Search This Blog

Tuesday 15 April 2014

சூரிய உதயம்....!


கரிய இருள் பரவிக் கிடக்கும் எங்கள் வானத்தில்- துன்பம்
விரிய வீழ்ந்து கிடக்கும் எங்கள் தேசத்தில்  தினம் உலகம்
தெரிய கதிர் பரப்பி உதயம் கொடுக்கும் - செஞ்
சூரிய உதயத்தினால் விடியல் இன்னும் இல்லையே...!!!

ஒவ்வொரு நம்பிக்கையிலும் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு உறவுகளும் விடியலை தேடுகின்றன...!

சூடு பட்டுக்கிடக்கின்ற இதயங்கள் - தினம்
சூரிய உதயத்திற்கு ஏங்கித் தவிப்பது
உலகின் விடியலுக்கு மட்டுமன்றி
உருண்டு போகும் காலத்தால்
உருவாகிடாதோ ஒரு விடியல் என்றுமே...

தினம் தினம் சூரிய உதயத்தினை
தித்திப்புடன் தேடுகின்றன....!

காடு மேடெல்லாம் திரிந்து
பாடு பட்டு உழைக்கின்றவர்கள்....!
ஓடுகின்ற புவியோடு சேர்ந்து ஓடி
களைத்து இளைப்பாறி சுற்றி வரும்
சூரிய உதயத்தினை விரும்பியும்
விரும்பாமல் ஏற்கத்தான் செய்கின்றனர்...!

கதிர் பரப்பிக்கொண்டு சூரியன் நிற்கத்தான் செய்கின்றான்...
கலக்கமும் காலமும் உருண்டு வந்தாலும்
கணக்கெடுக்காமல் உதயக்
கதிரவன் தன் கருமமே கண்ணாய்....!


சூரிய உதயம் என்றும் போல ஒரே நிலையில் இருக்க
கரிய இருள் கொண்டு நாம் மட்டும் சுற்றுகின்றோம்...!
சூரியனை சுற்றி சுற்றி நாம் தான் தேய்கின்றோம்...!
சூரியன் என்றும் நிலையானவனாய் இருக்க
உதயம் தேடி அலையும் அலைச்சல்காரர் களாய்
நாமும் எம்முடன் ஒன்பது கோள்களும்...!

நாட்கள் மாதங்கள் வருடங்கள் யுகங்கள் தாண்டி
சுற்றிக்கொண்டே இருக்கின்றோம்...!
சுழற்சி முறையில் சூரிய உதயம் தேடியவாறு....



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "சூரிய உதயம்" என்ற தலைப்பில் இன்று (15.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

Monday 14 April 2014

களிப்பு...!

தொடர்கதையாகிய எம்மினத்துன்பம்
படர்கின்ற கொடியாகி துரத்துகின்ற கன்மம் 

சுடர் விடும் நெருப்பாய் சுட்டெரிக்கும் வலிகள் 
அடர் வனத்து இருளாய் பயமுறுத்தும் நிகழ்வுகள்...
இடர் ஒன்றே எமக்கான சொத்து என்று எழுதி வைத்தது போன்று
தொடர்கின்ற வரலாறு சொல்லிக்கொள்வது ஒன்று மட்டுமே
களிப்பு என்பதை கடினப்பட்டும் கண்டிட முடியாது 
களிப்பு என்பது வார்த்தைகளோடு மட்டுமே எமக்கு சொந்தமாம்...!

கை கட்டி கண் கட்டி சுட்டுத்தள்ளி - இலகுவாக 
கை காட்டி போகின்றார்கள் புலி என்று 
இல்லாத புலி களை வில்லங்கமாய் பிரசவிக்கின்றார்கள் 
இருக்கின்ற பாவிகளை பலி கொள்ளுகின்றார்கள் 
இந்த வருடம் எத்தனை உறவுகளுக்கு 
இருட்டில் விடிந்ததோ...?
யாரறிவார்...?
யாரிடம் சொல்லி அழுவது - எம்மினத்தின் அவலத்தினை 
யாராவது கண்டு கொள்ள மாட்டார்களா 

வருடம் பிறக்கின்றது....
வருடங்கள் பிறந்தன...
நம்பிக்கைகளும் பிறந்து இறந்தன....
நல்ல ஒரு முடிவு எமக்கு கிட்டாதா 
களிப்புடன் வரவேற்போம் புது வருடத்தினை...
களிப்பாய் செழிப்பாய் மலர வேண்டும் என்று 
இனிப்பாய் விருப்பாய் வரவேற்போம் 
ஜெயம் கொடுக்க வரும் ஜெய வருடத்தினை..


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "களிப்பு" என்ற தலைப்பில் இன்று (14.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/



Friday 11 April 2014

கல்லாக்கி வைத்திருக்கின்றேன்..!

காண்கின்ற காட்சிகள் இதயத்தை உருக்கிப்போகும்...!
கண்ணுக்கு முன்னால் மரணிக்கின்றது எந்தன் உயிர்...!

கடவுள் மட்டுமா கல்லாக முடியும்..?
கல்லாக்கி வைத்திருக்கின்றேன்
கலங்கிய எந்தன் உள்ளத்தினையும்......
கரைந்து உருகிடாமல்...

இறுக்கமான சட்டம் கொண்ட அதிகாரியும் - மனம்
இளகி என்னை அழைத்து கரம் பிடித்து கொடுத்தார் -என்
இதயத்தை தொலைத்தவனிடம் அவனோ உடல்
தொலைத்து நின்றிருந்தான்...!

அருகிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி
அனுப்பினார்கள் அவனிடத்தில்..
பார்த்து கலங்க வேண்டாம்
சத்தமிட்டு அழ வேண்டாம்
திடமாக இருங்கள் என்றெல்லாம்...
விளங்கவில்லை எனக்கு...
வித்தியாசமாய் தோன்றியது...
எதற்கு இதெல்லாம் சொல்ல வேண்டும்
ஏன் நான் அழ வேண்டும்?

கரம் பற்றிய அவனின் கோலம் கண்டு
கல்லான உள்ளம் சொல்லாமலே
கலங்கிய விழிகளை
கட்டுப்படுத்த என் அறிவிற்கு
சக்தி போதவில்லை...!

பார்த்ததில்லை எவரையும் இக்கோலத்தில்
பார்க்க முடியவில்லை அதிக நேரம்...!
பலர் கூறிக் கேட்டேன் நிலைமையினை
பரிதவித்து அழுதும் இருக்கின்றேன்...
பக்கம் பக்கமாய் கட்டுரையும் எழுதி இருக்கிறேன்
அவனின் நிலைக்காக...

ஆனால்..
இந்தளவிற்கு
உருக்குலைந்து போயிருப்பதை
உயிருடன் இருந்து நோக்கும் நிலை
உண்டாயிற்று பாவி எனக்கு...
உண்மையில் ஒட்டுமொத்த பாவங்களும்
உலகில் புரிந்தவள் நானே...!

உயிரோடு ஒரு என்புக்கூட்டின்
உருவில் வாய் திறந்து ஒரு சொல் பேசவே
கடினப்பட்ட எனது இதயத்தினை வருத்தாது
கல்லாக்கிய  எனது உள்ளத்தினை தாங்கி
கனக்க கனக்க வீடு திரும்பினேன்....
கனதியான உள்ளத்தினை
கவிதை எழுதியும் பாரம் குறைக்க முடியவில்லை...
அந்த ஒளியிழந்த விழிகளும் இடிந்து போன கன்னங்களும்
வெளிறிய உதடுகளும்  மெல்ல மெல்ல - எந்தன்
உள்ளத்தினை எரித்து  வைக்கின்றது...!
உயிர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது...!

இன்னமும் ஏன் மரணிக்காமல் இருக்கின்றாள் என்றும்...
இன்னும் இவளுக்கு ஏன் சித்தம் கலங்கவில்லை என்றும்
விசித்திரமாய் இங்குள்ளோர் நோக்குகின்றார்கள்...!

உள்ளுக்குள்ளே நான் எரிவது விளங்குமா இவர்களுக்கு...
உயிரோடு மரணிப்பது தெரியுமா இவர்களுக்கு...
உருக்குலைந்து போகின்றேன் தினம் தினம்...!
உயிரோடு எனக்கு நானே கொள்ளி வைக்கின்றேன்..!


Thursday 10 April 2014

போதை..!


அதிகாலை விடிவது மட்டும் தெரிகின்றது..!
அந்தி சாயும் போதெல்லாம் 
அந்தரத்தில் அவன்...!

அவளும் பிள்ளைகளும் 
அவனுக்காய் தினம் தினம் 
அரை வயிற்றுப் பசியுடன் 
விழித்திருப்பதே வழமையானது...!

காலையும் வேலையும் கழிகின்றது 
நிதானமாய்...
மாலையும் சாலையும் கடக்கின்றது
தள்ளாடிபடியே...

சாமத்தில் சிந்தும் அவளின் கண்ணீரில் 
தெளிகின்ற போதையில்....
தெளிவாக சத்தியம் பண்ணிடுவான் - அவள் 
தலையில் ஓங்கி அடித்து...

போதை மட்டுமல்ல அவன் 
போலிச்சத்தியமும் நிதானமற்றது என்று 
அவளுக்கு உணர்த்தி வந்தன  
கடந்த கால அனுபவங்கள்...!

கரைச்சல் பட்டு கடன் வாங்கி 
கழிகின்ற காலத்தில் அவனை 
அடிமையாக்கிய போதை 
அவனின் குடும்பத்தினையும் 
இரையாக்கி சீரழிப்பது கண்டு
இறுதி முடிவெடுத்தாள்..!
கண்ணீரை சொரிந்து சொரிந்து 
கடைசி வரை களைத்துப்போனவளாக 
அவள் எடுத்த முடிவால் போதை 
அவனை விட்டு நீங்கியது...!


அந்தியில் தள்ளாடுவதில்லை...!
அரை மயக்கத்தில் உறங்குவதில்லை..! 
ஆனால் கண்ணீரில் மிதந்தான்..!
ஆருமில்லாமல் துவண்டான்...!

அவளும் பிள்ளைகளும் 
அநியாயமாய் தம்மை மாய்த்துக்கொண்டனர்..!
போதை என்ற அரக்கன் அவனின் உறவுகளை 
இரையாக்கிய போதே 
அறியாமை உணர்ந்து கொண்டான்...!

புத்தி தெளிந்தான்...!
போதை தெளிந்தான்...!

என்ன பயன்?
இழந்து போன வாழ்வு 
இறுதி வரை கை சேராதன்றோ??





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "போதை" என்ற தலைப்பில் இன்று (10.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

Wednesday 9 April 2014

அளவற்ற....


அளவற்ற அதிகாரம் மேலோங்கிய தேசத்தில்
அவதரித்த எம்மினம்

அளவற்ற வன்முறை தாங்காது
அளவற்று அழுது வடிகின்றது
அளவற்ற எல்லையற்ற காலம் கடந்தும்...

அளவற்ற இனப்பாகுபாடு...!
அளவற்ற மொழிப்பாகுபாடு...!
அளவற்ற நில அபகரிப்பு..!
அளவற்ற உயிர்ப்பறிப்பு...!
அளவற்ற கடத்தல்கள்..!
அளவற்ற புதைகுழிகள்..!
அளவற்ற இடப்பெயர்வுகள்..!
அளவற்ற எறிகணைகள்
அளவற்ற குண்டு வீச்சுக்கள்..!
அளவற்ற போராட்டங்கள்..!
அளவற்ற இனவழிப்பு..!
அளவற்ற துன்பங்கள்
அளவற்ற வலிகள் தாண்டி
அளவற்ற தூரம் தாண்டி
அளவற்ற ஆழியின் ஆழம் தாண்டி
அளவற்ற தொகையில்
அளவற்ற தேசங்களில்
அளவற்ற கண்ணீரோடு
புலம்பெயர்ந்த எம்மினத்தை....
புலம் பெயர் தேசத்தில் கூட
புதைகுழிக்குள் உயிரோடு
புதைத்து போட தடைகளும்
புலம்பெயர் தேசம் வரை
அளவற்று நீளுகின்றது...!
அளவற்று போன பயமின்மை
அளவற்று போன அதிகாரமும்
அளவற்று போன வலிகளை
அளவற்று அதிகரிக்க வைக்க
அளவற்ற  இனவெறியில்
அலையும் அளவற்ற
அடக்குமுறையாளர்களின்
அளவற்ற அநியாயம்
அளவற்று தொடர்வதும்
அளவற்ற எம் கண்ணீரும்
அளவற்று தொடர்கின்றது
அளவற்ற கால வரையரயின்றியே...

லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அளவற்ற" என்ற தலைப்பில் இன்று (09.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

Tuesday 8 April 2014

மன்றாட்டம்...!!!


தெய்வமாகி நிற்கின்ற ஐ நாவினை கையேந்தி
தெருத்தெருவாய் மன்றாட்டம்...!

அகதி என்று தஞ்சமடைவதற்கும் முழு நாள் காத்திருப்பு..!
சுட்டெரிக்கும் சூரியனின் கொடையால் நாவறண்டு
நலிந்து போய் தாய்லாந்தின் உயர் பாதுகாப்பு வீதியில்
நடுக்கத்துடன் ஒரு உலவல்..!

அங்கு மிங்கும் அலைந்து திரியும் காவல்துறையினரை
அச்சத்துடன் நோட்டமிட்டு மறைந்திருந்து ஒரு மன்றாட்டம்...!

கையிலே ஒரு ஆவணக்கடதாசி பெற்று அகதி அங்கீகரிப்பிற்காக
கையேந்தி சட்ட அமைப்புக்களின் வாசல் படியெங்கும் மன்றாட்டம்...!

ஐ நாவின் சட்ட அதிகாரிகளை சந்திப்பதற்கும் மன்றாட்டம்..!
சட்டம் பேசும் அவர்களை சந்திக்கவும் பெரும் திண்டாட்டம்...!

சடுதியாய் இருள் சூழ்ந்து உருளும் வாழ்க்கைச்சக்கரம்
சலனமின்றி விரைகின்றது...!

வழக்குகளும் நேர்காணல்களும் ஊர்ந்து வருகின்றது...!
வழியற்று நிற்கின்ற பயணங்களும் இடைநடுவில்....

அடிக்கடி மன்றாடிய மன்றாட்டங்களின் பலனாய்...
அகதி என்ற அங்கீகாரம் வழங்கியாயிற்று...!
அவசரமான நிலை என்றும் பரிந்துரைத்தாயிற்று...!
ஆபத்துள்ளவ்ர்கள் பட்டியலிலும் முதலிடம்...!

ஆனாலும்...
வந்து போகும் நாடுகள் எடுப்பதும் போடுவதுமாய்....
வரலாறு எழுத காலத்தை வாரிக்கொடுக்கின்றன...!

யார் யாரிடமெல்லாம் மன்றாடுவது....!
யாசிப்பதற்கும் எல்லையுண்டு அல்லவோ?

இருக்கும் இடத்திலும் மதிப்பில்லை...!
இருந்த இடத்திலும் மதிப்பில்லை...!
பிறந்த இடத்திலும் மதிப்பில்லை..!
பிரிந்து வந்ததாலும் மதிப்பில்லை...!

எப்படி மன்றாடுவது யாரிடம் மன்றாடுவது...?
வாழ்க்கையே மன்றாட்டம் ஆகிவிட்டது...!
வாசல் எங்கும் மன்றாட்டங்களின் எச்சங்கள்...!
வானம் வரை மன்றாட்டங்களின் நிழல்கள்..!
மன்றாட்டங்கள் ஆலம் விழுதுகளாய் பரப்பி
மரணித்தாலும் மண்ணை விட்டு நீங்காது நிற்கும்..!


 

லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மன்றாட்டம் " என்ற தலைப்பில் இன்று 08.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

Monday 7 April 2014

முணு முணுப்பு....!!!

கல்லை யும் கண்ணீர் விடத்தூண்டும்
எல்லை யில்லா சோதனைகள்...!

தொல்லை என்று தூரம் சென்ற - நேற்று
பல்லை க்காட்டி நின்ற பச்சோந்தி உறவுகள்..!

வில்லையும் முறித்து விட்டேன்
அம்பு அடிக்கடி துரத்துகின்றது...!
விடுவதாயில்லை....!

சும்மா இருப்போரின் நாவுகள் சுட்டுத்தள்ளும் - கொடும்
சுடு சொல்லையும் மென்று விழுங்கி விட்டேன்...!

அந்தோ கொடுமை விழுங்கியவைகள் உள்ளிருந்த படி
மெல்ல மெல்ல சுட்டு கருக்குகின்றது இதயத்தினையும்...

காலங்கடந்து போன காத்திருப்பு..!
காலாவதியாகிய நம்பிக்கை..!
ஆனாலும் உயிருடன் தான்
ஆடிப்போகின்றது மெல்ல வாழ்க்கை....!

உறவுகள் என்ற பலர் முணு முணுத்து மறந்தும் போயினர்..!
உலகில் தெரிந்தவர்கள் என்ற சிலரும் காணாமல் போயினர்..!
உடன் இருப்பவர்கள் மெல்ல மெல்ல முணு முணுத்து கொண்டே
உணர்விழந்து போகின்றார்கள் என்னால்...!

இருக்காதா பின்னே
இந்தளவு காலமோ...?
இப்படியும் சோதனையோ..?
சமயத்தில் நானே
முணு முணுப்பதுண்டு...!

ஆனாலும் நான் முணு முணுப்பது
ஆலயத்தில் ஆண்டவனிடத்தில்....!

எந்தன் முணு முணுப்பினை கேட்டே
சலிப்படைந்து விட்டான் இறைவனும்...!


இப்போதெல்லாம் முகத்தினை திருப்பியவாறு
இறைவனும் முணு முணுக்கின்றான்
என்னைக் கண்டாலே....




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "முணு முணுப்பு" என்ற தலைப்பில் இன்று (31.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

Friday 4 April 2014

ஏட்டுச்சுரைக்காய்..!!!

தேர்தல் காலத்து வாக்குறுதிகள்
தேய்ந்து போன விசைப்பலகையினை நம்பிய
காரசாரமான முகப்புத்தக அரசியல் அரட்டை
காற்றிலே பறக்கும் வீரப்பேச்சுக்கள் - யாவும்
கறிக்குதவாத ஏட்டுச்சுரைக்காய் போலத்தான் என்பது
கன பேருக்கு தெரிந்த உண்மை..!

எழுத்தில் எழுதிய ஒப்பந்தங்களும்
எழுதாத புரிந்துணர்வுகளும்
எழுந்து வந்த சமாதானமும்

பின்னர் நம்பி நாம் கை நீட்டிய ஐ நாவும்
பிடித்து வந்த வெள்ளைக்கொடியும்

நிறைந்து வழிந்து ஓடிய உதிரமும்
நினைவில்லாமல் போன யுத்தமும்

நேரடியான காணொளிகளும் - சாட்சிகளின்
நேர்காணல்களும் கதறல்களும்

சுடுகாடாய் போன தேசமும் - புதை குழிகளின்
சுவடுகளாகிப் போன மண்ணும்

இன்னும் இன்னும்
இன்று வரை தொடரும்
இனம் தெரியாத கடத்தல்களும்
அடக்குமுறைகளும்
அநியாயங்களும் - வெறும்
ஏட்டுச்சுரைக்காய்கள் தான் - விழியாலும்
ஏறெடுத்தும் பார்க்க முடியாத
ஏட்டுச்சுரைக்காய்கள் என்பது
ஏன் இன்னும் எவருக்கும் விளங்கவில்லை...!

ஏட்டில் எழுதப்பட்ட
ஏட்டுச்சுரைக்காயினைப் பார்த்து ரசிக்கலாம் - இங்கு
ஏதிலிகள் எம் வரலாற்றில் கிறுக்கிய
ஏட்டுச்சுரைக்காய்களாக இவை என்றும்
ஏணி வைத்து எம்மை நோக்கி
ஏறி வரும் சாபங்கள் அன்றோ??





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஏட்டுச்சுரைக்காய்" என்ற தலைப்பில் இன்று (31.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/





Tuesday 1 April 2014

முன்னேற்பாடு..!!!


மூட்டை சுமந்து
மூச்சு வாங்கிய முதியவர்
மூலையில் சுருண்டார்...!

முந்நூறு ரூபாய் அரை நாள் கூலியாம்
முழுநாள் உழைப்பில்
கால் நாள் உழைப்பு
காலடியில் விழுந்து விட்டது..!
கால் நாள் கூலி
காணாமல் போய்விட்டது..!
இல்லையில்லை பிடித்து வைத்துகொண்டார்கள்..!
இருக்கின்ற இந்த மூன்று நூறில்

அரிசி வாங்குவேனா - மூச்சு விட
அல்லல்படும் மனிசிக்கு
முட்டுக்குளிசை வாங்குவேனா?
முந்தை நாள் வாங்கிய
முன் வீட்டுக்கடனைக்கொடுப்பேனா?

இழுக்கின்ற மூச்சு
இன்னும் அதிகமாய் இழுக்க
முனகியபடி முதியவர் - அந்த
மூலையினை வெறித்துப்பார்த்தார்...!


முதியவனை போன்றே
முதுகில் மூட்டைகளை
சுமந்து அணிவகுத்து செல்லும்
துரு துருத்தான் எறும்புகளை நோக்கினார் ..!
துரும்பாய் வாழும் சின்ன ஜீவன்கள்
துடிப்போடு தமக்கான உணவினை
முன்னேற்பாடாய் சேமிக்கின்றன...!


முட்டி மோதி  இடித்து தள்ளி
முழுப்படியே நசித்துச்செல்லும்
மனிதர்களைப் பார்த்து அவை
முடங்கிக் கிடப்பதில்லை...!

வீதிகளில் நின்று கையேந்தி
பாதி வயிறு நிரப்புவதில்லை...!

உணவினை சுமந்து வரும் சக எறும்பை
உதைத்துத்தள்ளி, திருடி உண்பதில்லை..!

வாரிசுகளை நம்பி இருப்பதை
வாரிக்கொடுத்து தள்ளாடும் வயதில்
கண்ணீர் சிந்துவதில்லை...!

மெல்ல எழுந்து பெருமூச்செறிந்தார் முதியவர்...!
ஐந்தறிவு ஜீவனுக்குள்ள முன்னேற்பாடு அறிவு
ஆறறிவு உள்ள எனக்கு இல்லாமல் போனதோ?


சிந்தித்து முன்னேற்பாடாய் எனது உழைப்பினை
சிறுகச்சேமித்து வைக்காமல் பெற்ற மக்களை நம்பி
முட்டாளாய் போய் விட்டேன்..!
முன்னேற்பாடு இல்லாமல்
முதுமையில் நான்
முடங்கிப் போனேன்..!
முணு முணுத்த படி மெல்ல எழுந்தார்
முந்நூறு ரூபாய்களை இறுகப்பற்றியவாறே...




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "முன்னேற்பாடு" என்ற தலைப்பில் இன்று (01.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/




Monday 31 March 2014

கருவிழி..!


கருவிழி பார்வையாலே என்னை கடத்தி வந்தவனே - என் காதல் 
கருக்கொண்ட  உந்தன்  இதயக்குழியில் 
உருக்குலைந்து நான் புதையுண்டு கிடக்கின்றேன்...!

அன்பென்னும் மணல் அள்ளி என்னை தூர்த்தவனே..!
அதிசயமாய் என்னை உன்னில் வார்த்தவனே...!
கருவிழி கொண்டு நேருக்கு நேர் எனைப் பார்த்தவனே..!
கரையில்லா காதலில் கரை சேர்த்தவனே...!

அடியோடு அன்பில் சாய்த்தவனே...!
அரை உயிரையும் முழுதாய் மாய்த்தவனே..!
எனக்காய் என்றும் வாய்த்தவனே...!
எந்தன் உயிரை நிலவாய் தேய்த்தவனே..!


காந்தக்கரு விழியில் பசை பூசியவனே..!
காதோரம் வந்து காதல் பேசியவனே...!

சிணுங்கும் குழந்தையாய் கெஞ்சிடுவான்...!
சின்ன சின்ன குழப்படிகளில் மிஞ்சிடுவான்..!

கண்டித்தால் கருவிழிகளால் வென்றிடுவான்...!
கண்டறியாத பார்வையால் மெல்ல தின்று மென்றிடுவான்..!
கருணை பார்வை வீசி கடவுளாயும் தோன்றிடுவான்...!

கல்லினையும் காதலிக்க வைக்கும் கருவிழியான்...!
கன்னி என்னை கட்டிப்போட்ட மெய்விழியான்..!


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "கருவிழி" என்ற தலைப்பில் இன்று (31.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/



Thursday 27 March 2014

காதோரம்...!


அன்றொரு நாள் ஊரின்
அரச மரத்தடியில்...
அழகழகான சிட்டுக்குருவிகள்
அங்கு மிங்கும் பறந்தபடி இருக்க...

உன் மார்பில் சாய்ந்து
உனக்குள் எனக்காய் துடிக்கும் - இதயத்
துடிப்பினை கேட்டுக்கொண்டே
துயில் கொண்டேன்....!

நாற்திசையும் ஒலிக்கும்
நாதமாய் உன் அன்பின்
இசையாய் என் உயிரின்
ஓசையாய் எங்கும் பரவ...
ஆசையாய் நான் உன் மார்பில்....

இன்றும் ஒலிக்கின்றது - உந்தன்
இதயத்து நாதம் காதோரமாய்....
இருளில் தனியாக நான் மட்டும்
இங்கே யாசிக்கின்றேன்...

காலம் கடந்தும் இன்னும் ஒலிக்கின்றது - என்
காதோரமாய் உந்தன் இதய நாதம்...!


அரச மரத்தடியும் இருக்கின்றது
அமர்ந்திருக்கின்றேன் நானும்....
நீயும் இல்லை உந்தன் ஓசையும் இல்லை...!
காதோரமாய் தென்றல் வந்து சில்மிஷம் புரிகின்றது - உனக்காய்
காத்திருக்கும் என்னோடு சேட்டை செய்கின்றது...

காற்றுக்கும் இளக்காரம் போலும்
தனித்திருக்கும் பெண்மை கண்டு...

தென்றலின் சேட்டைகளை தாண்டி
அன்றலர்ந்த செந்தாமரையாய்
உன் முகம் இதயம் எங்கும் நிறைந்திருக்க
உன்னைத் தேடுகின்றேன்
உயிரின் ஓசை கேட்பதற்காக

இதயமே உன்னை என் காதோரமாய்
இறுக அணைப்பது  எப்போது?

காதலனே என் காவலனே உனக்காக
காத்திருக்கின்றேன்..!

காலம் கடந்து போன என் துடிப்பினை உயிர்ப்பாக்கிட
காவியனே  நீ விரைந்து வருவாயா - என்
காதோரமாய் உந்தன் உயிரோசையினை கொடுப்பாயா?





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "காதோரம்" என்ற தலைப்பில் இன்று (27.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


முப்பத்து மூன்று ஆண்டுகளின் மடியில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...!!! 27.03.1981 - 27.03.2014


இன்று விழித்தெழுந்து
வாழ்த்தினேன்...!
இதழோரப் புன்னகை புரிந்து
அப்பாவே இல்லை வாழ்த்து எதற்கு
சலித்தாலும் நீ - உலகில்
இல்லாத அவரை உன் இதயத்தில் வைத்து
இருக்கின்றாய் உயிரோடு...!

முப்பத்து மூன்று அகவைகள்
முடிகின்றன இன்றோடு
முழுமதியாய் குங்குமம் இட்டு
முகவரி கொடுத்த நாள் இன்று..!

பாதியிலே விட்டு பதியானவர் பிரிந்து
இருபது அகவைகள் ஓடினாலும்..
பங்குனி இருபத்தேழு பிரிந்து
பறந்து சென்றிடாதன்றோ..?

ஒவ்வொரு வருடமும் ஓடி வரும்
ஒளிந்து கொள்ளாமல் தேடி வரும்...
விழாக் கோலமும் மணக்கோலமும்
உலாக்காணும் உந்தன் மனதில்....!

காலை விடிந்ததில் இருந்து அரங்கேறிய
காட்சிகள் வரை ஆனந்தமாய் விபரிப்பாய்...!

இருபது வருடமாய் என் வாழ்த்தும் - உன் நினைவுகளும்
இடை விடாமல் தொடருகின்றன.

கல்யாணம் என்பது நீண்ட கால பயிர் தான் - ஆனால்
கரம் பிடித்து வாழ்ந்த உந்தன் காலம் குறுகியது
மனமொத்த தம்பதிகள், உதாரண தம்பதிகள்
மற்றவர் பொறாமைப்படும் தம்பதிகளாய்
மகிழ்வோடு வாழ்ந்த அந்த பதின் மூன்றாண்டுகள்
உங்களுக்கு பொக்கிசமே...!

குழந்தைகளாக நாம் உலவிய அந்நாட்களில்
குதூகலம் என்பதை உணர்த்திய பெற்றோர்கள்..!

வறுமையிலும் எம்மை வசதியாக்கிய பெற்றோர்கள்...!
வண்ண மயமான எதிர்கால கனவுகளை சுமந்த பெற்றோர்கள்..!

எங்கும் அறிந்ததில்லை கண்டதில்லை உங்களை போன்றோரை..
எமது துரதிஸ்டம் எந்தையவர் பிரிந்தது...!

இருந்தாலும் நீங்கள் ஒன்றிணைந்த நாள் இது...!
இன்று முப்பத்து மூன்று ஆண்டுகள் கடந்தும்
இருவரும் கண்ட கனவினை நனவாக்க முடியாத
இடத்தில் இதயம் கலங்கி நிற்கின்றேன்...!

எங்களுக்கான ஆலயம் அத்திவாரமிடப்பட்ட
எண்பத்து ஒன்றின் பங்குனி இருபத்தேழு
இன்றைய நாளில் உங்களை மனதார வாழ்த்தி
இதயத்தில் இருத்தி துதிக்கின்றேன் அன்பானவர்களே..!
உங்களின் ஆசீர்வாதம் அடுத்த ஆண்டில் உங்கள் கனவினை
உலகறிய செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்...!

இனிய வாழ்த்துக்கள் அன்னையே...!

Monday 24 March 2014

ஆலோசனை...!!!


ஓடி வந்தேன் யுத்தம் ஆடிய கோரத் தாண்டவத்தினால்
வாடிச்சோர்ந்தேன் தந்தையினை தேடிக்களைத்ததினால்
நாடி வந்த நாடும் என்னை அணைக்க மறுத்தது...!

திரும்பி ஓடி விடலாமோ வந்த இடத்திற்கே...
விரும்பி நான் கேட்கவில்லை...!
ஒரு ஆலோசனை ஒற்றை வசனத்தில்
ஆண்டவனிடம் கேட்டேன்...!

குழம்பிய உள்ளம்
தளம்பிய வாழ்வு தற்காலிகமாய்
கொண்டவள் என்னிடம்..
கொட்டிக்கிடந்த நம்பிக்கையும்
கொஞ்ச அச்சமும் எங்கோ
தொலைந்து போன நிலையில்...

ஆண்டவனிடம் கேட்டேன்
ஆலோசனை...!


பதில் கொடுத்தான் அவனும்...!
பரிதவித்து நின்ற பாலகி விபூசிகாவும்
அவளை பெற்றவளும்
அடைந்த நிலையும்
அரங்கேறும் கடத்தல்களும்
எனக்கான ஆலோசனைகள்  போலும்..





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஆலோசனை" என்ற தலைப்பில் இன்று (24.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/





Friday 21 March 2014

கவிதைகள் எந்தன் கவலை நீக்கிகள்..!!


கனதியான இதயம்
கழற்றி வைக்கவோ
இடமில்லை..!

சனத்திரளில் தொலைந்து
மிதிபடும் பச்சைக்குழந்தை போல
வலிகளில் விழுந்து வதைபடும்
வஞ்சமில்லா இதயம்..!

மழைநீரில் நனைந்த புத்தகமாய்
மள மளவென்று ஊதிப்பருக்கின்றது
கண்ணீரின் ஆதிக்கத்தால்...!

உறவுகளும் நினைவில் கொள்ளாத
உயிரற்ற நிலையில் நான்...!

அஞ்ஞாத வாசம் செய்கின்றேன்
அந்தோ வருடக்கணக்காக...

வெளியேறத்துடித்து போராடி
விம்மி வெடிக்கின்றேன்...!

வெடித்துப் போனாலும்
துடித்துப்போக மாட்டேன்...
வடித்த கண்ணீரும்
நீடித்த துன்பமும்
முடித்து போன இறுதி வெடிப்பாகட்டுமே...!

பணம் இரந்திடுவேன் என்று
பக்கம் வர தயங்கும் உறவுகள்
பச்சோந்திகளை வென்று நிமிடத்திற்கு
பல நிறங்கள் கொள்கின்றன...!

வாயெல்லாம் பற்களாகி ஒருநாள் - என்
வாசல் தேடி வரும் அவர்களை
வதனம் எங்கும் புன்சிரிப்போடு
வரவேற்க காத்திருக்கின்றேன் - அந்த
காத்திருப்பிற்காகவே இன்றைய
காயங்களையும் அவமானங்களையும்
துச்சமாய் கடக்கின்றேன்..!

துணிவை அள்ளி கொடுக்கும் கவிதைகள்
துயரத்தை கிள்ளி போடும் கவலை நீக்கிகள்..!

கனதியான இதயத்தினை கொஞ்சம்
கவிதைகள் மீது இறக்கி வைக்கின்றேன் நான்...!
கனத்தால் தள்ளாடும் கவிதைகள் - என்
கண்ணீரை மொண்டு  சுறு சுறுப்பாகின்றன...!


இருக்காதா பின்னே...
இருக்கின்ற என் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி
இறங்கிய கண்ணீர் அன்றோ..?

கவிதையே உனக்கு - நான்
கடமைப்பட்டுள்ளேன்..!
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்...!
சிறப்பாய் நீ பயணிக்க வேண்டுகின்றேன்..!




அரசி நிலவன்






Thursday 20 March 2014

வெட்ட வெளிச்சம்...!


அண்ணன்களை தேடியவள்
அண்ணம் நெரிக்கப்பட்டாள் -அங்கே
சிறுமியவள் சின்ன பயங்கரவாதி என
சித்தரிக்கப்பட்டாள்...!

நவி பிள்ளையின் வருகையிலும்
நல்லெண்ண தூதுக்குழுக்கள் வருகையிலும்
சிந்திய கண்ணீரும் சிதறிய அவளது
அவலக்குரலும் எடுபடவில்லை...!

அண்ணாக்களை திருப்பி தரத்தான்
அட உங்களுக்கு வக்கில்லை
அருமந்த குஞ்சு அவளை
அடை காத்திடத்தன்னும்
உங்களுக்கு துப்பில்லையா..?

இலங்கை இரும்பு கரம் கொண்டது
இறுகப்பற்றி கழுத்தை நெரிக்கும் என்பது
அறிந்த உண்மை...!

சிறுவர் துஷ்பிரயோகம்
சிறுவர் போராளி என்று
கூவுகின்ற ஐ நாவும்

காணாமல் போனவர்களை
காரணம் காட்டி தேர்தலில்
மாலை சூடிய பெருந்தகைகளும்

இன்னும் உலகெங்கும் - ஈழத்தை வைத்து
இ(ர)க்கும் யாவரும்


அவள் கண்ணீர் சிந்தி கதறிய கோலம் கண்டும்
நேரஞ்சல் பதிவஞ்சல் என்று ஒவ்வொரு
ஊடகத்திலும் விதம் விதமாய் கண்ணுற்றும்
ஊமையாய் இருந்தனர் அன்றோ??

இன்று அவள் எங்கோ ஓர் மூலையில்
இருளோடு கரம் பிடித்து கதறும் போது
இறங்கி வந்திடுவாரோ..?

எனக்காய் நானே போராட வேண்டும்..!
எனக்காய் நானே சிறைக்குள்ளும் சாக வேண்டும்...!

யாருக்காக இங்கே அமைப்புக்கள்..?
யாருக்காக அவை உலவுகின்றனவோ?

போனவள் வருவாளோ..?
ஏனவள் போனாளோ..?

கவிதையிலும் கட்டுரையிலும்
கனமாய் எழுகின்றன வினாக்கள்..!

நேரிடையில் வினா எழுப்ப யாருக்கு துணிச்சலோ?
நேர்மையும் கூர்மையும் செத்து நாளாயிற்று...!

வெட்டை வெளிச்சமாகின்றது
வெறுமையாகி போகின்ற எமது வாழ்வு...!

உலகம் எங்கும் சுற்றினாலும்
உண்மை விழிக்காது என்று
உலகமது உறுதிப்படுத்துகின்றது..!

இருளில் மூழ்கிய வாழ்வு நிரந்தரம் என்று
இவர்கள் அமர்வுகள் அமர்த்தி தீர்மானம் நிறைவேற்றி
வெட்டை வெளிச்சம் போட்டு விளக்குகின்றார்கள்..!

பச்சிளம் பாலகி , நிறைமாத கர்ப்பிணி
யாவருக்கும் பயங்கரவாத பட்டம் சூட்ட
சர்வதேசம் சாமரை வீசி ஆமோதிக்கும் கிறுக்குத்தனம்
நன்றே வெளிச்சம் போட்டு காட்டுகின்றது
எமக்கான நீதியினை...



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "வெட்ட வெளிச்சம் " என்ற தலைப்பில் இன்று (20.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/



Wednesday 19 March 2014

இன்சொல்...!!!

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
வன்சொல் வழங்குவது..."


உனக்கு வேண்டப்படுவது போன்றே
எனக்கும் வேண்டப்படும் என்பதை
அறியாமல் அடிக்கடி அள்ளி வீசுகின்றாய்
அனல் பறக்கும் சொற்களை என் மேலே...

அனல் பட்டு பொசுங்கி போன என் மென்னிதயம்
புனல் என்னும் விழிநீரில் நனைந்து
வெம்மை தணிக்கின்றது...!

கருகிப்போன உள்ளத்தில் இருந்து
கனிவாய் உனக்காக பிரசவிக்கும்
இன் சொற்கள் சுகப்பிரசவம் ஆகின்றன
உன் செவி வழியே உந்தன் உள்ளத்தில்...!

இனிமை என்றுமே
கனிவை இழந்ததில்லையே...!

இரும்பான உன் உள்ளத்தில்
இரசாயன மாற்றத்திற்கு உட்பட்டு
இழந்து விட்டதோ தன் தன்மையினை...!

தாக்கத்தின் விளைவாக
வடு சொல்லை வாரி இறைக்கும்
வன்மம் கொண்ட உள்ளம் கொண்டோனே..!
வலிகள் என்றால் என்னவென்று நீ அறியவேண்டும்
இன்றில் இருந்து நானும் இன்சொலுக்கு தடை விதிக்கின்றேன்...
இன்சொல் உண்டு வன்சொல்லை கக்கும் நீ திருந்துவதற்காக....






லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "இன்சொல் " என்ற தலைப்பில் இன்று (19.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/




Tuesday 18 March 2014

மயக்கம்...!


விடிந்தும் விடியாத அந்த இருட்டுப்பொழுதில்
விந்தி விந்தி வந்தவள் சாலையோரமாய் 
ஒதுங்கி நின்றிருந்தாள்...!

ஒன்றிரண்டு வாகனங்கள் புகையினைக்காறி 
உமிழ்ந்து வேகமாய் மறைந்து கொண்டிருந்தன...!

இன்னும் வீதிச்சமிக்கை இடத்திற்கு செல்ல முடியாதவளாய் 
இழுத்து இழுத்து உடலை அசைத்துக்கொண்டிருந்தாள் அவள்..!

ஒருவாறு அங்கு செல்லவும் பொழுது நன்றாக புலர்ந்து விட்டிருந்தது....!
மெல்ல எழுந்து கைத்தடி பிடித்து நின்றிருந்த வாகனங்களை நோக்கி நடந்தாள்...!

வாகனங்களின் கண்ணாடியில் தெரிந்த தன் வதனம் கண்டு அவள் 
வாடிப்போய்விட்டாள்...!

அவளுக்கே அவளை அடையாளம் காண முடியவில்லை..!
"அம்மாளாச்சி தாயே இன்றைக்காவது ஒரு பிடி சோற்றுக்கு வழி கொடு" 
மனதிற்குள் வேண்டியபடி முன்னுக்கு நின்றிருந்த வாகனத்தின் 
கண்ணாடியினை தட்டினாள்...!


அசையவில்லை கண்ணாடி கதவுகள்...
அடுத்த வாகனத்திற்கு முன்னேறினாள்...! 

தட்டிய கைகள் தயங்க கண்கள் செருக 
தள்ளாடியபடியே மனம் தளராது மீண்டும் முயற்சியில் அவள்..!

ஏளனப்பார்வைகளும் ஏச்சுக்களும் 
ஏய் அங்காலே போ என்ற விரட்டல்களும்
தாண்டி மீண்டும் மீண்டும் சமிக்கைகள் விழுந்து எழும் அந்த
இரு நிமிட இடைவெளிக்குள் தன் அதிகமான முயற்சி கொண்டு 
இரண்டு புண்ணியவான்களின் பெருந்தன்மையால் இருபது ரூபாய் 
இரந்து பெற்றுக்கொண்டவள் வறண்ட தொண்டை நனைக்க விரைந்தாள்..!

இரண்டடி வைத்திருப்பாள் அந்தோ பாவம்..!
பொத்தென்று பிடரி அடிபட விழுந்து விட்டாள்..! 
நடைபாதை குந்தில் அடிபட்ட பிடரி பிளக்க.. 
பீறிட்ட இரத்தம் கொஞ்சம் வீதியினை நனைத்தது...!

தலை பிளந்து கிடப்பவளை வாய் பிளந்து சிலர் நோக்கினர்...!
தடக்கு பட்டு விழுந்து போச்சு பாவம் என்று சிலரும் 
வேகமாக வந்த வாகனம் இடிச்சு தூக்கி எறிஞ்சிட்டுது என்று சிலரும் 
அனுதாபங்களை கொட்டி பார்வையாளர்களாக தம்மை அலங்கரித்தனர்....!

பத்து நாளாய் இதே வீதியில் பசிக்குது என்று அலைந்தவள் அவள்..!
பரதேசிகள் இவர்களின் கண்ணுக்கு அது தெரியவில்லை...!
பசி "மயக்கம் " மேலிட்டு மயங்கி விழுந்து பிடரி அடிபட்டதும் 
பகல் குருடர்கள் இவர்களுக்கு புரியவில்லை...!

இல்லாத வதந்திகள்  பரப்பி கொள்ள நன்றே தெரிகின்றது...!
இருக்கின்ற இவர்களைப்  போன்ற சமூக வாதிகளால் 
இல்லாத பசியும் பட்டினியும் நன்றே இருக்க வைக்கப்படுகின்றது...!





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மயக்கம் " என்ற தலைப்பில் இன்று (18.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


Friday 14 March 2014

அற்புதம்..!


எனக்கென்ன உனக்கென்ன
என்ற உலகமதில் எனக்காக
என்னோடு பயணிக்கும் உன்னதம்..!

கருவறையில் தொடங்கி உன் நிழலில்
பயணித்தேன் இன்னும் பயணிக்கின்றேன்...!
இறுதி வரை இவ்வாறே பயணிக்க வேண்டும்...!

நலம் நாடுபவள் அன்னை என்றால் கணமும் - என்னை
வலம் வரும் உன்னை என்னவென்பேன்..?
குலம் காக்கும் தெய்வமானவளோ - என்
பலம் கொண்ட நம்பிக்கையானவளோ...?

வியந்து நோக்கும் அற்புதம் அம்மா நீ...!
பயந்து நீ ஒதுங்கிய உறவுகள் முன்னால்
உயர்ந்து நிற்க வைக்கவேன்றே சத்தியம் பூண்டேன்
அயர்ந்து போகாமல் சத்தியம் காக்க துணை நிற்பவளே...!

உலகில் உன்னைப்போன்று அன்னையில்லை...
உருவம் கொண்ட இறைவனாய் காண்கின்றேன்...!

சித்தம் குழம்பி தன்னிலை மறந்து
நித்தம் சத்தம் இட்டு சச்சரவிடும் என்னை
உத்தம மாய் மன்னித்து கொள்ளும் மேன்மையானவள்...!

அன்னை என்றால் அகிலமும் போற்றும்
உன்னை அன்னைக்கு மேலாய் தேவதையாய்
விண்ணைத் தாண்டி நேசிக்கின்றேன்...!

கோபமும் தாபமுமாய் பாசமும் நேசமுமாய்
அகன்று நீளமாய்  நீடித்து போகின்ற பந்தமன்றோ..?

என் வாழ்வின் வழியோரம் எங்கும் பாசத்தின் தூறல்களை
அள்ளித்தெளித்து என் விழியோர கண்ணீர் துடைப்பவளே...!

நீயில்லாத தருணங்களில் உன் நினைவோரம் சாய்ந்தால்
தாலாட்டி என்னை மெல்ல தூங்க வைக்கும் மென்மையானவளே...!

உன் அன்பின் சாரல் மழையில் நனைந்து புதுப்பொலிவு பெறுகின்றேன்..!
மரணித்துப்போனாலும் மீண்டும் உயிர் பெற வைக்கும் - உந்தன் அன்பும்
நீயும்
என்னோடு பயணிக்கும் வரை எந்தன் மரணமும் சற்றுத்  தள்ளியே பயணிக்கும்...!




யாருக்காக இந்த போராட்டம்..??


(இன்று நான் கண்ணுற்ற ஒரு காணொளி ஒன்று என்னை வற்புறுத்தி இதனை எழுத வைத்து விட்டது. இருந்தாலும் இதில் உள்ளவை யாவும் பல காலமாக என் மனதில் கிடந்தது உழன்று தொண்டைக்குள் சிக்கித்தவித்த வேதனை மிக்க விடயங்களே.)

ஈழப் போராட்டம் என்ற ஒரு சொற் பதத்தினை வைத்து இன்று உலகெங்கும் எத்தனையோ வியாபாரங்கள் நடைபெறுகின்றன. அது தமிழ்நாடாக இருந்தாலும் சரி புலம்பெயர் தேசமாக இருந்தாலும் சரி இன்று அந்த பதம் ஒரு வியாபாரப்பதமாக மாற்றம் பெற்றிருப்பது யாவரும் அறிந்த உண்மை. 

அரசியலுக்கு அது இன்று நன்றாகவே நல்ல ஒரு தரமான உரமாக பயன்படுத்தப்படுகின்றது. விளைகின்ற விளைச்சலை அறுவடை செய்கின்றவர்கள் வளமாக வாழும்போது அந்த ஈழப்போராட்டத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்ட உறவுகள் இன்று என்ன நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரிந்த உண்மை?

ஆம்..!
ஈழத்தில் 2009 இன் போரிற்கு பின்னான காலப்பகுதியில் நிர்க்கதியாக்கப்பட்ட எத்தனையோ போராளிப்பெருமக்கள், எங்கே என்று அறியாத போராளிகளின் உறவுகள் தற்போது விடுதலையாகி செய்வதறியாது தவிக்கும் பெண் போராளிகள்  மற்றும் ஆண் போராளிகள் என தமது வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பினையும் தொலைத்து ஒரு வித மன உளைச்சலில் தம்மை நகர்த்திச்செல்லும் இவர்களுக்கு ஏன் யாரால் இந்த அவல நிலை?

தலைவர் இருக்கின்றார் என்றும் போராட்டம் முன்னெடுக்கப்படும், தமிழீழம் மலரும் என்றும் கோசமிடும் அமைப்புக்களே..! முதலில் தமிழினத்திற்காக போராடி நடுத்தெருவில் நிற்கும் இந்த உறவுகளுக்கு வாழ்வதற்கு ஒரு வழிவகை செய்யுங்கள். புலம்பெயர் தேசத்தில் உள்ள பலர் அவர்களில் சிலருக்கு உதவுகின்றனர் தான் மறுப்பதற்கில்லை. ஆனால் தவிக்கின்ற யாவருக்கும் உதவி கிடைக்கவில்லையே. தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக சிலருக்கு உதவிகள் கிடைத்தாலும் அவை நிரந்தரமானவை என்று கூறிவிட இயலாது.

தமிழீழ நாடு கடந்த அரசு என்கின்ற ஒரு அரசு புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றது என்பது ஈழத்தில் உள்ள எத்தனை உறவுகள் அறிவர்? அறிக்கைகள் விட்டு தமக்கு தாமே ஒன்று கூடல் நிகழ்த்தி விருந்துண்டால் அங்கிருக்கும் உறவுகளுக்கு தெரியுமா? உண்மையில் இந்த அரசு பொறுப்பேற்றவுடன் என்ன செய்திருக்க வேண்டும்?  ஈழத்தில் உள்ள அத்தனை போராளிகளையும் திரட்டி அவர்களுக்கு உரிய எதிர்கால நலத்திட்டத்தினை உருவாக்கியிருக்க வேண்டுமல்லவா? சும்மா உதவி என்று மாதம் பத்தாயிரம் இருபதாயிரம் என்று பிச்சை போடாமல் அவர்களுக்கு என்று ஒரு தொழிலினை அல்லது ஒரு நிரந்தர வேலையினை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கியிருக்க வேண்டும். 

தேசியத்தலைவர் இருந்தால் அந்த உன்னதமான போராளிகளை இவ்வாறு நடு வழியில் தவிக்க விடுவாரா? அன்றி மற்றவர்களிடம் கையேந்தி நிற்க தன்னும் விடுவாரா? அன்றைய கடும் போர்ச்சூழலில் கூட வலுவிழந்தோருக்காக தேசியத்தலைவர் நிதியினை  ஒதுக்கி அவர்களை வாழ வைத்துக்கொண்டு இருந்தார் என்பது ஏன் உங்கள் அறிவிற்கு எட்டவில்லை? தலைவர் வருவார் , தமிழீழம் மலரும் என்று எதிர்பார்க்கின்ற உறவுகளே. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாளில் இந்தப் போராளிகளைப்பற்றி அவருக்கு என்ன பதில் சொல்வீர்கள்? அவர்களுக்காக என்ன செய்தீர்கள் ? 

உண்மையிலேயே நீங்கள் அவரின் வரவை எதிர்பார்த்திருந்தால் அல்லது அவர் இருப்பதை நம்புவதாக இருந்தால் முதலில் எங்கள் இனத்துக்காக போராடி, எச்சங்களாகி நிற்கும் உன்னதமான போராளிகளை வளப்படுத்தியிருப்பீர்கள். அவர்களை மதித்து அவர்களின் நலன் காத்திருப்பீர்கள். இவ்வாறு அவர்களைப்  புறந்தள்ளி ஏளனமாய் நோக்கி நீங்கள் உதாசீனப்படுத்துவதில்  இருந்து நன்கு  விளங்குகின்றது. அரசியலுக்காகவும்  சுய இலாபத்திற்காகவும்  தலைவர் இருக்கின்றார் என்றும் வருவார் என்றும் காலங்கடத்துகின்றீர்கள் என்பது.

நிகழ்காலத்தில் செய்ய முடிந்த செயல்களாக எவ்வளவோ இருக்கும் போது எதிர்கால நம்பிக்கை ஒன்றினை சொல்லிக்கொண்டே எதற்காக காலம் கடத்திக்கொண்டிருக்க வேண்டும். உண்மையில் ஈழ உணர்வு , இன உணர்வு இருந்தால் ஈழத்தில் அல்லலுறும் உறவுகளுக்கு வாழ வழி வகை செய்யுங்கள். 


இந்த காணொளியில் மூன்று உறவுகள் கண் கலங்கி அழுது கையேந்தும் காட்சியினை கண்ணுறும் போது இதயம் கனக்கின்றது. எதற்காக இவர்கள் இவ்வாறு கையேந்த வேண்டும். இருக்க வேண்டியவர் இருந்தால் இவ்வாறு இடம்பெற அனுமதிப்பாரா? இவர்கள் அநாதரவற்று போயிருப்பார்களா? கண்களில் இருந்து சிந்தும் கண்ணீரினை துடைத்து விட கரமின்றி தவிக்கும் இவர்கள் யாருக்காக அவற்றினை இழந்தார்கள்? பொழுது போக்கிற்காக வேலை வெட்டி இல்லாமல் போய் கரங்களை துண்டித்துக்  கொண்டார்களா? காட்டிக்கொடுப்புக்களில் வாழ்ந்து கொண்டிருக்கும், துரோகங்களில் ஒன்றிப்போன ,நன்றி கெட்ட இனமான தமிழினத்திற்காக தமது வாழ்வினை தொலைத்துப் போராடியது தான் அவர்கள் புரிந்த ஒரேயொரு குற்றம். 

ஒருவர் இருவர் என்றில்லாமல் அங்கிருக்கும் அத்தனை உறவுகளுக்கும் புனர்வாழ்வு அளிக்க புலம்பெயர் சமூகத்தால் முடியாதா என்ன? பாதுகாப்பு பிரச்சினை என்ற சாக்குப் போக்கு தேவையற்றது. இலங்கை அரசின் கையில் யார் யார் போராளிகள் என்ற முழுக் கணக்கெடுப்பே இருக்கும் போது உதவி செய்ய ஆரம்பித்து அவர்களை காட்டிக்கொடுப்பதாக ஆகி விடுமோ என்று நினைத்து வாளாவிருப்பதே உண்மையான துரோகத்தனம் ஆகும். 

யாருக்காக நடைப்பயணம் செய்கின்றீர்கள்? எதற்காக தமிழீழம் கேட்கின்றீர்கள்? இந்த உன்னத உறவுகள் பசியோடு வலுவிழந்து கிடந்து கண்ணீர் விடும் போது புலம்பெயர் போராட்டங்கள் வலுப்பெறுமா ? குரல் கொடுத்து கேட்கின்ற தமிழீழத்தில் வாழப்போவது யார் ? உயிர் கொடுத்துப் போராடி எம்மினத்தினை உலகிற்கு வெளிக்காட்டியவர்களை புறந்தள்ளி எம்மால் வாழ்ந்திட முடியுமா? ஒட்டுமொத்த தமிழினத்திற்கே அது சாபக்கேடாகும். 

எமது தற்கால போராட்டங்களை குறை குறைவில்லை. ஆனால் அதற்கு முன் ஆற்ற வேண்டிய பல செயல்களை நிறைவேற்றிக்கொண்டு  போராடுவோம். ஐந்தாண்டு காலமாக ஜெனிவாவிற்கு செல்லாத கால்கள் இல்லை உயர்த்தாத கைகள் இல்லை. என்ன பயன்? இருக்கின்ற எமது போராளிப்  பெரும்மக்கள் உயிரை இழப்பதும் வாழ்வை இழப்பதும் அதிகமாகி செல்கின்றது அன்றோ? 


வாழ வழியற்று மன விரக்தியில் தற்கொலை செய்யும் நிலைக்கு ஒரு போராளி செல்கின்றார் என்றால் இத்தனை லட்சம் புலம்பெயர் உறவுகள் இருந்து என்ன பயன்? கேட்கவே வெட்கமாக இல்லையா? ஒரு போராளியினை வாழ வைக்க முடியாதவர்கள் ஒரு அரசிடம் நியாயம் எதிர்பார்க்க முடியுமா? போர்க்குற்ற விசாரணை வேண்டும் தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் அதற்காக அலைந்து இன்னும் உயிரோடு இருக்கின்றவர்களையும் இழக்க முடியுமா? 


சரணடைந்த போராளிகள் சுடப்பட்டார்கள், வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள் ,உயிரோடு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்றெல்லாம் ஆதாரங்கள் வெளியாகி அதை வைத்து போராடுகின்ற நீங்கள் அதே போன்ற போராளிகள் இன்னும் ஈழத்தில் இருப்பதை மறந்து விட்டீர்களா? அல்லது அவர்கள் போராளிகள் இல்லையா ? யாருக்காக நீங்கள் நியாயம் தேடுகின்றீர்கள்? உயிர் துறந்த போராளிகள் விசாரணைகளால் எழுந்து வரப்போவதில்லை. அவர்களைப்போன்றவர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றவர்களை காப்பாற்ற என்ன போராட்டம் செய்கின்றீர்கள்.? உண்மையில் போராளிகள் மேல் கொண்ட அக்கறையால் நீங்கள் போராடுகின்றீர்களா? அல்லது வெறுமனே இலங்கை அரசினை எதிர்க்க கிடைத்த ஆயுதமா இந்த போர்க்குற்ற விசாரணை? ஏனெனில் உயிருடன் இருக்கின்றவர்கள் கவனிப்பாரற்று அல்லவா இருக்கின்றார்கள். அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருக்கின்றதோ  இல்லையோ முதலில் அவர்களின் உணவுக்கு உத்தரவாதம் இல்லையே. 

புலம்பெயர் தேசத்தில் இருந்து  ஈழத்துக்குச்செல்லும் தமிழ்  உணர்வாளர்கள் எனத்தம்மை காட்டிக்கொள்ளும்  சிலர்  அங்குள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வெளிநாட்டு ஆசை காட்டி தமது தேவைகளை நிறைவேற்றியபின் ஏமாற்றி விட்டு  புலத்திற்கு திரும்பி விடுகின்றார்கள்  என்று கடந்த வாரம் ஒரு செய்தி வானொலி ஒன்றில் கேட்க நேர்ந்தது. ஆக சிங்களவர்கள் தேவையில்லை எமது இனத்தை கருவறுக்க என்பது நன்றாகவே விளங்குகின்றது. ஈழப்போராட்டம் , பாதிக்கப்பட்ட மக்கள் என்பன தற்போது  அரசியல் பேசுவதற்கும் ஏமாற்றுவதற்கும் நல்ல கருவிகள் ஆகிவிட்டன. 

தட்டிக்கேட்க எவருமில்லை. இருந்தால் இந்த அநியாயங்கள் , அசிங்கங்கள் அரங்கேறுமா? தமிழ்நாட்டில் பலர் தேசியத் தலைவரின் புகைப்படத்தை வைத்து அரசியல் செய்வதும், ஈழத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெறுவதும் என்று நன்றாகவே பிழைப்பு நடத்துகின்றார்கள். எங்கே அவர்கள் எமது போராளிகளுக்கு உதவட்டும் பார்ப்போம். நிச்சயமாக அதெல்லாம் பேச்சோடு சரி. யாருமே முன்வரப்போவதில்லை. 


எங்கேயோ இருக்கும் அவர்களுக்கு உதவி செய்வதால் இவர்களுக்கு அவர்களின் வாக்கு விழப்போவதில்லையே. அவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? ஆக போராளிகளுக்கு இலங்கை அரசினை தவிர வேறு எவராலும் உதவிட முடியாது போலும். தேர்தலுக்காக இலங்கை அரசு அவர்களுக்கு உதவி புரிந்து வாக்கினைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது தமிழர்களின் வாக்கினைப் பெற்றுக்கொள்ளவோ  போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க முன்வரும். இலங்கை அரசின் புனர்வாழ்வு நடவடிக்கைகளை பார்த்து புலம்பெயர் தேசத்தில் இருந்து நக்கல் நையாண்டி பண்ண மட்டும் அங்குள்ள ஊடகங்கள் முண்டியடிக்கும். "முன்னாள்" போராளிகள் என்று ஒரு அடைமொழியுடன் அவர்களின் மனதினை நார் நாராக கிழிக்கத்தெரிந்த அந்த ஊடக மக்கள் தாம் ஏதாவது செய்ய வேண்டும் உதவ வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லாமல் இவ்வாறு எதற்கு அவர்களை கொச்சைப்படுத்த வேண்டும்.

அவர்கள் மட்டுமா? ஈழத்தில் அரசின் புனர்வாழ்வு பெற்று இல்லம் திரும்புகின்ற  போராளிகளில் எத்தனையோ  பேர் மன உளைச்சலில் இருந்து இன்னும் திரும்பாமல் இருக்கின்றனர்? இராணுவ சித்திரவதைகள் மிரட்டல்கள் என்பன ஒரு புறமிருக்க சமூகத்தில் அவர்களை நோக்குகின்ற பார்வைகள் காரணமாக இன்னும் இன்னும் விரக்தி நிலைக்கு தள்ளப்படும் அவர்கள் என்ன குற்றம் இழைத்தார்கள்? கேடு கெட்ட எமது தமிழினம் பச்சோந்திகள் போன்று காலத்திற்கு காலம் குணம் மாறும் இயல்பு கொண்டவர்கள் என்பது தெரிந்தாலும் இவ்வாறு எமக்காக தம் வாழ்வை தொலைத்துத் தனித்து வந்தவர்களை கரம் நீட்டி அணைக்கத் தெரியாத கல் நெஞ்சம் கொண்டவர்கள் என்பது போரிற்கு பின்னான காலம் நன்கே  உணர்த்தி நிற்கின்றது.

வசைப்பேச்சுக்களும் , கதை கட்டும் வதந்திகளும் , முகத்திற்கு நேராகவே காறி உமிழ்ந்து வதைக்கின்ற சொந்த இனத்து மக்கள் , அண்டை அயலார் என்று அவர்களை வெந்தணலில் இட்டுச்சுட்டுக்கொல்லும் கொடுமை இன்னமும் அரங்கேறிக்கொண்டிருக்க யாருக்காக நாம் போர்க்குற்ற விசாரணை நாடாத்தப்  போராட்டம் நடாத்துகின்றோம்?


போரில் காணாமல் போனவர்களை தேடியலையும் நாம் அவர்களை கண்டு பிடித்துக் கொள்ள முடியாமல் போனாலும், இருக்கின்ற இவர்களை காணாமல் போகாமலிருக்கவாவது ஆவன செய்வோம். இலங்கை அரசின் புனர்வாழ்வில் இருந்து மீண்டு வருபவர்களை மீண்டும் இலங்கை அரசு கைது செய்யாமல் இருக்க வேண்டும் எனில் புலம்பெயர் தேசத்தில் இருந்து கொண்டு அவர்களை வைத்து எழுச்சிகரமான பதிவுகளும், அவர்களின் பழைய தோற்றத்து புகைப்படங்களையும் தற்போதைய படங்களையும் இணைத்து ஒப்பிட்டு க்கட்டுரைகளும் எழுதி கடினப்பட்டு வெளியேறிய அவர்களை மீண்டும் சிறைக்குள் தள்ள முயற்சிக்காதீர்கள் அல்லது காணாமல் போக வைக்காதீர்கள் இல்லை தற்கொலைக்கு தூண்டாதீர்கள். புலத்தில் பாதுகாப்புடன் இருந்து கொண்டு எதுவும் பேச முடியும். முள்ளுக்கம்பிக்குள் முதுகை வளைத்துக்கொண்டு இருப்பவர்கள் வளைந்து நெளிந்து தான் இருக்க வேண்டும் அதுதான் காலத்தின் கட்டாயமும் ஆகும். 

இறுதிப்போர் என்பதே உலக நாடுகளின் இணைப்பில் அரங்கேறியது என்பதை அறிந்தும் இன்னும் ஏன் அவற்றினை நம்பிக்கொண்டு எம்மை அவர்களுக்கு கோமாளிகளாக சித்தரிக்க வேண்டும்? எமக்கு நீதி வழங்க முன்வருவார்கள் என்றால் அது போர் முடிவுற்ற காலத்திலோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டுகளிலோ வழங்கப்பட்டிருக்கும். தம்மை பெரியவர்களாக காட்டிக்கொண்டு நல்லவர்களாக சித்தரித்துக்கொண்டு பிரேரணைகள் தயாரிக்கும் வல்லரசை மீறி எமக்கு என்ன நீதி கிடைக்க போகின்றது? விசாரணை ஒன்று ஆரம்பித்தாலே அது எங்கு வந்து முடியும்? யார் அதில் மாட்டிக்கொள்வார்கள் என்று அறியாதவர்களா நாம்? குற்றம் இழைத்தவன் தானே கூண்டில் ஏறி நின்று சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கூறுவான் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஏதோ ஒரு காரணத்தை வைத்து காலங்கடத்திச்செல்லுகின்ற நிலையில் நிச்சயம் எமக்கான நீதி கிட்டும் என்பது எட்டாக்கனியே.


எமது காலத்தினையும் நோக்கத்தினையும் இவ்வாறு சேதாரப்படுத்தி வலுவிழக்க வைக்கும் இந்த வல்லரசுகள் தாம் நினைப்பதனை நன்றாகவே சாதித்துக்கொள்கின்றன. எம்மினமே திரண்டு வந்து நின்று நடு வீதியில் ஒவ்வொருத்தராய் செத்து மடிந்தாலும் திரும்பி பார்க்க யாருமில்லை. தமக்கு பின்னால் அலைய விட்டு வேடிக்கை பார்த்து இலங்கையோடு நட்போடு கை குலுக்கி கொண்டு விருந்துண்ணவே அவர்கள் பெரிதும் விரும்புவர்.

ஆக...நாம் எமது கடமைகளை செய்ய முற்படுவோம். போர்க்குற்ற விசாரணை எம்மால் தொடங்க முடியாது என்றால் எம்மால் நிறைவேற்ற முடிந்த எத்தனையோ பணிகள் இருக்கின்றனவே. எங்கள் மக்களுக்கு தன்னலமற்ற உதவிகளை அள்ளி வழங்குங்கள். போரினால் அவயங்களை இழந்தவர்களும் போராளிகளும் காணாமல் போனவர்களின் உறவுகளும்  என்று எண்ணிலடங்காமல் வறுமையில் வாழும் எமது உறவுகளின் கண்ணீரை துடையுங்கள். அவர்கள் நலனுக்காக அமைப்பு ஒன்றினை நிறுவி அவர்களை வளம்படுத்தி அவர்களின் வாழ்வை நிலையாக்குங்கள்.

இலங்கையிலுள்ள  பாராளுமன்ற உறுப்பினர்களும் , அமைச்சர்களும் தத்தமது சொந்த வேலைகளை பார்த்து , தமது சுயலாபம் தேடி அலையும் போது அவர்களுக்கு இவர்களின் நினைவு தேர்தல் காலங்களில் மட்டுமே வந்து போகும். எனவே அந்த பெரிய மனிதர்களை விடுத்து , எமது உறவுகளுக்கு நாமே உதவுவோம்.

எமது போராளிப்பெருமக்களின் கண்களில் கண்ணீர் பெருகாமல் பார்த்துக்கொள்வதே எமது முப்பதாண்டு போராட்டத்திற்கும்  மதிப்பிற்குரிய எமது தேசியத்தலைவரிற்கும் நாம் ஆற்றும் நன்றியும் மரியாதையும் ஆகும். அநாதரவற்று அவர்கள் நிற்கும் போது யாருக்காக நாம் புலத்தில் போராட வேண்டும்?
.



அரசி நிலவன்    


Thursday 13 March 2014

அற்புதம்...!!!


தமிழ் உறவுகள் மேல்
தமிழ் மண் கொண்ட காதல்..!
தமிழ் உதிரத்தோடு கலந்து
தமிழ் இனத்தை தன்னோடு அணைத்த காதல்...!!

உயிர்களை அள்ளி எடுத்து
உதிரத்தில் நீராடி தன்
உள்ளே கட்டியணைத்து
உருவம் கொண்ட மண் அன்றோ?

எங்கள் வலிகளை சுமந்து சுமந்து
கண்ணீர் விட்டு கதறிய மண்...!
கனவுகளை காலடியில் புதைத்து
கல கலப்பாக நடித்து மினுங்குகின்றது...!

காதலும் சாதலும் யாவுமறிந்து
மாண்டு போன உறவுகளை எண்ணி  - அவள்
மாதக்கணக்காய் வடித்த கண்ணீரால்
நந்திக்கடலோரம் உயர்ந்தது அறிவீரோ?


கொஞ்சிப்பேசிய குழந்தைகளும்
பிஞ்சு காலால் முத்தமிட்ட ரோஜாக்களும்
நஞ்சுக்குண்டுகளால் பிய்த்தெறியப்பட்டு
பஞ்சுக்குவியலாய் தன் கரமேந்திய அதிர்ச்சியால் இன்றும்
சித்தம் கலங்கி கிடக்கின்றது தமிழ்த்தேசத்து மண்...!

வஞ்சகரைக்கண்டும் கொதித்து எழுந்திட முடியாமல்
வரலாறு சொல்லும் காலத்திற்காக காத்துக்கிடக்கின்றது...!
அவ்வப்போது அழுது இதயம் வெடித்திடும் போதெல்லாம் - தன்
அகத்தே உயிரோடு அணைத்துக்கொண்ட தன் இதயத்து உறவுகளின்
மண்டையோடுகளை மனிதம் செத்த உலகிற்கு
மனம் திறந்து காட்டி தன் பாரம் நீக்கிடும்
மகத்தான மண்ணின் காதல் ஒன்றே உலகில் அற்புதம்..!


மண்ணும் கண் திறந்து உலகை பார்த்து கண்ணீர் சிந்துகின்றது...
மரத்துப்போன அகில வாழ் மனிதர்களை விட உயர்வானது
எம் தேசத்து தாய்மண்..!

பெற்ற தாயினைப்போன்று புனிதமானவள் எங்கள் தாய்மண்..!
அற்புதங்களில் அற்புதம் எங்கள் தமிழ்த்தாய் மண்ணே..!

நீங்காத காதல் கொண்டு நீடித்த உறவோடு என்றும் பிணைப்பில்
நீ இருப்பாய் என் தாயவளே...!





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அற்புதம் " என்ற தலைப்பில் இன்று (13.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/