Search This Blog

Thursday, 15 April 2010

அரச மரம் யாருக்கு சொந்தம்...???


அரச மர பிள்ளையார் இடம்பெயர்ந்து, இப்போது புத்தர் மீள் குடியேற்றப்பட்டு விட்டார்.
எங்கெல்லாம் அரச மரம் கிளை பரப்புகின்றதோ,அங்கெல்லாம் சுற்று மதில் எழுப்பப்பட்டு ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டு விடும்.
 அது பேரூந்து நிலையமாக இருந்தாலும் சரி, சன நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்தாலும் சரி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் இருந்தாலும் சரி அது புத்த பெருமானுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்தாகும். இது உண்மையில் பக்தியுடன் மேற்கொள்ளப்படும் ஒரு செயலா?? அல்லது ஏட்டிக்கு போட்டியா?? என்று புத்தியுள்ளவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.சிங்கள தேசத்தில் மட்டுமன்றி, தமிழர் தாயகப்பகுதிகளிலும் இது பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், புராதன காலந்தொட்டு இருந்து வருகின்ற இந்துக்களின் ஆலயங்களும், கொஞ்சம் கொஞ்சமாக விகாரைகளாக மாற்றம் பெற்று வருவதும் மிக்க வேதனைக்குரிய விடயமாகும்.


ஈழத்தின் மேற்கிலுள்ள கதிர்காமம் இந்துக்களின் மிகத்தொன்மையான வரலாற்றைக்கொண்ட மிகப்பழமையான ஆலயமாகும். இங்கு ஆரம்பத்திலிருந்தே சிங்கள இனவாதத்தன்மை தலை தூக்கியிருந்தமை யாவரும் அறிந்ததே. கடந்த காலங்களில் அது அதிகரித்து, இன்று முக்கால்வாசிக்கு மேல் பெளத்த மத வழிபாட்டுத்தலமாக மாற்றம் பெற்று விட்டது. கதிர்காமக்கந்தனின் சந்நிதியில் அடர்ந்து வளர்ந்தோங்கியுள்ள அரச மரமும், பித்தளை பூணாலான மதில்களும், கதிர்காமத்தை அறிந்திராத பலருக்கு, வெட்ட வெளிச்சமாய் பறை சாற்றும் இது ஒரு பெளத்த வழிபாட்டு இடம் என்று. அது கூடப்பரவாயில்லை, முன்னுக்கு அமைந்துள்ள கந்தனின் வழிபாட்டு அறைக்குள் இந்துக்கள் நாம் செல்ல முடியாத நிலைமை.கையில் பூக்களோடும், அர்ச்சனைத்தட்டங்களோடும் பெளத்தர்களே வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கே அங்கு முன்னுரிமை. பக்கத்தில் அமைந்திருக்கும் பிள்ளையாரை மட்டும் தரிசித்து விட்டு, மடப்பக்கமாயுள்ள பழனியாண்டவரையும் தரிசித்து விட்டு, நாம் மூச்சுப்பேச்சின்றி வரவேண்டியது தான்.

அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தமிழ்க்கடவுள் முருகனுக்கு கூட நாளை இருக்க இடமில்லை.. கந்தனின் கதிர்காமம் காலப்போக்கில் புத்தனின் முழு வாசஷ்தலமாகிவிடும்.


மிகப்பெரிய கொடுமை என்னவெனில், முற்பக்கமாயுள்ள அலங்கார வளைவிலுள்ள ஓம் என்ற வடிவமும் அகற்றப்பட்டு விட்டமையாகும். இப்போது அதில் வேல் மட்டுமே உள்ளது. அதுவும் வெகு விரைவில் காணாமல் போகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

 

அத்துடன், கதிர மலையில் உள்ள சிவன் ஆலயத்தினை மறைக்குமுகமாக பெரிய விகாரை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ஏற்கனவே, இரு அரச மரங்கள் இருந்ததும், அவற்றை சுற்றி வளைவுகளும் சுற்று மதில்களும் கட்டப்பட்டு புத்தர் குடியமர்த்தப்பட்டது தெரிந்ததே. இன்னும் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளில் கதிர்காமம் முற்று முழுதாக புத்தரின் வாசஸ்தலமாகி விடும் என்பதில் ஐயமில்லை.


செல்லக்கதிர்காமத்திலிருந்து, பின்புறமாய் அமைந்துள்ள வள்ளி மலைக்கு செல்லும் வழியில் கூட ஒரு விகாரை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.எங்கெல்லாம் அரச மரம் உள்ளதோ அங்கெல்லாம் புத்தர் என்றிருந்து, தற்போது இந்து கடவுளர் எங்கிருக்கின்றனரோ அங்கும் புத்தர் முளைத்து விடும் காலமாகி விட்டது. ஒருவேளை இந்து கடவுளர்களை கண்காணிக்க இலங்கை குற்றப்புலனாய்வு துறையினரின் ஏற்பாடு தான் இதுவோ, என்றும் எண்ணத்தோன்றுகின்றது.

தமிழர் தாயகத்தில் அரச மரங்களைக்கண்ணுற்றாலே ஒரு ஆத்திரம் இயல்பாகவே எழுகின்றது. வெட்டி சாய்க்கலாமா என்று கூட எண்ணத்தோன்றுகின்றது. கிளிநொச்சியில்  மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையும் சுற்று மதிலையும் விழிகள் நோக்கும் போது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியதாய் ஒரு உணர்வு எழுகின்றது. ஆங்காங்கே சிறிய சிறியதும் பெரியதுமாய் புத்தர் சிலைகள் யாழ்ப்பாணம் வரை நீண்டு செல்கின்றன. சாவகச்சேரி நுணாவில் பகுதில் கூட பிள்ளையார் வீற்றிருக்கும் அரச மரத்தை புத்தர் ஆக்கிரமித்து அமர்ந்திருக்கும் கொடுமையை யாரிடம் கூற நாம்..??

இதே போன்று தான் தமிழ் தேசம் எங்கும் முதலில் புத்தர் சிலை முளைக்கும் பின் ஒரு அரச மரம் கிளை பரப்பும்,, பாஞ்சாலைகள் எழுப்பப்படும்... பின் அவை பகிரங்கமாக சிங்கள தேசம் என அறிவிக்கப்படும்... இதை தடுப்பதற்கு எம்மினத்திற்குள் ஒற்றுமை இல்லை..!
சிங்களவன் எங்கிருந்தோ வந்து குடியேறி,, தன் மதத்தை பரப்பி,, தன் இனத்தை வளம் படுத்திக்கொண்டிருக்க,,,,நாமிங்கே சொந்த இலாபத்திற்காக சொந்த மண்ணை அந்நியனுக்கு தாரை வார்த்து கொடுக்கின்றோம்...!!
அமைச்சர்கள் பதவிக்காக ஆதரவு கொடுப்பதும்,, அரசியல் வாதிகள் சுய இலாபத்திற்காய் தேர்தலில் குதிப்பதும், பெரிய மனிதர்கள் புகழுக்காக ஒத்துழைப்பு வழங்குவதும்,, என்று நீண்டு செல்கின்றது எமது இனத்திற்கெதிரான துரோகத்தனங்கள்...!!

இதை சிந்திப்பதற்கு எம் தமிழனுக்கு புத்தி இல்லையா...??
இல்லை இல்லை நிறையவே இருக்கின்றது...!
ஆனால் ஒற்றுமை இல்லை...!
எப்போது ஒன்று படுகின்றமோ...,,
அன்று தான் எமக்கு விடிவு...!!!

விதண்டாவாதம் பேசித்திரியும் தமிழ் அரசியல் வாதிகளுக்கோ அல்லது தமிழ் அமைச்சர்களுக்கோ இவை கண்ணுக்கு தெரிவதில்லையோ..??? எல்லாமே தெரியும். தெரிந்தும் சுய இலாபத்திற்காய் துண்டு விரிக்கின்ற அன்றில் கண்டும் காணததுமாய் இருந்து கொண்டு, தேவை இல்லாத விடயங்களுக்கு அறிக்கை விடுவது தான் வேலையோ...??? அன்றில் கட்சி தாவுவது அல்லது நாட்டை விட்டு ஓடுவது...??? அரசியல் வாதிகளை மட்டும் ஏன் குறை கூற வேண்டும்?? அது தான் எம்மக்களுக்கே அக்கறை இல்லையே...! யார் எக்கேடு கெட்டாலும் தாம் வாழ்ந்தால் போதும் என்ற பரந்த உள்ளம் கொண்டவர்கள் அல்லவோ எம்மக்கள்..!! புத்தன் அருள் பாலித்தார் என்று காலப்போக்கில் புத்தனுக்கும் தேர்த்திருவிழா செய்வார்கள்...!! ஏனென்றால் கண்டியை ஆண்ட சைவத்தமிழ் மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் வழி வந்த சைவர்கள் அல்லவோ...??

தமிழா...!! உன் இனமே உனக்கு எதிரி...!!!
தட்டிக் கேட்க யார் வருவார்கள்....????


அரசி


  

3 comments:

 1. உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

  பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

  ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

  நன்றி
  தமிழ்10.காம் குழுவினர்

  ReplyDelete
 2. கட்டுரைக்கும்அதில் புதைந்துள்ள தகவல்களுக்கும் பராட்டுகள்
  தட்டிக்கேட்க யாரும் இல்லை அரசி
  தடுக்கி விழுந்தால்கூட தண்ணீர் தருவாரில்லை

  ReplyDelete