Search This Blog

Sunday 26 January 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 4 )

குறிப்பு : இந்த தொடரின் பாகம் நான்கும் வெளிவருகின்ற இந்த ஒரு வார கால இடைவெளியில் மதுரன் இதுவரை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லை. கடும் பிரயத்தனத்தின் மத்தியில் இரு நாட்களுக்கு முன்னர் எடுத்துச்செல்லப்பட்ட மதுரனை வைத்தியர் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அதாவது இரத்தத் அழுத்தம் ,இதயத்துடிப்பு போன்ற அடிப்படையான சோதனைகளை மேற்கொள்ளாமலேயே சில மாத்திரைகளை வழங்கியுள்ளார். ஒருவரின் உடல் பலவீனமாக இருக்கும் போது அவரின் நாடித்துடிப்பினை தன்னும் சோதிக்க முற்படாமல் மாத்திரை வழங்கும் அளவிற்கு காவல் துறையினர் வைத்தியருடன் பேசிக்கொண்டதாகவும் மருத்துவமனை செல்லும் வழியில் இணையத்தில் செய்தி இடப்பட்டது தொடர்பாக மிரட்டப்பட்டது எனவும் தெரிவித்த மதுரனால் இன்று தனது ஒரு கரம் செயல் இழந்திருப்பதாக தெளிவின்றிய குரலால் தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன் அவர் தெரிவித்த இங்கு எழுத முடியாத பல உடல் நிலை அறிகுறிகளை கொண்டு அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிய முடிகின்றது. தனக்கு அச்சுறுத்தல் என்று வெளியேறி தப்பித்து வந்த ஈழத்திற்கே சென்று இறக்க விரும்புவதாக மதுரன் கதறுவதிலிருந்து அவனது உடல்நிலை எவ்வாறான நிலையில் உள்ளது என்பதனை விளங்கிக்கொள்ள முடிகின்றது . 

அத்துடன் இந்த தொடர் எழுதும் வரை  இந்த தொடரில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பல மிரட்டல்கள் வந்துள்ளன. ஒரு வேளை இதனை தொடர்ந்து எழுத முடியாத சூழ்நிலைக்குள் சிக்குண்டால் அதாவது  இந்த தொடரின் அடுத்த பாகங்கள் தொடராமல் போனால் மன்னித்துக்கொள்ளவும். ஆனால் பாதுகாப்பினை உறுதி செய்தபின் மீண்டும் நிச்சயமாக தொடரப்படும். இந்த தொடர் இணையத்தில் பிரசுரிக்க முற்பட்ட நோக்கமே மதுரனின் நிலைக்கும் அங்குள்ள ஏனைய ஈழத்தமிழ் உறவுகளுக்கும் தமிழ் அமைப்புக்கள் குரல் கொடுத்து அவர்களின் வெளியேற்றத்தினை விரைவாக்கிட சம்பந்தப்பட்ட அமைப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்கேயாகும். 

ஆனால் ,இந்தக்கட்டுரையின் முதல் பாகத்தில் குறிப்பிட்ட காவல்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன தாதியின்  குற்றச்சாட்டுக்களை அதாவது தமிழில் எழுதியதை மொழிபெயர்த்து தடுப்பு மையத்தில் உள்ள காவல்துறையினருக்கு காட்டிக்கொடுத்த தமிழர்கள் இருக்கும் பாங்காக் குடிவரவு தடுப்பு மையத்தில் இருந்து பல தமிழ் நெஞ்சங்கள் இந்த தொடருக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அங்கு அநியாயம் புரியும் தன்னார்வ நபர்களின் பெயரினையும் வெளியிட்டு தம் அவல நிலையினையும் தொடர்ந்து எழுதுமாறும் கேட்டுக்கொண்டு வருகின்றார்கள். 

காட்டிக்கொடுத்த அந்த நல்ல உள்ளங்களுக்கு மதுரனின் மேல் முன் விரோதமோ பகையோ இல்லை. காவல்துறையினரை கைக்குள் போட்டுக்கொண்டால் தமக்கும் ஏதாவது சலுகை கிடைக்கும் என்ற அற்ப நோக்கமே. இவர்கள் யாவரும் இலங்கை தடுப்பு முகாமில் இருந்து வெளியேறுவதற்காக எத்தனை போராளிகளை காட்டிக்கொடுத்து இங்கு அடைக்கலம் புகுந்தார்களோ..?  அது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.


பாகம் நான்கு தொடர்கின்றது..........


கடற்சூரியனால் நல் வாழ்வினைத்தொட்ட முன்னாள் தாய்லாந்து வாசிகள் இங்குள்ள தமிழர்களை மட்டுமல்ல தாய்லாந்தின் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தினையும்  விட்டு வைக்கவில்லை.

கனடாவிற்கு கப்பலில் சென்று இறங்கியவர்களில், ஏற்கனவே தாய்லாந்தில் ஐ நாவால் அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள், மற்றும் மீள் குடியேற்றத்திற்காக மூன்றாம் நாடுகளின் நேர்முகத்தேர்வுகளை எதிர்நோக்கியவர்களும் அடங்கி இருந்தனர். கனடாவில் வழக்கு கொடுக்கும் போது  அவர்கள் அங்கு ஐ நாவினை குற்றம் சுமத்தி வாக்கு மூலம் கொடுத்திருக்கின்றார்கள். அதாவது ஐ நா தம்மை கவனிக்கவில்லை என்றும் அவர்கள் தம்மை  கைவிட்டதாலேயே  கப்பல் ஏறி வந்தோம் என்றும் திரிபு படுத்தி கூறியிருக்கின்றனர்.உண்மை அது அல்ல. அந்தக்காலப்பகுதியில் ஏனைய நாடுகளினை விட ஈழத்தமிழ் அகதிகளே இங்கு செறிந்து காணப்பட்டனர். இப்போது போல் அல்லாது அன்று உடனுக்குடன் அகதியாக அங்கீகரிக்கப்பட்ட நிலை காணப்பட்டது.காத்திருக்க முடியாமல் அவசரப்பட்டு சென்ற அவர்களின் பேராசையினை மறைத்து ஐ நாவில் குற்றம் சுமத்தி அதன் மேல் கறையினை பூசி தமிழர்களுக்கும் அவமதிப்பை ஏற்படுத்திக்கொடுத்தனர். அவர்கள்   வழங்கிய பொய்க் குற்றச்சாட்டுக்களினால் , தாய்லாந்தில் உள்ள ஐ நாவின் அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் நேரிடையாகவே இங்குள்ள  தமிழ் மக்களை நோக்கிக் கேள்வி எழுப்பியது...??? இன்று வரை ஒரு வித மனக்கசப்பில் ஐ நா உள்ளதற்கு காரணம் கப்பலில் சென்ற தாய்லாந்து அகதிகளின் பொய்யான வாக்கு மூலமே..!

கடற்சூரியனின் தொடுகையின் பின்னர் தாய்லாந்தில் தமிழர்களின் நிலை ஐ நாவில் ஒருவித மதிப்பற்ற தன்மையில் தொடர்ந்தது. தாய்லாந்து அரசிற்கு கனேடிய அரசு அழுத்தம் கொடுக்கும் போது , நிச்சயம் தாய்லாந்து அரசானது ஐ நாவினை நோக்கி வினா எழுப்பாமல் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் தாய்லாந்து நாடானது ஐக்கிய நாடுகளின் அகதிகள் சட்டத்திற்கு அமைவான நாடல்ல. அது அகதிகளை ஏற்றுக்கொள்ளாத ஒரு நாடு. தங்கியிருக்கின்ற அகதிகள் யாவரையும் சட்ட விரோத குடியேறிகளாகவே நோக்குகின்றது. எனவே அகதிகள் என்று வந்தவர்கள் கப்பல் ஏறிச்சென்றதால்  தாய்லாந்து அரசு ஐ நாவினை முறைத்துக்கொண்டதோடு, அகதிகளையும் அணைத்துத்தன் இறுக்கமான சட்டத்தில் கட்டி வைத்துக்கொண்டது.

பாகிஸ்தான், வியட்னாம் இந்தியா ,சோமாலியா, கம்போடியா என்று பல நாட்டு அகதிகள் தாய்லாந்தில் தஞ்சமடைந்திருக்கும் நிலையில் ஈழத்தமிழர்கள் சாட்டிய குற்றத்தால் தலை குனிந்து செல்லும் நிலை இங்கிருந்த மீதித் தமிழர்களுக்கு ஏற்பட்டது. அதை விட ஓரளவு நடமாடி திரியும் நிலையில் இருந்தவர்கள் வீதியில் இறங்கிசெல்லவே அச்சப்பட்டனர்.

ஆம்.! எந்நேரமும் கனேடியப்படைகள் மாறுவேடத்தில் அங்காடிகள் எங்கும் ரோந்தில் அலைந்தன. தமிழனின் முகம் தென்பட்டாலோ அன்றி தங்கி இருக்கும் விடுதிகளில் ஆண்கள் அணியும் "சாரம்" தொங்கினாலோ நிச்சயம் தடுப்பு மையம் அவர்களை வரவேற்கும் நிலை காணப்பட்டது. இது இலங்கையில் இந்திய இராணுவத்தின் அட்டுழியம் நடந்தேறிய போது இடம்பெற்ற சம்பவங்களை மீட்டிச்சென்றது. சாரம் துவைத்து காயப்போட்டால் அங்கு சன்னம் பதம் பார்ப்பது போன்று இங்கு சாரம் தென்பட்டால் காவல் துறை பாயும்.

அது மட்டுமன்றி , தகவல் கொடுத்து உதவிடச் சொல்லி தாய்லாந்து  வாழ் மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது. எவ்வாறு என்று தெரியுமா? வழமையாக ஒரு குற்றவாளியினைக்  கண்டு பிடிக்கவே துண்டுப்பிரசுரம் அச்சடித்து விநியோகிப்பார்கள். ஆனால் இங்கு "ஸ்ரீலங்கன் " என்று தாய் மொழியில்  அச்சடித்து கனேடியப்படைகள்  புறநகர்ப்பகுதிகளில் விநியோகித்து எச்சரிக்கை விடுத்து வைத்திருந்தனர். கனேடியப் பத்திரிகை காரர்களும் தமிழர்களை மோப்பம் பிடித்து அலைந்து திரிந்து நேர்காணல்களை நடாத்தினர்.

இவற்றினை விட பாங்காக் நகரில் உள்ள ஐ நா அகதிகள் மையத்தில் கனேடியப்படைகள் தமது முகவரி தொலைபேசி இலக்கங்களை கொண்ட அட்டைகளை வழங்கி தமக்கு தகவல் வழங்கும் படி விளம்பரப்படுத்தியதுடன், அவ்வாறு தகவல் கூறியவர்களுக்கு சன்மானமாக பணமும் கொடுக்கப்பட்டது தகவல் உண்மையா பொய்யா என்பதனை உறுதிப்படுத்தாமலேயே.


பணம் என்றால் பிணமே வாய் திறக்கும் போது உயிருள்ள நமது நல்ல மக்கள் என்ன செய்வார்கள்.? தமக்கு பிடிக்காதவன் , எதிரி என்று சிலரின் பெயர்களை கொடுத்து பணம் பெற்று விலை உயர்ந்த மடிக்கணினி , புகைப்படக்கருவி என்று தம்மை வளம்படுத்திக்கொண்டவர்களும் அதிகம். சாதாரண மக்களின் பொய்யான வாக்கு மூலமே உண்மையாகும் போது ஒரு தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்பாளரின் அதுவும் பாங்காக் அகதிகள் மையத்தில் கடமையாற்றும் ஒரு மொழி பெயர்ப்பாளரின் தகவல் எத்தகைய அலைகளை உருவாக்கும் என்பதனை மதுரனின் தற்போதைய நிலை விளக்கும்...!

மதுரனுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வது எந்தளவு உயிரானதோ அந்தளவு தமிழ் கலாச்சாரம் , பண்பாடுகளைப் பேணுவதிலும் உயிரானவன்.  பதின் நான்கு வயதில் வீட்டுக்குள் அடங்காமல் அடங்காப்பற்று வன்னியில்   அடி பதித்து வந்தவனன்றோ..?

தாய்லாந்தில் போருக்குப்பின்னரான காலப்பகுதியில் அடக்கி வைக்க யாருமற்று தறி கெட்டுத்திரியும் சில கட்டாக்காலி மனிதர்களை எச்சரிப்பதும் எல்லோருக்கும் அதனை வெளிப்படுத்துவதுமாய் கலாச்சாரம் பேணி வந்த மதுரனின் செயற்பாடுகளால் மனதில் வக்கிரம் வளர்த்து வந்த சில  ஊர் மேயும் மனிதர்கள் சந்தர்ப்பத்தை சரியாகப்பயன் படுத்தி தொடர்புகள் கொடுத்துச்சென்ற கனேடியப்படைகளிடம் இல்லாத உண்மைகளையும் அள்ளி வழங்கி, இருக்கின்ற பொய்களை இனாமாகவும் போட்டுக்கொடுத்தனர்.

கப்பல் கரையினைத்தொட்ட அந்த 2010 காலப்பகுதியிலும் அதற்குப்பின்னும் பெருமளவிலானோர் வீதிக்கு வெளியே சென்று வர அச்சமடைந்து இருந்தபோது ஒரு சிலர் எவ்வித அச்சம் இன்றி தங்கு தடையின்றி வீதிகள் எங்கும் உலா வந்தனர். நன்றாக கனேடிய அரசிடம் கறந்து கடன்களை அடை த்துக்கொண்டனர். முதலில் இது பற்றி அவ்வளவாக நிலாவோ மதுரனோ நம்பிக்கொண்டதில்லை. பின்னாளில் அதாவது 2012 இற்கு பின் நேரடியாக கனேடிய காவல் துறையின் அள்ளிக்கொடுக்கும் மனப்பாங்கை கண்ணுற்று விக்கித்து நின்றனர் இருவரும். (இதன் விளக்கம் தொடரும் தொடர்களில்..)

ஒன்றாகவே வாழ்ந்து , நண்பர்களாய் கை கோர்த்து திரிந்தவர்கள் காட்டிக்கொடுப்பை நிகழ்த்தி தம்மை தாமே தாழ்த்திக்கொண்டனர். கனேடிய காவல் துறையின் சலவையில் நன்றாக துவைக்கப்பட்ட எம்மவர்களின் மூளைகள் கனேடியர்களைப்போன்று வெளிறி விட்டதால் நினைவுகளும் வெளிறி பழகிய நட்பு பாசம் யாவும் வண்ணத்தை இழந்து கொண்டன. இடுப்பில் சொருகிய பணத்தோடு  இளித்துக்கொண்டர்.

ஈழத்தில் இவ்வாறான செயற்பாடுகளும் மனிதர்களும் மதுரன் ஈழத்தில் வாழ்ந்த காலப்பகுதியில் இருந்திருக்கவில்லை. எனவே இங்கு இவ்வாறான மனிதர்களும் செயல்களும் அவனுக்கு புதியதே. அதனால் அவன் வெகு விரைவாக குழியில் தள்ளி விழுத்தப்பட்டான். சுதாரித்துக்கொண்டு எழுந்திருக்க முடியாமல் போனமைக்கு காரணம் தன்னை விட அதிகம் நம்பிய தோள் மேல் கை போட்டு நடந்து வந்த தோழனின் கைகளாக அவை இருந்து விட்டமையால்.  

ஆம்..!
கனடாவில் பெற்றுக்கொண்ட மதுரனின் தகவல்களைக்கொண்டு தாய்லாந்தில் மதுரனை வலை வீசித் தேடிக்களைத்துப் போன கனேடியப்படைகள் மதுரனின் நண்பர்களை விலை பேசிக்கொண்டது. மதுரன் எங்கும் தலை மறைவாகிடவில்லை. குற்றம் புரிந்தால் அன்றி எதற்கு அச்சப்பட வேண்டும். எல்லோரையும் போன்றே ஒரு சட்ட விரோத குடியேறி என்ற நிலை தாண்டி அவன் வேறு ஒரு குற்றமும் புரிந்திருக்கவில்லையே. தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டால் நிறை மாதக்கர்ப்பிணியான நிலா நிர்க்கதியாகி விடுவாள் என்று பாதுகாப்பாக இருந்தானே தவிர ஓடி ஒளிந்திருக்கவில்லை.

கனேடியப்டைகளுக்கு பணத்தை வீசி எறியாமல் துப்புத்துலக்க துப்பில்லை என்பது மதுரனின் விடயத்திலிருந்து அறியப்பட்ட அப்பட்டமான உண்மை. வல்லரசுகளும் மேலைத்தேய அரசுகளும் தீவிரவாதியை சுட்டுக்கொல்கின்றேன் என்னும் பேர்வழியில் எதனை அரங்கற்றினாலும் அங்கு பணம் கொடுத்த மனித விலைப்பொருட்கள் நிச்சயம் தம் பங்களிப்பினை ஆற்றி இருக்கும். வல்லரசு  மனித மூளை யாரை வாடகைக்கு அமர்த்தி காட்டிக்கொடுப்பை வேண்டிக்கொள்ளலாம் என்று தான் சிந்திக்கும். தமிழ் ஈழத்து மூளை போன்று பம்பரமாய் சுழன்றடித்து தனித்து இயங்குவதில்லை. தமிழ் ஈழத்து புலனாய்வாளர்களின் காலின் தூசிக்கு எவரும் சமனாக நிற்கப்போவதில்லை.  இந்த இடத்தில் அதற்காக நான் பெருமிதம் கொள்கின்றேன்.

கிட்டத்தட்ட மூன்று மாத காலத்திற்கு முன்னரே  கனேடிய விசுவாசி ஆன மதுரனின் நண்பனால் மதுரனோடு ஒட்டி உறவாடுவதைப்போன்று அந்த காலப்பகுதியில் எப்படி நடிக்க முடிந்தது? என்று எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.அன்னம் பரிமாறிய நிலாவின் கைகளை நினைத்துக்கொண்டானா அன்றி துக்கத்தில் ஓடி வந்து அணைத்துக்கொண்ட மதுரனின் கைகளை யாவது நினைத்தானா?  பணம் கொடுத்தால் தன்னையும் வெட்டிக்கொல்ல அனுமதிப்பான் போலும்? இப்படியும் மனிதர்களா? இருக்கத்தான் செய்கின்றார்கள். நிச்சயம் நம்பித்தான் ஆக வேண்டும். அந்த நண்பனின் இல்லை நண்பனைப்போன்று நடித்தவனின் முகத்திரை கிழிந்தும் இன்றுவரை அவனை நம்ப நினைக்கும் உள்ளம் கொண்டவனே மதுரன்.

வைத்தியசாலையில் மதுரனின்  முதல் குழந்தை பூமித்தாயவளை   முத்தமிட்டதை  நண்பர்களுக்கு ஆனந்தமாய் மதுரன் பகிர்ந்து கொண்ட அந்த முத்தான தகவலே  தன்னைக்கம்பிச்சிறைக்குள் தள்ளி விழுத்தும் என்பதனை அவன் அந்த இன்பப் பொழுதில் அறிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை.



தொடரும்.............

ஒரு சிறிய குறுந்தகவல் வழங்கிய தமிழன் ஒருவனால் குழந்தை முகம் பார்த்த  சில மணிகளில் குழந்தையினருகே வைத்து கைது செய்யப்பட்ட மதுரனின் தடுப்புக்காவல் அத்தியாயம் அடுத்த பாகத்தில் தொடர்கின்றது..... 



அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 



அடுத்த பதிவிற்கு செல்ல 
http://arasikavithaikal.blogspot.com/2014/01/mv-sunsea-5_31.html

No comments:

Post a Comment