Search This Blog

Thursday 1 May 2014

உழைப்பு..!!!


எட்டுமணி நேர உழைப்பு அல்ல
என்றுமே உழைக்கின்ற களைப்பிற்கு
ஆசுவாசமாய் உட்காரவும் முடியாது...!

ஓட்டம் என்றுமே  போராட்டமே..!
வாட்டம் கொண்டாலும் - வாழ்க்கை
ஆட்டம் கண்டாலும்  போராட்டமே...!

திண்டாட்டம் தினம் தினம் - இறை
மன்றாட்டம் கொண்டு போராட்டம்...!

துன்பங்களுக்கு எதிராய் உழைப்பு
துயில் கொள்ள முடியாத உழைப்பு...!

உயிர் பிழைப்பு வேண்டி எதிர்த்து உழைப்பு...!
அதிகார வர்க்கம் திணிக்கும் அநீதிக்கு எதிராய் உழைப்பு...!
ஆங்காங்கே முளைக்கும் துரோகங்களை முறியடிக்க உழைப்பு..!

அந்தி சாய்ந்தாலும் ஓய்வில்லை...!
அகால வேளையில் இளைப்பாற
துயரங்கள் விடுவதில்லை....!
துள்ளி வந்து உள்ளமதில் இடம் பிடித்து
ஊஞ்சல் ஆடி மகிழும் அவை
ஊமையாய் நித்தம் அழ வைக்கும்...!


சேற்றில் கால் வைத்து உலகிற்கு  உணவு
சேமித்து உலை வைக்க திண்டாடும் உழவர் பெருமக்களின்
வலிகள் என்றும் வற்றிப்போவதில்லை....
வறண்ட நிலத்தில் உறிஞ்சப்படும் நீரைப்போன்று
வயல்வெளிகள் உறிஞ்சிக்கொள்கின்றன உழைப்பினை...!

விதம் விதமாய் காய்கறிகள்
முத்து முத்தாய் நெல்மணிகள்
வித்து வீடு வந்தாலும்
பத்து காசு மிச்சமில்லை...!

உடலை உருக்கி வேலை வாங்கி
உயிர் போகும் வரை தொழிலாளியாக்கி..
உலகில் வாழும் முதலாளிகள் வீசி எறியும் பணம்
உன்னத தொழிலாளிகளின் உழைப்பில் உருவானது -இந்த
உண்மையினை ஏற்க மறுக்கும் ஒவ்வொருவரும்
உழைப்பாளியின் உதிரம் உறிஞ்சுபவர்களே..!

உதிரம் குடிக்கும் பூச்சிகள் அதிகமாகி
உழைப்பாளிகள் உயிரற்று போகும் நிலையும்
தொழிலாளர் தினத்தில் மட்டுமே
தொழிலாளர் துன்பங்களை நினைப்பவர்களாய்
தொலைத்து நிற்கின்றோம் மனிதாபிமானத்தை...

தொழிலாளர் இன்றிய உலகம்
தொலைந்து தான் போய் விடும்...!
தொழிலாளரை மதிப்போம்...!
தொழிலாளரை காப்போம்..!
தொழிலாளர் தினத்தில் மட்டுமல்ல
தொன்மை காப்போம் என்றும்...!


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "உழைப்பு" என்ற தலைப்பில் இன்று (01.05.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

No comments:

Post a Comment