியும் இது யாருடைய சதி என்பது.

ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கு மீண்டும் நிராகரிக்கப்படுவதும் , நிலுவையில் வைக்கப்படுவதும் எந்தளவிற்கு சாத்தியம்? சாதாரண ஒரு நபரால் இதனைச் சாதிக்க முடியாது. நிச்சயம் ஒரு அரசால் அல்லது காவல் துறையால் மட்டுமே இது முடியும். கனேடிய அரசின் நோக்கம் மதுரன் தாய்லாந்தில் தடுப்பு மையத்தில் இருந்தே கடைசிக்காலத்தை முடிக்க வேண்டும் அல்லது இலங்கை திரும்பிச்செல்ல வேண்டும் என்பதாகும். எத்தனை நாடுகள் ஐ நா மூலமாக மதுரனை ஏற்க முன்வந்தாலும் நிராகரிக்க வைக்க கனேடிய அரசு காத்திருக்கின்றது.

நிலுவையில் இருக்கும் மதுரனின் அமெரிக்க மீள்குடியேற்ற வழக்கினை செயற்படுத்த அதாவது உண்மை நிலையினை ஆதார பூர்வமாக எடுத்து விளக்கி அவர்களுக்கு தெளிவு படுத்த அனுமதிக்காது இடையூறு விளைவிக்கும் அந்தத்தன்னார்வ தொண்டு நிறுவனத்  தாதி மதுரனை முற்று முழுதாக மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று முத்திரை குத்தி ஐ நாவிற்கும் அறிக்கை கொடுத்து இருக்கின்றாள்.

முதல் பாகத்தில் எழுதப்பட்ட மதுரனின் தற்போதைய நிலை அதாவது உணவின்றி உருக்குலைந்த அவனது உடலினை மருத்துவமனை கொண்டு சென்று இதுவரை பரிசோதிக்கவில்லை. நடக்கவே சக்தியற்று கிடக்கும் அவனை மனநிலை மருத்துவமனை எடுத்து சென்ற அந்த தாதியின் மனநிலை எப்படிப்பட்டது என்பதனை இன்னும் நினைக்கவே ஆத்திரமாக உள்ளது. ஐ நா மூலமாக வேறு மருத்துவமனை கொண்டு செல்ல விடாது தடுக்கும் அளவிற்கு அந்த தாதிக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அதனை யார் தட்டிக்கேட்பது?

அவர்கள் கூறுவது போன்று மதுரன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்றே வைத்துக்கொள்ளுவோம். எதற்காக இன்னும் அவனைத் தடுத்து வைத்திருக்க வேண்டும்? விடுதலை செய்யலாமே? அல்லது பிணையில் விடுவிக்கலாமே? மதுரனை சந்திக்க வந்திருந்த ஐ நா அதிகாரியிடம் மதுரன் " நான் மனநிலை சரியில்லாதவன் என்றால் என்னை இன்னும் ஏன் இங்கு வைத்து உள்ளீர்கள்? என்னை விடுவிக்கலாமே ? என்று கேட்டதும் அவர் ஏதும் பேசவில்லை. விரைவாக இன்னொரு நாட்டிற்கு மீள் குடியேற்றுகின்றோம் என்று உரைத்து ச்சென்றிருக்கின்றார். ஆக ஐ நாவால் கூட அநியாயத்தினை தட்டி கேட்க முடியவில்லை. உண்மையில் மனநிலை சரியில்லை என்றால் விடுவிப்பார்கள் அல்லவா? எனவே இது வெறும் நாடகம் என்பது ஐ நாவிற்கே விளங்குகின்றது.

சட்ட விரோதமாக ஒரு நாட்டிற்குள் காலடி எடுத்து வைக்காமல், சட்ட ரீதியாக அனுமதி பெற்று ஒரு நாட்டில் குடியேறி அமைதியாக வாழ விரும்புகின்ற மதுரனை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக வதைக்கும் கனேடிய காவல் துறை அவனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப கடும் பிரயத்தனம் செய்கின்றது.

தமக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதற்காக இந்தளவு வன்மம் கொண்டு ஒரு தனிநபர் மீது படுபாதகம் இழைக்கும் கனேடிய அரசு இறுதி முள்ளிவாய்க்கால் தருணத்தில் தமிழர்களுக்காக ஒரு குரல் கொடுத்திருந்தால் கனடாவிற்கு எதற்கு கப்பலில் அகதிகள் செல்லப் போகின்றார்கள்? கனடாவில் எதற்கு கால் வைக்கப்  போகின்றார்கள்? அதற்கு காரணம் என்று வதைபடும் உறவுகள் எதற்காக சிறைகளில் உயிரை கையில் பிடித்து தினம் தினம் மடிந்து கொண்டிருக்கப்போகின்றார்கள்?

நடந்து முடிந்து விட்டது பற்றி பேசிப்பிரயோசனம் இல்லை எனிலும், கப்பலில் வந்திறங்கிய மக்கள் மீதும் கப்பலினைத் தவற விடப்பட்டவர்கள் மீதும் வன்மைத்தினை தீர்ப்பதை விடுத்து அதற்கு காரணமான இலங்கை அரசினை கேள்வி கேட்க கனேடிய அரசிற்கு துப்பில்லை அத்துடன்  துணிவுமில்லை. போர்க்குற்றம் , இனவழிப்பு என்று சனல் நான்கும் வேறு பல ஊடகங்களும் கத்திக்கொண்டே தான் இருக்கின்றன. அதை முன்னின்று வினா எழுப்பி விசாரிக்க கனேடிய அரசிற்கு காலம் இல்லை துணிவில்லை. ஆக மொத்தத்தில் திராணியற்று செத்த பாம்பினை அடிப்பது போன்று நொந்து கெட்டு கிடக்கும் உறவுகளை எத்தனை நாட்களுக்கு அடித்து வேஷம் போட முடியும்?

தமிழனுக்கு எதிரி சிங்களவன் மட்டும் அல்ல இலங்கை அரசு மட்டும் அல்ல. அகதி என்று ஓடி வரும் அத்தனை உறவுகளையும் வதைக்கும் சம்பந்தப்பட்ட நாட்டு அரசுகளும் தான். உங்கள் நாட்டினை எதற்காக நாடி வருகின்றார்கள் காரணம் என்ன அதற்கான தீர்வு என்ன என்று ஆராய்ந்து நியாயம் பெற்றுக்கொடுத்த பின் அவர்களை நாடு கடத்தினால் அது நீதி. அதை விடுத்து பள்ளத்தில் துன்புற்று இருந்து  வதைபட்டு மீண்டு எழுந்து வருபவனை மீண்டும் பள்ளத்தில் தள்ளி விழுத்தும் அநியாயத்தினை தட்டிக்கேட்க எந்த அமைப்பு இருக்கின்றது? தமிழர்களுக்கு என்று யாருளர்?

ஆடிக்கொன்று ஆவணிக்கொன்று என்று போர்க்குற்ற ஆதாரங்கள் வெளி வந்த வண்ணம் தான் இருக்கின்றன. புதைகுழிகளும் தோண்டப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. ஒரு சின்னம் ,ஒரு இலச்சினை ,ஒரு தலைமை அலுவலகம் ,பல கிளைகள் என்று உலகம் பூராவும் பரந்து கிடக்கும் அமைப்புக்கள் பொழுது போக்கிக்கொண்டு  தான் இருக்கின்றன. ஒரு இனத்தை கொன்று குவிப்பவர்கள் அதை செய்து கொண்டே இருப்பார்கள். தட்டிக் கேட்பதற்கு ஐ நாவும் கால அவகாசம் கொடுத்துக்கொண்டே இருக்கும் . ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் துன்புற்றுக்கொண்டே தான் இருக்க வேண்டும்.


இல்லாத கடவுளே நேரில் வந்து இறங்கினாலும், மனித உரிமைகள் அமைப்பு என்பதும் ஐ நா என்பதும் நிச்சயம் அநியாயத்தினை தட்டிக்கேட்கப்போவதில்லை. யாவும்  ஒரு மாயை.

அப்பேற்பட்ட இனவழிப்பினையே ஏன் என்று கேட்க முன் வர யாருமில்லை. அப்படிக்கேட்டாலும் நியாயமும் கிடைக்க போவதில்லை. நியாயம் கிடைக்கும் போது தமிழினம் உலகில் இருக்குமா என்பது சந்தேகமே.

இவ்வாறு இருக்கையில் தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கைக்கு குரல் கொடுக்க எந்த அமைப்பு இருக்கின்றது. ஒரு பெரிய வல்லரசான கனேடிய அரசினை எதிர்த்து குரல் கொடுக்க ஐ நாவே பின்னிற்கும் போது நிச்சயம் மதுரனுக்கு நீதி கிடைக்க போவதில்லை. அவனுக்கு மட்டுமல்ல கனடாவில் சிறையில் வாடும் பைந்தமிழிற்காகவும் யாரும் குரல் கொடுக்க போவதில்லை. தமக்குத்தாமே கதறி கண்ணீர் வடித்துக்கொள்ள வேண்டியதே.

சிதறிய கூட்டின் குருவிகளைப்போன்று திக்கொன்றாய் கிடக்கும் எத்தனையோ உறவுகள் யுத்தம் என்ற சூறாவளியில் சுழன்றடிக்கப்பட்டு சின்னாபின்னமாகி பின் கடற்சூரியன் என்னும் கப்பல் உருவாக்கிய கொந்தளிப்பில் இன்னும் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும்  துரும்புகள் ஆக தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இறைவன் ஒருவன் இருப்பானாக இருந்தால் நிச்சயம் காலத்தால் பதில் கொடுப்பான். உறங்கும் உண்மைகள் நிச்சயம் விழிக்கும். அன்று யாவரும் கடந்த காலத்தினை மறந்திடுவர். இழந்து போன காலத்தையும் தருணத்தையும் நினைத்து வேதனைப்பட்டாலும் உண்மை விழித்து பொய் என்னும் திருடனை விலங்கிட்டு கொள்கின்ற அந்த மகத்தான நாளினை நோக்கி எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றாள் நிலா.

கனேடிய தேசத்தில் தந்தைக்காக ஏங்கும் பைந்தமிழின் குழந்தையின் நம்பிக்கையும் ஏக்கமும் அவளின் பாசமும் நிச்சயம் அவளையும் அவளின் தந்தையினையும் ஒன்று சேர்த்து வைக்கும்.

ஒரு நிமிடத்திற்கு மேல் பேச சக்தியற்று கிடக்கும் மதுரன் நிச்சயம் தன்னோடு இணைவான் என்ற அதீத நம்பிக்கையும் துணிச்சலும் இறை நம்பிக்கையும் கனேடிய அரசின் சதிகளை முறியடிக்கும் என்ற வைராக்கியத்தோடு உண்மை என்னும் தேவதையின் வரவிற்காக தினம் தினம் காத்திருக்கின்றாள்.

அவளின் பிஞ்சு மழலைகளும் தந்தையின் முகம் கண்ணுற்றும் அருகே சென்றிட அச்சமுற்று வேற்று மனிதனை நோக்கியது போன்ற பிரம்மையில் திகைத்து நிற்கும் கொடுமையினை கண்ணுற்று விக்கி அழுகின்ற மதுரன் முற்றிலும் நம்பிக்கையினையே தொலைத்து விட்டவனாக நடப்பது நடக்கட்டும் என்று ஒவ்வொரு சொற்ப நேரத்தையும் யுகமாக கழிக்கின்றான். இந்தப்பிஞ்சுக்  குழந்தைகள் என்ன குற்றம் இழைத்தனவோ?  

உண்மையின் நிழல் கூட இன்னும் தோன்றவில்லை. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை நிற்க முடியும். அமைப்புக்களும் அரசுகளும் அறிக்கை விட்டு தம்மை விளம்பரப்படுத்தி ஆதாயம் தேடுவதோடு நிறுத்திக்கொள்கின்றன. அனால் இறைவன் அறிக்கை விட்டு வேடிக்கை பார்ப்பதில்லையே.

ஆக...! நாமும் பிரார்த்தனை செய்வதை தவிர வேறு வழியில்லை. சிதறிக் கிடக்கும் உள்ளங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவும் அவர்களின் நீண்ட கால வலிகள் நீங்கி வாழ்வு வளம்பெறவும்  நாமும் இறைவனைப் பிரார்த்திப்போம்.


***முற்றும் ***

அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து

No comments:

Post a Comment