Search This Blog

Thursday 27 March 2014

காதோரம்...!


அன்றொரு நாள் ஊரின்
அரச மரத்தடியில்...
அழகழகான சிட்டுக்குருவிகள்
அங்கு மிங்கும் பறந்தபடி இருக்க...

உன் மார்பில் சாய்ந்து
உனக்குள் எனக்காய் துடிக்கும் - இதயத்
துடிப்பினை கேட்டுக்கொண்டே
துயில் கொண்டேன்....!

நாற்திசையும் ஒலிக்கும்
நாதமாய் உன் அன்பின்
இசையாய் என் உயிரின்
ஓசையாய் எங்கும் பரவ...
ஆசையாய் நான் உன் மார்பில்....

இன்றும் ஒலிக்கின்றது - உந்தன்
இதயத்து நாதம் காதோரமாய்....
இருளில் தனியாக நான் மட்டும்
இங்கே யாசிக்கின்றேன்...

காலம் கடந்தும் இன்னும் ஒலிக்கின்றது - என்
காதோரமாய் உந்தன் இதய நாதம்...!


அரச மரத்தடியும் இருக்கின்றது
அமர்ந்திருக்கின்றேன் நானும்....
நீயும் இல்லை உந்தன் ஓசையும் இல்லை...!
காதோரமாய் தென்றல் வந்து சில்மிஷம் புரிகின்றது - உனக்காய்
காத்திருக்கும் என்னோடு சேட்டை செய்கின்றது...

காற்றுக்கும் இளக்காரம் போலும்
தனித்திருக்கும் பெண்மை கண்டு...

தென்றலின் சேட்டைகளை தாண்டி
அன்றலர்ந்த செந்தாமரையாய்
உன் முகம் இதயம் எங்கும் நிறைந்திருக்க
உன்னைத் தேடுகின்றேன்
உயிரின் ஓசை கேட்பதற்காக

இதயமே உன்னை என் காதோரமாய்
இறுக அணைப்பது  எப்போது?

காதலனே என் காவலனே உனக்காக
காத்திருக்கின்றேன்..!

காலம் கடந்து போன என் துடிப்பினை உயிர்ப்பாக்கிட
காவியனே  நீ விரைந்து வருவாயா - என்
காதோரமாய் உந்தன் உயிரோசையினை கொடுப்பாயா?





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "காதோரம்" என்ற தலைப்பில் இன்று (27.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


1 comment: