Search This Blog

Thursday 24 April 2014

சிலிர்ப்பு....!!!



சின்ன மொட்டில் அரும்பிய காதல் பூ
சிறிதாய் துளிர்த்தது உள்ளம் சிரித்தது..!
உணர்வுகள் விழித்தது உடலோ சிலிர்த்தது..!
உலகமோ மறைந்தது உறவுகளும் துறந்தது..!

என்னவென்று சொல்ல எப்படிச்சொல்ல – அட
என்னத்தை சொல்ல எதை தவிர்க்க....

பதினாறுகள் கடந்த பாதையது..!
பள்ளத்தாக்கும் மலையும் நிறைந்த
பயங்கர பருவம் என்று பலர் சொல்லி சொல்லியே
படலை தாண்ட விட்டதில்லை சிலரை....

பட்டி மாடுகளாய் படலை திறந்து ஓடிய விடலைப்பருவம்..!
கட்டி வைத்து தடை போட முடியுமோ – காதலை
கொட்டிக் காதலித்தார்கள் முட்டி மோதி நின்றார்கள்...!
எட்டி நின்று பார்த்து சிர்த்த சுட்டிகளில் ஒருத்தியாய்

காதலில் உருகி கசிந்து ஆங்காங்கே குடைகளில் கூடு கட்டி நிற்கும்
காதல் குருவிகளின் தற்காலிக சிலிர்ப்பினை கல்லெறிந்து கலைத்து
சிரித்து நாம் அடைந்த சிலிர்ப்பு இன்று வரை எட்டியதில்லை....!

காலி முகத்திடலில் கை கோர்த்து திரியும் குறுங்கால
காதல்களினையும் கூக்காட்டி கலைத்த இன்பமும்....

தாழை மர மறைவில் இலவச காட்சிகளை அரங்கேற்றும்
ஒரு நாள் காதலர்களை படம் பிடிப்பது போன்று பாசாங்கு காட்டி
விரட்டியடித்த அந்த களிப்பும் இன்று எண்ணினாலும் உள்ளம்
சிலிர்க்கின்ற நினைவுகளே...!

நீயின்றி நானில்லை என்றும் உயிரை துறப்பேன் என்றும்
காதல் என்னும் பனித்துளியில் நனைந்து சிலிர்த்து நின்ற – பல
கல்லூரி நண்பர்கள் இன்று உயிரோடு தான் இருக்கின்றார்கள்...!

கல்லூரியில் கற்கும் காதல் கம்பசிற்கு போகாது தான்...!
கனிந்துருகிய காதல் சோடிகளை கண்ணுற்று
கண் கலங்கியதுண்டு  உள்ளம் சிலிர்த்ததுண்டு...!
கண்டறியாத காதல் என்று இன்று நினைத்து சிரித்ததுமுண்டு..!


காதல் ஒன்றில் என்னை விழுத்தி சிலிர்க்க வைத்த உள்ளம் –கண்
காணாமல் இருப்பதும் ஒரு வித சிலிர்ப்பு தானோ??
கண்ணுக்குள் இருந்தால் நினைவுகள் வந்து தாலாட்டிட முடியாது..!
கனிவை கொடுக்கும் காதல் கவிதைகள் வாசித்து
முன்னோக்கி செல்லும் இதயம் சில்லென்று -ஒரு
தடவை சிலிர்க்கத்தான் செய்கின்றது....!

இன்றைய நிலையிலும் காதல் என்ற மலர் வீசிய நறுமணம்
எனக்குள் வீசிக்கொண்டே தான் இருக்கின்றது...!

முப்பதை தாண்டியும் சிலிர்ப்பினை கொடுக்கும் காதல்
முன்னர் கல்லெறிந்த குடைகளின் காதல் ஜோடிகளை
இன்று எண்ணி எண்ணிப்பரிதாபப்படுகின்றது...!


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "சிலிர்ப்பு" என்ற தலைப்பில் இன்று (24.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

3 comments:

  1. சொல்லவேண்டியதை மிக அருமையாகச்
    சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete