Search This Blog

Tuesday 15 April 2014

சூரிய உதயம்....!


கரிய இருள் பரவிக் கிடக்கும் எங்கள் வானத்தில்- துன்பம்
விரிய வீழ்ந்து கிடக்கும் எங்கள் தேசத்தில்  தினம் உலகம்
தெரிய கதிர் பரப்பி உதயம் கொடுக்கும் - செஞ்
சூரிய உதயத்தினால் விடியல் இன்னும் இல்லையே...!!!

ஒவ்வொரு நம்பிக்கையிலும் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு உறவுகளும் விடியலை தேடுகின்றன...!

சூடு பட்டுக்கிடக்கின்ற இதயங்கள் - தினம்
சூரிய உதயத்திற்கு ஏங்கித் தவிப்பது
உலகின் விடியலுக்கு மட்டுமன்றி
உருண்டு போகும் காலத்தால்
உருவாகிடாதோ ஒரு விடியல் என்றுமே...

தினம் தினம் சூரிய உதயத்தினை
தித்திப்புடன் தேடுகின்றன....!

காடு மேடெல்லாம் திரிந்து
பாடு பட்டு உழைக்கின்றவர்கள்....!
ஓடுகின்ற புவியோடு சேர்ந்து ஓடி
களைத்து இளைப்பாறி சுற்றி வரும்
சூரிய உதயத்தினை விரும்பியும்
விரும்பாமல் ஏற்கத்தான் செய்கின்றனர்...!

கதிர் பரப்பிக்கொண்டு சூரியன் நிற்கத்தான் செய்கின்றான்...
கலக்கமும் காலமும் உருண்டு வந்தாலும்
கணக்கெடுக்காமல் உதயக்
கதிரவன் தன் கருமமே கண்ணாய்....!


சூரிய உதயம் என்றும் போல ஒரே நிலையில் இருக்க
கரிய இருள் கொண்டு நாம் மட்டும் சுற்றுகின்றோம்...!
சூரியனை சுற்றி சுற்றி நாம் தான் தேய்கின்றோம்...!
சூரியன் என்றும் நிலையானவனாய் இருக்க
உதயம் தேடி அலையும் அலைச்சல்காரர் களாய்
நாமும் எம்முடன் ஒன்பது கோள்களும்...!

நாட்கள் மாதங்கள் வருடங்கள் யுகங்கள் தாண்டி
சுற்றிக்கொண்டே இருக்கின்றோம்...!
சுழற்சி முறையில் சூரிய உதயம் தேடியவாறு....



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "சூரிய உதயம்" என்ற தலைப்பில் இன்று (15.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

1 comment:


  1. வணக்கம்!

    கோள்களை எண்ணிக் கொடுத்த கவிபடித்துத்
    தோள்கள் புடைத்தனவே! நற்றோழி! - நாள்கள்
    மணக்க நறுந்தமிழை வார்த்திடுக! என்றன்
    வணக்கம் வடித்தேன் மகிழ்ந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete