Search This Blog

Friday 5 March 2010

அன்றும் இன்றும் ...!!!


அழகிய குருவிகளின் கீச் கீச் ஒலியுடன்,,
அசைந்தாடி வரும் ஆதவனின் வரவுக்காய்...
காத்திருக்கும் சேவல் கூட்டத்தின் கொக்கரக்கோ...வும்
இதமான இசையாய் மெல்ல
இதயத்தை வருட...


கலப்பையுடன் கிளம்பும் கார்த்திகேசனோடு...
கரும்புழுதி கிளப்பிடும் பசுக்களின் அணிவகுப்பும் 
இணைந்திட - கார்
இருளும் மெல்ல காணாமல் போகும்
பூமித்தாயவளை விட்டு...!

மணம் வீசும் விளாட்டு மாமரத்தின்
இளம்பூக்கள் சொரியும்...
இளவேனிற்காலமதில்....
பூக்களின் வாசனையின் மயக்கத்தில்,
புரண்டு படுக்கும் என்னை
பலாத்காரமாய் பள்ளி எழுப்பும்.. 
பிள்ளையார் கோயில் மணியோசை..!!

சோம்பல் முறித்து துயில் எழும் போது..
சோலைக்கதிரவனின் சின்னக்கதிர்
பட்டுத்தெறிக்கும் என் வதனத்தில்...!!

தென்னங்கீற்றில் தவழ்ந்து வந்த..
தென்றல் காவி வரும் நறுங் கடியால்..
விழி மூடி பயணிக்கும் என் கால்கள்
முல்லைப்பந்தலை நோக்கி...!!!
வெள்ளை வேளேரென்ற மணலில்...
சொரிந்த மலர்களின் அழகை....
சொல்ல வார்த்தை இல்லை...
இலைகளை மூடி மறைத்து மலர்ந்த முல்லைகள்...
இதழ் பிரித்து புன்னகைத்து கண் சிமிட்டும்..!!

ஈரத்துணி போர்த்த இள மங்கை போல
பனித்துளியில் நனைந்த பூஞ்செடிகள்..
என்னைக்கண்டு நாணித்தலை குனியும்...
எழிலில் அசந்து நிற்க...
சின்ன சின்ன அணில் குஞ்சுகளின்
சிறு குரல்கள் சுய நினைவிற்குள்
மெல்லத்திருப்பும் என்னை..

நடை பயிலும் அணில்களின் கதைக்கு
எதிர்க்கதை பேசும் புலுனிகளின் காலடிகள்
என் வீட்டு முற்றத்தை கோலமாய் அலங்கரிக்கும்...!!!


இன்று...
காஞ்சாங்கோரையும் காவிளாயுமாய்...
காடாகிப்போன என் வீட்டு முற்றம்...
கண்ணீர் வடிக்கின்றது – என்னை நோக்கி

முல்லையின் வாசனை காணாமல் போய்
முற்றத்தில் ஓடி விளையாடிய அணில்களும்
கண்ணுக்கெட்டாத தூரத்தில்....

தலைகளைத்தொலைத்து விட்டு நின்ற
தென்னைகளும் ஒப்பாரி வைக்கின்றன...
தம் நிலை எண்ணி....!!
தள்ளாடி நடந்த என் கால்களில்
தட்டுப்பட்டது கல் ஒன்று...
குனிந்து நோக்கினேன்..!!
குதூகலமாய் நாம் வாழ்ந்த இல்லத்தின்
அத்திவாரத்தின் ஒரு பகுதி....!!

கண்ணீர் பெருக்கெடுக்கவில்லை...!!
கவலை தொண்டையை அடைக்கவில்லை...!!
கல்லும் மண்ணும் கொண்ட கட்டிடத்தை எண்ணி..
கவலை கொள்வானேன்...???
மண்ணோடு மண்ணாகி விட்ட
எத்தனை எத்தனை எம்மின...
உறவுகள் கல்லிற்கு இணையாவாரோ...???


 ”அரசி நிலவன் ”





1 comment:

  1. அழகான கவிதை... உங்கள் சமூக அக்கறை வெளிப்படுகிறது...
    அழகான சிந்தனை...

    வாழ்த்துகள்....

    ReplyDelete