Search This Blog

Friday 13 September 2013

எம் ஈழத்து உறவுகளின் கண்ணீரால் சகதியாகின்றது துபாய் மண்..!!!



சொந்த நாட்டிலே வாழ வழியற்று, உயிர் அச்சுறுத்தல் மரண பீதியில் உயிரைக்கையில் ஏந்தி எத்தனையோ துன்பங்களை தாண்டி சிறைகளில் சித்திரவதை அனுபவித்து மீண்டும் உயிர் பிழைப்போமா என்ற கொடிய நிலை தாண்டி, அவதியுற்று நாடு விட்டு இந்தியா சென்றவர்கள். அங்கும் அகதி என்ற அவல வாழ்வினை வாழ்ந்து இடர்களை தாங்கி எதிர்கால வாழ்வுக்காய் அங்கலாய்த்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களில்  ஒருவர்களாய் இருந்து, எந்த நேரமும் மறுபடி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு விடுவோம் என்ற பீதியால் ஆபத்து நிறைந்த கடற்பயணத்தை குழந்தைகளோடும் முதியவர்களோடும் ஆஸ்திரேலியா நோக்கித்தொடர்ந்த இவர்கள் தமது கனவுகளின் கரையினைத்தொட்டுக்கொள்ளாமல் இன்றும் நடுக்கடலில் தத்தளித்து முக்குளிக்கின்றார்கள்.



தம் எதிர்காலம் உலகில் உள்ள இலங்கையைத்தவிர வேறு எந்த ஒரு நாட்டிலும்  நிம்மதியாகத்  தொடரப்படும் என்ற அதீத நம்பிக்கையிலும் ,உயிர் வாழும் ஆசையிலும் கடலில் பயணிக்க தொடங்கிய அவர்கள் பயணம் செய்த படகானது நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி, கடலில் தத்தளித்து ஒரு வழியாக துபாய் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் கப்பல் ஒன்றினால் காப்பற்றப்பட்டு துபாய் துறைமுகத்தில் கரை சேர்க்கப்பட்டார்கள். அங்கு ஐ நாவுக்கான அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தால் பொறுப்பேற்கப்பட்ட அந் நாற்பத்தாறு உறவுகளில் ஏழு பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். மீதியுள்ளவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் அகதிகளாக  ஏற்றுக்கொள்ளப்பட்டு அதில் இருபத்தியேழு அகதிகள் அமெரிக்கா , சுவீடன் மற்றும் பின்லாந்தினால் மீள் குடியேற்றப்பட்ட நிலையில் மீதி  பன்னிரண்டு உறவுகள்  இன்று வரை துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் அமெரிக்கா , சுவீடன், பின்லாந்து , கனடா போன்ற மீள்குடியேற்ற நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் கடந்த பத்து மாத காலமாக அங்கு அவதியுற்று வருகின்றார்கள்.

எத்தனை இடையூறுகள் ,அவதிகள், துன்பங்கள் எல்லாவற்றையும் தாங்கி அனுபவித்துக்கொண்டு ஏதோ ஒரு நாட்டுக்கு தாம் நிம்மதியாக சென்று வாழ முடியும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்த அவர்களை கடந்த சித்திரை மாதத்தில் கூட இலங்கைக்கு திருப்பி அனுப்ப துபாய் அரசாங்கம் முடிவு செய்த போது மனித உரிமைகள் ஆணையம் ,புலம் பெயர் அமைப்புக்கள், மற்றும் தமிழ் அமைப்புக்களின் வேண்டுகோள்கள் போராட்டங்களினால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் அவர்கள் அதே முடிவினை அதாவது இலங்கைக்கு அவர்களைத் திருப்பி அனுப்ப போவதாக ஐ நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் கையை விரித்து அவர்களை மீண்டும் கண் கலங்க வைத்து விட்டது.

ஏற்கனவே உயிர் அச்சுறுத்தல் மிகுந்த கொலைக்களமான இலங்கையில் இருந்து தப்பித்து வந்த அவர்கள் கடல் பயணத்தை மேற்கொண்டு இப்படி வேற்று நாட்டில் அகதி தஞ்சம் கோரி ஐ நாவின் அகதிகள் பொறுப்பில் இருந்து எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ள நிராகரித்த பின் அவர்கள்  மீது இலங்கைக்கு இன்னும் அதிகமான ஆத்திரமும் கொலை வெறியும் நிச்சயமாக இருக்கும் என்பது திண்ணம்.
GG
உதாரணமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஏழு உறவுகளில் இலங்கை உளவுத்துறையினரின் மிரட்டல் காரணமாக நால்வர் காணாமல் போயுள்ளார்கள்.  இலங்கை அரசங்கத்தால் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லை என்று அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு ஐ.நாவால் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கே அங்கு பிரச்சனைகள் இருக்கும் போது. இலங்கையில் அச்சுறுத்தல் உண்டு என்று ஐ.நா வினால் அகதிகளாக இனங் காணப்பட்ட துபாயில் உள்ள பன்னிருவருக்கும் எப்படியான அச்சுறுத்தல்கள் உயிர் ஆபத்துக்கள்  இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க இயலாது. 

பத்து மாதங்களாக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் மூலமாக அவர்களைப்பற்றி பல விதமான  செய்திகள் வெளிவந்த நிலையிலும் இலங்கைக்கு இதன் காரணமாக பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட பின்னரும் அவர்களின்  உண்மை நிலை உலகிற்கும் இலங்கைக்கும் தெரிந்த பின்னரும் இலங்கை என்ற நாட்டின் திசைப்பக்கம் சென்றாலே அவர்கள்  படுகொலை செய்யப்படுவது உறுதி. அல்லது அங்கு அவர்களைத்திருப்பி அனுப்பினால் நிச்சயமாக அவர்களுக்கு சித்திரவதையுடன் கூடிய உயிர் வதை நரகம் கண்ணில் காட்டப்படும். அங்கு செல்வதற்கு பதிலாக அவர்கள்  துபாயிலேயே தம்மைத்தாமே சாகடித்துக் கொள்ளலாம். இருந்தாலும் இறுதிக்கட்ட முயற்சியாக உயிர் வாழும் ஆசையில் கண்ணீர் மல்க உலகத்தமிழ் உறவுகளின் உதவிகளை வேண்டி நிற்கின்றார்கள்.


அவர்கள்  இலங்கை சென்றால் அங்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும்  தலா இரண்டாயிரம் டொலர்கள் வழங்கப்படும் என்று ஐ.நா அதிகாரிகள் கூறியிருக்கின்றார்கள் . அவர்கள் அந்த  இரண்டாயிரம் டொலர்களுக்காகவா தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடல் தாண்டி தத்தளித்து வந்தார்கள்? அல்லது ஐ.நா  கோடி பணம் தன்னும் அள்ளிக் கொடுத்தாலும் அவர்கள்  இலங்கை மீண்டு அதனை அனுபவிக்கஉயிரோடு தான்  இருப்பார்களா?? இரண்டாயிரம் டொலர்களுக்காக தமது  உயிரை இழக்க முன் வருவார்களா? ஈழத்தமிழர்களின் உயிரை வெறும் இரண்டாயிரம் டொலர்களுக்கு மதிப்பீடு செய்யும் உரிமையினை ஐ.நாவுக்கு யார் கொடுத்தது?? இலங்கை அரசாங்கமா?? எம் உறவுகளின்  உயிர்களுக்கு விலை நிர்ணயித்து அதனை இலங்கைக்கு இந்த ஐ நா அதிகாரிகள் விற்றுக் கொடுக்கின்றார்களா??



அத்துடன் இலங்கை போக மறுத்தால் சட்ட விரோதமாக துபாய்க்குள் நுழைந்ததாக வழக்குப் பதிவு செய்து தனித்தனியாக சிறைக்குள் அடைத்து விடுவதாக மிரட்டுகிறார்கள். நடுக்கடலில் இருந்து  காப்பற்றப் பட்ட வேளை இதே ஐ நா தான் அந்த  நாட்டுக்குள் அவர்களை  அழைத்து வந்து வெளியுலகத் தொடர்புகள் இல்லாமல், கடந்த பத்து மாதங்களாக அடைத்து வைத்திருந்தது. அன்றைக்கே அவர்களை கைது செய்து சட்ட விரோத நுழைவாளிகள் என்று  சிறைப்படுத்தியிருக்கலாமே.

அது மட்டுமன்றி சிறையில் கூட மருத்துவ வசதி, சுகாதார வசதி, தொலை பேசி வசதி, உறவினர்கள் வந்து பார்க்கக்கூடிய வசதி, மாற்று உடை வசதி அனைத்தும் இருக்கும் ஆனால் அங்கு  எந்தவிதமான வசதிகள் எதுவும் இல்லாமல் மிருகங்களை விட மிகவும் கேவலமான நிலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மிருகங்களைக் கூட பகலில் மேய்ச்சலுக்கு திறந்து விட்டு இரவில் அடைப்பார்கள். ஆனால் துபாயில் எம் உறவுகள் ஆரம்ப  நாளிலிருந்து இன்று வரை வெளி உலகக்காற்றினை சுவாசிக்க முடியாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மனதளவிலும் உடல் அளவிலும் மிக்க பாதிப்புக்குள்ளாகி கிட்டத்தட்ட இந்த உலகத்தில் தான் உள்ளோமா என்ற ஒரு சந்தேக நிலையில் அவர்களின்  உளநிலை மிகவும் மோசமடைந்து காணப்படுகின்றது. அதாவது வெளி உலகத்தை பார்த்து அரளும் நிலையில் உள்ள அவர்களால் நிச்சயமாக அவர்களின் அனுபவத்தால் பயங்கரமாய் விளங்கும் இலங்கை என்னும் நாட்டினையோ அங்குள்ள அரசினையோ எதிர்கொள்வதென்பது மிகப்பயங்கரமே.

அன்று முள்ளிவாய்க்காலில் குருதி ஆறு ஓட தன் தலை தப்பினால் போதும் என்று ஓடி ஒளிந்து சென்ற ஐ. நா, கை கட்டி வாய் பொத்தி இலங்கை அரசுக்கு சாமரை வீசிய வீசிக்கொண்டிருக்கும் சர்வதேச நாடுகள் எல்லாம் வெறும் பன்னிரண்டு உயிர்களை எண்ணத்தில் கொள்ளுமா??? ஒன்றரை இலட்சங்கள் உயிர்களை கண்டும் காணாது விட்ட ஐ நாவுக்கு அந்த பன்னிரண்டு உயிர்கள் பெரிதாக எண்ணத்தில் படப்போவதுமில்லை. இன்றைய அவர்களின் இந்த அவல  நிலைக்கு ஐ நாவும் ஒரு காரணமே.

ஆம், அன்று அந்த முள்ளிவாய்க்கால் அவலத்தை தடுத்து நிறுத்தி இருப்பின் எம் உறவுகளுக்கு  ஏன் இந்த அவலம்? நவுரு தீவுகளில் ஆஸ்திரேலியா அகதிகளை குடியமர்த்த வேண்டாம் என்று குரல் கொடுக்க தெரிந்த ஐ நாவுக்கு துபாய்  மனித காட்சி சாலை பற்றி எள்ளனவேனும் அக்கறை இல்லை. உலக அரங்கில் வாய் கிழிய குரல் கொடுக்கும் ஐ நா ஈழத்தமிழர் எம் படுகொலைகளை இலங்கையில் தட்டிக்கேட்கத்தான் முடியவில்லை என்றாலும் அவர்களுக்கு தீனி போடும் வகையில் அகதி என்ற  நிலையில் உலகத்தின் கண்களுக்கு தெரிந்து கொண்டிருக்கும் எம் சொந்தங்களை இலங்கைக்கு அனுப்பி அங்கு இரையாகப்போகும் அவர்கள் உயிர்களையாவது காப்பாற்றவுமா முடியாது??

வெகு இலகுவாக ‘”நீங்கள் அனைவரும் ஈழத்தமிழர் என்பதால் உங்களை எந்த நாடுகளும் ஏற்றுக் கொள்ளாது , ஐநா சபையானது உங்கள் (அகதிகள்) சம்மந்தமான அனைத்துப் பணிகளையும் இன்றுடன் நிறுத்திக் கொண்டுவிட்டது, ஆகையால் எங்களால் எதுவும் செய்ய முடியாது, நீங்கள் திரும்பவும் இலங்கை செல்வதுதான் சரியான வழி!!! அதனால், அடுத்த வாரம் இலங்கைக்கு செல்வதற்கான முடிவுகளை எடுத்து வையுங்கள், நாங்கள் ”IOM” அதிகாரிகளுடன் வருகிறோம்” என்று கூறி துபாய் இல் உள்ள ஐ நா அதிகாரிகள் அவர்களுக்கு  மரண தேதியை குறித்துச் சென்று விட்டார்கள். ஆக பத்து மாத காலமாக அவர்களை அகதியாக ஏற்றுக்கொண்டு செயற்படும் போது அவர்கள்  ஈழத்தமிழர் என்பது தெரியவில்லையா?? ஏற்றுக்கொள்ளாத நாடுகளில் எம் ஈழத்தமிழர்கள் இல்லையா??? அப்படியென்றால் அகதியாக ஏற்றுக்கொண்ட ஐ. நா வில் தான் தவறோ?? முதலிலேயே அவர்ளை நீங்கள் அந்த நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி இருக்கலாமே??



போர் அவலத்தால் சிக்கி சின்னாபின்னமாகி உருக்குலைந்து போன எம் சொந்தங்களின்  வாழ்வினை மீட்டெடுக்க சிறு நம்பிக்கை ஒளியினை கையில் ஏந்தி சிறைகளில் தவமிருந்து இருளில் வாசமிருந்து நரக வாழ்வினை நான்கு வயது சிறுமி முதற்கொண்டு அறுபத்தைந்து வயதான முதியவர்கள் , பெண்கள் என்று எந்தவிதமான அடிப்படை வசதிகள் அற்று, அவசிய மருந்துகள் மாற்று உடைகள் இன்றி கழித்து துன்பத்தில் துவண்ட போன அவர்களின்  நெஞ்சங்கள் உயிர் பயத்தில் உறைந்து நடுங்கிப் போயிருக்கின்றார்கள். 

எங்கள் சொந்த உறவுகள் அந்நிய தேசமதில் நிர்க்கதியாகி நிற்கும் இந்த அவல நிலையில் அவர்களுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து, அவர்களை  காப்பாற்றி வாழ வைக்க தமிழர்களின் அரசாங்கம் என்று கூறிக்கொண்டிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு மற்றும் புலம் பெயர் அமைப்புக்கள் ஏன் முயற்சிகள் எடுத்து அவர்களின் கண்ணீரைத்துடைக்க கூடாது? தமிழ் நாட்டு தமிழ் அரசியல் வாதிகள் சிறிதாக முயற்சி எடுத்து அக்கறை காட்டும் போது , இலங்கையில் தேர்தல் களத்தில் சாகசங்கள் புரியும் உள்ளூர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவர்களின் கண்ணீர் பெரிதாக தெரியவில்லையா? இலட்சக்கணக்கான உயிர்கள் அலறும் போதே குறட்டை   விட்டு பஞ்சணையில் படுத்துறங்கிய பெரிய மனிதர்கள் அந்த பன்னிருவரின் நிலை பற்றி எள்ளனவேனும் எண்ணுவார்கள் என்பது சந்தேகமே...!

வாழ வழியற்று இறுதிப்பயணத்தில் தத்தளிக்கும் அவர்களை கை தூக்கி விடுங்கள் என்று தமிழ் அமைப்புக்கள் , மாணவர் அமைப்புக்கள் , புலம்பெயர் அமைப்புக்கள் , மனித உரிமைகள் அமைப்புக்களிடம் மன்றாடிக் கேட்கின்றோம். அவர்களின்  கண்ணீரால் நனைந்த அந்த துபாய் மண்ணில் இருந்து உதிரங்களால் தோய்ந்த இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை கண்டும் காணாமல் இருக்காமல் உங்களால் முடிந்த  வரை அவர்களின் இருப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். தயவு செய்து உங்கள் உறவுகளின் கூக்குரல்களை செவி மடுத்து  நாடு கடத்தல் என்ற பெயரில் அவர்களுக்கு அரங்கேறப்போகும் அவலச்சாவினை தடுத்து நிறுத்த ஆவன செய்யுங்கள்..!


உயிர் வாழத்துடிக்கும் எம் உறவுகளின் குரலாக

அரசி நிலவன் 
தாய்லாந்திலிருந்து 

No comments:

Post a Comment