Search This Blog

Monday 6 January 2014

குதூகலம்..!!


ஊரின் வெயிலெல்லாம் அவன் மேல் தான்
பாரின் மாரி மழை கூட அவன் உடல் கழுவியே
வழிந்து மண்ணை முத்தமிடுகின்றது..!

நெற்றி வியர்வை பட்டு விளையும் பயிர்
செழிக்கின்றது அவன் உள்ளம் போல...

வழிந்து செல்லும் ஒரு பிடி கவளம் அன்னம்
தொண்டைக்குழியில் குதூகலமாய்....

வயிறும் உயிரும் களிப்பில்
கழிகின்ற இராப்பொழுதுகள்....!!!

கட்டாந்தரையில் மல்லாந்து கிடந்தால் மின்னும் வானம்
கண்ணயர்ந்து உல்லாசமாய் உழவன் உறங்குகின்றான்....!!!

குதூகலம் அங்கே குவிந்து கிடக்கின்றது...!!
குப்பை என்று ஏதுமில்லை அவன் உள்ளத்திலும் உடலிலும்...

எறும்பு கூட ஒதுங்கி ஊர்ந்து போகின்றது
எல்லையில்லா உழைப்பாளியிவன்
குதூகலத்தை குலைக்கா வண்ணம்....


இயற்கையினை விலை பெற்று
இறைவனுக்கு சவால் விட்டு
இல்லாத குதூகலத்தை
இருக்கின்றது என்று பகடு காட்டும்
இல்லாது இருப்போரே..!

குளிரூட்டியால் குளிர் வாங்கி
சூடேற்றியால் குளிர் காய்ந்து
குதூகலம் பெற்றிடுவீரோ??

விஞ்ஞானம் வில்லங்கமாவதை
விளங்காத மனிதமே....!
புற்று நோய் வாங்கி
புண்பட்ட தொண்டையில்  குழாய் சொருகி
புகுத்தி வரும் உணவின் சுவை அறிவாயோ..??


பஞ்சு மெத்தையில் நீராக உணவு
பக்கமெல்லாம் பணியாட்கள்
பணம் அதிகாரம் செய்யும்
பகட்டு வாழ்வில் நீ குதூகலம் என்று
உரைக்கின்ற நிகழ்வெதுவோ?

எல்லாமே கொட்டிக்கிடக்கின்றது
ஏதோ குதூகலமாய் நீ வாழ்வதாய்
நம்பிக்கொண்டு இருக்கின்றாய்..!

இனிப்பும் உறைப்பும் அளந்து
கசப்பை பலாத்காரமாய் வயிற்றில் தள்ளி
நாவூறி கட்டுப்பட்டு உணவிருந்தும்
பார்த்து அங்கலாய்க்கும் கொடுமை,
வயிற்றுக்கு இல்லாமல் பட்டினி கிடக்கும்
வறிய மக்களின் கொடுமையிலும் கொடுமையன்றோ??

குருதியெல்லாம் இனிப்பாகி
குழாய் எல்லாம் அடைப்பாகி
குதூகலம் நூறு கிராம் கோடி ரூபாய்க்கும்
தட்டுப்பாடாகி போன மேல்வர்க்கமே....!

வெளிநாட்டு சரக்கு என்று விதம் விதமாய்
குடல் கழுவி வைத்த பானமெல்லாம்
குழி பறித்தன சிறுநீரகங்களை....
இரண்டாம் கைப்பொருளாக
இலட்சங்கள் கொடுத்து உறுப்புக்கள்
கைமாறி பொருத்திக்கொண்டு திரியும்
மானிடமே....!!!
சந்தைக்கு மனித உறுப்புக்கள் விற்பனைக்கு
சந்திக்காமல் போனால் சாவை முந்தி நீ போவதை
சிந்திக்காமல் இருந்திடாதே....!

சும்மா இருந்தால் சுகங்கள் விடைபெறும்...!
சுகயீனங்கள் படியேறும்...!

குதூகலமாய் வாழ்வது எப்படி என - நீ
குடியானவனிடமிருந்து கற்றுக்கொள்...!
குதூகலம் எங்கே குடியிருக்கின்றது என்று
குறிப்பறிந்து வாழ்ந்து குதூகலித்திடு..!



அரசி  நிலவன்


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "குதூகலம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/



2 comments:

  1. அருமை அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ////குளிரூட்டியால் குளிர் வாங்கி
    சூடேற்றியால் குளிர் காய்ந்து////
    நீண்ட நாளின் பின்னர் வந்து குளிர்மையோடு செல்கிறேன் அருமை அக்கா :)

    ReplyDelete