விழி கொண்டு நோக்கிட முடியா
விதியா இது...?
விழியாவது பேசி ஆற்றுப்படுத்த முடியா.
விதியா இது...?
உருவம் ஒன்று மட்டும் நிழலாடுகின்றது...!
உன்னை காணும் துடிப்பில் எட்டி எட்டி நோக்கும்
என்னை.
உருகும் மனதோடு அங்கும் இங்கும் அந்தரிக்கும்
உன் தவிப்பை காணுகின்ற என் கண்களில் நீரில்லையே,,
இதயம் கனம் தாங்காது வெடித்தாலும்..
இந்த பேதையை தாங்கி கொள்ள அருகில் தானும் -
உனக்கு
இடமளிப்பார்களா ?
உன் மனதை தாங்கி வரும்
உன் எழுத்துக்கள் நிறைந்த மடலை காண
ஓடோடி வருகின்றேன் மணித்தியால
ஓட்டங்களை கடக்கும் பேருந்தில் ஏறி..
கருவிலும் இடுப்பிலும் சுமக்கும் மழலைகளின்
சுமையை விட நெஞ்சில்
சுமக்கும் உன் சுமை அதிகமாய்..
என்னை பற்றிய சுமைகளை
சுமந்து கொண்டிருக்கும் உன்
சுமைகளையும் சேர்த்து
சுமப்பதாலோ ...??
கைமாறி வரும் என் மனது உன்னிடமும், உன் மனது என்னிடமும்
கை சேர்வதற்கிடையில்....
அல்லாடி போய் விடுவேன்
அந்தரத்தில்....
காட்சி கொடுக்கும் முகத்தினை விட
காட்டாத உன் அகம் தெட்டதெளிவாக தெரிகின்றது..
காட்டும் சைகையில் புரிகின்ற உன் வேதனையையும்
காட்டிக்கொள்ளாமல் தவிக்கும் உன் தவிப்பையும்..
காட்டிக்கொடுக்கின்றது என்னுள்ளிருக்கும் உன் இதயம்...!!!
அர்த்தமற்ற பிரிவுகளும்
சிறைகளும்
அடிக்கடி எம்மை
அரவணைப்பதற்கு நாம் இழைத்த
அநீதி தான் என்னவோ??
அகதி என்பதை - எமக்கு
அந்தஸ்தாக
அளித்தது யார்??
யார் இழைத்த
அநீதி இது..???
அரசி