Search This Blog

Wednesday 3 March 2010

அண்ணா... அகிலமெங்கும் தேடுகின்றேன் காணவில்லை...உன்னை..



தனித்து நான் சென்றதில்லை
தனி வழியே...
கரிசனையோடும்,,
கவனத்தோடும்,,
கை பிடித்து ஒன்றாய்...
வலம் வரும்...
பாசப் பறவைகள் எம்மை
பார்த்து மகிழாதோர் யாருமில்லை..!!

துவிச்சக்கர வண்டி தனில்
தெத்தி தெத்தி பயிற்சி பெற்று,,
வீராப்பாய் தங்கை என்னை உட்கார வைத்து
வீதி வழியே சவாரி செய்யும்
வீரச்சகோதரனே....!!!

வீரச்சகோதரன் என்றதாலோ
வீர சொர்க்கம் ஏகினானோ..??

எதிர்த்து பேசி,,
எதிரியை காறி உமிழ்ந்து - ஊர்
எல்லையிலே காவியமான
என்னுயிர் சோதரனே..!!

உன் தீரப்பேச்சாற்றல் கவர்ந்து
உன் சிரசினை கவர்ந்தானோ..?
இரக்கமற்ற கயவன்...!
இல்லாத ஆயுதத்தை திணித்து
கபடமாய் கொன்றொழித்தானோ..??

தனி வழியே நானின்றி..
தனிமையில் நீ ஏகியதாலோ...
பாசப்பிணைப்பை உடைத்து,,
பாவிகள் உன்னை அழித்தனரோ...??



அண்ணா...!!!
அகிலமெங்கும் தேடுகின்றேன்..!!
காணவில்லை...உன்னை...
காற்றோடு கரைந்து சென்றிட்ட..
உன் மூச்சுக்காற்றினை.. சுவாசத்திலும்
நுகர்ந்து கொள்ள முயற்சித்து
தோற்றுப்போகின்றேன்...!

நிழற்படங்கள் நினைவிலும் 
காணொளிகள் கண்ணீரிலும் கரைந்து 
காணாமல் போகின்ற காலம் அல்லவோ??
காணும் போது ஒரு துடிப்பு 
காட்சியில் ஒரு பதறல் வேதனை கருத்துக்களுடன்
காலாவதியாகி போகும் காலச்சக்கரம்...!!!

பரிதாபங்கள் சிந்தப்பட்டு 
வசைமாரிகள் தெளிக்கப்பட்டு
வரலாறு மாற்றப்பட்டு 
வம்சங்களின் மரபணுக்களும் 
வகையில்லாமல் ஒன்றாகிப்போன காலம்....!!!

கல்லறைகளும் விறாண்டப்பட்டு 
விசிறப்பட்டு வீதிகளில்...கார்த்திகையில் 
தீபங்களுக்கும் விளக்கமறியல்...!
கண்ணீரை பூஸா தடுத்து வைக்குமா??
  
கலைந்த உண்மைகளை 
கற்பனையில் தேடி  
கனவில் கண்டு பிடித்து 
கனன்ற இதயங்களை ஆற்றுப்படுத்தும் 
கலி காலமதில்....

கண் பார்க்கும் இடமெங்கும் - நான்
காணும் உன் அகவையுடையோர்
அண்ணன்களாய் காட்சி தர...
அழைக்கின்றேன் உரிமையோடு...
அண்ணா...அண்ணா...என
நெஞ்சமதில் உன் நினைவுகளைச்சுமந்து....

-அரசி-

No comments:

Post a Comment