Search This Blog

Monday 7 October 2013

அந்தரத்தில் நீண்டதொரு பயணம் அந்தமின்றி தொடர்கின்றது....!!!

அந்தரத்தை அகிலத்திலிருந்து நோக்கினால்
அந்தரத்தில் தொங்குவதாய் ஒரு காட்சி...!!!
அந்தரத்தில் தொங்கி சுற்றுவது அசையும்
அகிலமே...!!!

அந்தரம் பரந்து விசாலமாய் விரிந்திருக்க - ஆங்காங்கே
அந்தரத்தில் கோள்களும் தாரகைகளும் தொங்கிகொண்டே
ஆதவனை சுற்றி சுற்றிக் காதல் புரிகின்றனவாம்
ஆதியும் அந்தமும் இன்றி...!

அந்தரத்தில் நீண்டதொரு பயணம்
அந்தமின்றி தொடர்கின்றது.....!
ஈர்ப்பு விசையின் நம்பிக்கையில்...

அந்தரத்தில் சுழலும் அகிலத்திலும்
அந்தரத்தில் தொங்கிய படி அநேகர்...!

அந்தரிக்கும் பயணமல்ல இது....!
அந்தமுள்ள பயணத்தை
அழியாப்பயணம் என்றெண்ணி
அவலப்படும்  உயிர்களை
அந்தரப்படுத்தி அழகு பார்க்கும்
அடங்கா கயவர்கள் தாமும்
அகில ஈர்ப்பு விசையினை
அகத்தே கொண்டதாய்
அர்த்தமற்ற இறுமாப்போடு
தொங்கிக்கொண்டிருக்கின்றார்கள்
அந்தரத்தில் காலங்காலமாய்....!!!

அகிலம் ஒருமுறை ஆடினால்
அந்தர தொங்கல்கள் யாவும்
அல்லாடி அறுபட்டு விடும் என்பதை
அறியாமல்...!

தொங்கிக்கொண்டு ஆட்டம்...!
தொலைக்கப்படுகின்றன அதிகம்..!
தொங்கவா இடமில்லை...?

வல்லரசின் அதிகாரத்திலும்
வலிமையான ஒரு தொங்கல்..!

இனவாத நாக்குகளில் தொங்கி
இடையிடை வழுக்கி விழுந்து
இறுக்கிப்பிடித்து மீண்டும் ஒரு தொங்கல்..!

இடர் பட்டு அந்தரத்தில் தொங்கும்
இயலாமை உள்ளங்களின் தொங்கல்...!

இறுதியில் தொங்கல் அறுபட்டு
இடுகாட்டில் ஆறடி நிலத்திலோ அன்றி
சுடுகாட்டில்  கட்டையோடு அந்தரமாய்
சுடு பட்டு போகும் போதும் அந்தரப்பட்டு
அல்லாடிப்போகும் அந்தரித்த மனித இனமே..
அடிபட்டும் அனுபவித்தும் அடங்க மறுக்கும்
அற்ப மானிடனே..!
அந்த ஆறடி நிலமும் நாளை
அடுத்தவனுக்காக அந்தரப்படுவதை - இடையில்
அந்தரத்திற்கு(ஆகாயத்திற்கு) விரைந்து செல்லும்- நீ
அறிவாயோ???




 அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அந்தரம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


1 comment:

  1. எந்திரத்தனமாய் அந்தரத்தில் தொங்குகிறோம்
    சுந்தரத் தமிழில் சுழன்ற சொற்சித்திரம்
    தந்திரத்தாலே தகர்த்தாலும் எங்களின்
    மந்திரம் தோற்காது மந்தைகள் மருளும்பார்!

    அருமை உங்கள் கவிவரிகள்! வாழ்த்துக்கள் அரசி!

    ReplyDelete