Search This Blog

Friday 11 April 2014

கல்லாக்கி வைத்திருக்கின்றேன்..!

காண்கின்ற காட்சிகள் இதயத்தை உருக்கிப்போகும்...!
கண்ணுக்கு முன்னால் மரணிக்கின்றது எந்தன் உயிர்...!

கடவுள் மட்டுமா கல்லாக முடியும்..?
கல்லாக்கி வைத்திருக்கின்றேன்
கலங்கிய எந்தன் உள்ளத்தினையும்......
கரைந்து உருகிடாமல்...

இறுக்கமான சட்டம் கொண்ட அதிகாரியும் - மனம்
இளகி என்னை அழைத்து கரம் பிடித்து கொடுத்தார் -என்
இதயத்தை தொலைத்தவனிடம் அவனோ உடல்
தொலைத்து நின்றிருந்தான்...!

அருகிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி
அனுப்பினார்கள் அவனிடத்தில்..
பார்த்து கலங்க வேண்டாம்
சத்தமிட்டு அழ வேண்டாம்
திடமாக இருங்கள் என்றெல்லாம்...
விளங்கவில்லை எனக்கு...
வித்தியாசமாய் தோன்றியது...
எதற்கு இதெல்லாம் சொல்ல வேண்டும்
ஏன் நான் அழ வேண்டும்?

கரம் பற்றிய அவனின் கோலம் கண்டு
கல்லான உள்ளம் சொல்லாமலே
கலங்கிய விழிகளை
கட்டுப்படுத்த என் அறிவிற்கு
சக்தி போதவில்லை...!

பார்த்ததில்லை எவரையும் இக்கோலத்தில்
பார்க்க முடியவில்லை அதிக நேரம்...!
பலர் கூறிக் கேட்டேன் நிலைமையினை
பரிதவித்து அழுதும் இருக்கின்றேன்...
பக்கம் பக்கமாய் கட்டுரையும் எழுதி இருக்கிறேன்
அவனின் நிலைக்காக...

ஆனால்..
இந்தளவிற்கு
உருக்குலைந்து போயிருப்பதை
உயிருடன் இருந்து நோக்கும் நிலை
உண்டாயிற்று பாவி எனக்கு...
உண்மையில் ஒட்டுமொத்த பாவங்களும்
உலகில் புரிந்தவள் நானே...!

உயிரோடு ஒரு என்புக்கூட்டின்
உருவில் வாய் திறந்து ஒரு சொல் பேசவே
கடினப்பட்ட எனது இதயத்தினை வருத்தாது
கல்லாக்கிய  எனது உள்ளத்தினை தாங்கி
கனக்க கனக்க வீடு திரும்பினேன்....
கனதியான உள்ளத்தினை
கவிதை எழுதியும் பாரம் குறைக்க முடியவில்லை...
அந்த ஒளியிழந்த விழிகளும் இடிந்து போன கன்னங்களும்
வெளிறிய உதடுகளும்  மெல்ல மெல்ல - எந்தன்
உள்ளத்தினை எரித்து  வைக்கின்றது...!
உயிர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது...!

இன்னமும் ஏன் மரணிக்காமல் இருக்கின்றாள் என்றும்...
இன்னும் இவளுக்கு ஏன் சித்தம் கலங்கவில்லை என்றும்
விசித்திரமாய் இங்குள்ளோர் நோக்குகின்றார்கள்...!

உள்ளுக்குள்ளே நான் எரிவது விளங்குமா இவர்களுக்கு...
உயிரோடு மரணிப்பது தெரியுமா இவர்களுக்கு...
உருக்குலைந்து போகின்றேன் தினம் தினம்...!
உயிரோடு எனக்கு நானே கொள்ளி வைக்கின்றேன்..!


3 comments:


  1. வணக்கம்!

    ” தமிழுக்கும் அமுதென்றுபேர்! - அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..“

    பாவேந்தன் பாவினை நாவேந்தும் உன்தளத்தைப்
    பூவேந்திப் போற்றும் புவி

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete