Search This Blog

Sunday 18 May 2014

சிந்துகின்ற கண்ணீரும் செந்நீரும் நாம் அரவணைக்கும் கரங்களால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்...!!!


உதிரமும் கண்ணீரும் கலந்து சகதியான மண்ணில் சரித்திரம் படைத்துச்சென்ற பேரழிவுகளின் ஐந்து வருடங்கள் விரைவாக உருண்டோடி விட்டது. செந்நீரும் கண்ணீருமாய் நிரம்பி வழிந்த தாயக தேசம் இன்று  உயர் ரக நெடுஞ்சாலைகளும்  புகையிரத கடவைகளுமாய் உருமாறிப் போய் விட்டது. மக்கி மண்ணோடு மண்ணாகிப் போன உறவுகள் மற்றும் ஆங்காங்கோ காணாமல் போனவர்கள் என குறைந்து போன இனத்தின் நினைவினை வாரி வழங்கும் சான்றுகளாக  இன்னும் அங்கே கண்ணீர் வடிக்கும் உறவுகள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஒவ்வொரு வருடமும் கோலாகலமாய் மண்டபம் ஒழுங்கமைத்து, விளக்கேற்றி, மாலையிட்டுக் கண்ணீர் சிந்தி இலட்சக்கணக்கில் பணத்தினை வாரி இறைத்து உலகம் பூராவும் அஞ்சலி செலுத்துகின்றோம். இதனை உயிர் துறந்தவர்கள் அறிந்திடப்போவதில்லை. உயிரற்றுப் போனவர்களால் தினம் தினம் வாழ்வினை நகர்த்த முடியாமல் போரின் எச்சங்களாக எஞ்சி அந்த இறுதி நாட்களை கண் முன்னே கொண்டு வரும் உறவுகள் இன்னமும் அங்கு இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஆம்...!
இறுதி யுத்தமதில் கண்முன்னே கணவனை இழந்த கைம்பெண்கள், மகனை இழந்த தாய் தந்தையர்கள், தாய் தந்தையினை இழந்த குழந்தைகள், அண்ணாவை அக்காவை என்று குடும்பத்தின் மூலாதார உறுப்பினர்களை இழந்து இன்று தமது அன்றாட சீவனத்திற்கு கூலி வேலை செய்தும், கல்வி கற்க வேண்டிய குழந்தைகளை வேலைகளுக்கு அனுப்பியும் கரடு முரடான முட்கள் நிறைந்த வாழ்க்கைப்பாதையில் பயணிக்கும் எத்தனையோ எத்தனையோ உறவுகள் போரினால் தமது வாழ்வாதரத்தை மட்டுமல்ல தமது அங்கங்களையும் இழந்து தவிப்பது கொடுமையிலும் வேதனை.

அன்றாடத்தேவைகளை நிவர்த்தி செய்திடப் பெரும் பாடுபடும் அவர்களுக்கு செயலிழந்த அங்கங்கள், எறிகணையின் சிதறல்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் துளைத்த உடற்பாகங்கள் கொடுக்கும் அளவில்லாத வேதனைகளும் வலிகளும் அனுபவித்து உணர்ந்தாலன்றி எழுத்தினில் விளக்கிட முடியாது. 
இலட்சம் இலட்சமாக பணத்தைக் கொட்டி மண்டபம் ஒழுங்கமைத்து, உணர்வான பேச்சுக்கள், கவிதைகள் மற்றும் நாடகங்கள் என்று நாம் நிகழ்வுகளை அரங்கேற்றி, விளக்கேற்றி அணைப்பதால் இந்த உறவுகளின் வேதனை ஒருபோதும் துடைக்கப்படுவதில்லை.


ஒட்டுமொத்த உலகமே கண் மூடி இருந்த அந்த நாட்களில்  மொத்தமாய் படுகொலையான எங்கள் உதிரத்து உறவுகள் இனி உயிருடன் எழுந்து வந்திடப்போவதில்லை. ஒரே  நாளில் ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலையானதற்கான  காரண கர்த்தாக்களை தேடி, கொடி  பிடித்து, கோசம் போட்டே நாம் காலத்தைக் கடத்தி வந்த இந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் மெல்ல மெல்ல மரணித்துக்கொண்டிருக்கும் எத்தனையோ உறவுகளின் சமாதிகளை நாம் அறிந்திட வாய்ப்பில்லை. 

அங்கே ஒரு பிடி சோற்றுக்கு மடிப்பிச்சை ஏந்தும் எங்கள் உறவுகள் கவனிப்பாரற்று மடிந்து போவது ஏன் இன்னும் எங்கள் அறிவிற்கு புலப்படவில்லை. உலகம் கண் மூடி மெளனம் காத்த கொடும் செயலை நாமும் இப்போது அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றோம்  அல்லவா?  

எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா...? என்ன செய்து இருக்கின்றோம்? ஒன்று பட்டு நாம் எழுந்து அவர்களுக்கு வாழ்வாதாரங்களைப் பெற்றுக்கொடுத்தோமா? கண்ணீரை துடைத்து விட கரங்களை கொடுத்தோமா? மடிந்தவர்களை கேட்டு காணாமல் போனவர்களை கேட்டு தமக்குத்தாமே போராடிப் போராடி சலித்து விழுந்து கிடக்கும் அவர்களுக்கு நாம் இங்கே எழுப்பிடும் கோசங்களும் அஞ்சலிகளும் கறிக்குதவாத ஏட்டுச்சுரைக்காய்களே..! 

ஒவ்வொரு வருடமும் மிக்க வலியோடு கடந்து செல்லும் இந்நாட்கள் மிகவும் ஏமாற்றமாகவும் நீங்கிச்செல்வதுண்டு. அந்த 2009  இற்கு பின்னர் தன்னலமற்று யாராவது எம் உறவுகளை கை தூக்கி விட முன் வர மாட்டார்களா? எம் உறவுகளின் கண்ணீர் துடைக்க யாராவது முன் வர மாட்டார்களா? கடந்து போன நான்காண்டுகளும் பதிலற்றுப் பறந்து சென்றிட 
இந்த ஆண்டு தக்க பதிலோடு மெல்லக் காலடி எடுத்து வைக்கின்றது.

வினாக்களுக்கு பதிலளித்து, உறவுகளின் கண்ணீரையும் துயரங்களையும் துடைத்து எறிந்திட முளைத்து வேர் விட்டு கிளை பரப்பி வானளவாய் உயர்ந்து நிற்கின்றது ஒரு ஆல விருட்சம்.

ஆம்...!
இறுதிப்போரில் பாதிக்கப்பட்டு  அலைந்து திரிந்து, கடல் தாண்டி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உள்ளம் ஒன்று உதவும் உள்ளங்களை முகநூலில் இணைத்து உருவான "உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்" ஒரு மாத கால இடைவெளியில் இறுதிப்போரில் அவயங்களை இழந்த இரு உறவுகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை மற்றும் வாழ்வாதரமான தொழில் வாய்ப்பினை உருவாக்கி கொடுத்ததுடன் இறுதி யுத்தத்தில் தந்தையினை இழந்து, தமிழகத்தில் தவித்த சிறுவனுக்கு சிகிச்சை வழங்கி, இந்தோனேசிய தமிழக துபாய் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்து உறவுகளுக்கு அடிப்படை உதவிகளையும் வழங்கியுள்ளது என்றால் நம்ப முடிகின்றதா?


அது மட்டுமன்றி வெளிப்படைத்தன்மையான உதவும் குறிக்கோள் கொண்டமையினால் அதாவது உதவுபவரது மற்றும் உதவி பெறுபவரது விபரங்கள் எல்லோருக்கும் வெளியிடப்படுகின்ற அதாவது மோசடித்தன்மை அற்ற தூய்மை நிறைந்ததனால் அசுர வேகத்தில் உறவுகளின் ஆதரவினைப் பெற்று வளர்ந்து நிற்கின்ற   இந்த ஆணையம் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ் நாட்டில் "உலகத்தரச்சான்றிதழுடன் (ISO)" தமிழக அரசின் முழு ஆதரவுடன் சட்டரீதியாகவும், அதிகார பூர்வமாகவும் பதியப்பட்டு பெளதீக ரீதியில் தனது சேவையினை வெற்றிகரமாக ஆரம்பிக்க இருக்கின்றது. 

முற்று முழுதாக எங்கள் தமிழ் உறவுகளின் கண்ணீரைத்துடைத்து, அவர்களுக்கு மறுவாழ்வளித்து, அவர்களுக்கு புதிய வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொடுத்து தமிழ் உறவுகள் மேல் உண்மையான அக்கறையோடும் பரிவோடும் அவர்களை " அன்பினால் அரவணைக்கும்" உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் இந்த ஆண்டின் வைகாசியின் உதிரக்கறை படிந்த இந்த நாட்களை முதன் முதலாய் கடக்கும் இத்தருணம் இறுதிக்களத்தில் குருதி தோய்ந்து, எழுந்து வந்த அதரவற்ற  உறவுகளின் கரங்களை ஆதரவோடு பற்றி, அவர்களின் கரடு முரடான பாதையினை செவ்வனே செப்பனிட்டு அவர்களைப் பயணிக்க வைக்க முயற்சி செய்த ஆத்ம திருப்தியுடன் ஐந்தாண்டுகளுக்கு முன்பு அந்தோ அநியாயமாகப் படுகொலை யானவர்களை நினைவு கூர்ந்து கண்ணீரோடு அவர்களுக்கு ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்துகின்றது.

இன்றைய இந்த கறுப்பும் சிவப்புமான நாளில், எமது மக்களின் உதிரம் சிந்தப்பட்டது மட்டுமன்றி தாயகத்தில் இன்று வரை பாதிக்கப்பட்ட உறவுகளின் இதயத்திலிருந்து சிந்தப்படும் குருதி என்றும் எமக்கு நினைவில் நிற்க வேண்டியதொன்று. சிந்துகின்ற கண்ணீரும் செந்நீரும் நாம் அரவணைக்கும் கரங்களால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வைகாசி பதினெட்டில் மட்டும் நினைவில் கொள்ளாமல் எப்பொழுதும் எங்கள் உள்ளங்களில், இன்னல் அனுபவிக்கும் இவர்களை நினைவில் நிறுத்தி உதவிடுவோம். கருத்து வேற்றுமை இன்றி இந்த துக்க நாளில் உறுதி பூண்டிடுவோம். ஆதரவுக்கரங்களை ஆணையத்திற்கு கொடுப்போம். ஆதரவற்ற எங்கள் உறவுகளை அன்பினால் அரவணைப்போம்.



மரணித்து மண்ணுக்குள்
 மக்கிப்போன  எம் உறவுகளுக்கும் 

மண்ணுக்காய் மரணித்த  
மாண்பு மிகு எம் தெய்வங்களுக்கும்   

கண்ணீர்  அஞ்சலிகள்....!!!
  

" அன்பினால் அனைவரையும் அரவணைப்போம் "

உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் 




1 comment:

  1. "ஆதரவற்ற எங்கள் உறவுகளை அன்பினால் அரவணைப்போம்." என்ற கருத்தை வரவேற்கிறேன்.

    ReplyDelete