Search This Blog

Showing posts with label அறியாமை. Show all posts
Showing posts with label அறியாமை. Show all posts

Tuesday 15 October 2013

அடிமைகள் என்பதை அறியாமலேயே...

ஆடம்பர வாழ்க்கைக்கு
ஆங்காங்கே உலகம் எங்கும்
கை ஏந்தி கடன் சுமைகளை
குடி மக்களின் தலைகளில்
பொறித்து வைக்கும் அரசு....!!!

தான் பெற்ற இன்பம் வையகமும் பெற
தாரை வார்த்து கொடுக்கின்றது அடிமைகளாக
மத்திய கிழக்கின் பண முதலைகளுக்கு....
தரகோடு அந்நிய செலாவணியும்
தங்கு தடையின்றி அள்ளப்படுகின்றது...!

உழைப்புக்கள் கொட்டப்படுகின்றனஅங்கே..!
உதிரங்கள் சிந்தப்படுகின்றன அங்கே..!
உறவுகள் நாதியற்று இங்கே
உலை வைக்கவும் சக்தியற்று
உயிரை வெறுத்து காத்திருப்பு...!

ஊதியம் மருந்திற்கும் இல்லை...
ஊமையாய் போன பெண்மைகள்
ஊர் திரும்புகின்றன வெற்று உடலங்களாக
ஊர் திரும்பாமலே போன றிஷானா நபீக்குகளும் பல
ஊனமாய் போன புத்தியுடன் தம் நிலை மறந்தோரும் என
ஊர் சொல்லும் பலரின் கண்ணீர் கதைகள்...!

இராணுவத்திற்கு சலித்து விட்டதென்று
இங்கிருந்து நாடு கடத்தி சித்திரவதை....!!!
அடிமைகளை விற்று பெற்றோல் கொள்வனவு
"அறியாமை" அரசிற்கு மூலதனமாகின்றது
அருமந்த உயிர்கள் நட்டமடைகின்றன.....

அடிமை வாழ்வு நிரந்தரமாகி அங்கே
அல்லாடும் அபலைகள் சிதைக்கப்படும் கொடுமையா?
அடிமை என்ற மூன்று எழுத்தில் - அவை
அடங்கி போவது கொடுமையா?

அதிகாரம் அகத்தே இருந்தும்
அசமந்த போக்கு அரசின்
அறியாத சங்கதிகள் அதிகம்..!

அடிமைச்சாசனம் எழுதி கைச்சாத்திட்டு
அரங்கேற்றும் நாடகம் புரியாது -இன்றும்
அங்கே ஏற்றுமதி ஆகின்றன
அறியாமைப்பெண்மைகள் - தாம்
அடிமைகள் என்பதை அறியாமலேயே...

அறிவுறுத்த யார் வருவார்??
அறியாத அரசியலை மேடை போட்டு
அளக்கும் அய்யா மாரே....
அறியாமல் அடிமையாகும் கொடுமையினை
அநியாயமாகிப்போகும் வாழ்வினை விழிப்புணர்த்த
அய்யாமாரே மாதம் ஒரு மேடை ஏற மாட்டிரோ?? - ஒ
அயர்த்து போய் விட்டேன் நீவிரும்
அரசிற்கு அடிமை என்பதனை....


அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அடிமை " என்ற தலைப்பில் 15.10.2013 வழங்கிய கவிதை இது.