Search This Blog

Saturday 24 October 2009

அடங்கா மண்ணிலே... அமைதியாய் துயில் கொண்டிருப்பேன்..!!!




இலட்சியங்கள் கனவாகி விடுமோ...??
இரவுகள் விடியாது போகுமோ...??

காத்திருந்து...,
காலங்கள் அழிந்தது..!
காதலன் காற்றோடு கரைந்து போனான்..!

சொந்தங்கள் சிதறி...
சொர்க்கம் ஏகின..!
சொல்ல வார்த்தை இல்லை..
சொப்பனத்திலும் அழுகை தான்..

கால் போன போக்கிலே,
காடு மேடெல்லாம் நடந்து...,
பித்து பிடித்தவள் போல,
பிதற்றி பிதற்றி வந்தேன்...!

பிஞ்சுகளை பிய்த்து போட்ட எறிகணை,
பேதை என்னை விட்டு வைத்தது ஏனோ..??
உறவுகள்.. உயிரை விட்ட கிபிரின் குண்டுக்கு - நான்
உயிர் தப்பியது ஏனோ..??

இடைத்தங்கல் முகாமில் வந்து...,
இடிபடுவதற்காக....,உயிர் மீண்டு வந்தேனோ...??
இதற்கு...நான் என் மண்ணுக்கு,
உரமாகி போயிருக்கலாம்..!

அடங்கா மண்ணிலே...!
அமைதியாய் துயில் கொண்டிருப்பேன்..!
அன்பு மண்ணிலே...! உயிர்
அடங்கி போயிருப்பேன்...!!!

உணர்வை உயிர்ப்பித்து,,
உயிரைக்கொடுத்து...,
உடலை மண்ணுக்கு தந்திருப்பேன்...!
உண்மையோடு நான் தூங்கி போயிருப்பேன்..!

மாறாக...

உணர்வை இழந்து...,
உடலை வருத்தி....,
பொய்மையோடு போராடி,,
உயிரோடு மரணித்து கொண்டிருக்கின்றேன்...!!!.

" அரசி "

Friday 9 October 2009

முல்லையில்.... கடற் பறவைகளின் கூச்சல்...!!!


கரிகாலன் ஆட்சியிலே - நாம்
கட்டுமரம் ஏறி போகையிலே..
கடலலைகள் தாலாட்டிடுமே...!
கண்குளிர நிலா மகளை ரசித்து, ரசித்து..
கன மீன்களை அள்ளிடுவோமே...!

சுறாக்கள் எம் வலையில் சிக்க முன்,
டோறாக்களின் பார்வையில் சிக்காது,
திரும்பிடுவோம் கரையை நோக்கி...



தம்பிமாரின் விசைப்படகில்..
தலை நிமிர்ந்து பறக்கும்,
தாயகக் கொடியின் அணிவகுப்பு.. கடற்
தாயினை பெருமை கொள்ள வைக்குமே...!

இன்று...

காலனவன் ஆட்சியிலே...!
கட்டுமரம் கரையிலே...!
கட்டப்படாமல் கிடக்க..
கடற் பறவைகளின் கூச்சல் மட்டும்...,
கேட்கின்றது...காதுகளில்..!

கரைக்கு வராத மீன்களை எண்ணி, இந்த கூச்சலோ..??
கரை ஒதுங்கும் தமிழனின் சிதைந்த பாகங்களை..,
கண்டு எழுந்த கூச்சலோ...??

என்னுயிர் நீங்கி,,, நீ விழி மூடாதே..!!



சொந்தமே...!!!
சொந்த மண்ணில் காணாமல் போனவனே....!
காணாமல் போனோர் பட்டியலில் 
காத்திருப்பது... 
உன் பெயர் மட்டுமா..?
என் உயிரும் அல்லவா...??


என்னை வழியனுப்பி சென்ற நீ..!
அன்னை இல்லம் ஏகாமல் மறைந்தாயோ..??


இடியென இறங்கிய செய்தி, என் செவி வழியே..
இதயத்தை தாக்கியதும் அதிர்ந்தேன்...!


சட்டென்று போயிருப்பேன்..!
பொட்டென்று உயிரை நீக்கி...,
எங்கே...
உயிர் மீண்டு வந்து- நீ 
என்னைக்கண் தேடுவாயோ...?
எண்ணிக்காத்திருக்கின்றேன்...!
எண்ணியபடி நாட்களை...
உன்னை நெஞ்சிலும் - உன்
உயிரினைக்கருவிலும் சுமந்தபடி..


கண்ணா..!
கல்லறையில் உன்னை விதைத்திருந்தால், அங்கே
கண்மூடித்துயில் துயில் கொள்ளும் - உந்தன்
காலடியில் மலர்களைத்தூவி...,
கண்ணீர் விட்டு கதறியிருப்பேன்...!

அனலோடு சங்கமமாகி - நீ 
அருவமாகி போயிருந்தால் 
அன்பே உன் உடலின் சாம்பலை 
புனலோடு கரைத்து - நானும் 
புனித மண்ணுக்குள் 
புதைந்து போயிருப்பேன்...! 


கண்ணுக்கு தெரியாமல் - நீ
கலைந்து போனாயோ..?? 
காரணம் இன்றி கயவரால்
கடத்தப்பட்டாயோ..?

தலை கோதி முத்தமிட்டு சென்றவனே...!
தனிமையில் தவிக்கின்றேன்..!
உன் நிலை எண்ணி....


எவ்விடம் ஏகினாயோ...??
என்னையும் அழைத்திடு..!

என்னுயிர் நீங்கி,,,
என்றைக்கும் - நீ 
விழி மூடாதே..!!




- அரசி நிலவன் -