Search This Blog

Thursday 10 April 2014

போதை..!


அதிகாலை விடிவது மட்டும் தெரிகின்றது..!
அந்தி சாயும் போதெல்லாம் 
அந்தரத்தில் அவன்...!

அவளும் பிள்ளைகளும் 
அவனுக்காய் தினம் தினம் 
அரை வயிற்றுப் பசியுடன் 
விழித்திருப்பதே வழமையானது...!

காலையும் வேலையும் கழிகின்றது 
நிதானமாய்...
மாலையும் சாலையும் கடக்கின்றது
தள்ளாடிபடியே...

சாமத்தில் சிந்தும் அவளின் கண்ணீரில் 
தெளிகின்ற போதையில்....
தெளிவாக சத்தியம் பண்ணிடுவான் - அவள் 
தலையில் ஓங்கி அடித்து...

போதை மட்டுமல்ல அவன் 
போலிச்சத்தியமும் நிதானமற்றது என்று 
அவளுக்கு உணர்த்தி வந்தன  
கடந்த கால அனுபவங்கள்...!

கரைச்சல் பட்டு கடன் வாங்கி 
கழிகின்ற காலத்தில் அவனை 
அடிமையாக்கிய போதை 
அவனின் குடும்பத்தினையும் 
இரையாக்கி சீரழிப்பது கண்டு
இறுதி முடிவெடுத்தாள்..!
கண்ணீரை சொரிந்து சொரிந்து 
கடைசி வரை களைத்துப்போனவளாக 
அவள் எடுத்த முடிவால் போதை 
அவனை விட்டு நீங்கியது...!


அந்தியில் தள்ளாடுவதில்லை...!
அரை மயக்கத்தில் உறங்குவதில்லை..! 
ஆனால் கண்ணீரில் மிதந்தான்..!
ஆருமில்லாமல் துவண்டான்...!

அவளும் பிள்ளைகளும் 
அநியாயமாய் தம்மை மாய்த்துக்கொண்டனர்..!
போதை என்ற அரக்கன் அவனின் உறவுகளை 
இரையாக்கிய போதே 
அறியாமை உணர்ந்து கொண்டான்...!

புத்தி தெளிந்தான்...!
போதை தெளிந்தான்...!

என்ன பயன்?
இழந்து போன வாழ்வு 
இறுதி வரை கை சேராதன்றோ??





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "போதை" என்ற தலைப்பில் இன்று (10.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

No comments:

Post a Comment