Search This Blog

Tuesday 20 April 2010

பிரிய மனமில்லை.... பிரியமான தாய் மண்ணை...!!!


வீழ்ந்து கிடக்கின்றேன்....
வீரம் விளைந்த மண்ணில் - யாரும்
வீழ்த்தி விடவில்லை என்னை..!!
விரும்பித்தான் கிடக்கின்றேன்....

உச்சியை பிளந்த சூரியனும்
ஊர் தாண்டி விட்டான்....!
ஊமல் வண்டியின் சமிக்ஞையும்
ஊர் எல்லையில்.....!

நுங்கிய நுங்குகள் அருகே பரந்திருக்க..
நுனி நாக்கினால் சுவை அறியும் ஆட்டுக்குட்டிகளும்,,
நுரைக்க நுரைக்க அசை போடும் பசுக்களும் துணையாக..
நுதல் மேல் அலையாய் முடி அசைந்தாட...
அரவமின்றி அசையாமல் நான்....!!!
அமைதியான மண்ணின் மூச்சுக்காற்றால்
அந்தோ எழுகின்றது..! வீழ்ந்து போன என் வீரமும்,,
அடங்கி போயிருந்த எம் தேசியமும்...!!

குற்றுயிராய் போயிருந்து,, அன்னை மண்ணை
குதூகலமாய் முத்தமிட்டு,, புத்துணர்வுடன்
உயிர்ப்பாகின்றேன்..!! - இழந்து விட்ட
உறவுகளின் அன்புத்தொடுகையை...
உணர்ந்து பெற்றுக்கொள்கின்றேன்...!!
உரமாகி போன மண்ணிலிருந்து...!!!



பிரிய மனமில்லை....
பிரியமான தாய் மண்ணை...!!
இறுக்கி அணைக்கின்றாள் - எனை
இதமான அரவணைப்போடு...!!
இளம் நிலவின் பால் ஒளியில்
இளமையாய் தெரிகின்றாள் என் அன்னை....!!
இந்த இன்பம் நின்று நிலைக்குமோ..??
இனிமையாய் ஒரு இரவைக்கூட..
இங்கே நான் குதூகலமாய் கழிக்க முடியுமோ?? – அந்தோ
இராணுவம் தொலைவில்.....!!!

அரசி

1 comment:

  1. வீழ்ந்து விட வில்லை வீரம்
    அடங்கி போய்விட வில்லை தேசியம்
    நின்று நிலைத்து நிச்சயம் நிமிர்வோம்
    நாளைய விடியல் செய்தியை சொல்லும்

    உணர்வுகளை கொட்டியுள்ளீர்கள் அரசி.,
    “ நிச்சயம் பிரிய மனமில்லை பிரியமான தாய் மண்ணை ”
    வரிகளில் அடங்கி போய் விட்டேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete