Search This Blog

Wednesday, 11 September 2013

பர பரப்பு..!!!
செவிகள் மட்டுமல்ல
செக்கச்சிவந்த விடிகாலை வானத்தின்
செவிப்பறையும் கிழிந்து தொங்கும்...
காற்றை கிழித்து விரைந்து வரும்
கிபிர் என்ற அரக்கனின் மூச்சிரைப்பால்....


கண்கள்  ஆகாயம் நோக்க
கரங்கள் குஞ்சுகளை அள்ளி எடுத்திட
கால்கள் தட்டுத்தடுமாறி இடறி
பர பரக்கும் நெஞ்சம் ஒருவாறு
பதுங்கு குழிக்குள் பதுங்கிடும்...!

பருந்திற்கு விருந்தாகா வண்ணம் குஞ்சுகளை
இறகணைக்கும் கோழியினை போன்று
நெஞ்சோடு குழந்தைகளை அணைத்துத்  தன்னை
கவசமாக்கும் ஈழ அன்னையின் பட படக்கும்
நெஞ்சில் முகம் புதைத்து முழி பிதுங்கும்  - எதிர்கால
முளை விருட்சங்களின் பர பரப்பினை - நான்காண்டுகளுக்கு
முந்தி உணரத்தெரியாத சர்வதேசமே...!


அள்ளி அள்ளி பல்குழல் எறிகணைகளை வீசி
அருமந்த உயிர்களை அநியாயமாக துடி துடிக்க வைத்து
அப்பா இது அம்மா அது என்று சதைப்பொட்டலம் கட்டி - கதறி
அழுது துடித்த இளம்பிஞ்சுகளின் அந்த பர பரப்பினை
எள்ளனவேனும் சிந்திக்க தெரியாத சர்வதேசமே...!

எடுப்பார் கைப்பிள்ளைகளாக இறுதிக்கணங்களில்
எறிகணைகளை துணிச்சலோடு எதிர்நோக்கி
உதிரக்கடலில் தோய்ந்து காய்ந்து துப்பாக்கி சன்னங்கள்
பறந்து வரும் திசை அறிந்து விலகி புரண்டு எழுந்து
நிமிர்கையில் அடுத்த எறிகணையின் வெடிப்பினை
நிச்சயப்படுத்தி மாறி மாறி உயிரை கையிலும்
காலிலும் பிடித்து மீறித்தவறி ஓடும் உயிரை இழுத்துப்பிடித்து
மீண்டும் உடலுக்குள் செலுத்திய துணிச்சல்.....
அறிந்தும் கண் மூடி உலவும் சர்வதேசமே....!


பர பரப்பில் செய்வதறியாது நின்று சன்னங்களுக்கு
பலியாகிய சொந்தங்கள்...,
எறிகணைகள் ஏறி வெடித்தும் வெடிக்காமலும்
உருக்குலைந்த உடன்பிறப்புக்களை கண்டும் கடந்தும்
உயிர் இழந்த உடலங்கள் சதைகளோடு
கழித்து வந்த  இரவுகள் பகல்கள்...!

எங்களின் தேசம் செந்நிறமாய் குருதியில்
குளித்து தமிழனின் சதைகளால் நிரம்பி வழிந்த
அந்த கொடூரம் நிறைந்த காட்சி என்றைக்கும்
அழியாமல் இறுதிவரை நெஞ்சத்தில் பர பரப்போடு
பயணிக்கும் நினைவுகளை சுமந்த எத்தனையோ உறவுகள்
பல இறுதிக்கணத்தில் போர்க்குற்ற சாட்சிகளாக
பயந்து பயந்து வழங்கிய சாட்சிகளை ஏறெடுத்தும்
பார்க்காத பக்கச்சார்பு சர்வதேசமே...!


ஒவ்வொரு முறையும் காரணம் கூறி
வருகை தந்து நடைப்பிணங்கள் எங்களை
உயிர்ப்பித்து விட்டு காட்சிப்பொருளாக்கி,
உலகத்தின் வேடிக்கை கதா பாத்திரங்களாக்கி,
எங்கள் நம்பிக்கைகளை அறுத்து எறிந்து
உங்கள் வருகைகளை செய்திகளில்
பர பரபாக்கி எங்கள் இதயங்களை
இறுக்கி பிழிகின்றீர்கள்....!!!


சரணடைந்த கணவன் இருக்கின்றாரோ...?
ஒவ்வொரு குங்குமமும் தாலியும்
ஒரு சந்தேகத்தில் தான் அலங்கரிக்கின்றது அவர்களை....!
எந்நேரத்திலும் அழிக்கப்படலாம் என்று குங்குமங்களும்,
எந்நேரத்திலும் அறுக்கப்படலாம் என்று மஞ்சள் தாலிகளும்,
எம் பெண்களின் நெற்றியோடும் கழுத்தோடும்
பர பரத்து முணு முணுக்கும் ஒலியில்
பதை பதைக்கின்றார்கள் அப்பேதைகள்....!


அப்பா வராமலேயே போயிடுவாரோ...?
புகைப்படத்தை வெறித்துப்பார்க்கும் ஒவ்வொரு
ஈழக் குழந்தையின் இதயமும்
பரபரப்பின் வரைவிலக்கணம் நன்கறியும்...


கொள்ளி போடுவதுக்கும் வர மாட்டானோ...?
தள்ளாடும் வயதிலும் ஏக்கத்தின் உச்சத்தில்
உயிர் துறக்க காத்திருந்தாலும்..,
காணாமல் போன பிள்ளைகளுக்காக
காத்திருக்கும் பெற்றோரின் உள்ளப்பரபரப்பு...!


புனர்வாழ்வு எனும் பெயரில் சிதைக்கப்பட்டு,
புனித போரில் களமாடிய நினைவுகளை சுமந்து - மனம்
புண்பட்டு புதிய சுழலில் வாழத்தடுமாறி,
புலனாய்வு பிரிவு எந்நேரத்திலும்
புலன் விசாரணைக்கு அழைக்க கூடும் என்ற
பர பரப்பில் பகல் இரவாய் துடிக்கும்,
ஈழத்தில் ஒரு காலத்தில் காவலர்களாய்
தலை நிமிர்ந்து நடந்தோரின் குமுறல்கள்..
தனியாக ஒரு காவியம் படைத்திடலாம்....!


இன்னும் இன்னும் ஈழத்தில்.....
இன்று வரை இலை மறை காயாய்
இழைக்கப்படும் அநீதிகள்.....,
இழக்கப்பட்டு கொண்டிருக்கும்...
ஈழத்தமிழனின் நிலங்கள், அதிகாரங்கள், உரிமைகள்...
ஈழத்திலேயே புதைந்து தான் போய்க்கொண்டிருக்கின்றது
நாளை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய கூட
நாதி அற்றுப்போய்  விட்டான் ஈழத்தமிழன்...!!!
நம்பிக்கைகளையும் அவனோடு புதைக்கும் சர்வதேசம்
நன்றாகத்தான் உலவுகின்றது எவ்வித பர பரப்புமின்றி....
பர பரப்பு என்ற பதம் ஈழத்தமிழனுக்கு மட்டுமே உரித்தானதோ...?

பல நாடுகளில் பரந்திருக்கும் ஈழத்தமிழனவனுக்கு
படுத்து உறங்க தன்னும் சொந்தமாய் நாடு இல்லை...!
"படுகொலைகள்" "காணாமல் போதல்" "குருதி" "கண்ணீர்".
பல ஈழத்தமிழர்களின் எழுதப்பட்ட  சொத்துக்கள்....
ஆக....
பர பரப்புக்கு சொந்தக்காரன் ஈழத்தமிழன் மட்டுமே...!!!லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பர பரப்பு" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/
1 comment:

  1. ஆக....
    பர பரப்புக்கு சொந்தக்காரன் ஈழத்தமிழன் மட்டுமே...!!!

    படைப்புக்கு வாழ்த்துக்கள்.தொடருங்கள்
    அறியட்டும் எல்லோரும்

    ReplyDelete