Search This Blog

Friday 31 January 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 5 )


நிசப்தமான அந்த இரவில் மின் விளக்குகள் பகலை போன்று ஒளி பாய்ச்சிக்கொண்டிருந்தன. மின் விசிறியில் இருந்து வரும் காற்று கூட ஒலி எழுப்பாது பரவிக்கொண்டிருந்தது. அந்த வைத்தியசாலை விடுதியின் மகப்பேற்று பிரிவில் ஒவ்வொரு ஆறு கட்டில்களினையும்  தனித்தனியாக அறையாக்கி கிட்டத்தட்ட பத்து பிரிவுகளில் சேய்களும் தாய் மாரும் உறக்கத்தில் இருந்தனர். முதலாவது அறையில் மூன்றாவது கட்டிலில் மட்டும் யாருமிருக்கவில்லை. அந்தக்கட்டில் தலையணை நீரில் ஊறி ஊதிப்போன பஞ்சாய் ஈரமாய் கிடந்தது.

உதிரப்போக்கினை விடவும்  கண்களில் இருந்து வழியும் கண்ணீரே அதிகமாகி சிந்த அன்றே பிரசவித்த குழந்தையினை கரங்களில் ஏந்தியவாறு மெல்ல மெல்ல நடந்து குழந்தை பராமரிப்பு அறையினை நோக்கி தள்ளாடிச் சென்று கொண்டிருந்தாள் நிலா. மனதெங்கும் மதுரனின் முகம் நிறைந்திருக்க குழந்தையினை பார்த்து பார்த்து இன்னும் வெடித்து விம்மி விம்மி அழுதாள்.

இன்று அதிகாலையில் பூவுலகில் பாதம் பதித்த அவர்களின் செல்ல மகனைக் காண வைத்தியசாலையின்  பார்வை நேரத்திற்கு முன்னரே வந்து தவம் இருந்து காத்திருந்து தன் முதற் குலக்கொழுந்தினை தொட்டுப்பார்த்து அள்ளி எடுத்து முத்தமிட்டு கொண்டிருந்த மதுரன் நாளை காலை பார்வை நேரத்திற்கு காத்திருந்து தேடி ஓடி வர மாட்டான். 

ஆம்..! இன்று மதிய உணவினையும் மறந்து வெளியேற  மனமின்றி குழந்தையும் தானுமாய் தன் நிலை மறந்திருந்த அவனை மதிய உணவினை முடித்து  விட்டு மீண்டும் வரும் படி வலுக்கட்டாயமாய் அனுப்பி வைத்தவள் விடுதியின் வாசலில் இவனுக்காய் காத்திருந்த குடிவரவு அதிகாரிகள் அவனை கைது செய்து சென்றது அறியாமல் தூங்கி விட்டிருந்தாள். . அரை மணி நேரத்தின் பின் கூடவே சென்றிருந்த அவளின் அன்னை பதட்டத்துடன் கண்ணீரோடு வந்து அவனைக் கைது  செய்த தகவலைத்  தெரிவித்ததில் இருந்து இன்னும் கண்ணீர் நிற்கவில்லை அவள் கண்களில் இருந்து.

குழந்தை குழந்தை என்று கருவுற்ற காலம் தொடங்கி எத்தனையோ எதிர்பார்ப்போடு காத்திருந்தவன், பிறந்து வந்த  இன்று ஒரு மணி நேரம் தன்னும் தொட்டு ஆசையாய் முத்தமிட்டு செல்வதற்கிடையில் பிரிந்து சென்று விட்டானே. அந்த பச்சிளம் பாலகனும் எதையோ தொலைத்து விட்டது போன்று முகம் இறுகிக்கதறிக்கொண்டு இருந்தான்.
ஐந்து  மணி நேரத்திற்கு முன் இனித்திருந்த இனிமையான தருணத்தினை வேப்பங்காயினை விடக் கசந்து நிற்கும் நிகழ்காலத் தருணம் சொற்ப நேர இடைவெளியில் தன்னை ஆட்கொண்டு விட்டதை எண்ணி நொந்து கொண்டே நடந்தாள். 25 மீற்றர் இடைவெளி இரண்டரை கிலோ மீற்றர் போன்று நீண்டு செல்கின்றது. குழந்தையின் கதறல் அந்த நிசப்தத்தினை கலைத்து ஆக்கிரமித்துக்கொண்டது.

தூக்கம் குழம்பி எழுந்து கொண்ட தாய்மார்கள் விசித்திரமாய் அவளின் அழுது பருத்து வீங்கிய முகத்தினையும் கண்களினையும் விநோதமாய் நோக்கினர். வலியானது  வெட்கம் பரிகாசத்திற்கு அப்பாற் பட்டது அல்லவா. கடந்து முன்னேறியவள் குழந்தை பராமரிப்பு அறையின் முன்னே நின்றிருந்தாள். அழைப்பு மணியினை அடித்து விட்டு காத்திருந்தாள். அவளால் ஒரு நொடி கூட நின்றிருக்க முடியவில்லை. உயிர் போகின்ற உடல் வலியோடு உருக்குலைக்கும் உள்ளத்து வலியும் சேர்ந்து கொண்டால் தாக்குப்பிடிக்க முடியுமா? நேரம் அதிகாலை இரண்டு மணி என்பதால் தாதிமார் தூங்கி இருப்பார்கள்.

----

வாசலில் நின்று கொண்டு மதுரனின் பெயர் கூறி அழைத்த அந்த தாய்லாந்து குடிவரவு அதிகாரி மதுரனை மேலும் கீழுமாய் பார்த்து விட்டு கடவுச்சீட்டினை காண்பிக்குமாறு கேட்டிருக்கின்றார். மதுரனிடம் கடவுச்சீட்டு இல்லை. ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தால் வழங்கப்பட்ட அகதி ஆவணத்தினை மதுரன் அவ்வதிகாரியிடம் கொடுத்ததும், அதனை உற்று நோக்கிய பின்  தொலைபேசி எடுத்து அழைப்பொன்றை மேற்கொள்ள அது மதுரனின் தொலைபேசிக்குள் நுழைந்து கொண்டது. உறுதி செய்து கொண்ட அந்த அதிகாரி மதுரனை மிக்க மரியாதையாகத்தான் அழைத்துச்சென்றார். கூடவே சென்ற எதற்காக அவரை அழைத்து செல்கின்றீர்கள் என வினவிய நிலாவின் சகோதரனிடம் கடவுச்சீட்டு இல்லை இந்த நாட்டின் குடிவரவு சட்டத்தினை மீறி உள்ளார் அதனால் இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் என்று கூறியவாறு வைத்தியசாலையின் வெளி வாசலுக்கு கொண்டு சென்றதும் அங்கு இரு வெள்ளை மற்றும் கறுப்பின காவல்துறையினர் இவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டு அந்த கட்டிடத்தின் முன்னே வைத்து எல்லோரையும் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் மதுரனின் கையில் இருந்த தொலைபேசி ஆவணங்கள் யாவற்றையும் பறிமுதல் செய்தனர். அந்த இடத்தில் வைத்து மதுரன் அழைத்துச்செல்லப்படும் போது அவனின் மைத்துனனும் கூடவே செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் யாவும் அன்னை கூறும் போது தலை வெடித்த போல கதறத்தொடங்கிய நிலாவினை கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள் அவளின் அன்னை.

இதயம் பாளம் பாளமாய் வெடித்து அதிலிருந்து வெளியேறும்  உதிரம் நிலாவின் கண்களில் இருந்து கண்ணீராய் கொட்டிக்கொண்டிருந்தது. 

----

அரைத்தூக்கத்தில் எழுந்து வந்த தாதி குழந்தையினை பெற்றுக்கொண்டாள். அழுகின்ற பாலகனை பிரிந்து செல்ல மனமில்லாது அங்கேயே நின்று கண்ணாடி வழியாக நோக்கிய நிலா, சிறிது நேரத்தின் பின் சூடான அந்த அறையின் கத கதப்பில் தன் குழந்தை அமைதியாக தூங்குவதைக்கண்ணுற்றதும் தன் இருப்பிடம் திரும்பி நடக்கலானாள்.  

உதவிகள் பெற்று உபத்திரவம் கொடுக்கும் மனிதர்களினை கேள்விப்பட்டதுண்டு. ஆனால் உதவிகள் அடைந்து சத்தமின்றி  உயிரினையே எடுத்து கொள்ளி போடும் மனிதர்களால் தான், பிறந்த பிஞ்சின் முகத்தினை  நின்று நிலைத்து காணாமல் பிரிந்து சென்ற கணவனும் அதனால் பரிதவித்து நிற்கும் தானும்  என்று அப்போது அவள் அறிந்திருக்க நியாயமில்லை.

ஆம்..!
கனடாவின் கரையினை முத்தமிட்ட கடற்சூரியனின் எதிரொலி வருகை இந்த கைது என்பதும் அதனை அரங்கேற்றி வைத்தது உற்ற நண்பன் ஒருவன் என்பதும் பின்னாட்களில் நிலாவிற்கும் மதுரனுக்கும் தெரிய வந்த போது நிலைகுலைந்தே போய் விட்டார்கள். 

அந்த நன்றி மறந்த துரோகிகளுக்கு அன்போடு அன்னமிட்டு அரவணைத்து உயிர் காத்தவன் மதுரன். தமிழன் என்று இரங்கி தன் சோற்றில் பாதி ஊட்டிப்பசியாற்றிய காரணத்தினால் தான் என்னவோ பாதி வழியில் பயணம் தொலைத்து நின்ற மதுரனின் ஆவி பிரித்து மேய்ந்து கொண்டனரோ?

தனக்கு மகன் பிறந்திருக்கின்றான் என்றும் புமிப்பொல் என்ற மருத்துவமனையில் தான் நிற்பதாகவும் தனது நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்து இன்பத்துடன் தன் களிப்பினைப்பகிர்ந்து கொண்ட மதுரனின் நண்பன் ஒருவன் அந்த தகவலை இன்னொருவனுக்கு தெரிவிக்க அவன் கனேடிய காவல் துறைக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைத்திருக்கின்றான். இதில் என்ன வேடிக்கை என்றால் ஏதோ பெரிய புள்ளியினை மடக்குவது போன்று இவ்வளவு ஏற்பாடுகள்  செய்து கைது செய்தமையே. சாதாரண ஒரு அகதியினை கைது செய்ய இந்தளவிற்கு எதற்கு கடினப்பட வேண்டும்? கனேடிய காவல் துறைக்கு இவ்வளவு குறுகிய தூரப்பார்வையா? தொலை நோக்கில் சிந்திக்க முடியாதா?

அவன் ஒரு குற்றவாளி என்றால், கனேடியப்படைகள் அவன் மீது வழக்கினை த்தொடுத்து தண்டனை கொடுத்திருக்க வேண்டும். அல்லது தாய்லாந்து காவல் துறை என்றாலும் இங்கு அவனுக்கு எதிராக குற்றம் சுமத்தி அவனை சிறையில் தள்ளி இருக்க வேண்டும் அல்லவா? இங்கு பல தமிழர்கள் கடன் அட்டை மோசடி மற்றும் திருட்டில் சிக்கி கடுங்காவல் சிறைகளில் தண்டனை அனுபவித்து இலங்கை சென்றதுண்டு. எனவே மதுரன் குற்றவாளி என்றால் அதற்கான தண்டனை வழங்காமல் எதற்காக குடிவரவு சட்டத்தை மீறியதாக குடியேற்ற தடுப்பு மையத்தில் தடுத்து வைக்க வேண்டும்? ஆட்கடத்தல் குற்றச்சாட்டு என்றால் ஐ நாவும் நிச்சயமாக அவனது  அகதிகள் அந்தஸ்தினை நிராகரித்து இருக்கும். இவற்றினை நிறைவேற்றாமல் யாருக்காக அவனைத் தடுப்பு மையத்தில் வைத்திருக்க வேண்டும்?  இதற்கான விடைகள் கனேடிய காவல் துறையினரிடமே இருக்க வேண்டும். அல்லது இல்லாமலும் இருக்கலாம். அடுத்து வரும் பாகங்களில் அதற்கான பதில் இடம்பெறும். 

மதுரனை கைது செய்ததும் அவனை நீதிமன்றில் ஒப்படைத்து குடிவரவு சட்டத்தை மீறியமைக்காக அவனை தடுப்பு மையத்தில் இடுவதாகவும் விரும்பினால் இலங்கை செல்லலாம் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டது. இலங்கை செல்ல முடியாத காரணத்தினால் அவன் தடுப்பு மையம் சென்றான். தடுப்பு மையத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் அடைக்கப்பட்டு இருந்தார்கள். மிகவும் கடினமான ஒரு நிலையில் சிலர் இலங்கைக்கு திரும்பிச்சென்று கொண்டும் இருந்தனர். 


அந்த தடுப்பு மையத்தில் மதியம் ஒரு கவளம் சோறும் முட்டையும் சூப்பும் கொடுக்கப்படும். மாலையும் அவ்வாறே. அந்த உணவினை உண்டு பசியாற முடியாது. தமிழர்களின் முயற்சியும் மூளையும் அவர்களை பசியாற வைத்தது. அவர்கள் அங்கு சமையல் செய்வதற்கு ஒரு வழி வகையினை கையாண்டனர். அதாவது அங்கு மின்சாரத்தினை இரு கரண்டிகள் மூலமாக கடத்தி அக்கரண்டிகளை ஒரு நீர் நிரப்பிய வாளி ஒன்றினுள் அமிழ்த்துவதன் மூலமாக அந்த நீர் சூடேற்றப்படும். ஒரு பொலித்தீன் பையினுள் தேங்காய்ப்பால் பொரித்த மீன் அல்லது கோழி இறைச்சி, தூள் , உப்பு (இவை யாவும் அங்குள்ள காவல் துறையின் கடையில் பலமடங்கு விலையில் விற்கப்படும்.) போன்றன இடப்பட்டு நன்கு மூடிக்கட்டிய பின் அந்த கொதிக்கும் நீரில் இடப்பட்டு அது அவிந்த பின் வெளியே எடுத்துக்கொள்ளுவார்கள். இது அதிகாலை மூன்று அல்லது இரண்டு மணிக்கு விழித்திருந்து செய்யப்படும். இவ்வாறு கறியினை சமைத்து மதியம் கொடுக்கப்படும் அந்த சோற்றோடு சேர்த்து உண்டு வந்தனர். இது ஆண்கள் உள்ள மூன்றாம் இலக்க அறையில் தான் சாத்தியமானது. பெண்களுக்கு அதே சூப்பும் சோறுமே. 

ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி அகதிகள் அல்லாத வியட்னாம், கொரியா ,ஆபிரிக்க நாட்டவர்கள்  மற்றும் ஐரோப்பிய நாட்டவர்களும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாவரும் நிரந்தரமாய் அங்கு இருப்பதில்லை. தம் நாடுகளுக்கு சென்று விடுவார்கள். 

மூன்று நாட்களுக்கு ஒரு முறை மைதானம் என்ற அடைபட்ட வெளிக்குள் எல்லோரும் கீழே இறக்கப்படுவார்கள். அங்கு தொலைபேசி அழைப்புக்கள் வெளியிடங்களுக்கு அழைக்க முடியும்.தொண்டை கிழிய வயிறு நோக கத்திக்கதைத்தாலும் மெதுவாக கேட்கின்ற அந்த தொலைபேசி இயந்திரங்கள் பல ஆண்டுகளாக அதே நிலையில் தான் இருக்கின்றன.  ஒரே ஒரு  நல்ல இயந்திரம் உண்டு. அதிலும் நூற்றுக்கணக்கானோர் அதில்  வரிசையில் நின்று அழைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும். ஒன்றரை மணித்தியால இடைவெளியில் வரிசையில் நின்றாலும் அழைப்பு எடுக்க முன்னரே நேரம் முடிந்து அறைக்கு திரும்பிச் செல்லும் அனுபவம் அங்குள்ள பலருக்கு உண்டு. 

ஈழத்தில் மட்டுமே தமிழர்களுக்கு துன்பம் என்று இல்லாமல் உலகமெங்கும் துன்பத்தினை பங்கு போட்டு எழுதி வைத்த இறைவனுக்கு என்ன வன்மம் தமிழர்கள் மீது?? 

நாட்டுப்பிரச்சினை , இனவாதம் என்பவற்றை  உணரத்தெரியாத அன்றி அறிந்து கொள்ளத்தெரியாத மக்கள் வாழும் தேசம் இது. தங்கள் நாட்டிற்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்ற ஒரு மட்டமான எண்ணம் கொண்டு கேவலமாய் நோக்கும் தடுப்பு மைய காவல் துறையினருக்கு எம்மினத்தின் தொன்மையும் வரலாறும் தெரிந்திருக்க நியாயம் இல்லை தெரிந்து கொண்டாலும் விளங்கிக் கொள்ளப்போவதுமில்லை.

தொடரும்....


அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 



அடுத்த பதிவிற்கு செல்ல
http://arasikavithaikal.blogspot.com/2014/02/mv-sunsea-6.html

Monday 27 January 2014

முத்து...!!!


இந்து சமுத்திரத்தின் முத்து - என
அடைமொழி கொண்டு
பூரித்த இலங்காபுரியில்...
கொத்து கொத்தாய் மனித மண்டையோடுகள்..!
கொன்றொழித்து மறைத்த எச்சங்கள்
குட்டி போடுகின்றனவோ...?


அள்ள அள்ள குறையாத
அமுத சுரபி போன்று
தோண்ட தோண்ட விளையும் என்புகளின்
வற்றாத மனித புதைகுழிகள்
வகை வகையாய் மலிந்து கிடக்கின்ற
வளமான நாடு...!

இந்து சமுத்திரத்தின் முத்து
நன்றாகவே பொருந்துகின்றது...!
 
யார் யாரோ...?
யார் இவரோ..???

யார் அறிவார் இவர்களை - உயிர்
யாசகம் கேட்டு
தோற்றுப்போய் தாண்டவர்கள்
தோண்டப்படுகின்றார்கள் இதயம்
உக்கிய மண்ணை நீக்கி....

என்புகளின்  விளைச்சல்
எதிர்பார்க்காத அளவிற்கு
வரலாறு காணாதவாறு
வளமாய் விளைகின்றது...!

சர்வதேச சந்தையில் விற்று
சரிந்து நிற்கும் பொருளாதாரத்தினை
சற்று உயர்த்திடலாமோ..???

சமரச பேச்சுவார்த்தைநடக்கின்றது
சத்தமின்றி என்புகளை நாடு கடத்திட....

இறந்தவர்கள் வாழ்வதாய்
இருப்பவர்கள் தேடி அலையும் தேசத்தில்
தோண்டி எடுக்கப்படும் இவர்கள்
தொன்மையான தொல்பொருள் சான்றுகளா??


யார் யாரோ...?
யார் இவரோ...?
யார் அறிவார்கள்...?

கொத்து கொத்தாய் மனித என்புகளை
சொத்தாக கொண்ட இலங்காபுரிக்கு
"இந்து சமுத்திரத்தின் முத்து"
நன்றாகவே பொருந்துகின்றது...!




Sunday 26 January 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 4 )

குறிப்பு : இந்த தொடரின் பாகம் நான்கும் வெளிவருகின்ற இந்த ஒரு வார கால இடைவெளியில் மதுரன் இதுவரை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லை. கடும் பிரயத்தனத்தின் மத்தியில் இரு நாட்களுக்கு முன்னர் எடுத்துச்செல்லப்பட்ட மதுரனை வைத்தியர் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அதாவது இரத்தத் அழுத்தம் ,இதயத்துடிப்பு போன்ற அடிப்படையான சோதனைகளை மேற்கொள்ளாமலேயே சில மாத்திரைகளை வழங்கியுள்ளார். ஒருவரின் உடல் பலவீனமாக இருக்கும் போது அவரின் நாடித்துடிப்பினை தன்னும் சோதிக்க முற்படாமல் மாத்திரை வழங்கும் அளவிற்கு காவல் துறையினர் வைத்தியருடன் பேசிக்கொண்டதாகவும் மருத்துவமனை செல்லும் வழியில் இணையத்தில் செய்தி இடப்பட்டது தொடர்பாக மிரட்டப்பட்டது எனவும் தெரிவித்த மதுரனால் இன்று தனது ஒரு கரம் செயல் இழந்திருப்பதாக தெளிவின்றிய குரலால் தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன் அவர் தெரிவித்த இங்கு எழுத முடியாத பல உடல் நிலை அறிகுறிகளை கொண்டு அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிய முடிகின்றது. தனக்கு அச்சுறுத்தல் என்று வெளியேறி தப்பித்து வந்த ஈழத்திற்கே சென்று இறக்க விரும்புவதாக மதுரன் கதறுவதிலிருந்து அவனது உடல்நிலை எவ்வாறான நிலையில் உள்ளது என்பதனை விளங்கிக்கொள்ள முடிகின்றது . 

அத்துடன் இந்த தொடர் எழுதும் வரை  இந்த தொடரில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பல மிரட்டல்கள் வந்துள்ளன. ஒரு வேளை இதனை தொடர்ந்து எழுத முடியாத சூழ்நிலைக்குள் சிக்குண்டால் அதாவது  இந்த தொடரின் அடுத்த பாகங்கள் தொடராமல் போனால் மன்னித்துக்கொள்ளவும். ஆனால் பாதுகாப்பினை உறுதி செய்தபின் மீண்டும் நிச்சயமாக தொடரப்படும். இந்த தொடர் இணையத்தில் பிரசுரிக்க முற்பட்ட நோக்கமே மதுரனின் நிலைக்கும் அங்குள்ள ஏனைய ஈழத்தமிழ் உறவுகளுக்கும் தமிழ் அமைப்புக்கள் குரல் கொடுத்து அவர்களின் வெளியேற்றத்தினை விரைவாக்கிட சம்பந்தப்பட்ட அமைப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்கேயாகும். 

ஆனால் ,இந்தக்கட்டுரையின் முதல் பாகத்தில் குறிப்பிட்ட காவல்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன தாதியின்  குற்றச்சாட்டுக்களை அதாவது தமிழில் எழுதியதை மொழிபெயர்த்து தடுப்பு மையத்தில் உள்ள காவல்துறையினருக்கு காட்டிக்கொடுத்த தமிழர்கள் இருக்கும் பாங்காக் குடிவரவு தடுப்பு மையத்தில் இருந்து பல தமிழ் நெஞ்சங்கள் இந்த தொடருக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அங்கு அநியாயம் புரியும் தன்னார்வ நபர்களின் பெயரினையும் வெளியிட்டு தம் அவல நிலையினையும் தொடர்ந்து எழுதுமாறும் கேட்டுக்கொண்டு வருகின்றார்கள். 

காட்டிக்கொடுத்த அந்த நல்ல உள்ளங்களுக்கு மதுரனின் மேல் முன் விரோதமோ பகையோ இல்லை. காவல்துறையினரை கைக்குள் போட்டுக்கொண்டால் தமக்கும் ஏதாவது சலுகை கிடைக்கும் என்ற அற்ப நோக்கமே. இவர்கள் யாவரும் இலங்கை தடுப்பு முகாமில் இருந்து வெளியேறுவதற்காக எத்தனை போராளிகளை காட்டிக்கொடுத்து இங்கு அடைக்கலம் புகுந்தார்களோ..?  அது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.


பாகம் நான்கு தொடர்கின்றது..........


கடற்சூரியனால் நல் வாழ்வினைத்தொட்ட முன்னாள் தாய்லாந்து வாசிகள் இங்குள்ள தமிழர்களை மட்டுமல்ல தாய்லாந்தின் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தினையும்  விட்டு வைக்கவில்லை.

கனடாவிற்கு கப்பலில் சென்று இறங்கியவர்களில், ஏற்கனவே தாய்லாந்தில் ஐ நாவால் அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள், மற்றும் மீள் குடியேற்றத்திற்காக மூன்றாம் நாடுகளின் நேர்முகத்தேர்வுகளை எதிர்நோக்கியவர்களும் அடங்கி இருந்தனர். கனடாவில் வழக்கு கொடுக்கும் போது  அவர்கள் அங்கு ஐ நாவினை குற்றம் சுமத்தி வாக்கு மூலம் கொடுத்திருக்கின்றார்கள். அதாவது ஐ நா தம்மை கவனிக்கவில்லை என்றும் அவர்கள் தம்மை  கைவிட்டதாலேயே  கப்பல் ஏறி வந்தோம் என்றும் திரிபு படுத்தி கூறியிருக்கின்றனர்.உண்மை அது அல்ல. அந்தக்காலப்பகுதியில் ஏனைய நாடுகளினை விட ஈழத்தமிழ் அகதிகளே இங்கு செறிந்து காணப்பட்டனர். இப்போது போல் அல்லாது அன்று உடனுக்குடன் அகதியாக அங்கீகரிக்கப்பட்ட நிலை காணப்பட்டது.காத்திருக்க முடியாமல் அவசரப்பட்டு சென்ற அவர்களின் பேராசையினை மறைத்து ஐ நாவில் குற்றம் சுமத்தி அதன் மேல் கறையினை பூசி தமிழர்களுக்கும் அவமதிப்பை ஏற்படுத்திக்கொடுத்தனர். அவர்கள்   வழங்கிய பொய்க் குற்றச்சாட்டுக்களினால் , தாய்லாந்தில் உள்ள ஐ நாவின் அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் நேரிடையாகவே இங்குள்ள  தமிழ் மக்களை நோக்கிக் கேள்வி எழுப்பியது...??? இன்று வரை ஒரு வித மனக்கசப்பில் ஐ நா உள்ளதற்கு காரணம் கப்பலில் சென்ற தாய்லாந்து அகதிகளின் பொய்யான வாக்கு மூலமே..!

கடற்சூரியனின் தொடுகையின் பின்னர் தாய்லாந்தில் தமிழர்களின் நிலை ஐ நாவில் ஒருவித மதிப்பற்ற தன்மையில் தொடர்ந்தது. தாய்லாந்து அரசிற்கு கனேடிய அரசு அழுத்தம் கொடுக்கும் போது , நிச்சயம் தாய்லாந்து அரசானது ஐ நாவினை நோக்கி வினா எழுப்பாமல் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் தாய்லாந்து நாடானது ஐக்கிய நாடுகளின் அகதிகள் சட்டத்திற்கு அமைவான நாடல்ல. அது அகதிகளை ஏற்றுக்கொள்ளாத ஒரு நாடு. தங்கியிருக்கின்ற அகதிகள் யாவரையும் சட்ட விரோத குடியேறிகளாகவே நோக்குகின்றது. எனவே அகதிகள் என்று வந்தவர்கள் கப்பல் ஏறிச்சென்றதால்  தாய்லாந்து அரசு ஐ நாவினை முறைத்துக்கொண்டதோடு, அகதிகளையும் அணைத்துத்தன் இறுக்கமான சட்டத்தில் கட்டி வைத்துக்கொண்டது.

பாகிஸ்தான், வியட்னாம் இந்தியா ,சோமாலியா, கம்போடியா என்று பல நாட்டு அகதிகள் தாய்லாந்தில் தஞ்சமடைந்திருக்கும் நிலையில் ஈழத்தமிழர்கள் சாட்டிய குற்றத்தால் தலை குனிந்து செல்லும் நிலை இங்கிருந்த மீதித் தமிழர்களுக்கு ஏற்பட்டது. அதை விட ஓரளவு நடமாடி திரியும் நிலையில் இருந்தவர்கள் வீதியில் இறங்கிசெல்லவே அச்சப்பட்டனர்.

ஆம்.! எந்நேரமும் கனேடியப்படைகள் மாறுவேடத்தில் அங்காடிகள் எங்கும் ரோந்தில் அலைந்தன. தமிழனின் முகம் தென்பட்டாலோ அன்றி தங்கி இருக்கும் விடுதிகளில் ஆண்கள் அணியும் "சாரம்" தொங்கினாலோ நிச்சயம் தடுப்பு மையம் அவர்களை வரவேற்கும் நிலை காணப்பட்டது. இது இலங்கையில் இந்திய இராணுவத்தின் அட்டுழியம் நடந்தேறிய போது இடம்பெற்ற சம்பவங்களை மீட்டிச்சென்றது. சாரம் துவைத்து காயப்போட்டால் அங்கு சன்னம் பதம் பார்ப்பது போன்று இங்கு சாரம் தென்பட்டால் காவல் துறை பாயும்.

அது மட்டுமன்றி , தகவல் கொடுத்து உதவிடச் சொல்லி தாய்லாந்து  வாழ் மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது. எவ்வாறு என்று தெரியுமா? வழமையாக ஒரு குற்றவாளியினைக்  கண்டு பிடிக்கவே துண்டுப்பிரசுரம் அச்சடித்து விநியோகிப்பார்கள். ஆனால் இங்கு "ஸ்ரீலங்கன் " என்று தாய் மொழியில்  அச்சடித்து கனேடியப்படைகள்  புறநகர்ப்பகுதிகளில் விநியோகித்து எச்சரிக்கை விடுத்து வைத்திருந்தனர். கனேடியப் பத்திரிகை காரர்களும் தமிழர்களை மோப்பம் பிடித்து அலைந்து திரிந்து நேர்காணல்களை நடாத்தினர்.

இவற்றினை விட பாங்காக் நகரில் உள்ள ஐ நா அகதிகள் மையத்தில் கனேடியப்படைகள் தமது முகவரி தொலைபேசி இலக்கங்களை கொண்ட அட்டைகளை வழங்கி தமக்கு தகவல் வழங்கும் படி விளம்பரப்படுத்தியதுடன், அவ்வாறு தகவல் கூறியவர்களுக்கு சன்மானமாக பணமும் கொடுக்கப்பட்டது தகவல் உண்மையா பொய்யா என்பதனை உறுதிப்படுத்தாமலேயே.


பணம் என்றால் பிணமே வாய் திறக்கும் போது உயிருள்ள நமது நல்ல மக்கள் என்ன செய்வார்கள்.? தமக்கு பிடிக்காதவன் , எதிரி என்று சிலரின் பெயர்களை கொடுத்து பணம் பெற்று விலை உயர்ந்த மடிக்கணினி , புகைப்படக்கருவி என்று தம்மை வளம்படுத்திக்கொண்டவர்களும் அதிகம். சாதாரண மக்களின் பொய்யான வாக்கு மூலமே உண்மையாகும் போது ஒரு தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்பாளரின் அதுவும் பாங்காக் அகதிகள் மையத்தில் கடமையாற்றும் ஒரு மொழி பெயர்ப்பாளரின் தகவல் எத்தகைய அலைகளை உருவாக்கும் என்பதனை மதுரனின் தற்போதைய நிலை விளக்கும்...!

மதுரனுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வது எந்தளவு உயிரானதோ அந்தளவு தமிழ் கலாச்சாரம் , பண்பாடுகளைப் பேணுவதிலும் உயிரானவன்.  பதின் நான்கு வயதில் வீட்டுக்குள் அடங்காமல் அடங்காப்பற்று வன்னியில்   அடி பதித்து வந்தவனன்றோ..?

தாய்லாந்தில் போருக்குப்பின்னரான காலப்பகுதியில் அடக்கி வைக்க யாருமற்று தறி கெட்டுத்திரியும் சில கட்டாக்காலி மனிதர்களை எச்சரிப்பதும் எல்லோருக்கும் அதனை வெளிப்படுத்துவதுமாய் கலாச்சாரம் பேணி வந்த மதுரனின் செயற்பாடுகளால் மனதில் வக்கிரம் வளர்த்து வந்த சில  ஊர் மேயும் மனிதர்கள் சந்தர்ப்பத்தை சரியாகப்பயன் படுத்தி தொடர்புகள் கொடுத்துச்சென்ற கனேடியப்படைகளிடம் இல்லாத உண்மைகளையும் அள்ளி வழங்கி, இருக்கின்ற பொய்களை இனாமாகவும் போட்டுக்கொடுத்தனர்.

கப்பல் கரையினைத்தொட்ட அந்த 2010 காலப்பகுதியிலும் அதற்குப்பின்னும் பெருமளவிலானோர் வீதிக்கு வெளியே சென்று வர அச்சமடைந்து இருந்தபோது ஒரு சிலர் எவ்வித அச்சம் இன்றி தங்கு தடையின்றி வீதிகள் எங்கும் உலா வந்தனர். நன்றாக கனேடிய அரசிடம் கறந்து கடன்களை அடை த்துக்கொண்டனர். முதலில் இது பற்றி அவ்வளவாக நிலாவோ மதுரனோ நம்பிக்கொண்டதில்லை. பின்னாளில் அதாவது 2012 இற்கு பின் நேரடியாக கனேடிய காவல் துறையின் அள்ளிக்கொடுக்கும் மனப்பாங்கை கண்ணுற்று விக்கித்து நின்றனர் இருவரும். (இதன் விளக்கம் தொடரும் தொடர்களில்..)

ஒன்றாகவே வாழ்ந்து , நண்பர்களாய் கை கோர்த்து திரிந்தவர்கள் காட்டிக்கொடுப்பை நிகழ்த்தி தம்மை தாமே தாழ்த்திக்கொண்டனர். கனேடிய காவல் துறையின் சலவையில் நன்றாக துவைக்கப்பட்ட எம்மவர்களின் மூளைகள் கனேடியர்களைப்போன்று வெளிறி விட்டதால் நினைவுகளும் வெளிறி பழகிய நட்பு பாசம் யாவும் வண்ணத்தை இழந்து கொண்டன. இடுப்பில் சொருகிய பணத்தோடு  இளித்துக்கொண்டர்.

ஈழத்தில் இவ்வாறான செயற்பாடுகளும் மனிதர்களும் மதுரன் ஈழத்தில் வாழ்ந்த காலப்பகுதியில் இருந்திருக்கவில்லை. எனவே இங்கு இவ்வாறான மனிதர்களும் செயல்களும் அவனுக்கு புதியதே. அதனால் அவன் வெகு விரைவாக குழியில் தள்ளி விழுத்தப்பட்டான். சுதாரித்துக்கொண்டு எழுந்திருக்க முடியாமல் போனமைக்கு காரணம் தன்னை விட அதிகம் நம்பிய தோள் மேல் கை போட்டு நடந்து வந்த தோழனின் கைகளாக அவை இருந்து விட்டமையால்.  

ஆம்..!
கனடாவில் பெற்றுக்கொண்ட மதுரனின் தகவல்களைக்கொண்டு தாய்லாந்தில் மதுரனை வலை வீசித் தேடிக்களைத்துப் போன கனேடியப்படைகள் மதுரனின் நண்பர்களை விலை பேசிக்கொண்டது. மதுரன் எங்கும் தலை மறைவாகிடவில்லை. குற்றம் புரிந்தால் அன்றி எதற்கு அச்சப்பட வேண்டும். எல்லோரையும் போன்றே ஒரு சட்ட விரோத குடியேறி என்ற நிலை தாண்டி அவன் வேறு ஒரு குற்றமும் புரிந்திருக்கவில்லையே. தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டால் நிறை மாதக்கர்ப்பிணியான நிலா நிர்க்கதியாகி விடுவாள் என்று பாதுகாப்பாக இருந்தானே தவிர ஓடி ஒளிந்திருக்கவில்லை.

கனேடியப்டைகளுக்கு பணத்தை வீசி எறியாமல் துப்புத்துலக்க துப்பில்லை என்பது மதுரனின் விடயத்திலிருந்து அறியப்பட்ட அப்பட்டமான உண்மை. வல்லரசுகளும் மேலைத்தேய அரசுகளும் தீவிரவாதியை சுட்டுக்கொல்கின்றேன் என்னும் பேர்வழியில் எதனை அரங்கற்றினாலும் அங்கு பணம் கொடுத்த மனித விலைப்பொருட்கள் நிச்சயம் தம் பங்களிப்பினை ஆற்றி இருக்கும். வல்லரசு  மனித மூளை யாரை வாடகைக்கு அமர்த்தி காட்டிக்கொடுப்பை வேண்டிக்கொள்ளலாம் என்று தான் சிந்திக்கும். தமிழ் ஈழத்து மூளை போன்று பம்பரமாய் சுழன்றடித்து தனித்து இயங்குவதில்லை. தமிழ் ஈழத்து புலனாய்வாளர்களின் காலின் தூசிக்கு எவரும் சமனாக நிற்கப்போவதில்லை.  இந்த இடத்தில் அதற்காக நான் பெருமிதம் கொள்கின்றேன்.

கிட்டத்தட்ட மூன்று மாத காலத்திற்கு முன்னரே  கனேடிய விசுவாசி ஆன மதுரனின் நண்பனால் மதுரனோடு ஒட்டி உறவாடுவதைப்போன்று அந்த காலப்பகுதியில் எப்படி நடிக்க முடிந்தது? என்று எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.அன்னம் பரிமாறிய நிலாவின் கைகளை நினைத்துக்கொண்டானா அன்றி துக்கத்தில் ஓடி வந்து அணைத்துக்கொண்ட மதுரனின் கைகளை யாவது நினைத்தானா?  பணம் கொடுத்தால் தன்னையும் வெட்டிக்கொல்ல அனுமதிப்பான் போலும்? இப்படியும் மனிதர்களா? இருக்கத்தான் செய்கின்றார்கள். நிச்சயம் நம்பித்தான் ஆக வேண்டும். அந்த நண்பனின் இல்லை நண்பனைப்போன்று நடித்தவனின் முகத்திரை கிழிந்தும் இன்றுவரை அவனை நம்ப நினைக்கும் உள்ளம் கொண்டவனே மதுரன்.

வைத்தியசாலையில் மதுரனின்  முதல் குழந்தை பூமித்தாயவளை   முத்தமிட்டதை  நண்பர்களுக்கு ஆனந்தமாய் மதுரன் பகிர்ந்து கொண்ட அந்த முத்தான தகவலே  தன்னைக்கம்பிச்சிறைக்குள் தள்ளி விழுத்தும் என்பதனை அவன் அந்த இன்பப் பொழுதில் அறிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை.



தொடரும்.............

ஒரு சிறிய குறுந்தகவல் வழங்கிய தமிழன் ஒருவனால் குழந்தை முகம் பார்த்த  சில மணிகளில் குழந்தையினருகே வைத்து கைது செய்யப்பட்ட மதுரனின் தடுப்புக்காவல் அத்தியாயம் அடுத்த பாகத்தில் தொடர்கின்றது..... 



அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 



அடுத்த பதிவிற்கு செல்ல 
http://arasikavithaikal.blogspot.com/2014/01/mv-sunsea-5_31.html

Friday 24 January 2014

தமிழ் போல் நிலைத்து நீ வாழ்க...!


இருள் நீக்கி இனிமை கொடுத்திட
அருள் பெற்று இதழ் விரித்து மலர்ந்தவனே..!
இன்பம் பொங்க வைத்த இசையரசனே....!!!

பரவசம் கொடுத்தாய் பண்பாக்கினாய்
பனி மலரே உந்தன் மலர்ச்சியில்
பறந்தோடும் துன்பங்கள் யாவும்...!

கண்ணீர் கொண்டால் கரையும் சின்னவனே...!
கண்டபடி திட்டும் குழப்படியானவனே...!
கன்னித்தாயவளின் குலக்கொழுந்தே...!

எனை அடக்கி ஆளும் மதுவனே...!
எங்கும் என்றும் எதிலும் என் விம்பமாய்
கனிவாய் சிரிப்பாய் துடிப்பாய் துள்ளுவாய்
எனதாய் உனதாய் உதிரமாய் போனவனே...!


மனதால் குறும்பால் தெய்வமாய் தெரிவாய்
கொஞ்சு தமிழும்  இனிமை பெருகின்றதடா
பிஞ்சு உந்தன் நாவில் புரள்வதால்...
மஞ்சுக்குட்டியே - உன்னை
வித்திட்டவனை மலர்ப்பாதம் தொட்டு - தள்ளி
விலக்கி வைத்தாய்
அகவை மூன்றிலும் - அருகின்றி
அணைத்து முத்தமிட்டு வாழ்த்திட வழியின்றி இதயம்
இணைத்து காற்றில் தூது விடும் எந்தையின் குரலும்
உனக்கென்றால் உயிர் பெறுமே....!

உன் அகவையில்
உள்ளங்கள் மலரட்டும்...!
உயிர் பெற்று ஊசல் ஆடட்டும்..!

உந்தன் சிரிப்பு நான்கு சுவர் தாண்டி
உலக வலம் வரட்டும்...!

எனக்குள் உயிரானவனே - இன்று
உயிர் கொடுக்கின்றாய் எனக்கு...
உன் அகவையால்...
உண்மைகள் துலங்கட்டும்
உறவுகள் கை சேரட்டும்...!

தமிழ் மேல் காதல் கொண்டு
தமிழ் வளர்த்து  தமிழுக்காய் நீ வாழ்க...!!!
தமிழ் போல் நிலைத்து நீ வாழ்க...!

பல்லாண்டு காலம் பண்பிலே சிறந்து
பல்கலையும் கற்று பணிவோடு வாழ்க
இதயம் கனிந்து உச்சி முகர்ந்து வாழ்த்துகின்றேன்..!
வாழ்க வாழ்க வாழ்க...!  

Thursday 23 January 2014

கொடை...!!!

உலகத்தில் உயிரைக்கொடுப்பதுதான்
உச்சமான கொடை என்று அறிந்ததுண்டு...!

வாழ்ந்து கொண்டே மரணிக்கின்றான்
வாழ்நாளை கொடுத்து விட்டான் பிறருக்காக...
வாழ்வின் அரிய தருணங்களை வாரி வழங்கி
வாடிக்கிடக்கும் இவனின் கொடை எங்கு சேரும்?

பணம் கிடைக்கும் என்றால் பிணம் பேசுகின்ற காலத்தில்
பிணமாய் கிடக்கின்றான் பணம் என்பதனை புறந்தள்ளி...!
உறவுகளின் நலன் விரும்பியதால் தன்
நாக்கிற்கு பூட்டு இட்டுக்கொண்டு சாவியினை
தெரிந்து கொண்டே தொலைத்துக்கொண்டவன்...!
கடக்கின்ற கொடுமை வாழ்விற்கும்
களங்கம் அள்ளிப்பூசி அர்த்தமற்றதாக்கி விடுமா...?

புரிந்துணர்வு அற்றோரின் புரிதல்கள்
வதந்திகளாய் அவனை மூச்சுத்திணற
வைக்கின்றன....!
முகவுரையும் முடிவுரையும் இன்றி
நடுவில் கொஞ்சம் மேய்ந்தவர்கள்
விமர்சனம் புரிந்திடத்தகுதியானவரோ?

அவனது கொடை
அவனை அறிந்தவர்கள்
அறிவார்கள்...!

உயிர்க்கவசத்தினை அறுத்து
உயிரினை கொடையாக்கியவன் கர்ணன்..!
உயிரைத்தினம் தினம் அறுத்துக்கொடுக்கின்றான் இவன்...!
உயிர் கொண்ட இவன் விசுவாசிக்காக...

உண்மையும் இவனோடு சேர்ந்து தடுப்புக்காவலில்
உறைந்து கிடக்கின்றது நெடுநாளாக....!

உயிரை இவன் துறந்திட்டாலும்
உண்மை தன் உயிரைக்கொடையாக்கி
உலகம் எங்கும் உரத்துச்சொல்லும் அவன்
உயிர்க்கொடையினை....!


அரசி நிலவன்
  

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 3 )

எதிர்பார்ப்புக்களுடன் விடிகின்ற பொழுதுகளாக தொடர்ந்து விடிகின்ற அந்த விடியல்கள் அன்றும் அப்படியே விடிந்தது. அவ்வாறு நிலாவும் மதுரனும் எண்ணி புலர்ந்த காலையின் புத்துணர்ச்சியினைப்போன்றே புதுப்பொலிவுடன் தம் அன்றாட வேலைகளில் மூழ்கிப்போயினர். அனால் உள்ளங்களோ  ஒரு தொலை பேசி அழைப்பிற்காக ஏங்கித்தவித்தது. அந்த நெடுநாள் எதிர்பார்ப்பு தொலைபேசி அழைப்பு அன்று வந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த செய்திக்கு எதிர்மாறான தகவலோடு அன்று மதியம் இடியென இறங்கிய ஒரு செய்தியால் இதயம் உடைந்து போயினர் நிலாவும் மதுரனும்.   ஆம் தொடர்புகள் அற்றுப்போன    அவர்களின் எதிர்கால கனவு , வாழ்க்கை யாவற்றையும் தாங்கிய கடற்சூரியன்(MV Sun sea) எல்லை தாண்டி இவர்களைத் தவிக்க விட்டுச் சென்று கொண்டிருப்பதாக வந்த அந்தச் செய்தி கேட்டு நிலைகுலைந்த உள்ளங்கள் கிட்டத்தட்ட மணிக்கணக்கில் அமைதியினை பேணிக்கொண்டு இருந்தன.

ஆனி மாதம் 2010 இற்குப்பின் எதுவும் அறியாமல் தொடர்புகள் அற்றுப்போன நிலையில் ஏறத்தாழ இருபது நாட்களாக  துடித்து பதைத்து ஒவ்வொரு விடியலையும் இன்று அழைப்பு வராதா ? வராதா? என்ற ஏக்கங்களுடன்  நம்பிக்கையில் ஊசலாடிக்கொண்டு இருந்தவர்களுக்கு கப்பல் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கின்ற செய்தி எந்த வகையான தாக்கத்தினை உண்டு பண்ணியிருக்கும் என்பதனை அனுபவித்து பார்த்தால் அன்றி வெறும் எழுத்துக்களால் எழுதி விட முடியாது.

கப்பல் புறப்பட முன்னரே மூன்று மாதங்களுக்கு மேலாக பசுபிக் பிராந்திய கடற்பரப்பில் தரித்து நின்ற சமயங்களில், அது பல நாடுகளின் கண்ணில் பட்டு, ஒரு மாத காலமாய் செய்திகளாய் இணையத்தினையும் பத்திரிகைகளையும் ஆட்கொண்டு இருந்தது. ஆனால் அது ஆஸ்திரேலியா செல்லவிருப்பதாக எச்சரிக்கைச்செய்தி அடிக்கடி இணையத்தில் வெளியாகிய வண்ணம் இருந்தது. அந்தச் செய்திகளை கண்ணுறும் போதெல்லாம் நிலாவும் மதுரனும் நெஞ்சம் பதைத்துப்போவதுண்டு. எங்கே நாம் போக முடியாமல் போய் விடுமோ? என்ன செய்வது ? என்றெல்லாம் பல இரவுகள் புலம்பியதுண்டு. அவ்வாறு புலம்பியவர்கள் கப்பல் தம்மை விட்டுச் செல்வதை அறிந்ததும் எவ்வாறு இதயம் நொறுங்கிப் போயிருப்பார்கள் என்பது அவர்களுக்கே மட்டும் தெரிந்த வலியாகும்.  .

இன்றோ நாளையோ என்று அந்த விடுதியில் தங்கியிருந்த அவர்கள் ஒவ்வொரு நாளும் செலுத்த வேண்டிய வாடகையினையே பெரும் சிரமத்தில் கடினப்பட்டு  செலுத்தி நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்பது முற்றிலும் சூனியமாகவே தென்பட்டது.  கையில் பணம் இல்லை அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விக்கித்து நின்ற அவர்கள் தம்மை விட தம்மோடு அடைக்கலம் அடைந்திருந்த அந்த சிறுவர்களை நினைத்து கவலைப்பட்டுக்  கொண்டது மட்டுமன்றி கரையோரத்தில் தனித்து விடப்பட்ட நிலாவின் சகோதரனை நினைத்து தேம்பி தேம்பி அழுதனர்.

கனடாவில் திருமணம்  செய்து கொண்டு வாழும் கனவில் இருந்த மதுரனை நிலா ஆறுதல் படுத்த முடியாமல் திணறினாள். ஐ.நாவின் துணையினால் எங்காவது செல்வோம் என்று அன்றிலிருந்து நம்பி நம்பி அந்த நம்பிக்கைக்கு தீனி போட்டபடி இன்றும் ஐ நாவின் கால்களைப் பிடித்தபடியே தொங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆம், அந்த செய்தி கப்பல் தனது  பயணத்தை ஆரம்பித்த  2010 ஆடி 5 இலிருந்து பத்து நாட்கள் கழித்து, அதாவது 2010 ஆடி 15 அளவில் அறியப்பட்டது. கூடவே இருந்த இரு சிறுவர்களும் பெண்ணும் செய்தியினை கேட்டு அழுத வண்ணம் இருந்தனர். அந்தச் சிறுவன் ஒருவன் நிலாவினை பார்த்து,

"அன்ரி நாங்கள் ஒரு போட் எடுத்து கலைச்சிட்டு போய் கப்பலில் ஏற முடியாதா? மாமாவும் அத்தையும் என்னை விட்டிட்டு போயிட்டினமா??"


 கண்கள் கலங்க கேட்ட அந்த எட்டு வயதுச் சிறுவனை ஆறுதல் படுத்த முடியாமல் திகைத்து நின்ற நிலா,மதுரனின் நிலை எண்ணி மிக்கக் கவலையடைந்தாள். மதுரன் பல மணி நேரமாக அமைதியாக இருப்பதை கண்ணுற்றுக் கலக்கமடைந்தாள். அவனை உலுப்பி

"என்ன ஏதும் கதையுங்கோவன்.. ஏன் இப்பிடி இருக்கிறீங்கள்...? "

என்று கலங்கி அழுதவளை நிமிர்ந்து பார்த்த மதுரனின் கண்களில் குளமாய் கண்ணீர்...!

"அவசர அவசரமாய் உன்னை இங்கு வர வைச்சு உன் படிப்பைக்குழப்பி  உன் இலட்சியத்தினை குழப்பி கடைசியில் நடுத்தெருவில் விட்டு போட்டனே...நான் "

என்று சொல்லிச் சொல்லி குலுங்கி அழுதவனை நிலா ஆற்றுப்படுத்த பெரும் சிரமப்பட்டாள்.

"இது தான் ஒரு வழியா..? எத்தனையோ வழி இருக்கின்றது . நாங்கள் தான் UNHCR இல்  பதிந்து இருக்கின்றோம். எங்களை அவர்கள் ஏதும் நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் தானே..."

என்ற நிலாவினை நோக்கி நிமிர்ந்த மதுரன்

"என்ன நிலா இரண்டு வருசமா  நான் அதைத்தானே செய்து கொண்டு இருந்தன். இவ்வளவு நாளும் நடக்காததா இனி நடக்க போகின்றது..? "

என்றவன்  மீண்டும் கலங்கத் தொடங்கினான். ஒருவாறு பல நம்பிக்கைகளை வளர்த்து அவனை நிலா  தேற்றினாள். அடுத்த நாள் வரை எல்லோருமே குழம்பிப் புலம்பிக்கொண்டே   இருந்தனர்.

ஏற்கனவே முதல் தொடரில் கூறிய நிலாவின் சகோதரன் கரையோரத்தில் நின்றிருந்தான். அவனும் பணம் கொடுத்தபடி பயணிகளில் ஒருவனாக நின்று கொண்டு உடன் பிறப்பிற்காக காத்திருந்து கடைசியில் கப்பலினைக் கை விட்டவனாக அங்கிருந்து இருப்பிடம் திரும்பி இருந்தான். அவன் தனது உள்ளத்தில் கவலைகளையும் கண்களில் கண்ணீரினையும் அடக்கி வைத்திருந்தாலும் அவனது வேதனைகளை நன்கே அறிந்தாள் நிலா. தொலைத்தொடர்பு கற்கை நெறி கற்றுக்கொண்டிருந்தவனை இடை நடுவில் குழப்பி இங்கு கொண்டு வந்து விட்டோமே என்று உள்ளம் குறு குறுத்துக்கொண்டிருந்தது.

இவர்கள் மட்டுமன்றி பாங்காக்கில் கிட்டத்தட்ட நூறு பேர் வரை இவ்வாறு கப்பலினைத் தவற விட்டு கண்ணீரோடு செய்வதறியாது நின்று புலம்பினர். அதில் இறுதி யுத்த களத்தில் மண்ணுக்காய் வித்தான தளபதி ஒருவரின் மனைவியும் இரு பச்சிளம் பாலகர்களும் அடங்கினர். போராளிகளையும் மாவீரர் குடும்பங்களையும் இலவசமாக உள் வாங்கிய கப்பலுக்குச் செல்லுவதற்காக அழைப்புக்கள் வந்த போது  இறுதி யுத்த களத்தில் நேரடியாகப்பதிக்கப்பட்ட அந்த தளபதியின் மனைவி   நச்சு வாயுத்துகள்களின் சுற்றோட்டத்தால் மூச்சு விட சிரமப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சகோதரி மீண்டு வந்த சமயம் கப்பல் தனது பயணத்தினை ஆரம்பித்து இருந்தது. அதன் பின்  உதவி புரிந்த மதுரனால் தொடர்ந்து உதவி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அந்த உன்னதமான மாவீரனின் மனைவி தவற விடப்பட்ட அந்த சந்தர்ப்பத்தால் இன்று உடலில் இதயத்திற்கு அருகாமையில் அடிக்கடி வந்து முட்டிச்செல்லும் எறிகணைச்சிதறல் மற்றும் முகத்தில் நரம்புகளில் படிந்த நச்சு வாயு துகள்களினால் தினம் வலியோடு போராடுவது மட்டுமன்றி தன் குழந்தைகளுக்காக தையல் இயந்திரம் மிதித்து அன்றாட சீவனத்துக்கும் போராடுகின்றார். (தினம் தினம் மாவீரர்களின் புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பகிர்ந்து மெய் சிலிர்க்கும் புலத்து உறவுகள், ஈழத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அந்த மாவீரர்களின் வேர்கள் கிளைகளான குடும்பத்தினரின் நிலையினை பகிர்ந்து கொண்டதுண்டா அன்றி நினைத்துப்பார்த்த்துண்டா..?)

இப்போதோ அப்போதோ என்று பயணம் இடம்பெறும் என்பதால் தங்கி இருக்க நிரந்தரமாய் அவர்கள் ஏற்பாடு செய்யாமல் தற்காலிக தங்குமிடத்தில் தங்கி இருந்ததால் இருந்த பணமெல்லாம் செலவாகி இருந்தது. ஒரு கட்டத்தில் தங்குமிடத்திற்கு பணம் செலுத்த முடியாமல் இரவிரவாய் வீதி எங்கும் அலைந்து திரிந்தார்கள். இரவிரவாக அங்காடிகளிலும் இணையக் கடைகளிலும் பொழுதைப்போக்கி கொண்டு இருந்தார்கள். அதை விட தாய்லாந்து காவல் துறையின் கண்களில் படாதவாறு ஓடி ஒளிந்து திரிவதே பெரிய சவாலாக இருந்தது. எந்த நேரமும் வீதிகளில் உலா வரும் காவல்துறை மற்றும் குடிவரவு துறையினரின் வாகனங்களை கண்ணுற்றால் எவ்வாறு மின்னல் வேகத்தில் மறைந்து கொள்கின்றார்கள் என்றே அறிய முடியாது. ஏதாவது பொருள் கொள்வனவு செய்யும் போது இது நேர்ந்தால் மீதிப்பணம் பெற்றுக்கொள்ளாமல் ஓடி ஒளிந்து கொள்ளும்  சூழ்நிலைகள் நிறைந்த கால கட்டம் ஆகும்.

சசி என்பவர் காணாமல் போய் இருந்தார். இது இலங்கை போல் அல்ல. சுயமாகவே காணாமல் போய் இருந்தார். அதாவது தாய்லாந்தினை விட்டு தப்பித்து சென்று விட்டார். ஏனென்றால் பணம் பெற்று கைவிடப்பட்ட பலர் அவரைத்தேடி அலைந்து கொண்டிருந்தனர்.  சசியினை கோபித்து என்ன செய்வது எமது தலை எழுத்து இப்படி என்று தம்மை தாமே சமாதானப்படுத்திக்கொண்ட மதுரன் நிலா இருவரும் அடுத்து நிலாவின் சகோதரன் மூலம் பணம் ஒழுங்கு படுத்தி இருப்பிட வசதி செய்து கொண்டார்கள்.

இதற்கிடையில் ஈழத்தில் உள்ள நிலாவின் உறவுகள் அறிந்து மிக்க கோபமும் கவலையும் அடைந்தனர். நிலாவும் மதுரனும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஓரளவு விளங்கி கொண்டதால் அதாவது என்ன காரணத்திற்காய் தாம் கப்பலினை தவற விட்டோம் என்பதனையும் எந்த சூழ்நிலையில் இங்குள்ளவர்களை தவிக்க விட்டு கப்பல் பயணத்தினை ஆரம்பித்திருக்கும் என்பதனை ஊகித்துக்கொண்டதால்  சராசரி மனிதர்களை போன்று கோபத்தில் சம்பந்தப்பட்டவர்களை திட்டியோ பேசியோ காலத்தினை வீண் அடிக்காது அடுத்த கட்டமாக தம் கூட உள்ளவர்களை எப்படியாவது அவர்களின் உறவுகளிடம் ஒப்படைக்க போராடினார்கள்.

அந்த நேரத்தில், கப்பல்  ஏற்பாட்டாளர்கள் சிலர் மீண்டும் பணம் சேகரித்து வேறு வழியில் கப்பலில் அனுப்பலாம் என்று சில நம்பிக்கை உறுதிகளை கொடுத்து மீண்டும் ஏற்பாட்டினை ஆரம்பித்தனர். அந்த வகையில் முதற்போன்றே பல பயணிகள் இலங்கையில் இருந்து உள்வாங்கப்பட்டனர். இருந்தாலும் நிலாவும் மதுரனும் இதில் முழு நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்கள் ஐ நாவினை முற்றிலுமாக  நம்பியிருந்தார்கள்.ஆனால் முதற்போன்று உதவிகள் செய்து நின்றிருந்த பயணிகளுக்கு இருப்பிட வசதிகள் உணவு வழங்கல்களை ஏற்பாட்டாளர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க செய்து கொடுத்தார்கள். காரணம்,  கூடவே  இருந்த அந்த இரு சிறுவர்களையும் பெண்ணினையும் அனுப்பி வைக்கலாம் என்பதாலாகும். இருந்தாலும் அவர்களையும்  ஐ.நாவின் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தில் தஞ்சம் கோரியவர்களாக விண்ணப்பித்தனர். இந்நிலையில் தவற விடப்பட்ட பல பயணிகள் மீண்டும் இலங்கைக்குத் திரும்பியும் இருந்தனர்.

ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் நிலாவிற்கான நேர்முகத்தேர்வினை விரைவாக  நடாத்தி இருந்ததுடன் கர்ப்பமான அவளின் மருத்துவமனை செலவினையும் பொறுப்பேற்றுக்கொண்டது. மிகவும் மனிதாபிமான முறையில் கரிசனமாக அந்த காலப்பகுதியில் ஐ நா தமிழர்களுக்காக செயற்பட்டுக்கொண்டிருந்தது.  

இந்த வேளையில் ஆவணி 13 அன்று (13/08/2010) கடற்சூரியன் கனடாவின் கரையினைத்தட்டியது. இணையத்தில் இச்செய்தியினைக் கண்ணுற்றதும் கலங்கி நின்றன உள்ளங்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு தெரியாமல் விம்மிய காட்சி இன்றும் நெஞ்சினைத்துளைத்து நெருஞ்சி முள்ளாய் குத்துகின்றது. அது வரை கப்பல் தம்மை கை விட்டுச் சென்றது தான் பெரிய துன்பம்  என்று நினைத்திருந்த அவர்களுக்கு அதற்குப்பின் அவர்கள் வாழ்வில் விழுந்த அடிகளும் பிரச்சினைகளும் கப்பலைக் கை நழுவ விட்ட கவலையினைக்  கடுகு போல் ஆக்கி மலையாய்  இன்றும் சூழ்ந்த வண்ணம் இருக்கும் என்று அவர்கள் அன்று நினைத்திருக்க வில்லை.



ஆம்...! கரையினைத்தொட்ட கப்பலில் இருந்தவர்கள்  கரையில் இறங்குவதற்குள் , கனேடியப்படைகள் தாய்லாந்தினை முற்றுகை இட்டுக்கொண்டன. தாய்லாந்தில் இருந்து கப்பல் வந்தது என்ற காரணம் மட்டுமல்ல. கப்பலில் பயணித்த, அதாவது தாய்லாந்தில் வாழ்ந்து , தாய்லாந்து வாழ்வினை நன்கு அறிந்து கொண்ட சில நல்ல உள்ளங்கள் வாரி வழங்கிய தகவல்களை நம்பி இங்கு இன்றும் அலைந்து திரியும் கனேடியப்படைகளால் வாழ்வினைத் தொலைத்துப்போனவர்கள் ஏராளம்.

தமிழர்களுக்கேயான ஒரு சாபக்கேடே " காட்டிக்கொடுப்பு " என்பதாகும். வரலாறுகளும் நடைமுறைகளும் இவற்றை நன்கு எமக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி வந்திருக்கின்றன. காட்டிக்கொடுப்பு என்ற ஒற்றை வார்த்தையில் கடற்சூரியன் காவிய காவிகள் (இந்த அடைபதம் தாய்லாந்தில் வீதி வீதியாக அலைந்து பட்டினி கிடந்து அதிஸ்டவசமாக  இலவசமாக கப்பலேறியவர்களுக்கு உரித்தானது)  செய்த அநியாயத்தினை அடக்கி விட முடியாது. காரணம் உண்மையினை காட்டிக்கொடுத்தால் தான் அது காட்டிக்கொடுப்பு. ஆகும்.ஆனால் இவர்கள் அரங்கேற்றிய "இதனை" எந்தப்பதத்தில் அடக்குவது என்று அகராதியிலும் தேடிக்களைத்து பொருள் அற்ற பதத்தில் இணைக்கின்றேன்.

கடற்சூரியன் கரையினை தொட்ட ஆவணி 2010 இற்கு பின்னர் சடுதியாக சுற்றி வளைக்கப்பட்ட அந்த தொடர்மாடிக்குடியிருப்பில் எஞ்சிய மனிதர்களாக ஒரு குடும்பம் மட்டும் இருந்தது. அவர்கள் எப்படித் தப்பித்துக்கொண்டார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் அந்த குடும்பத்தினர் தாம் பணம் கொடுத்து தப்பியதாக எல்லோரையும் நம்ப வைத்து நாடகம் ஆடியது. தாய்லாந்து காவல் துறையினர் ஒன்றும் இலங்கைக்காவல் துறை அல்ல. பணத்திற்கு விலை போவதற்கு. பணம் கொடுக்க முற்பட்டால் அதற்கும் ஒரு தண்டனை காத்திருக்கும்.அத்துடன் அவர்கள் தனித்து இயங்கவில்லை. கனேடியப்படைகளின் கண்காணிப்பில் வந்திறங்கி  என்ன? ஏது? என்று விசாரிக்காமல் அங்கு தங்கியிருந்த இரு நூறுக்கு மேற்பட்ட அத்தனை தமிழர்களையும் அள்ளி அள்ளி குடிவரவு தடுப்பு மையங்களில் அடைத்துக்கொண்டது.


விசா இருந்தவர்களையும்  வாகனங்களில் நாய்களைப்  போன்று கொண்டு சென்றார்கள். பெண்களையும்  கர்ப்பிணிகளையும்  குழந்தைகளையும்  கதறக் கதற வான்களில் மனிதாபிமானமற்ற முறையில் அள்ளிச்சென்றார்கள். பனங்கிழங்கு போன்று அடுக்கப்பட்ட நிரை நிரையாய் ஒரு குறுகிய இடத்தினுள் நெரிசலில் நோய்வாய்ப்பட்டு சீரழிந்தவர்கள் பலர். யாரும் சென்று பார்க்கவும்  முடியாது. உதவிடவும் முடியாது. இலங்கை கடவுச்சீட்டிற்கு விசா இருந்தாலும் அங்கு சென்று அகதிகளைப்பார்வையிட  அனுமதியும் இல்லை. இலங்கை அகதிகளை வேறு யாரும் சென்று பார்வையிடவும் அந்த நேரத்தில் அனுமதி இல்லை. அந்தளவிற்கு சட்டத்தினை இறுக்கமாக இறுக்கி வைத்திருந்தார்கள்.


 இலங்கையில் தன்னும் பயங்கரவாதி என்று முத்திரை குத்தி நாலாம் மாடியில் அடைத்தாலும் உறவுகள் சென்று பார்வையிட முடியும். இங்கு என்ன குற்றம் செய்தார்கள் என்ற கேள்வியே கேட்க முடியாத நிலை. கேட்பதற்கும் நாதி இல்லை.

நிலா தாய்லாந்தினை அடைந்ததுமே மதுரன் அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றம் பெற்றுச்சென்றிருந்தமையால் மதுரன் அந்த சுற்றி வளைப்பில் கைதாகவில்லை. இருந்தாலும் அந்த ஒட்டு மொத்த உறவுகளுக்காக மனம் வெதும்பினான்.

கனேடிய அரசானது  ஒரு சலுகை கொடுத்தது. அதாவது முகவர்கள் பற்றிய தகவல் வழங்கினால் அகதி அந்தஸ்து கொடுக்கப்படும் என்றும் கொடுக்காதவர்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்கப்பட மாட்டாது என்றும். தமக்கு அங்கு அகதி உரிமை கிடைக்கும் என்ற எலும்புத்துண்டிற்கு ஆசைப்பட்டு இல்லாத உண்மைகளை எடுத்துச் சொல்லி இருந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு அகதி அந்தஸ்தும் கொடுக்கப்பட்டு விட்டது. தாய்லாந்தில் இன்னும் ஒரு கப்பல் வர இருக்கின்றது. அதற்காகவே அங்கு தமிழர்கள் காத்திருக்கின்றார்கள் என்று ஐ நாவினை நம்பிக்  காத்திருந்த எத்தனையோ உறவுகளின் வயிற்றில் அடித்து அவர்களின் வாழ்வில் உதைத்துக் காட்டிக்கொடுத்த அவர்களால் வாழ்வினைத் தொலைத்து இன்றும் வருடக்கணக்காக குடியேற்றத் தடுப்பு மையத்தில் வாடும் உறவுகளின் நிலை இங்குள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திடப் போவதில்லை.

அத்தோடு தாய்லாந்தில் இருந்த அவர்களுக்கு  தெரிந்தவர்களின் தொலை பேசி இலக்கங்களினைக்கொடுத்து  அவர்கள் யாவரும் முகவர்கள் என்றும் அந்த நல்ல மனிதர்கள் கொடுத்த பொய்யான தகவல்களை கொண்டு நிலாவினையும் மதுரனையும். இன்றும் துரத்திக்கொண்டு இருக்கின்றது கனடா அரசாங்கம். அது மட்டும் அன்றி இங்குள்ள சில தமிழர்களை பணத்தால் கொள்வனவு செய்து கொண்ட கனேடிய அரசு, தமக்கு சாதகமான பொய்களை நம்பிக்கொண்டிருக்கின்றதே அன்றி உண்மைகளை ஏற்றுக்கொள்ள அது தயாராக இல்லை.

மதுரனைப்போன்று அல்லாமல் பலர் நேரிடையாகவே பயணிகளிடம் பணம் பெற்று கப்பலுக்கு கொடுத்தவர்களும் பணம் பெற்றுக்கொண்டு கப்பலில் ஏற்றாமல் ஏமாற்றியவர்களும் என்று தாய்லாந்தில் இன்னும் நல்லவர்களாக உலவிக்கொண்டு இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களை யாரும் காட்டிக்கொடுக்கவும் இல்லை. அவர்களை எவரும் கைதும் செய்யவில்லை. ஏனென்றால் அவர்களே தாமாகவே வலிந்து சென்று தகவல் வழங்குகின்றோம் என்று கனேடிய அரசின் நன்மதிப்பை பெற்று போலியாக உலவிக்கொண்டு இருக்கின்றனர்.

கடலில் ஏற்பட்ட கொந்தளிப்புக்களை எதிர்கொண்டு கனடாவை முத்தமிட்ட கடற்சூரியனால் தரையில் ஏற்பட்ட கொந்தளிப்பு அலைகள் தாய்லாந்தில் இன்னும் அடங்காமல் ஆர்ப்பரித்துக்கொண்டு தான் இருக்கின்றன. அலையில் சிக்கிய துரும்பாக அலைக்கழிக்கப்படும் உறவுகள் மூச்சுத்திணறுவது அலைகளால் அடிக்கப்பட்டு மட்டுமல்ல, வசை மொழிகள் , வதந்திகள் போன்ற கழிவு நீர்த்தொட்டிக்குள் விழுந்து எழுவதாலுமே..!

முன்னர் பல வெளிநாட்டு ஆட்கடத்தல் முகவர்களால் பணம் பெறப்பட்டு ஏமாற்றப்பட்ட பல தமிழர்கள் நிர்க்கதியாகி நிற்பதைக்  கண்ணுற்று அவர்களை இங்கிருந்த கப்பல் ஏற்பாட்டளர்களிடம் பரிதாப்பட்டு பரிந்துரைத்து  இலவசமாய் சிலர்  ஏற்றி விட்டார்கள். அவர்கள் கனடா சென்று அங்கு அள்ளிக்கொட்டிய பல தகவல்கள் உண்மையற்றது என்பது அவரவர் மனச்சாட்சிகளுக்குத்தெரியும். ஆனால் மனம் என்ற ஒன்றே இல்லாத போது பிறகு எப்படி அதற்கு ஒரு சாட்சி இருக்க முடியும்.

மதுரன் அடைக்கலம் கொடுத்திருந்த அந்த இரு இளசுகளும் தம்மை ஏற்றி அனுப்பியது மதுரன் என்றும் அவனின் தொலை பேசி இலக்கங்களையும் கனேடிய படைகளுக்கு கொடுத்து அனுப்பியும் வைத்திருக்கின்றார்கள். அது மட்டுமா? நெஞ்சு வலியால்  அவஸ்தை பட்ட யுவதியினையும் அவளது குடும்பத்தினையும் இன்னோரன்ன போராளி மாவீரர் குடும்பங்களையும் பணச்செலவின்றி இலவசமாக அனுப்பி வைக்க  சசியிடம் பரிந்துரைத்து அனுப்பி உதவிய  மதுரனின் அங்க அடையாளங்கள் உட்பட புகைப்படங்களையும் வழங்கி , இன்று வளமாக வாழும் அந்த நல்ல உள்ளங்களுக்கு மதுரனின் இன்றைய நிலை நன்கு தெரியும். நல்ல மனம் படைத்த மதுரனுக்கு ஏன் இந்த நிலை என்று யாரும் எண்ணக்  கூடும். நிச்சயமாக அதற்கும் பதில் உண்டு. நன்றி மறந்த துரோகிகளுக்கு உதவியதாலேயே மதுரனுக்கு இந்த தண்டனை.

மாலை மாற்றிக்கொண்ட அந்த நாளில் கூட கோயிலில் இருந்து திரும்பிய தும் மதுரன் அந்த நன்றி கெட்ட மனிதர்களுக்காக ஓடி ஓடித் திரிந்து நிலாவின் உறவுகளிடம் நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டவன். நிலாவின் உறவுகள் விமானமேறிய ஒரு நாள் மட்டுமே மதுரனும் நிலாவும் சந்தித்து கொண்ட இரவு. உணர்வுகளும் கலந்து  அன்றே பிரிந்தும் கொண்டன. மனித வாழ்வில் நிகழ்கின்ற முக்கிய தருணம் திருமணம். எத்தனையோ பெரிய மனிதர்களாக இருந்தாலும் திருமணத்திற்கு என ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட ஓரிரு நாட்களையாவது தமக்காக வாழ்வார்கள். அது போராளியாக அல்லது ஒரு இராணுவ வீரனாகக்கூட இருந்தாலும் வாழ்வில் ஒரு முறை மலரும் அந்த பொன்னான தருணங்களை தவற விடமாட்டார்கள். ஆனால் மதுரனோ முகம் தெரியாத உறவுகளுக்காக தன் வாழ்வின் அத்தனை பொன்னான தருணங்களை இழந்து கொண்டதோடு, இன்னும் இழந்து கொண்டிருக்கின்றான்...!

வருடத்திற்கொரு முறை சேவையில் வந்து போகின்ற கனேடிய அதிகாரிகள் தமது திறமையினை  தமது மேல் அதிகாரிகளுக்கு வெளிப்படுத்துவதாக எண்ணி ஒவ்வொரு வருடமும் வந்து கைது செய்வதும், பின் புலனாய்வு செய்வதும் பின் விடுவிப்பதுமாக தமது சேவையினை நீடித்துக் கொள்ளும் அதே நேரம் மதுரனின் துன்பியல் வாழ்வினையும் நீடித்துச்செல்கின்றார்கள். சட்ட ரீதியாக கனேடிய அரசிடம் இருந்து ஊதியம் பெறும் தாய்லாந்து அதிகாரிகளும் தம் சேவையினை செவ்வனே செய்து வருகின்றார்கள்.

கடற்சூரியனின் உண்மையான சூத்திரதாரியான மிகப்பெரிய செல்வாக்கு மிகுந்த, பல கால அனுபவம் மிக்க  அந்த நபர்  நாட்டை விட்டு தப்பி ஓடி தலை மறைவாய் வாழுகின்றார். அவரை  வலை வீசிப்பிடித்து கைது செய்யத் துப்பில்லாத கனேடியப்படைகளுக்கு அப்பாவியான ஒரு குடும்பத்தை சிதைக்க மட்டுமே திறமையுள்ளது. அதுவும் இன்னொரு நாட்டில் வாழ வழியற்று தஞ்சமடைந்து இருக்கும் ஏதிலிகளை அந்த நாட்டின் கடுமையான சட்டத்தில் சிக்க வைத்து வதைத்து இன்பமடையும் கனேடியப்படைக்கு துணிச்சலும் இல்லை விவேகமும் இல்லை. விவேகம் இருந்திருந்தால் என்றோ முக்கிய சூத்திர தாரிகளை இனங்கண்டு தண்டனை கொடுத்திருக்க முடியும். ஒருவேளை பண பலம் கொண்ட அந்த மிகப்பெரிய மனிதனின் வலையில் இவர்கள் விலை பெற்று விட்டார்களா? அல்லது இருவருக்குமிடையில் ஏதும் ஒப்பந்தம் செய்யப்பட்டு கண் துடைப்பிற்காக யாரோ ஒருவனை இவர்கள் குற்றவாளியாக்க காட்ட வேண்டும் என்பதற்காக மதுரனை பயன்படுத்துகின்றார்களா?

அப்பாவியை சிறைக்குள் தள்ளியவர்கள் இதே  தாய்லாந்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கின்றபோதே இன்னொரு கப்பல் செல்கின்றது என்று பல ஈழத்தமிழர்களிடம் பணத்தைச்சுருட்டிக்கொண்டு அவர்களை மலேசியாவில் நிர்க்கதியாக்கி விட்டு அந்தப்  பணத்தில் ஐரோப்பிய நாட்டுக்கு தப்பிச்சென்ற ஒரு கடத்தல்காரனை கோட்டை விட்டு வேடிக்கை பார்த்தது ஏன்..? பணத்தால் விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட  தமிழ் இனத்துரோகிகள் அந்தத் தகவலையும் வழங்கி இருக்க வேண்டுமன்றோ? பணம் பொய்யினை உண்மையாக்க வல்லது மட்டுமன்றி உண்மையினையும் பொய்யாக்கிட வல்லது என்பது கனேடிய காவல் துறைக்கு எப்படி விளங்காமல் போனது??

கப்பலோடு நேரடியாக தொடர்பு பட்டது எனக் கைது செய்யப்பட்ட ஆறு குற்றவாளிகளில் ஒருவரைத் தவிர ஏனையோரை பணப்பிணையில் விடுதலை செய்து நடமாட விட்டு வைத்திருக்கும் கனேடிய அரசாங்கம் எதற்காக கப்பலினைத்தவற விட்டு நிர்க்கதியாகி நின்று ஐ நாவில் அகதியாக தஞ்சமடைந்த அப்பாவிகளை விரட்டி அடிக்கின்றது.கனேடியச்சிறையில் வாடும் அந்த ஒருவரும்  மதுரனைப்போன்று அவரும் அவரது  மனைவியுமாக கப்பலில் எறிச்செல்வதற்காக எரிபொருள் பொறியியலாளராக அந்தக்கப்பலில் பயணம் செய்த ஒரு நிரபராதியே. தனியார் சட்டவாளர் ஒருவரை நியமித்து வழக்காட அவரிடம் பணம் இல்லாத காரணத்தினால் கனேடிய அரச சட்டவாளர் ஒருவரை நம்பி வழக்கினை நகர்த்தி செல்வதால அவரது வழக்கு இன்னும் நீண்டு செல்கின்றதே அன்றி பிணையில் விடுவிக்க தன்னும் அனுமதி இல்லை. தாய்லாந்தில் மட்டுமன்றி கனடாவிலும் தொடரும் அலை உயிர் என்னும் கடல் வற்றினாலும் ஓயாது போலும்.

 கனடாவினைப்போன்று தாய்லாந்தில் அவ்வாறு ஒரு  வழக்கினை பதிவு செய்து கனேடிய அரசிற்கு எதிராக வழக்காட கூட முடியாது. வழக்குத் தொடுத்து நீதிமன்றம் செல்ல முடியாத நிலை ஒரு காரணம் என்பதோடு சந்தர்ப்ப சூழ்நிலைகள் இவர்களுக்கு சாதகமாக இல்லை. அதாவது என்ன தான் நீதி நியாயங்கள் மதுரன் பக்கம் இருந்தாலும் தாய்லாந்தினை பொறுத்தவரை அவன் ஒரு சட்டவிரோத குடியேற்ற வாசி. தாய்லாந்து நாட்டின் குடிவரவு சட்டத்தின் பிரகாரம் அவர்களின் அனுமதி இன்றி தங்கி இருக்கும் அனைத்து அகதிகளுமே குற்றவாளிகளே. முதலில் அவர்களை தாய்லாந்தில் நடமாடவே அனுமதிக்க மாட்டார்கள். அதற்காகவே அதிக செலவு செய்து குடிவரவு தடுப்பு மையம் இயக்குகின்றார்கள். கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கில் இங்கு பல நாட்டு குடியேற்ற வாசிகள் உள்ளனர். ஈழத்தமிழர்கள் வருடக்கணக்கில் வாசம் செய்கின்றார்கள்.

அது கர்ப்பிணியாக இருந்தாலும் சரி பச்சை பாலகனாக இருந்தாலும் சரி சட்டம் எல்லோருக்கும் ஒன்றே. ஆனாலும் பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்களுக்கு அந்த சட்டம் செல்லுபடியற்றது. தாயும் தந்தையும் தடுக்கப்பட்டு இருக்கும் போது குழந்தை அவர்களுடன் தான் இருக்க முடியும். குழந்தை இருக்கின்றது என்பதற்காக அன்னைக்கு சலுகை வழங்க மாட்டார்கள். எத்தனையோ நிறைமாத கர்ப்பிணித்தாய்மார்கள் குழந்தை பெற்று, அந்த கம்பிச்சிறைக்குள் விறகுகள் அடுக்கியது போன்று நெரிசலில் சிக்கித்தவித்து நொந்து நசிந்து போய் இலங்கைக்கு திரும்பி சென்று அங்கு பல பிரச்சினைகளை எதிர்நோக்கி இருந்தார்கள். இந்த கொடுமைகளுக்கு கடற்சூரியன் காவிச்சென்ற முன்னாள் தாய்லாந்து அகதிகள் தான் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும்.



தொடரும்...........


அரசி நிலவன் 
தாய்லாந்திலிருந்து 

arasenilavan@gmail.com


அடுத்த பதிவிற்கு செல்ல 

http://arasikavithaikal.blogspot.com/2014/01/mv-sunsea-4.html
முந்தைய பதிவிற்கு செல்ல 
http://arasikavithaikal.blogspot.com/2014/01/2_21.html

Tuesday 21 January 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 2 )



அமைதியாய் விடிந்த அந்த விடிகாலைப்பொழுது என்றும் போல் ஒரே மாதிரியாக இருந்தாலும் நிலாவிற்கு தேசம் விட்டு தேசம்  இடம் மாறி விடிந்திருந்தது. தாய் மண்ணை விட்டு முதன் முதலாய் காலடி எடுத்து வைத்துப் போகும் தாய்லாந்து நாட்டில் புலர்ந்த பொழுது வைகாசி முதல் நாள் 2010.  முதன் முதல் பறந்த விமானப்பயணம் சற்று வித்தியாசமான அனுபவத்துடன் காலடி வைத்த புகுந்த வீடாய் தாய்லாந்து நிலாவின் தாய் மடியினைத்தள்ளி அவளைத்தன் மடியில் மடியில் இருத்திக்கொண்டது. ஏதோ ஒரு புதிய உலகத்தில் மிதப்பதான உணர்வில் நிலா பறந்து கொண்டாள். குட்டி குட்டியாய் பட்டாம் பூச்சிகளாய் பறந்து திரிந்த அந்த அழகிய தாய்லாந்தின் மக்களைப்பார்த்தும், அகன்று விரிந்த மிகப்பிரமாண்டமான சுவர்ணபூமி விமான நிலையத்தினையும் கண்ணுற்று வியந்து நின்ற அவள் தனது வாழ்வின் துணையினைத்தேடி தன் விழிகளை தூது விட்டாள். 

அவளின் வருகையினை எதிர்பார்த்து காத்திருந்த மதுரன் மற்றும்  அவனின் நண்பர்கள் உறவுகள் எல்லோரும் சந்தித்து, பயண அனுபவங்களை விசாரித்துக்கொண்டு இருந்த அந்த கணப்பொழுதுகளில் ஒரு வித தயக்கமாய் நெளிந்து கொண்டு இருந்த மதுரன் எப்போது வாகனத்தரிப்பில் நின்று கொண்ட வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான் என்று யாருமே கவனித்துக்கொள்ளவில்லை. எல்லோரும் பின்னர் தான் மதுரனை தேடினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பைந்தமிழ்

"மதுரன் வானிலிருந்து நிலாவை சைட் அடிக்கிறாராம்..அதை ஏன் குழப்புறீங்கள்..."

 என்று கடிந்து கொள்ள, அங்கு ஒரு சிரிப்பலை எழுந்து ஓய்வதற்குள் எல்லோரும் வாகனத்தில் ஏறிக்கொண்டனர். 

தாய் லாந்தின் உயர் நெடுஞ்சாலைகளில் துள்ளிக்குதித்து எழும்பிய அந்த வாகனத்தில் இருந்து தாய்லாந்தின் அழகுத்தோற்றத்தினைக் கண்டு இரசித்துக்கொண்டிருந்தவர்கள் இடையிடையே மதுரனையும் நிலாவினையும் கடிச்சொற்களினால் கடித்தும் கொண்டனர். 

ஒருவாறு இருப்பிடம் அடைந்தவர்கள் மதிய உணவின் பின்னர் அடுத்து திருமண பதிவு பற்றிப்  பேசிக்கொண்டனர். தாய்லாந்தின் சட்டப்படி இங்கு அகதிகளுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லை. அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் சாசனத்தில் தாய்லாந்து உறுப்புரிமை இல்லாத நாடாகும். இக் காரணத்தினால் அகதி அந்தஸ்து கோருபவர்களும், அகதியாக அங்கீகரிக்கப்பட்டவர்களும் சட்ட விரோதமான முறையிலேயே தாய்லாந்தில் தங்கி இருகின்றார்கள். இதில் தாய்லாந்தின் குடியுரிமை அனுமதி வைத்திருப்பவர்கள் விதிவிலக்கானவர்கள்.


இங்கு அகதிகள் என அழைக்கப்படுகின்றவர்கள் தாய்லாந்தில் நுழைந்து இங்குள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தினால் அகதி என அங்கீகரிக்கப்பட்டவர்களே. அதன் பின்னர் அவர்கள் மீள் குடியேற்றத்திற்காக அமெரிக்கா, நெதர்லாந்து, பின்லாந்து, நியூசிலாந்து சுவீடன்  மூன்றாம் நாடுகளுக்கு ஐ.நாவால் பரிந்துரை செய்யப்பட்டு  அந்தந்த நாடுகளினால் நேர்முகத்தேர்வு இடம்பெற்று ஏற்றுக்கொள்ளப்பட்டால் உரிய நாட்டிற்கு உள்வாங்கப்படுவார்கள். இதுவே இங்குள்ள அகதிகளின் நடைமுறை ஆகும்.

மதுரன் ஈழத்தைச் சேர்ந்தவன்.அவனிடம் கடவுச்சீட்டு கூட இருந்திருக்கவில்லை. ஆனால் அவன் அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட மூன்றாம் நாட்டு மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் ஒரு அகதி. எனவே அவனால் பதிவுத்திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே அவசர அவசரமாக கோயிலில் மாலை மாற்றி திருமணம் முடிக்கப்பட்டது. எந்த நேரத்திலும் கப்பலுக்கு செல்லும் அழைப்பு வரலாம் என்ற காரணத்தினால்.

ஆம்..!
கனடா செல்வதற்காக தாய்லாந்தில் இருந்து கப்பலினை கொள்வனவு செய்து அதில் ஈழத்தமிழர்களை ஏற்றி அனுப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு இலங்கையில் இருந்து பெருமளவில் மக்கள் தாய்லாந்தில் குவிந்து கொண்டிருந்த காலப்பகுதி அது. ஆனால் அதற்கு முதலே ஐரோப்பிய நாடுகளுக்கென்று பல ஆட்கடத்தல் காரர்களினால் பணம் ஏமாற்றப்பட்டு நிர்க்கதியாகிப்போன நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் அகதிகளாக தாய்லாந்தின் புறநகர்ப்பகுதிகளில் வாழ்ந்து வந்திருந்தனர். அதில் மதுரனும் ஒருவன். உறவுகளால் கை விடப்பட்டு ஐ . நாவின் உதவியில் அவன் ஒரு சிறிய அறையில் தங்கி இருந்த பொழுதில் ஏற்கனவே அவனைப்போன்ற கைவிடப்பட்ட இரு இளைஞர்களுக்கும் அவன் அடைக்கலம் கொடுத்திருந்தான்.

மதுரன் தங்கியிருந்த அந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் பல தமிழர்கள் தங்கி இருந்தனர். தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் கண்களுக்கு தென்படாதவாறு அந்த அடுக்கு மாடிக்குடியிருப்பு அமைந்திருந்தது. மிகவும் கடினப்பட்டு பயணிக்கும் தொலை தூரத்தில் அதாவது புறநகரின் பிரதான வீதியில் இருந்து உள்ளே ஒதுக்குப்புறமாய் பல மைல்கள் பயணிக்கும் சபான்மை பெர்ம்சீன் என்னும் இடத்தில் தான் எல்லோரும் தங்கி இருந்தனர். கிட்டத்தட்ட 1500 இலிருந்து 2000 வரையான தாய்லாந்து பாத்திற்கு (இலங்கை ரூபாய் ஆறாயிரத்து ஐந்நூறு இலிருந்து எண்ணாயிரம் ரூபாய் வரை ) அங்கு வாடகைக்கு அறைகள் எடுத்துக்கொள்ள முடியும். ஒரு கூட்டுக்குடும்பத்தினை ஒத்து ஒற்றுமையாய் வாழ்ந்த அந்த தொடர்மாடி குடியிருப்பில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் உட்பட மதுரனும் இருந்து வந்தான்.

அச்சமயத்தில் தான் அங்கு தங்கி இருந்த சசி என்ற ஒருவர் தான் கனடாவிற்கு கப்பல் செல்லும் விடயத்தை கூறி பணம் வசூலித்து கொண்டிருந்த போது மதுரனும் அவரின் வலையில் விழுந்தான். மதுரனிடம் பணப்  பின்புலம் இல்லாத காரணத்தினால் சசியிடம் கனடா  சென்றதும் பணம் கொடுப்பதாய் கூற சசியோ அதை ஏற்றுக்கொள்ளாது மதுரனிடம் அவனுக்கு  தெரிந்த இங்கிருக்கும் ஆட்களை தனக்கு  அறிமுகப்படுத்தி உதவி செய்தால் அவனை கனடாவுக்கு ஏற்றி அனுப்புவதாக நம்பிக்கை வளர்த்தான். உதவும் மனப்பாங்கு கொண்ட மதுரன் தனக்கு தெரிந்த தாய்லாந்து வாழ் நண்பர்களிடம் இதனை தெரிவித்து சசியுடன் இணைத்து விட்டான். அதன் பின் சசி மதுரனை தனக்கு உதவியாக வைத்துக்கொண்டான். எனவே  தான் திருமணம் செய்யவிருக்கும் நிலாவினை அழைத்துச் செல்ல முடிவு பண்ணி மிக அவசர அவசரமாக அவளை தாய்லாந்திற்கு அழைத்துக்கொண்ட மதுரன் நிலாவின் உறவுகளையும் ஓரிரு நாட்களில் திருப்பி அனுப்பி வைத்ததுடன் நிலாவின் சகோதரனை அனுப்ப  சசியிடம் பணமும்  கொடுத்தான்.

அதற்கிடையில் ஐ. நாவில் அகதியாய் பதிந்து கொண்ட நிலா தாய்லாந்தில் தன் தனிமையினையும் தாயின் பிரிவினையும் எண்ணி தினம் கலங்கினாள். மதுரன் அல்லும் பகலும் தன் சுயநலம் நோக்காது உறவுகளுக்காக உணவு வழங்கல் இருப்பிட வசதிகள் ஏற்பாடு செய்தல் என்று ஓடித்திரிந்தான். கனடாவை அடைந்து நிம்மதியாய் தானும் நிலாவும் தம் வாழ்வினை இன்பமாய் ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும் தூக்கத்தை தொலைத்து ஓடிக்கொண்டே இருந்தான். கூடவே அவனின் மைத்துனனும் விசா இல்லாத தாய்லாந்தில் தங்கியிருந்த  பல உறவுகளை தாய்லாந்து  குடிவரவு அதிகாரிகளின் கண்ணுக்கு புலப்படாத வகையில் காப்பாற்றி பூங்கா ,கடை என்று அழைத்துச் செல்வதும் குறிப்பிட்ட நேரத்தில் எங்கெங்கு அதிகாரிகளின் வரவு உள்ளதென்று அறிந்து செயற்படுவதுமாய் தம் நிலை மறந்து செயற்பட்டு கொண்டிருப்பார்கள். இந்த துன்பங்கள் யாவும் அந்த உறவுகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள் ஆகும். தாய்லாந்தில் இருந்த ஏனைய உறவுகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. எத்தனையோ தடவை நிலாவின் சகோதரனுக்கு கப்பலுக்குச் செல்லும் பயணிகளோடு செல்லச் சந்தர்ப்பம் கிடைத்தும் அதை புறந்தள்ளி இறுதியாக செல்ல முடிவு பண்ணி இருந்த அந்த நல்ல எண்ணத்தின் துயரம் இன்று வரை தொடருகின்றது.

நடுக்கடலில் அதாவது சர்வதேச கடற்பரப்பில் தரித்து நின்றிருந்த  "கடற்சூரியன்" என்ற கப்பலின் உள்ளே ஏறுவதற்கு  தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து கிட்டத்தட்ட பதினைந்து மணித்தியால பேருந்து பயணம் மேற்கொண்டு கரையோரத்தினை அடைந்து அங்கிருந்து சிறு ட்ரோலர் மூலம் கப்பலினை அடைய வேண்டும். சொங்கோலா என்னும் தாய்லாந்தின் கரையோரத்திற்கே பயணிகள் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்கும் கடற்சூரியன் கப்பலுக்கு ட்ரோலர்கள் மூலமாக ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.


சொங்கோலா என்னும் இடம் மலேசியாவிற்கு அருகாமையில் உள்ள கரையோரப்பகுதியாகும். எனவே தலைநகர் பாங்காக்கில் இருந்தே தங்கியிருக்கும் பயணிகள் பெரிய சொகுசுப் பேருந்து மூலமாக வாரத்திற்கொரு தடவை அல்லது இரு தடவை என்று நகர்த்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு ஒருநாள் கப்பலுக்காக பாங்காக்கில் இருந்து புறப்பட்ட பயணிகள் பேருந்து ஒரு சிலருக்காக வீதியில் தரித்து நின்ற சமயம் குடிவரவு அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டது. அவர்களிடம் விசாரணை இடம்பெற்று கொண்டிருந்த சமயம் பயணிகள் வழங்கும் தகவல்களால் காத்திருக்கும் ஏனைய பயணிகளுக்கும் ஆபத்து வரும் என்பதைக்கேள்விப்பட்டு அவசரமாக தன் பாதுகாப்பினையும் பொருட்படுத்தாது   மதுரன் அந்த நடு நிசி வேளையிலும் அதாவது இரவு பன்னிரண்டு மணியிலும், பயணிகளையும் அவர்களது உடமைகளையும் காப்பாற்றி பூங்காவில் தங்க வைத்து அடுத்த நாள் வரை தனது மைத்துனனுடன் அங்கு கண் விழித்து காவல் காத்தான். அந்த முப்பது தொடக்கம் நாற்பது வரையான பயணிகளில் முக்கால் வாசி நபர்களை அவனுக்கு முன்பின் தெரியாது. யாவரும் ஈழத்திற்காகப்போராடிய உன்னதமான போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் அநாதரவாய் அங்கிருந்து போரினால் துரத்தி எறியப்பட்டவர்கள். சரியாக நடக்க முடியாத ஒரு பெண் போராளியும் கரம் இழந்தவர்கள் என போரின் வடுக்களாகி நின்ற ஈழத்து உறவுகளே . எதற்காக காப்பாற்ற வேண்டும் என்று இதனை எழுதும் என்னால்  எல்லோரும் ஒரு நல்ல வாழ்வினை அடைந்திட வேண்டும் என்று தன்னை உருக்கிய அந்த ஜீவனின் உள்ளம் புரிந்து கொள்ள முடிகின்றது. இருந்தும் ஏன் இன்னும் அனாதரவாய் சிறையில் வாடுகின்றது என்பது தான்  என் அறிவிற்கு  இன்னும் புலப்படவில்லை.

 ஒரே தடவையில் ஐம்பது பயணிகள்  செல்லும் பயணத்தில் கரையோர அலுவல்கள் சரியாகும் போது இங்கு பெரிய ஏற்பாட்டாளர்கள் தகவல் அறிவிக்கப்பட  குறிப்பிட்ட பயணிகள் செல்லுவார்கள். கப்பல் ஏற்பாட்டாளர் ஒருவர் தன் மனைவி சுற்றங்களுடன் கப்பலில் ஏறி அமர்ந்து கொண்டு தனக்கு விரும்பிய தனது பயணிகளை முதலில் அழைத்துக்கொண்டார். இதனால் பல பயணிகள் பின்னுக்கு தள்ளப்பட்டனர். மதுரனும் நிலாவும் கூட அவ்வாறே பின்னுக்கு தள்ளப்பட்டனர். வேறு யாராவதாக இருந்திருந்தால் நச்சரிப்பு கொடுத்தே ஏறி போய் இருந்திருப்பார்கள். எல்லோரும் ஏறட்டும் இறுதியாய் ஏறுவோம் என்று காத்திருந்த மதுரன் இன்று வரை காத்திருக்கின்றான் தாய்லாந்தில்....!

அதற்குக்காரணம் "காட்டிக்கொடுப்பு"

ஆம்..! கப்பல் ஏற்பாட்டளர்களான தாய்லாந்தில் கப்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிலரை   ஏற்கனவே கப்பலில் ஏறி அமர்ந்து கொண்ட அந்த "ஒருவர்" செய்மதி (சற்றலைற்) தொடர்பாடல் மூலம் தாய்லாந்தின் காவல்துறை பிரிவுகளுக்கு காட்டிக்கொடுத்து விட்டார். அவர்களை சிறையில் தள்ளி விட்டு தான் தப்பித்துக்கொள்ள அதாவது பணத்தினைச் சுருட்டத் தீட்டிய திட்டம் அது. தாய்லாந்து காவல் துறையிடம் அகப்பட்ட ஏற்பாட்டாளர்கள் கப்பலுக்குத் தேவையான எண்ணெய் மற்றும் ஒரு தொகை உணவுப்பொதிகளுடனுமே சிக்கினர்.

அன்றைய இரவில் மதுரனும் நிலாவும் கண்ணீரோடு தாய்லாந்தின் தக்சின் வீதி எங்கும் உலவிக்கொண்டே இருந்தனர். எங்கே கப்பல் பிடிபட்டு நாம் போக முடியாமல் போய் விடுவோமா...??  என்று தெய்வங்களின் நாமங்களை உச்சரித்து நா வறண்டு விடிந்தது கூட தெரியாமல் அலைந்தனர். அந்த வீதியினை எப்போது கண்ணுற்றாலும் மதுரனும் நிலாவும் சலனமற்றுப் போய்விடுவார்கள். .இரு நாட்களின் பின் அந்த ஏற்பாட்டாளர்கள் பிணையில் வெளியே வந்தனர். அதற்கிடையில் அடுத்த தவணைக்கிடையில் அவர்கள் தாய்லாந்து  நாட்டினை விட்டு வெளியேறியாக வேண்டும் கப்பலும் புறப்பட வேண்டும். திடு திடுப்பென நடந்து முடிந்த ஏற்பாடுகளால் ஏற்பாட்டாளர்கள் வெளியேறி விட கிட்டத்தட்ட அறுபது எழுபது பயணிகள் அதாவது இலங்கையிலிருந்து வந்தவர்கள் தவற விடப்பட்டுப்போனார்கள். இதில் பல போராளிகளும் அடங்கினர்.

தாய்லாந்தின் கரையோரத்திலிருந்து கப்பலுக்கு செல்லும் பயணத்திற்கு பல ஆயிரம் அமெரிக்க டொலர்கள் செலவாகும். இறுதிப்பயணத்தில் அதாவது அந்த ட்ரோலர் இரவு ஒன்பது மணிக்கு செல்ல இருக்கின்றது அதில் செல்ல உடனடியாக தலைநகர் பாங்காக்கில் இருந்து புறப்பட்டு வருமாறு பகல் ஒரு மணிக்கு அழைப்பு வந்தது. நிலா மதுரன் இருவருமே விமானம் ஏறிச் சென்று இருக்கலாம். கூடவே இருந்த அதாவது விடுபட்டு போன சிறுவர்களை அழைத்து கொண்டு விமான நிலையம் சென்றால் அங்கு விமானச்சீட்டு இரண்டு தான் இருந்தது. அன்று அந்த   சிறுவர்களுக்காக தம் வாழ்வினை தொலைத்துப்போன முட்டாள்களாக மதுரனும் நிலாவும்.....!

அன்றைய ட்ரோலர் புறப்பட்டு போகும் போது ஏற்கனவே பயணிகளில் ஒருவனாக கரையோரத்தில் நின்றிருந்த நிலாவின் சகோதரன் அதில் ஏறிப் புறப்பட்டு போயிருக்கலாம். விதி யாரை விட்டது. அக்கா அத்தான் நாளை வருவார்கள் நான் அவர்களோடு வருகின்றேன் என வாசற் கதவினை தட்டிய வாழ்வினைத்  திருப்பி அனுப்பிய புண்ணியவான் அவன். அதன் பின் ட்ரோலர் செல்லவேயில்லை.

ஆம்..! அந்த ஏற்பாட்டாளர்களில் ஒருவனான கப்பலில் ஏறி உட்கார்ந்த அந்த நல்ல மனிதன் ட்ரோலர் பயணத்திற்கு பணம் கொடுக்க மறுத்து விட்டான். அத்தனை பயணிகளிடமும் வசூல் செய்த பணத்தினை கப்பலில் இருந்தவாறே இலங்கையில் முதலீடு செய்தால் பயணத்திற்கு பணம் எப்படிகொடுக்க முடியும்...?? (இங்கு அந்த கப்பல் ஒழுங்கமைப்பாளரின் பெயரைக்குறிப்பிடக் கூறி எனக்கு பலர் வேண்டுகோள் விடுத்தும் நான் இதில் குறிப்பிடவில்லை. )
அந்த மனிதன் 2012 இல் இலங்கையில் விபத்தில் அடிபட்டு இறந்தும் போய் விட்டான். ஒருவன் இறந்த பின்னும் தூற்றப்படுகின்றான் என்றால் அவன் எத்தகையவன் என்பதனை விளக்கிக்கூற வேண்டிய அவசியம் இல்லை. (அவரின் இறப்பிற்கான காரணமும் அதற்கான சூத்திரதாரிகளும் பற்றிய விளக்கம் அடுத்து வரும் பாகங்களில் இடம்பெறும்.)

 இறுதியான ட்ரோலர் பயணம் 22.06.2010 தான் இடம்பெற்றது. அதன் பின் அழைக்கின்றோம் புறப்பட்டு வாருங்கள் என்ற ஏற்பாட்டாளர்கள் பின்னர் அழைக்கவேயில்லை. ஆட்களை விட கப்பலுக்குச் செல்லும் உணவுப்பொதிகள் அதிகமாக அறைகளில் நிரம்பி வழிய  வளி மேல் செவி வைத்து கரையோரத்தொலைபேசி அழைப்பிற்காக மதுரனும் நிலாவும் அந்த சிறுவர்களும் காத்திருந்தார்கள்.

தொடரும்.........

தமிழன் முயற்சியால் அந்த பெரிய கப்பல் கனடாவிற்கு சென்றது என்பதனை விட அதே தமிழனின் ஒரு விசேடமான அம்சமான "காட்டிக்கொடுப்பு " நிகழ்த்திய கொந்தளிப்பு எவ்வித தாக்கத்தை தாய்லாந்தில் ஏற்படுத்தியது என்பது விரைவில் அடுத்த பாகத்தில்  தொடர்கின்றது........!

அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து


மூன்றாம் பாகம் பார்க்க
http://arasikavithaikal.blogspot.com/2014/01/mv-sunsea-3_23.html

முந்தைய பதிவிற்கு செல்ல...
http://arasikavithaikal.blogspot.com/2014/01/mv-sunsea.html

Sunday 19 January 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!!



அந்த இருட்டிய அறைக்குள் எதுவுமே புலப்படவில்லை. இருட்டியது அறை மட்டுமல்ல மதுரனின் கண்களும் தான். உப்பிய வயிறும் குழி விழுந்த நெஞ்சுமாய் மெல்ல தன் எலும்பாய் போன உடலை இழுத்து இழுத்து வந்து கம்பிகளுக்கிடையே கையினைச்சொருகிக் கையசைத்தான்.

 " சேர்........... சேர்................"

என்ற குரல் அவனுக்குள்ளேயே அடங்கிப்  போனது..சத்தம் வெளியே வரவில்லை. கையினை  எட்டி எட்டி அசைக்கவே முடியாத வலுவற்ற வனாய் கம்பிகளை இறுகப்பற்றியவாறு சோர்ந்து போனான். இரு மாதங்களுக்கு மேலாக உணவின்றி காய்ந்து போன குடல் இப்போது நீரைக்கூட திருப்பி அனுப்பி வைக்கின்றது வாந்தியாக. 

மரத்துப்போனது மனம் மட்டுமன்றி இரைப்பையும் தான். எந்தவித சிகிச்சையும் இன்றி நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அவன் மரணித்துக்கொண்டிருக்கின்றான். நெஞ்சுக்குழிக்குள் ஏதோ உருண்டு பிரண்டு வருவது போன்று ஒரு உணர்வு. வாந்தி எடுத்தாலும் உருளுவது நிற்கின்றதே இல்லை. பசியால் பிசைகின்ற வயிறு, உணவை தன்னிடத்தில் தங்க அனுமதிக்காத கொடுமையினை இவன் பல நாட்களாய் அனுபவித்துக் கொண்டிருக்கின்றான். தேசம் விட்டு தேசம் நலம் நாடி வந்து நலமின்றி தினம் நலிந்து கொண்டிருக்கின்றான்.

சாதரணமாக, பெண்களே ஐம்பது கிலோவிற்கு குறைவாக இருப்பது இக்காலத்தில் அரிது. ஆனால் ஒரு முப்பத்து மூன்று வயது ஆண்மகன் முப்பது கிலோவிற்குள் அடங்கியிருப்பதை எவராலும் நிச்சயம் நம்ப முடியாது. மொத்த என்புகளின் நிறையே அந்த முப்பதும் என்றே எண்ணத்தோன்றுகின்றது.


செவி வழியே தினமும் இறங்கிக்கதறும் அவனது ஈனக்குரல் கேட்கச் சக்தியற்று உருக்குலைந்து போகும் அவனின் அன்பு  மனைவி நிலாவால் எழுத்துக்களைத்தான் அவனுக்காகக்கொடுக்க முடியும். பரிவாக அருகில் இருந்து ஆறுதல் உரைக்கவோ அன்றி நீர் , ஆகாரம் கொடுக்கவோ முடியாத கொடுமை நிலையில் அவன் துடித்துக்கொண்டிருக்கும் அதே  நாட்டில் இருந்து செய்வதறியாது ஒவ்வொரு கணமும் துன்புறுகின்றாள். பத்து கிலோ மீற்றர் தூரத்தில் அடைபட்டு அல்லல் படும் அவனை எட்டிப்பார்த்து அவன் நிலை அறிய முடியாத பாவியாக நடு நிசிகளில் கண்ணீரில் தோய்கின்ற விசைப்பலகையில் கை நனைக்கின்றாள். தன் உயிரானவனுக்காக குரல் கொடுக்குமாறு  மனித உரிமைகள் , ஐக்கிய நாடுகள் என்று அமைப்புக்களுக்கு வரைகின்ற மடல்களும் கண்ணீரோடு திரும்பி, கை விரித்து நிற்கின்றன.

ஈழத்தை விட்டு  நீங்கிச்சென்றாலும் மனித உரிமை ஆணைக்குழுவும்,  ஐக்கிய நாடுகளும் நம்மவரை விட்ட குறை தொட்ட குறையாய் தொடருகின்ற இல்லையில்லை  அவற்றை நாடி நம்மவர் தொடருகின்ற தொடர்கதை எப்போது தான் முடிவுறுமோ.?

உயிரிலே கலந்தவன் ,  சுவாசமானவன் சுவாசிக்கச்சக்தியற்று உயிருக்காய் போராடும் கணத்தில் இணையம் புகுந்திருந்து பதிவு எழுதும் ஒரு துரதிஷ்டசாலி மனைவியாக நிலா. தன் பதியானவனின் தற்போதைய மோசமான நிலையினைப்பகிர்ந்து அவனது விடுதலைக்கு வழிவகுக்க தன்னால் முடிந்தவாறு வலிகளைப்புறந்தள்ளி வைத்து எழுத்துக்களில் நியாயம் கேட்கின்றாள். தொலைந்து கொண்டிருக்கும் மதுரனின் முகவரியினை முகப்புத்தகத்தில் முழு மூச்சாய் தேடிக்களைத்து ஓய்ந்து விட்டாள்.

எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் அவன் முகத்தை உடனடியாக பார்த்திட முடியாத தேசத்தில் சிக்கித்தவிக்கின்ற அவள் தன் நெஞ்சத்தில் அவனின் வலிகளையும் சுமந்து கொண்டு அவனது இரு பச்சிளம் பாலகர்களையும் ஏந்தியவாறு தாய்லாந்தின் தார் வீதியெல்லாம் தடம் பதித்து அலைகின்றாள். எந்த நேரத்திலும் அவள் பாதம் அச்செடுக்க முடிந்த நிலையில் ரேகை படிந்த வீதிகளாய் காட்சி அளிக்கின்றன.

 கொலைக்களம் என்ற இலங்கையில் கூட பணத்தை இலஞ்சம் கொடுத்து இலஞ்சம் என்ற முகமூடிக்குள் சிறைப்பட்டவர்களை  ஒளித்து வைத்து கடத்திச் சிறை மீட்கலாம். அல்லது  அவ்வப்போது சென்று பார்த்திடலாம். ஆனால்  பணம் மட்டுமன்றி அரசியல் பிரமுகரும் பரிந்துரை செய்ய முடியாத தேசமாய்  தாய்லாந்து தேசம் உணர்வற்றுக்கிடக்கின்றது.


விட்டு விட்டு ஒலிக்கின்ற அவன் குரல், நிலாவின் உயிரின் ஆணிவேரைப்பிடுங்கி எறிந்து மீண்டும் நட்டுச்செல்கின்றது. கதறுகின்ற குரல் கேட்கச்சக்தியற்று சாய்ந்து போகின்றாள். என்ன தான் செய்ய இயலும்? அவர்களுக்கு  உதவிடக் கூடும்  என்ற சந்தேகத்தின் பேரில் கடவுளும் பல காலமாய்  அங்கு தடுப்புக்காவலில் தான். நான்கு ஆண்டுகளாய் நாயாய் பேயாய் அலைந்து அடிபட்ட வாழ்வது கண்ணீரில் முகம் கழுவி நிற்கின்ற கடைசி அத்தியாயத்தில் மூச்சு வாங்கியபடி ஓய்ந்து நிற்கின்றது.

தொலைபேசியில் சிணுங்கி மெல்ல மெல்ல வலிகளால் ஓய்ந்து உயிரற்றுப்போகின்ற  அவனின் அழுகுரலும் கதறலும் இங்கே எழுகின்றது வரிகளாக............


இரவுகளின் மடியில்
இறுதி ஊர்வலம்...!!

கண்ணீரில் முகம் கழுவிப்போகும்
கடைசி அத்தியாயம்...!!!

பிசைகின்ற வயிறு
பிடித்துப்போகின்றது...
பிணியாகிப்போகும் உள்ளம்
பிய்ந்து போய் கிடக்கின்றது...!

மரத்துப் போன பாதங்கள்
முள்ளும் கல்லும் கொண்டு
உரமாய் கிடக்கின்றன - இறுதிப்
பயணத்தினை எதிர் பார்த்து

அந்த நாலு பேரை கை ஏந்தாது
அந்தம் வரை பயணிக்க முடியாதோ??
அந்தோ தெரிகின்றது மயானம்...!

நான் என்ன விதி விலக்கா??
பிணம் எழுந்து நடக்குமோ??
நடந்து சென்று படுத்து கொள்ளி
நட்டு வைக்குமோ தனக்கே....?
என்ன பைத்தியக்காரத்தனம்...?

எழும்பும் தோலுமாய் உடல்
எறும்பு மொய்த்திடாமல்
எழுந்து உட்காருகின்றது...!

அசைந்து போகும் நிலை
அடுத்த நிமிடங்களில்
நிறுத்தப்படலாம்....!!

எனக்கு நானே ஒப்பாரி வைக்கின்றேன்...!
எந்த நேரத்திலும் விடைபெறுவேன் அல்லவோ?

ஒரே ஒரு வருத்தம் மட்டுமே...
பாவம்...!
என்னை கல்லிலும் முள்ளிலும் மழையிலும்
வெயிலும் பார்த்து பார்த்து தாங்கிய உடல்....!

தீயில் துயில் கொள்ள போகின்றது - எதையும்
தீண்டாமல் எனைக்காத்த உடலை - தீ
தீண்டி தன் பசிக்கு இரையாக்குவதை
தடுக்க முடியாத கையாலாகதவனாய் நான்...!
தரணி நீங்கிப்போகின்றேன்....!!!

மன்னித்து விடு உடலே என் பொருளே..!


எழுத முடியாத பல வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்கித்தவிக்கின்றன. உருக்குலைந்து போவது அவன் மட்டுமல்ல. இரும்புப்பிடியாய் நான்கு ஆண்டுகளாய்  நிலா  பற்றி வைத்திருந்த அசையாத நம்பிக்கையுமே. .!

அவன் செய்த குற்றம் என்ன..?

தமிழனாய் ஈழத்தில் பிறந்தது மட்டுமே. ஐ நாவின் அகதியில் ஒருவனாய் ஐந்தாண்டு காலமாய் தாய்லாந்து தேசத்து குடிவரவு தடுப்பு மையத்தில் அல்லலுறும் நூற்றுக்கணக்கான அகதிகளில் ஒருவனாய் அனுபவித்த கொடுமைகள் போதாதென்று கடந்த மூன்று மாதங்களாய் உடல் உருக்குலைந்து போகும் நிலையில் தவிக்கும் இவனை சிகிச்சைக்கு மருத்துவமனை செல்ல அனுமதிக்காத இறுக்கமான சட்டங்களை கொண்ட தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் இறுக்கமான மனிதாபிமானம் அற்ற மனங்களையும் தம்மகத்தே கொண்டிருப்பது தான்  இன்னும் வேதனையும் வருத்தமுமாகும்.

 ஐ.நாவினால் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டும் குடிவரவு தடுப்பு மையத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவன தாதி சிகிச்சைக்கு அனுமதி அளிக்காமல் மதுரனைப்  பைத்தியம் என்று வதந்தி கிளப்பி அதிகாரிகளோடு சேர்ந்து இயங்கிக்  கொண்டிருக்கின்றாள். எல்லாவற்றுக்கும் பின்புலமாக கனேடிய காவல் துறை அதிகாரிகள் இயங்கி கொண்டிருக்கின்றார்கள். ஆமாம், வெறும் எண்ணங்களுக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கும் வடிவம் கொடுத்து செயலாற்றும் கனேடிய அரசின் செயல்களுக்கு, தாய்லாந்து பக்க பலமாய் நிற்பதும் அதற்காகப்  பல இலட்சம் ஊதியம் பெறுவதும் யாருக்கும் தெரியாத உண்மை ஆகும்.

ஒருவன் உயிருக்குப்  போராடும் நிலையில் அவனை உடல் உள ரீதியாக உளைச்சல் பட வைத்து வேடிக்கை பார்க்கின்ற மேல் நாட்டு யுக்தியினை தற்போது ஆசிய நாடுகளும் பின்பற்றத்  தொடங்கியுள்ளமை வருந்தத் தக்க விடயமாகும்.

ஒரு உயிர் துடிப்பதை நின்று வேடிக்கை பார்த்து சிரிக்கின்ற அந்த தாதியை அடித்துக்கொன்று புதைக்க மனம் எண்ணுகின்றது. அதற்கு கூட அங்கு நாம் செல்ல முடியாதே. எதற்காக நாம் ஈழத்தில் பிறந்தோம் எதற்காக நாம் தமிழனாய் பிறந்தோம்..? வாழ்வில் முதன் முறையாக வேதனைப் படுகின்றேன். தமிழன் என்று சொல்...! தலை நிமிர்ந்து நில்..! என்றார்கள். நாம் தலை குனிந்து உள்ளம் குமுறிக்குமுறி அழுதோம். அழுகின்றோம். அழுவோமா? 
எதிர்காலம் மங்கலாய் தூரத்தில் அசைவது மட்டும் தெரிகின்றது...............!

மதுரனின் குரல் அடிக்கடி எனக்குள்  அவனாக இருந்து பிரசவிக்கின்றது அவன் எண்ணங்களை கவிதைகளாக....

உறைவிடமாகிப்போன சிறையிடத்தில்
உற்றவள் உயிரை சுமந்து நற்றவம் புரிகின்றேன்...!
ஆலம் விழுதுகள் போன்று கடக்கின்ற
நொடிப்பொழுதுகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன....!

வதனங்கள் வடிவிழந்ததாய் காட்சி- நீர்
வற்றிப்போன தொண்டைக்குழிக்குள் சிக்கி
வார்த்தைகள் தடுத்து வைக்கப்படுகின்றன - நா
வறண்டு போய் கூச்சல் போடுகின்றேன்...
வந்து வந்து போகின்றது காற்று மட்டுமே...

கனவுகளில் கூட
கண்மணிகளை கண்பார்த்திடலாம்
கரம் தொட்டு அணைக்கலாம் என்றால்
கண்ணயர முடியவில்லை...!!
கனவாகி போகின்றன நினைப்புக்களும்...!

மனம் இங்கு தினம் தினம்
மடிந்து கொண்டிருப்பதனை விட
மரணத்தை தொட்டு விளையாடிடலாம்...!
மரணம் தன்னும் என்னை அணைக்க
மறுக்கின்றதே....!!!

மண்ணுலகம் நீங்கி அந்தரிக்கின்றேன்
மரணிக்காமலேயே...
மடி சாய்ந்து உறங்க தேடும் என்னவளின் முகம்
மறந்து போகின்றது  அடிக்கடி...
யார் யாரோ வருகின்றார்கள்...
யான் எங்கிருக்கின்றேன்...?
நிலை தெரிகின்றது ஆனாலும்
நிலை மாறிக்கொண்டே இருக்கின்றது..
நினைத்து பார்க்க நினைவுகள்
நினைவின்றி போகின்றதே...!

தாகம் எடுக்கவில்லை
பசி வாட்டவில்லை
பட்டினியாய் கிடக்கின்றேனா?
பல காலம் ஆயிற்றோ...?
நினைவுகள் இருக்கின்றன...ஆனால்
நினைத்து பார்க்க நினைவுகள்
நினைவின்றி போகின்றதே...?
யார் யாரோ வருகின்றார்கள்...
யான் எங்கிருக்கின்றேன்...??

உலகம் நீங்கியவனாக அவன் சித்தம் கலங்கி நித்தம் வாடிக்கிடக்கின்றான். அருகில் இருப்பவனை நோக்கினாலும் அவன் மிரட்டுவது போன்றும் கொல்ல வருவதும் போன்றதுமான பிரமை. தொலைபேசி எடுத்தால் எந்த நேரமும் அழுகுரலே. இப்போதெல்லாம் அழுவதற்கு கூட சக்தியற்று விட்டான். தொலைபேசியின் ஒலி அமைப்பினை அதிகரித்தாலும் அவன் குரல் அனுங்கியபடி குற்றுயிராய் கடந்து செல்கின்றது. 

மஞ்சள் பூத்துகிடக்கும் உடலில் பிண வாடை வீசுவதாக அடிக்கடி உரைக்கும் அவனின் உடலுக்கு என்ன நலக்குறைவு என்றே தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு மாத முயற்சியின் பின் சாதாரண ஒரு வைத்தியர் அதாவது இரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு பரிசோதனை செய்பவர் அவனைப்பரிசோதிக்க சென்றார்.  இதற்காக  மதுரனின் மனைவி தன்னிரு பச்சிளம் குழந்தைகளுடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு ஒரு வாரமாக அலைந்து திரிந்து தொடர்பு எடுத்து அவரை அங்கு அனுப்ப பெரிதும் சிரமப்பட்டிருந்தாள்.  

அந்த வைத்தியரின் அறிக்கையின் பிரகாரம் மதுரனுக்கு இரத்த அழுத்தம் மிகக்குறைவான நிலையில் இருப்பதாகவும் உடலில் உள்ள இனிப்பின் (குளுக்கோஸின்) அளவும் மிகக்குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும்படி பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இரு வாரங்களாகியும் இன்னும் அவன் எடுத்துச்செல்லப்படவில்லை. அத்துடன் அந்த வைத்தியரால் தற்காலிகமாக எழுதிக்கொடுக்கப்பட்ட விற்றமின் மாத்திரைகள் மற்றும் உடல் வலுவிற்கான மாத்திரைகள் (குளுக்கோசு) என்பன அவனுக்கு அந்தத் தாதியினால் வழங்கப்படவில்லை. அதனை வழங்குமாறு கேட்டுக்கொண்ட மதுரனைப் பார்த்து பரிகசித்து சென்ற தாதி இன்று வரை அவனைச்சென்று பார்வையிடவில்லை. 

என்ன காரணம் ? என்றே புரியாத ஒரு குழப்பத்தில் மதுரன் மட்டுமன்றி நானும் குழம்பியுள்ளேன். தன்னார்வ தொண்டு நிறுவனம் என்பது அகதிகள் மற்றும் உதவி அற்றுத் தவிப்போருக்கு வலிந்து சென்று உதவி செய்வதற்கான அமைப்பாகும். ஆனால் இங்கு அவசர சிகிச்சை தேவைப்படும் ஒருவனை பரிகசிக்கும் அளவிற்கு அதில் பணி புரிகின்ற தாதிக்கு என்ன காழ்ப்புணர்ச்சியோ தெரியவில்லை. தாதி என்றால் அவருக்கு இளவயது அல்ல. மதுரனுக்கு தாய் வயதில் ஒத்த அவர் , பல தடவை மதுரனின் மனைவி நிலா  அங்கு சென்ற போது விரட்டிக் கலைத்த துண்டு. அவனைப்பார்வையிட அனுமதிக்காத போதும் சாப்பிடவென்று அவனுக்காக செய்த உணவுகளை அவரிடம் கொடுத்து மதுரனிடம் ஒப்படைக்குமாறு கெஞ்சிய நிலாவினை ஏறெடுத்தும் பார்க்காமல்   அந்த உணவுகளை திருப்பி அனுப்பிய கல் நெஞ்சக்காரி.

ஒரு சில தமிழர்களோடு நல்லுறவு பேணித் தன்னை ஒரு சேவையாளி என்று காட்டிக்கொள்ளும் அந்த தாதி கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக அந்த குடியேற்ற தடுப்பு மையத்தில் பணி புரிகின்றார் .

அவனோடு மட்டுமன்றி அங்குள்ள ஈழத்தமிழர்களோடும் அவள் வெறுப்பையே கொட்டி வருகின்றார். 2013 தைத்திருநாளுக்கு அவரின் அனுமதியோடு இலங்கை ரூபாய் இருபத்தைந்தாயிரம் செலவில் தயாரித்து எடுத்துச்செல்லப்பட்ட எழுபத்தைந்துக்கு மேற்பட்ட பொங்கல் பிரசாத பொதிகளை   உள்ளே அகதிகளுக்கு வழங்காது  அவற்றினை  அவர்கள் கண் முன்னாலேயே குப்பைத்தொட்டியில் போட்டு வீணடித்த அந்த தாதியினை இந்த நிகழ்வில் இருந்து  என்ன மன நிலையில் உள்ளவள் என்பதனை நன்கறிந்து  கொள்ள முடியும்.

நிச்சயம் இவற்றுக்கு பின்னால் கனேடிய அரசின் சதி உண்டு என்பதனை மதி உள்ளவர்கள் நிச்சயம் விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் உயிர் வரை வந்து அறுக்கின்ற நிலைக்கு மதுரன் பெரிதாக குற்றம் இழைத்து விடவில்லை.

அவன் இழைத்த குற்றம் என்ன? கனேடிய அரசின் நோக்கம் என்ன.? என்ன காரணத்திற்காக மதுரன் உள உடல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றான்? இவற்றுக்கு முதல் மூல காரண கர்த்தாக்கள் யார்? இவற்றுக்கான விடையோடு அடுத்த பாகம் விரைவில் தொடரும்...........



தாய்லாந்திலிருந்து 
அரசி நிலவன்


இரண்டாம் பாகம் படிக்க.....
http://arasikavithaikal.blogspot.com/2014/01/2_21.html

Tuesday 14 January 2014

பொங்கட்டும் இன்பம்..!!!





அமைதி என்னும் அரிசியோடு 
இனிமை என்னும் வெல்லம் சேர்த்து 
துன்பம் என்னும் அக்கினியில் 
இன்பம் என்னும் பால் பொங்கி 
தித்திப்பாய் தேனாய் வாழ்வு இனிக்கட்டும்...!

சங்கத் தமிழ் புது வருடம் பிறக்கட்டும் 

எங்கள் நம்பிக்கை விதைகள் முளைக்கட்டும்...!

விடியாத இரவுகள் விடியட்டும்..! 

கண்ணீர் விழிகள் துலங்கட்டும்..!!

பொய்கள் மறையட்டும்..! 

உண்மைகள் பறையட்டும்..! 

இன்பம் எங்கும் பொங்கட்டும்..! 

துன்பம் தொலைவில் தூங்கட்டும்..! 

தமிழ் உயர ஓங்கட்டும்..! 

தரணி எங்கும் பரவட்டும்..! 

தமிழர்கள் தமிழ் பேசட்டும்..!

தன்னிகரற்று தமிழ் வளரட்டும்..!

சுதந்திர தாகம் தணியட்டும்...!

தந்திர அரசியல் மாளட்டும்...!

காணாமல் போனோர் கை சேரட்டும்..! 

மனிதப்புதைகுழிகள் முளைக்காமல் போகட்டும்..! 

வறுமை காணாமல் போகட்டும்..! 

வசந்தம் வாழ்வில் வீசட்டும்...!

குற்றங்கள்  குறையட்டும்..! 

சுற்றங்கள் அதிகரிக்கட்டும்..! 

அன்பு அகிலத்தை ஆளட்டும்..! 

பண்பு சாமரை வீசட்டும்...!

புது தென்பு பிறக்கட்டும்..! 

புது மனிதம் பிறக்கட்டும்..! 

இனிமை எங்கும் பரவட்டும்..! 

இதயங்கள் ஒன்று சேரட்டும்..! 

இன்பம் எங்கும் பொங்கட்டும்...! 

துன்பம் விரைவில் தொலையட்டும்..! 

தை மகளே வருக வருக..! 

தைரியம் கொண்டு நீ  வருக வருக..! 
தன்னம்பிக்கை அள்ளித்தருக தருக..!
  
தன்னிகரில்லா விடியல்  தாங்கி 
தரணி எங்கும் இன்பம் பொங்கி தருக தருக ....!


அரசி நிலவன் 


அறிந்தும் அறியாத தேசத்தில்
செறிந்து நின்ற சனத்திரளில்
தெரிந்து நின்ற வண்ண நிலவாய்
ஒளி வீசி அருகில் ஈர்த்துக்கொன்டவனே

அகம் பார்த்து கரம் கோர்த்தவனே...!
முகம் பார்த்து வரம் கொடுத்தவனே...!

சில்லென்ற தென்றலாய் தழுவிய மூச்சுக்காற்றும்
வில்லென்ற விழிகள் விட்ட கூரான அம்பு பார்வையும்
கல்லென்று அசையாமல் நின்ற என்னை நோக்கி சிரித்த
கொல்லென்ற கிண்டல் சிரிப்பும் உன் பரிவாரங்களாக - நீ
அறிமுகமாகி நின்ற அந்தக்கணப்பொழுது
உறங்கிடாது இறுதிக்கணப்பொழுது வரைக்கும்....!

அறிமுகம் அற்ற இந்த தேசத்தில் அடுக்கடுக்காய்
வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் வடுக்களை விடவும்
தெரிந்து கொண்டு நினைத்து அகம் மகிழ்ந்திட அந்த அறிமுக
காட்சிகள் இன்னும் வண்ண மயமாகத்தான் ஒளிர்கின்றன...!