Search This Blog

Wednesday 16 October 2013

தகராறு....!!!


நித்தம் ஒரு போராட்டத்தால்
சத்தம் இன்றி அடங்கி மெளன
யுத்தம் புரியும் எண்ணங்கள்
சித்தம்  கலங்கி தகராறு புரிகின்றது
தத்தம் மனச்சாட்சிகளுடன்.....!!!

மஞ்சத்தில் சாய்ந்த மெய்யின்
நெஞ்சத்தில் கனமான
எண்ணக்குழப்பங்கள்
அமிழ முடியாது தத்தளிக்கின்றன....

தொண்டைக்குழிக்குள் வருவதும்
நெஞ்சுக்குழிக்குள் அமிழ்வதுமாய் - பின்
விஞ்சி மேல் எழுவதுமாய்
பாடாய் படுத்தும் உயிர்த் துடிப்பில்
கலவரம் அடையும் மனம்
கண்டபடி திட்டித்தீர்க்கின்றது..!


கலைந்திட்ட கனவுகளால்
எட்டி உதைத்து தகராறு புரிகின்றது
எடை போட்டு தடுத்திட்ட மனச்சாட்சியினை...



அரசி நிலவன்




Tuesday 15 October 2013

அடிமைகள் என்பதை அறியாமலேயே...

ஆடம்பர வாழ்க்கைக்கு
ஆங்காங்கே உலகம் எங்கும்
கை ஏந்தி கடன் சுமைகளை
குடி மக்களின் தலைகளில்
பொறித்து வைக்கும் அரசு....!!!

தான் பெற்ற இன்பம் வையகமும் பெற
தாரை வார்த்து கொடுக்கின்றது அடிமைகளாக
மத்திய கிழக்கின் பண முதலைகளுக்கு....
தரகோடு அந்நிய செலாவணியும்
தங்கு தடையின்றி அள்ளப்படுகின்றது...!

உழைப்புக்கள் கொட்டப்படுகின்றனஅங்கே..!
உதிரங்கள் சிந்தப்படுகின்றன அங்கே..!
உறவுகள் நாதியற்று இங்கே
உலை வைக்கவும் சக்தியற்று
உயிரை வெறுத்து காத்திருப்பு...!

ஊதியம் மருந்திற்கும் இல்லை...
ஊமையாய் போன பெண்மைகள்
ஊர் திரும்புகின்றன வெற்று உடலங்களாக
ஊர் திரும்பாமலே போன றிஷானா நபீக்குகளும் பல
ஊனமாய் போன புத்தியுடன் தம் நிலை மறந்தோரும் என
ஊர் சொல்லும் பலரின் கண்ணீர் கதைகள்...!

இராணுவத்திற்கு சலித்து விட்டதென்று
இங்கிருந்து நாடு கடத்தி சித்திரவதை....!!!
அடிமைகளை விற்று பெற்றோல் கொள்வனவு
"அறியாமை" அரசிற்கு மூலதனமாகின்றது
அருமந்த உயிர்கள் நட்டமடைகின்றன.....

அடிமை வாழ்வு நிரந்தரமாகி அங்கே
அல்லாடும் அபலைகள் சிதைக்கப்படும் கொடுமையா?
அடிமை என்ற மூன்று எழுத்தில் - அவை
அடங்கி போவது கொடுமையா?

அதிகாரம் அகத்தே இருந்தும்
அசமந்த போக்கு அரசின்
அறியாத சங்கதிகள் அதிகம்..!

அடிமைச்சாசனம் எழுதி கைச்சாத்திட்டு
அரங்கேற்றும் நாடகம் புரியாது -இன்றும்
அங்கே ஏற்றுமதி ஆகின்றன
அறியாமைப்பெண்மைகள் - தாம்
அடிமைகள் என்பதை அறியாமலேயே...

அறிவுறுத்த யார் வருவார்??
அறியாத அரசியலை மேடை போட்டு
அளக்கும் அய்யா மாரே....
அறியாமல் அடிமையாகும் கொடுமையினை
அநியாயமாகிப்போகும் வாழ்வினை விழிப்புணர்த்த
அய்யாமாரே மாதம் ஒரு மேடை ஏற மாட்டிரோ?? - ஒ
அயர்த்து போய் விட்டேன் நீவிரும்
அரசிற்கு அடிமை என்பதனை....


அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அடிமை " என்ற தலைப்பில் 15.10.2013 வழங்கிய கவிதை இது.

அடிமை...!!!


அடுப்பின் புகை முகர்ந்து பழகியவர்கள்
துப்பாக்கியின் புகை நெடியினை சுவாசித்து
இனத்தின் அடிமை விலங்கொடிக்க
இடி என முழங்கி அணி திரண்டனர் - தமிழ்
இனத்தின் அடிமை விலங்கோடு - பெண்
இனத்தின் அடிமை விலங்கும் தகர்த்திட்ட
இமயத்தின் பின்னால்....

மூன்று தசாப்த யுத்தமும்
மூச்சின்றி அடங்கியதால்
அடிமையாகிப்போனது
அடங்கா மண்ணின் மூச்சு...!!!

ஆயுதங்கள் தரித்திரிந்தோர்
ஆருமின்ரி அந்தரித்தனர்....
ஆரம்பித்தது அடிமை வாழ்வு
ஆதியிலிருந்து...

பெண்மைகள் வதைக்கப்பட்டன...
ஆண்மைகள் சிதைக்கப்பட்டன...
உயிர் மீண்டவர்கள் இன்றும்
உடைத்திட முடியா அடிமைவிலங்கில்
அகப்பட்டு அல்லாடியபடி...

தலை நிமிர்ந்து  திமிருடன் 
தலை வணங்காது  நடந்த 
தரை எங்கும்  இன்று நாணி
தலை குனிந்து செல்லும் நிலையும் 

சொல்லாட 
சொந்தங்களே  பின்நிற்கின்ற
சோகமும்,,,  

இரண்டடி தூரத்தில் பேசிடும் வசைமொழிகளும்,, 
இரவுக்கு மட்டும் தெரிந்திடும் கண்ணீரும்,,
எந்த நொடியும் வாசலுக்கு வரலாம் என 
எதிர்பார்த்து கலங்கிடும் விசாரணை அழைப்பும்,,

அடிமை வாழ்வு அள்ளிக்கொடுத்த 
அதிகப்படியான சலுகைகள் 

சிறுமையாகிப்போன வாழ்வில்
வறுமைக்கும் அடிமையாகி வாழும் 
வெறுமை யாகிப்போன தேசத்தில் 
மறுமையிலும் பிறக்க வேண்டாம்...!!

Monday 14 October 2013

வலிகளை விலை கொடுக்கின்றேன்..!!! வண்ண நிலவன் உன் வரவிற்காக..


தூரமாகிய உந்தன் வரவால்
பாரமாகிய எந்தன்  உள்ளம்...!

வரவுகள் அதிகமான விழிநீரின்
பரவலால் தொலைவில் உறக்கம்..!

இருள் நீங்கினும் துன்பத்தின்
மருள் நீங்கிடாது அதன் பிடியில்...

தொடர்கின்ற முடிவில்லா பிரிவு
படர்கின்ற வலிமை வலிகள்...!

உடைத்தெறிய சத்தியுண்டு- துன்பமதை
துடைத்தெறியும் புத்தியுமுண்டு..!

விடை தெரியா வினாக்கள்
தடை இன்றி நித்தம் வரவாகி
விடை பெற்று செல்கின்றன...
மடை திறந்த வெள்ளமாய்
கண்ணீரை வரவழைத்து..


சஞ்சலங்களை  சகித்து - நெஞ்சம்
சருகாய் போனவள்
சலனமற்ற சரீரம் தனை நீங்கி
சஞ்சரிக்கின்றாள் உன் நினைவுகளோடு
சலிப்பற்று  உன் வரவிற்காய்

வலிகளை விலை கொடுக்கின்றேன்
வண்ண நிலவன் உன் வரவிற்காக..

இதயவனின் இன்ப வரவை வேண்டி
இன்பங்களை காணிக்கை ஆக்குகின்றேன்
இந்த வாழ்வெனும் யாகத்தீயில்....

வலிகளும் வளம்பெறும் ஒருநாள்
வல்லவன் நின் வரவால்....
வலியோடு சிரிக்கின்றேன் - உன்
வரவின் நம்பிக்கையால்....



அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "வரவு " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/





Thursday 10 October 2013

புத்தர் தோற்றுத்தான் போய்விட்டார்..!!!


போதி மரத்தில் கீழ் பெற்ற ஞானத்தை
போதித்து திரிந்த புத்தரின் இலட்சியம்
புதைக்கப்பட்டு புற்களும் முளைத்தாயிற்று...!!
புத்தர் தோற்றுத்தான் போய்விட்டார்..!
புத்த வாரிசுகளுக்கே புரியாமல் போன
புத்த ஞானம் புரிந்திடுமா பாகிஸ்தானியருக்கும்..
புதிய உயிர்ப்பலிக்களம்  சிரிய தேசத்திற்கும்....


ஒளியிழந்த ஈழத்தின் மர நிழல்களில்
ஒய்யாரமாய்  சயனத்திலும்
புத்த பகவான் தியானத்தில்....!!
புரிகின்றதா புத்தா....??
புது வரலாறு படைக்கின்றார்கள் - உன்
புதல்வர்கள் உன்னை சான்றாக வைத்து..

ஒருவேளை மாண்டு போன உறவுகளின்
ஒருமித்த சாபக்கேட்டினை உன்னை கொண்டு
ஒழித்து கட்டுகின்றார்களோ???

போகும் வழியில் தடக்கி விழும் இடமெல்லாம்
போதி மரத்தைப்போன்று எம் தேசத்தின்
போர்க்குற்றமும் தினம் அதிகரித்தவாறே...

போயா தினத்தில் வெண் கமலம் காவி வரும் உயர்திரு
போர்க்குற்றவாளி வாரிசிடம் மனு ஒன்று கொடுத்திட
போதிமரத்து பேரொளிக்கு தைரியம் உண்டோ??


கண்ணை மூடி தியானிக்கும் புத்தரே...!!
கண் திறந்து வாய் பேசினால் உனக்கும்
அந்தோ தமிழர்களின் நிலை தான்...!!!
அரச மரத்தின் அடியில் புதையுண்டு
காணாமல் போனோர் பட்டியலில்
இணைந்திட்டாலும் உன்னை தேடி வர
மனித உரிமை ஆணையத்திற்கும்
உரிமை இல்லாதொழிக்கப்படும்...!!!

ஆக....
கெளதம புத்தர் அவர்களே....!
உங்கள் ஞானம் தோற்று..,
எங்கள்  மானம் பங்கப்பட்டு...,
உயிர்கள் தானம் ஆக்கப்பட்ட
மனிதாபிமானம்  அற்றுப்போன
கொலைக்கள தேசத்தில்
கெளரவ புத்தருக்கென்ன வேலை..??


ஞானம் "மானம்" இழந்து
நடு வீதியில் நிர்வாணமாய்
நெடு நாளாய் கிடக்கின்றது...!
மானம் காக்க துணிவில்லை..!
நாணம் கொண்டு உறக்கத்தில்
வானம் நோக்கியபடி புத்தன்...,
நாதி அற்ற இனத்தின் மண்ணின்
போதி மர நிழல்களில் ஒளிந்தபடி....


அரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஞானம் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

Wednesday 9 October 2013

அடையாளச்சின்னங்களாய் சரித்திரத்தில் அறியப்படட்டும் எதிர்காலத்தில்...!!!



அடையலர் அரங்கேற்றிய அடாவடித்தனத்தால்
அகம் அடையாதார் அதீதமாய்  ஈழத்தில்...!!
அடைக்கலம் அடைந்தோரும்
அனாதரவானோரும் எண்ணிக்கையில் சாதனை..!
அந்நிய தேசமெங்கும் தமிழரின் பரம்பல்
அடையாளமிட்டு அழகாக உணர்த்துகின்றது....
அரிவாள் ஏந்திய அரிமாக்களின் அட்டகாசத்தினை..!

இனம் ஒன்று வாழ்ந்து முடித்த வரலாறே
தகர்ப்புக்கள் கொண்டு தரை மட்டங்களால்
வழிச்சு துடைத்து எறியப்படுகின்றது...!
பெயர்கள் அழித்து எழுதப்படுகின்றது..!
கல்லறையில்  விதைக்கப்பட்டவர்களும்
கல்லால் அடித்து துரத்தப்படுகின்றனர்....!

மெல்ல மெல்ல மரணித்து போகின்ற தேசம்
மயானமாய் தான் காட்சி கொடுக்கின்றது...!
காணாமல் போனவனும் இலகுவாக
மரண சான்றிதழ் பெறுகின்றான்
மீள்குடியேற்ற சிரமதானத்தினால்...!

அழகாய் ஓங்கி வளர்ந்த கட்டிடங்களில்
அந்தரத்தில் தலை கீழாய் தொங்கியபடி
சுந்தரத்தமிழ் அலறித்துடிக்கின்றது....!
அல்லாடும் அப்பாவித்தமிழ் நாளை
அகால மரணமானாலும் ஆச்சரியமில்லை...!


அழுகுரலும் கூக்குரலும்  கலந்து ஒலித்த
அந்த இறுதிப்பயணத்தரிப்பு முல்லை தேசத்தின்
காற்றில் கலந்து வருகின்றது சரணம் கச்சாமி...!
இவை யாவும் எம் தேசத்தின்
இன்றைய நாகரீக அடையாளங்களாய்....!

இருக்கும்  இடமும் பறி போகலாம்...!
இலக்கியங்களும் திருத்தி எழுதப்படலாம்..!
இடர் தாண்டி வந்தோரும் மரித்துப்போகலாம்...!


இருக்கின்ற அடையாளங்களை அழித்து
இல்லாத வரலாறு எழுதத்துடிக்கும் கனவான்களே...!
அமைதியாக துயில் கொண்ட இல்லங்களை
அரக்கத்தனமாய் பிராண்டிப்போட்ட
அப்புகாமிகளே...!
அங்குமிங்கும் அவ்வப்போது நீவிர்
அடித்து உதைத்துப்பின் புதைத்துப்போன
அருமந்த உறவுகளின் என்புகளை
அகழ்ந்து எடுத்து அழிக்க குறிப்பாய்
அடையாளம் தெரியவில்லையோ...??
நன்று....!


எஞ்சிய எச்சங்களாய் மண்ணுக்குள் உயிரோடு
தோண்டிப்புதைக்கப்பட்ட உறவுகளின் கபாலங்களும் என்புகளும்
தொன்மை இனத்தின் தொலைந்திடா தொல்பொருட்களே...!!!
அடையாளப்பொக்கிசமாக உண்மையினை உணர்த்தட்டும்...!!!
அழிக்கப்பட்ட வரலாற்றினை திருத்தி எழுதிடட்டும்..!!
அவை எம்மினத்தின் வலிமை மிகு
அடையாளச்சின்னங்களாய் சரித்திரத்தில்
அறியப்படட்டும் எதிர்காலத்தில்...!!!



அரசி நிலவன்


அரும்பதங்கள்
=============

அடையலர் - பகைவர்
அடையாதார் - இருப்பிடம் திரும்பாதவர்கள்


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அடையாளம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

Tuesday 8 October 2013

தகுதி...!!!

தகுதி என்ற கவிதைத்
தலைப்பை உள்வாங்கி
தமிழ் தேடலில் தவழ விட்டேன்...!
தட்டுத்தடுமாறி தடக்கி
"தகுதி" விழுந்து எழுந்தது...!

தகுதி பெற்று எவரும் பிறப்பதில்லை...!
பகுதி பகுதியாக வாழ்வில் சேர்த்து
மிகுதி பெற்று தினம் திமிர் கொண்டு
தொகுதியாக சொத்துக்கள் பணம் என
தகுதியாகி உயர்ந்து நிற்கின்ற உலகமிது...!!!


அழகும் அறிவும் பேச்சும் தகுதியாகி
பழகிப்போன பாழாய்ப்போன உலகமிது...!

கற்றவையும் கற்பவையும் கூட
பணத்திற்கு பலியாகிடும் உலகமிது...!


பணம் விரும்பிடா குணம் கொண்டு..
கள்ளம் இல்லா உள்ளம் நிறைந்து...
நெகிழ்ந்திடும் பண்பான கனிவுப்பேச்சோடு..,
மகிழ்ந்திடும் தென்பான புன்முறுவல் பூத்து
திகழ்ந்திடும் மனித வைரத்தினைப்
புகழ்ந்திடும் தகுதி  செந்தமிழிற்கு உண்டோ??
அகழ்ந்திடும் வைரம் தன்னும் ஈடாகிடுமா?
உயர்ந்து நிற்கும் உள்ளத்தின் விலையேது?


உன்னத உள்ளத்தின் தொட்டிட முடியா
உயரத்தை நெருங்கிடத்தான்  முடியுமா??
உருளும் உலகத்தின் அயராத
உழைப்புக்களைக்கொண்டு...??

அளக்க முடியுமா கல்விப்படிகளால்...?
எட்ட முடியுமா அழகின் வசீகரத்தால்...?
விலை பேசிட இயலுமா பணப்படிகளால்...?

விலை மதிப்பற்ற உன்னத உயிரும் நெருங்கிட சக்தியற்று
மலைத்து நின்று அண்ணாந்து நோக்கும்
தொலை உயரத்தில் என்றுமே உயர்ந்த உள்ளம்...!!!
நிலைத்து நின்று அரசாளும்....!!






அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "தகுதி" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/





Monday 7 October 2013

அந்தரத்தில் நீண்டதொரு பயணம் அந்தமின்றி தொடர்கின்றது....!!!

அந்தரத்தை அகிலத்திலிருந்து நோக்கினால்
அந்தரத்தில் தொங்குவதாய் ஒரு காட்சி...!!!
அந்தரத்தில் தொங்கி சுற்றுவது அசையும்
அகிலமே...!!!

அந்தரம் பரந்து விசாலமாய் விரிந்திருக்க - ஆங்காங்கே
அந்தரத்தில் கோள்களும் தாரகைகளும் தொங்கிகொண்டே
ஆதவனை சுற்றி சுற்றிக் காதல் புரிகின்றனவாம்
ஆதியும் அந்தமும் இன்றி...!

அந்தரத்தில் நீண்டதொரு பயணம்
அந்தமின்றி தொடர்கின்றது.....!
ஈர்ப்பு விசையின் நம்பிக்கையில்...

அந்தரத்தில் சுழலும் அகிலத்திலும்
அந்தரத்தில் தொங்கிய படி அநேகர்...!

அந்தரிக்கும் பயணமல்ல இது....!
அந்தமுள்ள பயணத்தை
அழியாப்பயணம் என்றெண்ணி
அவலப்படும்  உயிர்களை
அந்தரப்படுத்தி அழகு பார்க்கும்
அடங்கா கயவர்கள் தாமும்
அகில ஈர்ப்பு விசையினை
அகத்தே கொண்டதாய்
அர்த்தமற்ற இறுமாப்போடு
தொங்கிக்கொண்டிருக்கின்றார்கள்
அந்தரத்தில் காலங்காலமாய்....!!!

அகிலம் ஒருமுறை ஆடினால்
அந்தர தொங்கல்கள் யாவும்
அல்லாடி அறுபட்டு விடும் என்பதை
அறியாமல்...!

தொங்கிக்கொண்டு ஆட்டம்...!
தொலைக்கப்படுகின்றன அதிகம்..!
தொங்கவா இடமில்லை...?

வல்லரசின் அதிகாரத்திலும்
வலிமையான ஒரு தொங்கல்..!

இனவாத நாக்குகளில் தொங்கி
இடையிடை வழுக்கி விழுந்து
இறுக்கிப்பிடித்து மீண்டும் ஒரு தொங்கல்..!

இடர் பட்டு அந்தரத்தில் தொங்கும்
இயலாமை உள்ளங்களின் தொங்கல்...!

இறுதியில் தொங்கல் அறுபட்டு
இடுகாட்டில் ஆறடி நிலத்திலோ அன்றி
சுடுகாட்டில்  கட்டையோடு அந்தரமாய்
சுடு பட்டு போகும் போதும் அந்தரப்பட்டு
அல்லாடிப்போகும் அந்தரித்த மனித இனமே..
அடிபட்டும் அனுபவித்தும் அடங்க மறுக்கும்
அற்ப மானிடனே..!
அந்த ஆறடி நிலமும் நாளை
அடுத்தவனுக்காக அந்தரப்படுவதை - இடையில்
அந்தரத்திற்கு(ஆகாயத்திற்கு) விரைந்து செல்லும்- நீ
அறிவாயோ???




 அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அந்தரம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Thursday 3 October 2013

இல்லாத மின்சாரம் பாய்ந்தது.. இவன் மூலம் எனக்குள்....!!!


தொட்டும் பார்த்ததில்லை...!
தொண்ணுறுக்கு பின் பிறந்த வீட்டுக்கு
தொலைந்து போனவளை...!

சொல்லக்கேள்வி....
இப்பிடித்தான் இருக்குமோ...?
இல்லாத கற்பனைகள் பண்ணி...
இயன்றளவு முயன்றும்
இம்மியளவும் உணர முடியவில்லை....!
இளமைக்காலத்திலும் அறிவியல் உணர்த்தியது...
இயக்கசக்தி மின்சக்தி ஒளிச்சக்தி என்றெல்லாம்....!
ஒருவித புரியாமையுடன் பல புரிதல்களோடு
கடந்து வந்த கல்வி கற்றுக்கொடுக்க முடியாத
கடத்தல் சக்தி எனக்குள்ளும் ஊடுருவி இயக்கியது...!

பொறி தட்டும் பார்வை..!
பொடிப்பொடியாக்கிடும்
பொல்லாத வலுசக்தி...!

இப்பிடித்தான் இருக்குமோ....??
இல்லாத மின்சாரம் பாய்ந்தது..
இவன் மூலம் எனக்குள்....!!!

கண்கள் சந்தித்தால்
கண்கள் நிலம் நோக்கும்....
இத்தனை வலுவோ
இந்த மின்சாரக்கண்ணில்.....?

மூச்சுக்காற்றின் தொடுகையால்
வெந்து போகின்றேன் நான்...
இவ்வளவு வெப்பமா???
இந்த மின்சார மூச்சில்...

உரசிப்போகும் உள்ளக்கள்வனின்
உதடுகளினால்....
உயிரற்று போகின்றேன்....
இந்தளவு வலுவோ???
இந்த மின்சாரக்கண்ணனில்....!

தொட்டால் அதிர்ச்சி..!
விட்டால் முதிர்ச்சி..!
கண்டேன் நான் மின்சாரமதை
கண்களால்....!
உணர்ந்து கொண்டேன் மின்சாரமதை
உணர்வுகளால்....
உயிர் துறக்காமல்....

கற்றுக்கொண்ட மின்சாரமது
கேள்விப்பட்ட மின்சாரமது
தொட்டுப்பார்க்க துடித்த மின்சாரமது
தாய் வீடு திரும்பியவள் மீண்டு விட்டாள்
எண்ண முடியா உயர் வலுவோடு - இருந்தாலும்
என் மின்சாரக்கண்ணனின் வலு...
மிதமான  மிடுக்கோடு மிதமான வலுவோடு தான்
எனக்கு மட்டும்...!!!

அரசி நிலவன் - தாய்லாந்து




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மின்சாரம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/



Wednesday 2 October 2013

"நம்பிக்கை" நலம் வாழவென்றே... நடிப்போடு துடிக்கின்றேன்...!!



துடிக்கின்றது இதயம் உனக்காக...!
துடிக்காமல் போகாதோ எனக்காக...!
மரணித்து தினம் துடிக்கும்
மரண தண்டனை கைதியாய்,,,,
மறக்க முடியா நினைவுகளோடு
மனிதக் காட்சி சாலையில்......
வரையறை இல்லாமல் நான்...!!


வெடித்து விம்மும் நெஞ்சம்
துடித்து மரணிக்கின்றது தினம்...!
என்னுடல் கூண்டில் வீணாய்..!
கணமும் தூண்டில் மீனாய்....
துடித்து மாண்டு துடிக்கின்றது
நெஞ்சக் கூண்டில் என்னிதயம்... !!!

நடித்து சிரிக்கின்றேன் நாளும்....
நம்பிக்கையின் மேல் உயிர் கொண்ட
நங்கை  என் இதயவளின்
நலன் விரும்பி.....


"நம்பிக்கை" உயிர் வாழ்கின்றது
நல்லிதயத்தின் வேகத்துடிப்பால்..!
"நம்பிக்கை" நலம் வாழவென்றே...
நடிப்போடு துடிக்கின்றேன்...!!



இணைப்பான  இதயங்களின் துடிப்பு நிலைத்திட
பிணைப்போடு  துடிக்கும்....


அரசி நிலவன்


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "துடிப்பு" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Tuesday 1 October 2013

இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம்...!



சிவாஜி கணேசன்...!
******************
என் விருப்பத்திற்குரிய மாபெரும் நடிகர் என்பதை  விட ஒரு தலை சிறந்த  மனிதர் ஐயா சிவாஜி கணேசன் ஆவார். இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த பல கதா பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து எம் மனங்களில் உருவமாய் தக்க வைத்த பெருமை நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் ஐயாவையே சாரும். அப்பர் சுவாமிகள் , கர்ணன் , வீர பாண்டிய கட்டப்பொம்மன் , அம்பிகாபதி போன்ற வராலாற்று நாயகர்களின் உருவம் என்றும் சிவாஜியின் வடிவில் தான் மனதில் நிழலாடும். தத்ருபமான அசர வைக்கும் நடிப்பால் இல்லை கதாபாத்திரமாகவே வாழ்ந்து   காட்டிய பெருந்தகைக்கு இன்று பிறந்தநாள்.

அவரைப்பற்றிய பல தகவல்களை எல்லோரும் அறிந்திருந்தாலும் அறிந்திராத சில விடயங்கள் விகடன் சினிமா இணையத்திலிருந்து.....


 எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...

*சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

* நடிகர் திலகம் முதன்முதலில் அரிதாரம் பூசியது பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்.

* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில், 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு.......

*சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷூட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷூட்டிங்குக்குச் சென்றது இல்லை.

*கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்.


*வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே.

* தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி.

* திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்.

*தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப்பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

*சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா - கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது.

*தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துக் கொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்.

*சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங்கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்.

* ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்.

*விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. வெள்ளியிலான சிறிய பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்.

* சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தின் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்.

*'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி  சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

*படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்.

* சிவாஜியும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் 'கூண்டுக்கிளி'

* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்ச்களை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்.

*தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்.

*'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில், 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.


*அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசிவரை அது நிறைவேறவே இல்லை.

*பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

*பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்.

*கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்.



நன்றி - விகடன் சினிமா இணையம் 

Monday 30 September 2013

எப்பொழுதும் பிணைப்பாய்,,, முப்பொழுதும் இருப்பாய்...!! (எப்பொழுதும்)


அன்பு குற்றுயிரிலும்....,
தென்பு உயிரற்றும் 
உணர்வற்ற வெற்று மெய்..! 
வாழ்வே முற்று பெற்ற நிலையாக
தாழ்வே எதிலும் பெற்ற சாதனை...!!!

சத்தியமாய் உண்மை....
பைத்தியமாய் உள்ளே...!

எப்பொழுதும் பிணைப்பாய்
முப்பொழுதும் இருப்பாய்...!!

கண்களோடு உறவாடி 
கரைத்திடும் கனமான 
கடுந்துயர்களை -என்
கள்ளக்கண்ணீர்....!!! 
   
நோக்குவோரின் கண்களுக்கு 
தொக்கு நின்று அள்ளிச்சொரிவாய் 
மும்மாரியாய் நிரினை- என் 
முரண்டு பிடிக்கும் நெஞ்சம் ஈரமாகும்...!
புரண்டு உருளும் மெய்யினை தாலாட்டிடுவாய்..!


உறக்கம் என்னும் திரைக்கு பின் உன்னோடு
உறவாட வரவேற்பேன் போகத்துடன் தினமும்...

விழிகள்  பிரசவித்து கன்னங்களில் தவழ்ந்து 
விஞ்சிடும் மயில் இறகின் வருடலாய் நீ தழுவும் 
தொடுகை யால் வலி மிகுந்த நெஞ்சச்சிறை நீங்கி 
விடுகையாவேன் முற்றிலுமாய்....!!!

எப்பொழுதும் என்னருகே 
தப்பாது ஓட்டிய கண்ணீரே 
எங்கே நீ....????

உலகத்தமிழ் வானொலி என்னோடு 
உறவாடும் பொறாமையால் உன்னோடு 
கொண்ட பிணைப்பை அறுத்து போனாயோ...???

தாண்ட முடியா துன்பங்களையும், 
தோண்டிப்புதைத்தாலும் மீண்டும் எழுந்திடும் வலிகளையும்
வரிகளாக்கி இதயம் பண்பாகிடும் "கவிதையும் கானத்தினையும்" 

வலி இதயம் பம்பரமாய் சுழன்று நிலை மறந்திடும் "பம்பரத்தினையும்" 
தமிழ்ச்சொற்களில் அபிநயம் பிடித்து புதிர்  எடுத்து அறிவோடு விளையாடும் "சொல்லாடலையும்"  
சிரிப்பு என்ற ஒன்றை நினைவு படுத்தி துன்பத்தை வெடித்து 
தகர்த்து எறிந்திடும் "சண்டே சரவெடியினையும்"  
வானலைகளில் பிடித்து கொடுத்து 
காதோரம் காதல் பேசும் உலகத்தமிழ் இணைய வானொலி...! 
எப்பொழுதும் பிணைப்பாய் 
முப்பொழுதும் இருப்பாய்...!

சலிக்காது விழித்து இருப்பேன் எப்பொழுதும் உன்னோடு...
வலிக்காது செழித்து இதயம் எப்பொழுதும் இருப்பதற்காய்.....!!!


அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "எப்பொழுதும்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Thursday 26 September 2013

ஏழ்மை...!!!

உடைமைகள் இழந்தோம்
உலகம் தராசினை நீட்டியது...! 
உதிரங்கள் கொடுத்தோம்
உயரத்தான் இருந்தது தராசு...!
உயிர்களையும் ஈந்தோம்...!
உலகத்தின் படிகளுக்கு சமனாகவில்லை..!!!
உலகத்தராசின் சமனுக்கு ஈடாய் வழங்கிட 
ஏதுமில்லா ஏழைகள்....!! 


நிலங்கள் சுரண்டப்டுகின்றன....!
நீர் உறிஞ்சப்படுகின்றது...!
கடல் அன்னையும் தூரமாய்...
கட்டுமரங்களின் அதிகரிப்பால்....!
வறுமையின் நிமித்தமே 
வந்தேறியவர்கள் அவர்கள் ...! 
கசங்கிய துணி தான்...
கல்லும் முள்ளும் கொண்ட பாதம் தான் 
அன்றாடம் உழைப்புத்தான் - ஆனாலும் 
அச்சப்பட்டு நடுங்கியதில்லை..!
  
வறுமைக்கோட்டிற்கு கீழ் என்று அவர்களை 
வரையறுத்து வைத்தாலும்....
வட கிழக்கில் வாழ்வோரை  விட 
வறுமையற்று இல்லையே...!

வந்தேறிய குடிகளை 
வந்த வழி திருப்பிட திராணியற்ற பண்டாரவன்னியன் 
வம்சத்து  ஏழைகள் ......!
வழி வழியாய் தொடர்கின்ற வரலாறே...


அசர வைக்கும் அரண் மனை இல்லம் 
அழகிய ஆடம்பர மகிழுந்து 
அவ்வப்போது அயல் நாட்டுக்கு சுற்றுலா
அனு தினமும் இறைவனுக்கு காணிக்கை
அள்ளி அள்ளி கொடுத்தாலும் வற்றிடா செல்வம்...!!
அட்சய பாத்திரம் இருந்தால் ஏழை இல்லையா??
அந்தரத்தில் தன் உயிர் ஊசல் ஆடும் 
அநாதை தமிழர்களின் ஏழ்மை யாருக்கும் தெரிவதில்லை...!!

அன்று தொட்டு இன்று வரை 
அதிகார பரவலாக்கல் பிச்சைத்தட்டில் 
அங்கு மிங்கும் விழும் சில்லறைகளை
அண்ணாந்து நோக்கி ஏம்பலிக்கும்
அக்னி நெஞ்ச தமிழர்களின் ஏழ்மை நிலை...
அகிலம் அறிந்திட வாய்ப்பில்லை....!!!


அரசி நிலவன் 



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஏழ்மை" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

  

தன்னுயிரை வருத்தி சிரித்து சென்றவன்..!!!


தமிழின் காதலால் கலம்பகம் கேட்டு
தன்னையே சாம்பலாக்கிய நந்திவர்மனை ஒத்து
தமிழீழத்தின் மேல் உயிர் கொண்டு பட்டினித்
தணலில் வெந்து கருகி பன்னிரு நாளாய்
தன்னுயிரை வருத்தி சிரித்து சென்றவன்..!

ஊரெழுவில் உதித்த உதய சூரியன்...!
ஊட்டம் நிராகரித்து நீர் துறந்து
ஊனை உருக்கி உயிரையும் ஈர்ந்தான்
ஊமையாகிய இந்திய வல்லாதிக்கத்தால்..!!!


நல்லூரில் பார்த்தீபன்
நாவறண்டு நாடி துவண்டான்...!
பல்லூரிலிருந்தும் திரண்ட
பாசக்கார உறவுகளின்
கண்ணீர்களை பறித்து...

தமிழீழத்தின் தாகத்திற்கு
தன் நீரினை பருக்கியவன்...!
தன்னிகரில்லா உயிரினை
தியாகத்தில் எரிய வைத்தவன்...!

வஞ்சகம்  இழைத்த அயல் தேசத்தால்
நெஞ்சகம் துவண்டு போன உறவுகளின்
சந்ததிகளும் கண்ணீரோடு நினைவேந்தும்
பந்தத்தோடு பிரிந்து சென்றவன் திலீபன்...!!


தமிழ் மனங்களை சுட்டெரித்த செஞ்சூரியன்...!!
தமிழினத்தை இருள் நீங்கி விழிக்க வைத்த அகல் தீபம்..!!
தலைவரே  கண்ணீர் சிந்திய கண்ணியத்தியாக வீரன்...!!

இந்திய வல்லாதிக்க தேசத்தை - நாணி
சிரம் தாழ வைத்த தியாகச்செம்மல்....!!

மக்கள் புரட்சி வெடிக்க வேண்டுமென்றாய்.!
மனம் குளிர வானத்திலிருந்து பார்ப்பேன்
மலரும் சுதந்திர தமிழீழமதை என்றாய்...!!!


காலங்கள் கடந்து தான் போகின்றன.....!
காத்திருப்பும் நீண்டு தான் போகின்றது...!
தமிழீழமோ தனியரசோ ஆண்டாலும்
தரணியில் உன் நாமம் அழியாது அண்ணா...!!!
தமிழர்கள் இங்கு வாழும் வரை.............................



அரசி நிலவன்


  

Wednesday 25 September 2013

ஐம்பொன்....!!!



ஐம்பொன்னின் நாணத்தால்
காத்து கருப்பு அண்டாதாம்..!
விலை கொடுத்து மழலை காலில்
சிலம்பு ஒன்று அணிவித்தாள்
தாய்லாந்து அயல் சிநேகிதி...!
தாய்நாட்டில் மட்டுமில்லை
தாய்லாந்திலும் காத்து கருப்போ....?

தொண்டைக்குள் சிக்கி கொண்டது
தொலைந்து போனவைகள்...!
நினைவில் நிற்பவை....!
கனவாகி போனவை....!
உயிரை உலுக்கி எடுப்பவை...!


எந்த காத்து கருப்பு குடித்து போன
எண்ணிலடங்கா உதிரம் - ஈழ
மண்ணில் சகதியாகி போனது....?

ஐந்தடிக்கொரு ஐம்பொன் சிலைகள்
அடங்கா மண்ணில் இருந்தன அன்று..!
இன்றும் இருக்கத்தான் செய்கின்றன....
கண்ணில் தென்படாத காத்து கருப்பு
மண்ணில் மனிதர்களை
எட்டிச்சோ தொட்டிச்சோ.?
நான் அறியேன்.....



கண்ணுக்கு புலப்பட்ட
சன்னங்களும் எறிகணையும்
ஐம்பொன் சிலைகளையே  நன்கு
எட்டி தொட்டு பதம்பார்த்தன அன்று..!


இன்றும் பச்சை நிற காத்து ஏ கே 47 உடன்
காவல் காக்கின்றது ஐம்பொன் சிலைகளை...
காக்கி கறுப்பும் கூட துணையாக...


ஐம்பொன்னை தள்ளி வைத்து
களிமண் அரசாளுகின்றது...!
இடம் அபகரிப்பதை மிரட்ட
இயலாத ஐம்பொன் சிலைகள்
இல்லாத காத்து கறுப்பை விரட்டுமா??

ஐம்பொன் கொண்டு மனிதர்களுக்கு
காவல் செய்யும் அறிவாளிகளே....!
ஈழத்தை உலுக்கும் காத்து கருப்புக்கு என்ன காவல்
விளக்கமாய் தான் உரத்து சொல்லுங்கோவன்...!



அரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஐம்பொன்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/