Search This Blog

Tuesday 8 April 2014

மன்றாட்டம்...!!!


தெய்வமாகி நிற்கின்ற ஐ நாவினை கையேந்தி
தெருத்தெருவாய் மன்றாட்டம்...!

அகதி என்று தஞ்சமடைவதற்கும் முழு நாள் காத்திருப்பு..!
சுட்டெரிக்கும் சூரியனின் கொடையால் நாவறண்டு
நலிந்து போய் தாய்லாந்தின் உயர் பாதுகாப்பு வீதியில்
நடுக்கத்துடன் ஒரு உலவல்..!

அங்கு மிங்கும் அலைந்து திரியும் காவல்துறையினரை
அச்சத்துடன் நோட்டமிட்டு மறைந்திருந்து ஒரு மன்றாட்டம்...!

கையிலே ஒரு ஆவணக்கடதாசி பெற்று அகதி அங்கீகரிப்பிற்காக
கையேந்தி சட்ட அமைப்புக்களின் வாசல் படியெங்கும் மன்றாட்டம்...!

ஐ நாவின் சட்ட அதிகாரிகளை சந்திப்பதற்கும் மன்றாட்டம்..!
சட்டம் பேசும் அவர்களை சந்திக்கவும் பெரும் திண்டாட்டம்...!

சடுதியாய் இருள் சூழ்ந்து உருளும் வாழ்க்கைச்சக்கரம்
சலனமின்றி விரைகின்றது...!

வழக்குகளும் நேர்காணல்களும் ஊர்ந்து வருகின்றது...!
வழியற்று நிற்கின்ற பயணங்களும் இடைநடுவில்....

அடிக்கடி மன்றாடிய மன்றாட்டங்களின் பலனாய்...
அகதி என்ற அங்கீகாரம் வழங்கியாயிற்று...!
அவசரமான நிலை என்றும் பரிந்துரைத்தாயிற்று...!
ஆபத்துள்ளவ்ர்கள் பட்டியலிலும் முதலிடம்...!

ஆனாலும்...
வந்து போகும் நாடுகள் எடுப்பதும் போடுவதுமாய்....
வரலாறு எழுத காலத்தை வாரிக்கொடுக்கின்றன...!

யார் யாரிடமெல்லாம் மன்றாடுவது....!
யாசிப்பதற்கும் எல்லையுண்டு அல்லவோ?

இருக்கும் இடத்திலும் மதிப்பில்லை...!
இருந்த இடத்திலும் மதிப்பில்லை...!
பிறந்த இடத்திலும் மதிப்பில்லை..!
பிரிந்து வந்ததாலும் மதிப்பில்லை...!

எப்படி மன்றாடுவது யாரிடம் மன்றாடுவது...?
வாழ்க்கையே மன்றாட்டம் ஆகிவிட்டது...!
வாசல் எங்கும் மன்றாட்டங்களின் எச்சங்கள்...!
வானம் வரை மன்றாட்டங்களின் நிழல்கள்..!
மன்றாட்டங்கள் ஆலம் விழுதுகளாய் பரப்பி
மரணித்தாலும் மண்ணை விட்டு நீங்காது நிற்கும்..!


 

லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மன்றாட்டம் " என்ற தலைப்பில் இன்று 08.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

No comments:

Post a Comment