Search This Blog

Monday 28 April 2014

ஏழை...!

பகட்டான பட்டு உடுத்தி 
பளிச்சிடும் நகைகள் அடுக்கி 
ஆடம்பரமான வாகனத்தில் 
ஆலயம் வந்திறங்கியவள் 

காலணிகளை களைந்தாள் 
காசுகளை அள்ளியபடி விரைந்தாள் 
காத்திருந்த ஏழைகளின் கரங்களை 
நிரப்பி அவர்கள் இதயத்தில் நிரம்பி வழிந்த 
அன்பினை யாசித்து தன் இதயம் நிரப்பினாள்...!

அகம் மலர்ந்து புன்னகைத்த ஏழைகளை விட 
முகம் மலர்ந்து அகம் சிரித்த அவளின் யாசகம் பெரிது...!

ஏழைகள் என்ற ஒற்றைச்சொல்லில் 
ஏழைகளை அடக்கி விட முடியாது...!

பணம் இன்றியவன் ஏழை அல்ல.
பணம் இருந்தும் பாசம்  இன்றி தவிப்பவர்களே
பலமான ஏழைகள்...!

பணக்கார  ஏழைகள் யாசிப்பதை 
பலர் அறிவதில்லை...!

குணம் இன்றிய பணக்காரர் விதைக்கின்ற விதைகள் 
முளைத்து ஏழைகள்  என்னும் பயிர்கள் விருட்சமாகின்றன...!

காட்சிக்கு வெறுமனே ஏழைகளாகிய இந்த 
ஏழைகளின் ஓட்டை வீடு அன்பு - என்னும் 
அட்சய பாத்திரத்தை தன்னகத்தே கொண்டதாய் 
சொர்க்கமாய் தெய்வீகமாய் என்றும் விளங்கும்...!

பல அடுக்கு மாடிகளில் 
வாசம் செய்யும் ஏழைகளுக்கு 
நேசம் காட்டத் தான்  யாருமில்லை...!

பகட்டு ஆடைகள் அணிந்தாலும் 
திகட்டி போகும் பல்சுவை விருந்துண்டாலும்
பக்கத்தில் உறவுகள் இல்லை 
அரவணைக்க யாருமில்லை...!

பணம் கொடுத்து வாங்கிய பரிவாரங்கள் 
பதறி த்துடிப்பதில்லை...!
பக்குவமாய் பணிவிடை செய்வதில்லை...!

கண்ணீரை சிந்தி கலங்கினாலும் 
கண் துடைக்க ஒரு கரமில்லை...!
பாசத்தினை கேட்டு யாசிக்க -அந்தோ 
அந்தஸ்து இடங்கொடுப்பதில்லை 
பாசம் கேட்டு யாசிக்க கூட  
இடம் என்று ஒன்றுமில்லை..!

சத்தமின்றி வந்து ஏழைகளின் கரம் நிரப்பி 
சந்தோசத்தால் தன் மனம் நிரப்புகின்ற - இந்த 
உண்மை ஏழைகள் இன்றைய நவீன 
உலகில் அதிகரித்துப் போனமை  
கையேந்தும் ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதமே..!  


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஏழை" என்ற தலைப்பில் இன்று (28.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


No comments:

Post a Comment