Search This Blog

Thursday, 8 May 2014

வேதனை....!!!தோணியினை நம்பி ஆழியில் பயணம்..!
தோற்றுப்போன பயணம் நடுக்கடலில் தத்தளிக்க 
நா வறண்டு கத்தி விக்கி கடலில் சிக்கி 
நாதியற்று நின்ற உயிர்களில் இவளும் ஒன்றானாள்...!

என்ன நடக்கின்றது என்பதை அறியாத பிஞ்சு மகள்...!
கடலுக்குள் ஆழம் அதிகம் என்றறிந்த இவள் - எம்மின 
கண்ணீர் அதை விட ஆழம் என்று அறியாதவள்...!

உடன் பிறந்தவளை கதற கதற பிரிந்து வந்தவள்...!
உண்மை பொய்யால் சிறை பிடிக்கப்பட்டதும் 
உலகம் எங்கும் அகதியாகி தமிழினம் அலைவதும் 
உயிர் பிழைப்பு தேடி கடல் கடப்பதும் விளக்கினாலும் 
உணர்ந்திட தெரியாத பச்சை மண் இவள்...!


ஆனாலும் இவள் 
ஆங்கோர் சிறையில் அடைபட்டு வதைபடுகின்றாள்...!
ஆண்டுகள் இரண்டு கடக்க அவசரப்படுகின்றது...!
ஆயிரம் மைல்கள் தாண்டி தவித்திருக்கும் அன்பு மகள்..!

அடிக்கடி நோய்த்தொற்றும் 
அளவு சாப்பாடும் கொண்டு 
அடைத்து வைக்கப்பட்ட இவள் 
அடைந்து வரும் வேதனை எழுத்தில் 
அடக்கிட முடியுமோ??

கல கல மழலை மொழி பேசி 
கவலைகள் மறக்க பண்ணும் தேவதையின் 
துயரங்களை யார் களைவார்கள்..???
அனல் அடிக்கும்  தேசமதில் 
அலுமினிய துகள் பறக்கும் துறைமுக வளாகத்தில்  
அந்த அசுத்த காற்றினை சுவாசிக்கின்றாள் 
ஆண்டுகள் இரண்டாக....

அகதி என்ற காரணம் கொண்டு 
அடைக்கப்பட்ட சின்னஞ்சிறு பாலகியின் 
அளவில்லா வேதனையே உலகில் 
அதிகமான வலி மிகுந்தது...!

எதையும் அறிந்து கொள்ள முடியாத 
அகவை மூன்றை கடந்தவளுக்கு
வேதனை என்பதை மட்டும் உணர 
முடிகிறதென்றால் அது எத்தனை 
கொடுமையான வேதனையோ???

கொடிது கொடிது இளமையில் வறுமை என்றஅவ்வை 
கொடுமையிலும் வேதனை மழலையில் சிறை என்ற 
இவளின் வேதனை கண்டு கவி எழுதுவதை கைவிட்டிருப்பார் 
இதயம் கனத்தால் அழுத்துகின்றது அகம் சிரித்து முகம் மலரும் 
இவள் அல்லல்படும் வேதனை அறிந்து....

மருந்தும் இல்லை உனக்கு விருந்தும் இல்லை
மரத்துப்போன ரொட்டியை அசைக்க பற்களும் 
வலிமை பெறவில்லை 
வழியற்று தவிக்கும் தந்தை முகம் தடவி 
ஆறுதல் உரைக்கும் அன்புக்கடவுள் இவளின்  
ஆற்ற முடியா வலிகளை யார் துடைப்பார் 
ஆறாய் பெருகும் கண்ணீரை தவிர வேறென்ன 
கொடுக்க முடியும் எம்மால்...??

என்ன குற்றம் இழைத்தாள்...?
எதற்காக சிறை வாசம்...?
எத்தனை முறை சிந்தித்தாலும் 
எதுவும் புலப்படவில்லை....!

தமிழ் தாயின் வயிற்றில் கருவானது குற்றமோ??
தமிழ் தேசம் தன்னில் பிறந்தது குற்றமோ..?
தரணி என்னும் நாமம் கொண்டவளுக்கு இந்த
தரணியில் ஒரு இடம் இல்லை உறங்கிட....
தங்கமே தரணி உந்தன் புன்னகை வதனம் கண்டாலும் 
தவிக்கின்றது உள்ளமம்மா...தரணி எங்கும் உறவுகள் இருந்தும் 
தண்ணீர் அள்ளிட வாளி இல்லை 
தலை துவட்டிட துணி இல்லை...
செல்வந்த நாடு ஒன்றில் 
செல்லரித்து வாழும் இவள் வேதனை 
சென்றிடுமா விரைவில் இவளை நீங்கி...லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "வேதனை" என்ற தலைப்பில் இன்று (08.05.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

  


1 comment:

 1. தரணி எங்கும் உறவுகள் இருந்தும்
  தண்ணீர் அள்ளிட வாளி இல்லை
  தலை துவட்டிட துணி இல்லை...
  செல்வந்த நாடு ஒன்றில்
  செல்லரித்து வாழும் இவள் வேதனை
  சென்றிடுமா விரைவில் இவளை நீங்கி.. வரிகள் அனித்தும் அருமை அக்கா,,,வேதனையின் உச்சத்தை உள் வாங்கி கொண்டீர்கள் உங்கள் வரிகள் மிக்க அருமை

  ReplyDelete