Search This Blog

Showing posts with label அடையாளம். Show all posts
Showing posts with label அடையாளம். Show all posts

Wednesday 9 October 2013

அடையாளச்சின்னங்களாய் சரித்திரத்தில் அறியப்படட்டும் எதிர்காலத்தில்...!!!



அடையலர் அரங்கேற்றிய அடாவடித்தனத்தால்
அகம் அடையாதார் அதீதமாய்  ஈழத்தில்...!!
அடைக்கலம் அடைந்தோரும்
அனாதரவானோரும் எண்ணிக்கையில் சாதனை..!
அந்நிய தேசமெங்கும் தமிழரின் பரம்பல்
அடையாளமிட்டு அழகாக உணர்த்துகின்றது....
அரிவாள் ஏந்திய அரிமாக்களின் அட்டகாசத்தினை..!

இனம் ஒன்று வாழ்ந்து முடித்த வரலாறே
தகர்ப்புக்கள் கொண்டு தரை மட்டங்களால்
வழிச்சு துடைத்து எறியப்படுகின்றது...!
பெயர்கள் அழித்து எழுதப்படுகின்றது..!
கல்லறையில்  விதைக்கப்பட்டவர்களும்
கல்லால் அடித்து துரத்தப்படுகின்றனர்....!

மெல்ல மெல்ல மரணித்து போகின்ற தேசம்
மயானமாய் தான் காட்சி கொடுக்கின்றது...!
காணாமல் போனவனும் இலகுவாக
மரண சான்றிதழ் பெறுகின்றான்
மீள்குடியேற்ற சிரமதானத்தினால்...!

அழகாய் ஓங்கி வளர்ந்த கட்டிடங்களில்
அந்தரத்தில் தலை கீழாய் தொங்கியபடி
சுந்தரத்தமிழ் அலறித்துடிக்கின்றது....!
அல்லாடும் அப்பாவித்தமிழ் நாளை
அகால மரணமானாலும் ஆச்சரியமில்லை...!


அழுகுரலும் கூக்குரலும்  கலந்து ஒலித்த
அந்த இறுதிப்பயணத்தரிப்பு முல்லை தேசத்தின்
காற்றில் கலந்து வருகின்றது சரணம் கச்சாமி...!
இவை யாவும் எம் தேசத்தின்
இன்றைய நாகரீக அடையாளங்களாய்....!

இருக்கும்  இடமும் பறி போகலாம்...!
இலக்கியங்களும் திருத்தி எழுதப்படலாம்..!
இடர் தாண்டி வந்தோரும் மரித்துப்போகலாம்...!


இருக்கின்ற அடையாளங்களை அழித்து
இல்லாத வரலாறு எழுதத்துடிக்கும் கனவான்களே...!
அமைதியாக துயில் கொண்ட இல்லங்களை
அரக்கத்தனமாய் பிராண்டிப்போட்ட
அப்புகாமிகளே...!
அங்குமிங்கும் அவ்வப்போது நீவிர்
அடித்து உதைத்துப்பின் புதைத்துப்போன
அருமந்த உறவுகளின் என்புகளை
அகழ்ந்து எடுத்து அழிக்க குறிப்பாய்
அடையாளம் தெரியவில்லையோ...??
நன்று....!


எஞ்சிய எச்சங்களாய் மண்ணுக்குள் உயிரோடு
தோண்டிப்புதைக்கப்பட்ட உறவுகளின் கபாலங்களும் என்புகளும்
தொன்மை இனத்தின் தொலைந்திடா தொல்பொருட்களே...!!!
அடையாளப்பொக்கிசமாக உண்மையினை உணர்த்தட்டும்...!!!
அழிக்கப்பட்ட வரலாற்றினை திருத்தி எழுதிடட்டும்..!!
அவை எம்மினத்தின் வலிமை மிகு
அடையாளச்சின்னங்களாய் சரித்திரத்தில்
அறியப்படட்டும் எதிர்காலத்தில்...!!!



அரசி நிலவன்


அரும்பதங்கள்
=============

அடையலர் - பகைவர்
அடையாதார் - இருப்பிடம் திரும்பாதவர்கள்


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அடையாளம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/