Search This Blog

Monday 5 May 2014

முல்லை...!!!


பிடிக்குதோ இல்லையோ - எனக்கு
பிடித்த உனக்கு பிடித்ததால்  
முல்லை எனக்கும் பிடிக்கும்..!

இன்று எனக்கு உயிராகி போனது 
இரத்த உறவாகி போனது
இதயத்து துடிப்பாகி போனது  
இந்த வாசம் கொண்ட பாச முல்லை...!!

தொல்லை என்றாலும் துன்பம் என்றாலும்
முல்லை வாசம் நுகர்ந்தால் உள்ளம் துள்ளி 
எல்லை இல்லா களிப்படையும் என்பாய்...!

நீ வளர்த்த முல்லைச்செடியினை 
நீங்காமல் காவிச்செல்லுகின்றேன் 
நான் செல்லும் இடமெல்லாம்...

கண்ணை இமை காப்பது போல 
கண்ணும் கருத்துமாய் காக்கின்றேன்...!
கமழும் வாசனை உள்ளத்தை மட்டுமல்ல 
கலங்கி போன உந்தன் பிரிவையும் நிரப்புகின்றது...!

உன்னை பார்க்க வேண்டும் என்ற 
உணர்வு எழுந்தால் முல்லையின் 
அருகே செல்வேன் பரிவோடு
அதன் வாசம் நுகர்வேன்...!

ஒரு மலரினை கூட 
ஒருக்காலும் உதிர்க்க மாட்டேன்...!
உதிர்ந்து விழும் மலர்களை பொறுக்கி 
உன் பெயர் சொல்லி சேகரித்து புத்தகத்தில்  

பக்கம் பக்கமாய் பாசத்தோடு 
பக்குவப்படுத்துகின்றேன்..!
பைத்தியக்காரத்தனம் என்றால் 
பரவாயில்லை இருந்து விட்டுப்போகட்டுமே...!

உந்தன் துயரம் நீக்கும் முல்லை 
எந்தன் துயரங்களையும் இல்லை 
என்றாக்கி ஆற்றுப்படுத்துகின்றது...!

பரவும் வாசனையில் 
பயணிக்கின்றேன் அதன் அருகே ...!
பம்பரமாய் முல்லை என்னை சுழலப் 
பண்ணியே பரந்து  செல்கின்றது காற்றிலே...!

எட்டிப்பிடிக்கின்றேன் காற்றினை 
எந்தன் முல்லையின் வாசம் காவி 
எங்கோ திருடிச்செல்லும் காற்றை 
எட்டி எட்டிப்பிடிக்கின்றேன்...
கட்டியணைத்து பறிக்க பார்க்கின்றேன் 
கெட்டியாக முல்லையின் வாசம் பற்றிய 
கள்ள காற்று காணாமல் போயிற்று...!

காற்று திருடியும் முல்லை தன் வாசத்தை 
அள்ளித்தான் வீசுகின்றது...!
துள்ளிக்குதிக்கும் உள்ளம் மயங்கி போகின்றது 
தள்ளி வைக்கின்றது முல்லை
தூரமாய் என் வலிகளை....


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "முல்லை" என்ற தலைப்பில் இன்று (05.05.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

  








No comments:

Post a Comment