Search This Blog

Tuesday 13 April 2010

தாயகத்தில் தமிழனின் மனநிலை.....!!!

தலைப்பை பார்த்து விட்டு தமிழ் பேசுபவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று எண்ணி அவர்களை தமிழன்”  என்ற இனத்தில் உள்ளடக்காமல் இத்தொடரை தொடர அன்புடன் வேண்டுகின்றேன்.

தாயாய் இருந்த தந்தை என்றொருவன் காணாமல் போனாலோ அன்றி காற்றோடு கரைந்து அதாவது மரணித்து போய் விட்டாலோ,, அந்த பெரு வெற்றிடத்தை நிரப்ப யாராலும் இயலாது.. காலத்தின் கோலத்தால் மாற்றாந்தந்தை என்ற உறவின் மூலம் கூட இழந்த தந்தையின் பாசமோ பரிவோ கிடைப்பது என்பது அரிதே. அப்படி கிடைப்பினும் அது குறுகிய காலத்திற்கே. இன்று தமிழர்களும் அந்நிலையிலேயே. 

தமிழீழம் என்றொரு உயிர் இன்று மென்று விழுங்கப்பட்டு அந்தரத்தில் ஊசலாடியபடி கண்ணீர் சிந்துகின்றது. தாயகத்தில் அரசியலுக்காக ஒரு சாரால் முற்றாகவே மறுக்கப்பட்ட தமிழீழம். இனி மெல்ல மெல்ல மறக்கப்பட்டு போய் விடக்கூடும்.

தமிழீழம் என்ற தோலை போர்த்தி சிங்கத்தின் வாலை பிடித்த நரிக்கூட்டத்தார், அரசியல் சாணக்கியம் என்று தமிழீழக்கோரிக்கையை நிராகரித்து வெற்றி பெற்ற கூட்டமைப்பு , நாடு கடந்த தமிழீழ அரசு என்று புலத்தில் ஒரு சாரார் என்று பலவித பிரிவினைகளுக்கு மத்தியில் இன்று தமிழர்கள் ஒரு பெரும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித்தவித்து கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் படி தமிழ் மக்களின் மனநிலை என்ன நிலையில் உள்ளது என்பதனை சற்று அறிய முடிகின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றதை வைத்து தாயகத்தமிழ் மக்களும் தமிழீழ கோரிக்கையை மறந்து விட்டார்கள் என்று எண்ணிக்கொள்ள இயலாது. கூட்டமைப்பினரின் வெற்றிக்கு முதன்மை காரணம் தமிழீழ தேசியத்தலைவரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என ஒன்றிணைக்கப்பட்ட ஒரு கட்சி என்பதும், அவரால் அங்கீகரிக்கப்பட்டு இறுதித்தேர்தலில் ஆதரவு கொடுக்கப்பட்டமையும் ஆகும். அத்துடன் ஒரு பழம் பெரும் தமிழ் கட்சி, அதாவது தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கபட்ட  தமிழரசு கட்சி என்ற பெயரையும் கொண்டமையும் ஆகும். அதை விட யாழ்ப்பாணத்தில் அவர்களின் வெற்றிக்கு “உதயன் ”  மற்றும் சுடர் ஒளிஊடகங்களினூடாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரச்சாரங்கள் மக்களை சென்றடைந்தமையும் ஒரு முக்கிய காரணமாகும். அதாவது பல கட்டுரைகள் ஊடாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தமிழீழ கோரிக்கையை நிராகைத்தமை தொடர்பில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் தமிழீழக்கோரிக்கையை கைவிட்டாலும் விடுதலைப்போராட்டத்தை, புலிகளை சார்ந்து அக்கட்சி மேற்கொண்ட ஊடக பிரச்சாரங்கள் என்பனவாகும்.  

அத்துடன் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட மறு சாரார் மீது மக்கள் கொண்ட வெறுப்பும் அவர்களின் நடவடிக்கைகளும் முதன்மை காரணங்களன்றி தமிழீழக்கோரிக்கை அல்ல. கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட்டமை, அத்துடன் அரசின் கைக்கூலிகளாக வாக்கை பிரிக்கும் எண்ணத்தில் அவர்கள் போட்டியிடுகின்றார்கள் என்ற ஒரு கருத்தும் மக்கள் மத்தியில் நிலவியமையும் ஆகும்.  

என்னை பொறுத்த வரையில் இந்த தேர்தல் முடிவுகளின் படி தமிழ் மக்களின் மனநிலை என்பது தற்போது அவர்கள் யாரையும் நம்பவில்லை என்பதே. 18 வீதமானவர்களே வாக்களித்துள்ளார்கள்.இதில் மிகுதி 82 வீதமானவர்களில் புலத்தில், வெளி மாவட்டங்களில் வதிவோரை தவிர்த்து ஏறத்தாழ 50 வீதமானவர்களுக்கு யாழில் போட்டியிட்ட எந்த கட்சி மீதும் நம்பிக்கை இல்லை என்பதை விட இவர்கள் பாராளுமன்றம் சென்று என்ன செய்ய போகின்றார்கள்? 

இலங்கை பாராளுமன்றம் தமிழ் உறுப்பினர்களின் பேச்சினை செவி மடுக்குமா? என்பவையே முதல் வினாக்களாக இருந்திருக்கும்? யாழில் வாக்களித்த 18% மானவர்களில் 43.85% மானவர்களே கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்ளனர். அரசிற்கு வாக்களித்துள்ள 32.07% மானவர்களை தமிழர்கள் என்று எப்படி அழைக்க முடியும்?? வேலை வாய்ப்பு, பண உதவி, நிவாரணம் என்ற சலுகைகளுக்காக தமிழின மானத்தை விற்று வெற்றிலைக்கு(ஈ.பி.டி.பி) வாக்களித்த இந்த மக்களுக்கு ஏது மானம் மரியாதை??

தமிழர்களின் சுயநிர்ணயம்,உரிமை என்பனவற்றை பெற்றுத்தர அரசியல் பேசுபவர்களாலோ அல்லது இலங்கையின் பாராளுமன்றம் செல்ல இருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினராலோ முடியும் என்பதை நம்பி இருக்க முடியாது. தமிழ்த்தெசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களால் மிஞ்சி மிஞ்சி போனால் தம் உயிரை மட்டுமே தமிழர்களுக்காக கொடுக்க முடியும். இனவாத அரசின் கோட்டையில் சென்று உரக்க குரல் கொடுக்க துணிபவன் தன்னுயிரை தான் இழக்க முடியும் என்பது கடந்த கால பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகள் மூலம் நாம் பெற்றுக்கொண்ட அனுபவ உண்மைகளாகும்.
  


எமது உரிமைகளை கேட்டு பெற்றுக்கொள்ள இயலாது என்பது வெட்ட வெளிச்சமான உண்மை. இதை அனைத்து தமிழர்களும் எப்போது உணர்ந்து கொள்கின்றார்களோ அப்போது தான் உறங்கிக்கொண்டிருக்கும் போராட்டம் கண் விழிக்கும்! அது வரை தமிழனை அவன் இனத்தவனே ஏமாற்றுவதையும், அந்நியன் ஏறி மிதிப்பதையும் யாரால் தடுக்க முடியும்?? 
எமது பிரச்சினைகளை தீர்த்து, எம் அபிலாசைகளை வென்றெடுக்க இந்த அரசியல் வாதிகளால் எதுவும் செய்ய முடியாது என்பதனையே யாழின் தேர்தல் வாக்களிப்பு வீதம் புலத்தி நிற்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களின் அசமந்த போக்கே இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

எது எப்படி இருப்பினும் அரசியல் மூலம் எமக்கான தீர்வு ஒன்று கிடைக்குமாயின் மகிழ்ச்சியே. ஆனால் அது கிடைக்கும் என்பதற்கு எவ்வித அறிகுறியோ சாத்தியமோ இல்லை என்பது தான் கண்கூடு. எனினும் பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளை... 

அரசி

No comments:

Post a Comment