Search This Blog

Friday 31 January 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 5 )


நிசப்தமான அந்த இரவில் மின் விளக்குகள் பகலை போன்று ஒளி பாய்ச்சிக்கொண்டிருந்தன. மின் விசிறியில் இருந்து வரும் காற்று கூட ஒலி எழுப்பாது பரவிக்கொண்டிருந்தது. அந்த வைத்தியசாலை விடுதியின் மகப்பேற்று பிரிவில் ஒவ்வொரு ஆறு கட்டில்களினையும்  தனித்தனியாக அறையாக்கி கிட்டத்தட்ட பத்து பிரிவுகளில் சேய்களும் தாய் மாரும் உறக்கத்தில் இருந்தனர். முதலாவது அறையில் மூன்றாவது கட்டிலில் மட்டும் யாருமிருக்கவில்லை. அந்தக்கட்டில் தலையணை நீரில் ஊறி ஊதிப்போன பஞ்சாய் ஈரமாய் கிடந்தது.

உதிரப்போக்கினை விடவும்  கண்களில் இருந்து வழியும் கண்ணீரே அதிகமாகி சிந்த அன்றே பிரசவித்த குழந்தையினை கரங்களில் ஏந்தியவாறு மெல்ல மெல்ல நடந்து குழந்தை பராமரிப்பு அறையினை நோக்கி தள்ளாடிச் சென்று கொண்டிருந்தாள் நிலா. மனதெங்கும் மதுரனின் முகம் நிறைந்திருக்க குழந்தையினை பார்த்து பார்த்து இன்னும் வெடித்து விம்மி விம்மி அழுதாள்.

இன்று அதிகாலையில் பூவுலகில் பாதம் பதித்த அவர்களின் செல்ல மகனைக் காண வைத்தியசாலையின்  பார்வை நேரத்திற்கு முன்னரே வந்து தவம் இருந்து காத்திருந்து தன் முதற் குலக்கொழுந்தினை தொட்டுப்பார்த்து அள்ளி எடுத்து முத்தமிட்டு கொண்டிருந்த மதுரன் நாளை காலை பார்வை நேரத்திற்கு காத்திருந்து தேடி ஓடி வர மாட்டான். 

ஆம்..! இன்று மதிய உணவினையும் மறந்து வெளியேற  மனமின்றி குழந்தையும் தானுமாய் தன் நிலை மறந்திருந்த அவனை மதிய உணவினை முடித்து  விட்டு மீண்டும் வரும் படி வலுக்கட்டாயமாய் அனுப்பி வைத்தவள் விடுதியின் வாசலில் இவனுக்காய் காத்திருந்த குடிவரவு அதிகாரிகள் அவனை கைது செய்து சென்றது அறியாமல் தூங்கி விட்டிருந்தாள். . அரை மணி நேரத்தின் பின் கூடவே சென்றிருந்த அவளின் அன்னை பதட்டத்துடன் கண்ணீரோடு வந்து அவனைக் கைது  செய்த தகவலைத்  தெரிவித்ததில் இருந்து இன்னும் கண்ணீர் நிற்கவில்லை அவள் கண்களில் இருந்து.

குழந்தை குழந்தை என்று கருவுற்ற காலம் தொடங்கி எத்தனையோ எதிர்பார்ப்போடு காத்திருந்தவன், பிறந்து வந்த  இன்று ஒரு மணி நேரம் தன்னும் தொட்டு ஆசையாய் முத்தமிட்டு செல்வதற்கிடையில் பிரிந்து சென்று விட்டானே. அந்த பச்சிளம் பாலகனும் எதையோ தொலைத்து விட்டது போன்று முகம் இறுகிக்கதறிக்கொண்டு இருந்தான்.
ஐந்து  மணி நேரத்திற்கு முன் இனித்திருந்த இனிமையான தருணத்தினை வேப்பங்காயினை விடக் கசந்து நிற்கும் நிகழ்காலத் தருணம் சொற்ப நேர இடைவெளியில் தன்னை ஆட்கொண்டு விட்டதை எண்ணி நொந்து கொண்டே நடந்தாள். 25 மீற்றர் இடைவெளி இரண்டரை கிலோ மீற்றர் போன்று நீண்டு செல்கின்றது. குழந்தையின் கதறல் அந்த நிசப்தத்தினை கலைத்து ஆக்கிரமித்துக்கொண்டது.

தூக்கம் குழம்பி எழுந்து கொண்ட தாய்மார்கள் விசித்திரமாய் அவளின் அழுது பருத்து வீங்கிய முகத்தினையும் கண்களினையும் விநோதமாய் நோக்கினர். வலியானது  வெட்கம் பரிகாசத்திற்கு அப்பாற் பட்டது அல்லவா. கடந்து முன்னேறியவள் குழந்தை பராமரிப்பு அறையின் முன்னே நின்றிருந்தாள். அழைப்பு மணியினை அடித்து விட்டு காத்திருந்தாள். அவளால் ஒரு நொடி கூட நின்றிருக்க முடியவில்லை. உயிர் போகின்ற உடல் வலியோடு உருக்குலைக்கும் உள்ளத்து வலியும் சேர்ந்து கொண்டால் தாக்குப்பிடிக்க முடியுமா? நேரம் அதிகாலை இரண்டு மணி என்பதால் தாதிமார் தூங்கி இருப்பார்கள்.

----

வாசலில் நின்று கொண்டு மதுரனின் பெயர் கூறி அழைத்த அந்த தாய்லாந்து குடிவரவு அதிகாரி மதுரனை மேலும் கீழுமாய் பார்த்து விட்டு கடவுச்சீட்டினை காண்பிக்குமாறு கேட்டிருக்கின்றார். மதுரனிடம் கடவுச்சீட்டு இல்லை. ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தால் வழங்கப்பட்ட அகதி ஆவணத்தினை மதுரன் அவ்வதிகாரியிடம் கொடுத்ததும், அதனை உற்று நோக்கிய பின்  தொலைபேசி எடுத்து அழைப்பொன்றை மேற்கொள்ள அது மதுரனின் தொலைபேசிக்குள் நுழைந்து கொண்டது. உறுதி செய்து கொண்ட அந்த அதிகாரி மதுரனை மிக்க மரியாதையாகத்தான் அழைத்துச்சென்றார். கூடவே சென்ற எதற்காக அவரை அழைத்து செல்கின்றீர்கள் என வினவிய நிலாவின் சகோதரனிடம் கடவுச்சீட்டு இல்லை இந்த நாட்டின் குடிவரவு சட்டத்தினை மீறி உள்ளார் அதனால் இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் என்று கூறியவாறு வைத்தியசாலையின் வெளி வாசலுக்கு கொண்டு சென்றதும் அங்கு இரு வெள்ளை மற்றும் கறுப்பின காவல்துறையினர் இவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டு அந்த கட்டிடத்தின் முன்னே வைத்து எல்லோரையும் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் மதுரனின் கையில் இருந்த தொலைபேசி ஆவணங்கள் யாவற்றையும் பறிமுதல் செய்தனர். அந்த இடத்தில் வைத்து மதுரன் அழைத்துச்செல்லப்படும் போது அவனின் மைத்துனனும் கூடவே செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் யாவும் அன்னை கூறும் போது தலை வெடித்த போல கதறத்தொடங்கிய நிலாவினை கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள் அவளின் அன்னை.

இதயம் பாளம் பாளமாய் வெடித்து அதிலிருந்து வெளியேறும்  உதிரம் நிலாவின் கண்களில் இருந்து கண்ணீராய் கொட்டிக்கொண்டிருந்தது. 

----

அரைத்தூக்கத்தில் எழுந்து வந்த தாதி குழந்தையினை பெற்றுக்கொண்டாள். அழுகின்ற பாலகனை பிரிந்து செல்ல மனமில்லாது அங்கேயே நின்று கண்ணாடி வழியாக நோக்கிய நிலா, சிறிது நேரத்தின் பின் சூடான அந்த அறையின் கத கதப்பில் தன் குழந்தை அமைதியாக தூங்குவதைக்கண்ணுற்றதும் தன் இருப்பிடம் திரும்பி நடக்கலானாள்.  

உதவிகள் பெற்று உபத்திரவம் கொடுக்கும் மனிதர்களினை கேள்விப்பட்டதுண்டு. ஆனால் உதவிகள் அடைந்து சத்தமின்றி  உயிரினையே எடுத்து கொள்ளி போடும் மனிதர்களால் தான், பிறந்த பிஞ்சின் முகத்தினை  நின்று நிலைத்து காணாமல் பிரிந்து சென்ற கணவனும் அதனால் பரிதவித்து நிற்கும் தானும்  என்று அப்போது அவள் அறிந்திருக்க நியாயமில்லை.

ஆம்..!
கனடாவின் கரையினை முத்தமிட்ட கடற்சூரியனின் எதிரொலி வருகை இந்த கைது என்பதும் அதனை அரங்கேற்றி வைத்தது உற்ற நண்பன் ஒருவன் என்பதும் பின்னாட்களில் நிலாவிற்கும் மதுரனுக்கும் தெரிய வந்த போது நிலைகுலைந்தே போய் விட்டார்கள். 

அந்த நன்றி மறந்த துரோகிகளுக்கு அன்போடு அன்னமிட்டு அரவணைத்து உயிர் காத்தவன் மதுரன். தமிழன் என்று இரங்கி தன் சோற்றில் பாதி ஊட்டிப்பசியாற்றிய காரணத்தினால் தான் என்னவோ பாதி வழியில் பயணம் தொலைத்து நின்ற மதுரனின் ஆவி பிரித்து மேய்ந்து கொண்டனரோ?

தனக்கு மகன் பிறந்திருக்கின்றான் என்றும் புமிப்பொல் என்ற மருத்துவமனையில் தான் நிற்பதாகவும் தனது நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்து இன்பத்துடன் தன் களிப்பினைப்பகிர்ந்து கொண்ட மதுரனின் நண்பன் ஒருவன் அந்த தகவலை இன்னொருவனுக்கு தெரிவிக்க அவன் கனேடிய காவல் துறைக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைத்திருக்கின்றான். இதில் என்ன வேடிக்கை என்றால் ஏதோ பெரிய புள்ளியினை மடக்குவது போன்று இவ்வளவு ஏற்பாடுகள்  செய்து கைது செய்தமையே. சாதாரண ஒரு அகதியினை கைது செய்ய இந்தளவிற்கு எதற்கு கடினப்பட வேண்டும்? கனேடிய காவல் துறைக்கு இவ்வளவு குறுகிய தூரப்பார்வையா? தொலை நோக்கில் சிந்திக்க முடியாதா?

அவன் ஒரு குற்றவாளி என்றால், கனேடியப்படைகள் அவன் மீது வழக்கினை த்தொடுத்து தண்டனை கொடுத்திருக்க வேண்டும். அல்லது தாய்லாந்து காவல் துறை என்றாலும் இங்கு அவனுக்கு எதிராக குற்றம் சுமத்தி அவனை சிறையில் தள்ளி இருக்க வேண்டும் அல்லவா? இங்கு பல தமிழர்கள் கடன் அட்டை மோசடி மற்றும் திருட்டில் சிக்கி கடுங்காவல் சிறைகளில் தண்டனை அனுபவித்து இலங்கை சென்றதுண்டு. எனவே மதுரன் குற்றவாளி என்றால் அதற்கான தண்டனை வழங்காமல் எதற்காக குடிவரவு சட்டத்தை மீறியதாக குடியேற்ற தடுப்பு மையத்தில் தடுத்து வைக்க வேண்டும்? ஆட்கடத்தல் குற்றச்சாட்டு என்றால் ஐ நாவும் நிச்சயமாக அவனது  அகதிகள் அந்தஸ்தினை நிராகரித்து இருக்கும். இவற்றினை நிறைவேற்றாமல் யாருக்காக அவனைத் தடுப்பு மையத்தில் வைத்திருக்க வேண்டும்?  இதற்கான விடைகள் கனேடிய காவல் துறையினரிடமே இருக்க வேண்டும். அல்லது இல்லாமலும் இருக்கலாம். அடுத்து வரும் பாகங்களில் அதற்கான பதில் இடம்பெறும். 

மதுரனை கைது செய்ததும் அவனை நீதிமன்றில் ஒப்படைத்து குடிவரவு சட்டத்தை மீறியமைக்காக அவனை தடுப்பு மையத்தில் இடுவதாகவும் விரும்பினால் இலங்கை செல்லலாம் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டது. இலங்கை செல்ல முடியாத காரணத்தினால் அவன் தடுப்பு மையம் சென்றான். தடுப்பு மையத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் அடைக்கப்பட்டு இருந்தார்கள். மிகவும் கடினமான ஒரு நிலையில் சிலர் இலங்கைக்கு திரும்பிச்சென்று கொண்டும் இருந்தனர். 


அந்த தடுப்பு மையத்தில் மதியம் ஒரு கவளம் சோறும் முட்டையும் சூப்பும் கொடுக்கப்படும். மாலையும் அவ்வாறே. அந்த உணவினை உண்டு பசியாற முடியாது. தமிழர்களின் முயற்சியும் மூளையும் அவர்களை பசியாற வைத்தது. அவர்கள் அங்கு சமையல் செய்வதற்கு ஒரு வழி வகையினை கையாண்டனர். அதாவது அங்கு மின்சாரத்தினை இரு கரண்டிகள் மூலமாக கடத்தி அக்கரண்டிகளை ஒரு நீர் நிரப்பிய வாளி ஒன்றினுள் அமிழ்த்துவதன் மூலமாக அந்த நீர் சூடேற்றப்படும். ஒரு பொலித்தீன் பையினுள் தேங்காய்ப்பால் பொரித்த மீன் அல்லது கோழி இறைச்சி, தூள் , உப்பு (இவை யாவும் அங்குள்ள காவல் துறையின் கடையில் பலமடங்கு விலையில் விற்கப்படும்.) போன்றன இடப்பட்டு நன்கு மூடிக்கட்டிய பின் அந்த கொதிக்கும் நீரில் இடப்பட்டு அது அவிந்த பின் வெளியே எடுத்துக்கொள்ளுவார்கள். இது அதிகாலை மூன்று அல்லது இரண்டு மணிக்கு விழித்திருந்து செய்யப்படும். இவ்வாறு கறியினை சமைத்து மதியம் கொடுக்கப்படும் அந்த சோற்றோடு சேர்த்து உண்டு வந்தனர். இது ஆண்கள் உள்ள மூன்றாம் இலக்க அறையில் தான் சாத்தியமானது. பெண்களுக்கு அதே சூப்பும் சோறுமே. 

ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி அகதிகள் அல்லாத வியட்னாம், கொரியா ,ஆபிரிக்க நாட்டவர்கள்  மற்றும் ஐரோப்பிய நாட்டவர்களும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாவரும் நிரந்தரமாய் அங்கு இருப்பதில்லை. தம் நாடுகளுக்கு சென்று விடுவார்கள். 

மூன்று நாட்களுக்கு ஒரு முறை மைதானம் என்ற அடைபட்ட வெளிக்குள் எல்லோரும் கீழே இறக்கப்படுவார்கள். அங்கு தொலைபேசி அழைப்புக்கள் வெளியிடங்களுக்கு அழைக்க முடியும்.தொண்டை கிழிய வயிறு நோக கத்திக்கதைத்தாலும் மெதுவாக கேட்கின்ற அந்த தொலைபேசி இயந்திரங்கள் பல ஆண்டுகளாக அதே நிலையில் தான் இருக்கின்றன.  ஒரே ஒரு  நல்ல இயந்திரம் உண்டு. அதிலும் நூற்றுக்கணக்கானோர் அதில்  வரிசையில் நின்று அழைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும். ஒன்றரை மணித்தியால இடைவெளியில் வரிசையில் நின்றாலும் அழைப்பு எடுக்க முன்னரே நேரம் முடிந்து அறைக்கு திரும்பிச் செல்லும் அனுபவம் அங்குள்ள பலருக்கு உண்டு. 

ஈழத்தில் மட்டுமே தமிழர்களுக்கு துன்பம் என்று இல்லாமல் உலகமெங்கும் துன்பத்தினை பங்கு போட்டு எழுதி வைத்த இறைவனுக்கு என்ன வன்மம் தமிழர்கள் மீது?? 

நாட்டுப்பிரச்சினை , இனவாதம் என்பவற்றை  உணரத்தெரியாத அன்றி அறிந்து கொள்ளத்தெரியாத மக்கள் வாழும் தேசம் இது. தங்கள் நாட்டிற்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்ற ஒரு மட்டமான எண்ணம் கொண்டு கேவலமாய் நோக்கும் தடுப்பு மைய காவல் துறையினருக்கு எம்மினத்தின் தொன்மையும் வரலாறும் தெரிந்திருக்க நியாயம் இல்லை தெரிந்து கொண்டாலும் விளங்கிக் கொள்ளப்போவதுமில்லை.

தொடரும்....


அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 



அடுத்த பதிவிற்கு செல்ல
http://arasikavithaikal.blogspot.com/2014/02/mv-sunsea-6.html

No comments:

Post a Comment