Search This Blog

Saturday 21 December 2013

அன்பு...!!!

அமரனான அப்பா
அன்பளித்த 
அன்பு பரிசாகிய 
அவள் கழுத்தை 
அலங்கரித்த..
அழகு சங்கிலி 
அடகுக்கடையில் 
அமரும் போது....
அருவெருப்பாய் என் கையாலாகத்தனம் 
அடிக்கடி என்னை நெருட 
அவளை நோக்கி கண்கலங்கி
அங்குமிங்கும் வெறித்து நோக்கும் - என்
அகன்ற விழியின் நீர் துடைத்து
அப்பாவியாய் சிரித்து
அன்பாய் என்னை தட்டி கொடுத்தாள்...!!!




அரசி நிலவன் 

வலிமை...!!!


மென்மை உள்ளம்
வன்மை பெற்றது - உண்மை
தன்மை அற்றுப்போன
உயிர் காதலால்....

அடி மேல் அடியாக..,
கருங்கல் மேல் உளியாய்
வலிகளின் தொடர் செதுக்கல்களால்
வலிமை பெற்று வன்மையானது
வாழ்க்கை மட்டுமல்ல மெல்லிதயமும் தான்...

கண்ணீரால் கரைக்க முடியாது...!
கனவுகள் ஆள முடியாது...!
கன்றிப்போன கல்லிதயம்...!

கடந்து வந்த
வலி மிகு பயணத்தின்
வலிமை அனுபவம் கொடுத்த
வலிமை இதயம் தாங்கிய - என்
காதலும் வலிமையாய்....

காற்றும் மாசு படுத்திட முடியாது
காலம் பிரித்தாலும்....
காலத்தால் அழியாமல்
காதல் வலிமையாய் என்றும்...
காத்திருப்புக்களோடு.....
என்றென்றும் வலிமையாய்
காதல் வலிமையுடன்....

மெய்யால் வலிமை பெற்ற ஆண்மைக்கு
மனதால் வலிமை பெற்ற பெண்மை
வலிமை தான் என்றென்றும்....!

அரசி நிலவன்




தந்திரம்...!!!


தந்திரப்பார்வை கொண்டு நோக்கி .
மந்திரப்புன்னகை ஒன்றால் மயக்கி
எந்திரம் போல் என்னை இயக்க வைத்தவளே....!!!

சந்திர வதனம் அள்ளி வீசும் - பால்
ஒளியினை அபகரித்து என் இருளை
பகலாக்கி போகும் தந்திரம் அறிவாயோ??
சுந்தரத்தமிழ் கொஞ்சும் பைங்கிளியே....!!


சின்ன பூக்களின் தேன் உறிஞ்சிபோகும் - பட்டு
கன்னத்து குழியழகி உன்னை சினக்காது
வண்ண தேனீக்களும் உலா வரும் தந்திரம்
எண்ண எண்ண சித்தம் கலங்குகின்றதே...!

அள்ளிச்சொரியும் பனி மழையிலும் உனைக்காண
துள்ளி ஓடி வந்து கல்லாய் விறைத்து போகும் நான்
கிள்ளித்தெளித்துப்போகும் உன் பார்வையால்
உருகிப்போகும் மந்திரத்தந்திரம் என்னவோ??

இதயத்தினை துளையிட்டு  பிணைச்சல் போட்டு
சிதையாய் இழுத்துபோகும்
சதய நட்சத்திரத்தில் பிறந்தவளே...!!!
உதயம் கொடுத்து என்னை மீண்டும்
உயிர்ப்பித்து உலவ விடும் தந்திரம் யாதோ???


மந்திரப்புன்னகையாளே..!!
உன் இதய வெளியில் என்ன
எந்திர மருத்துவமா புரிகின்றாய்??
சந்திரனும் நாணிப்போகின்றான்...!
இந்திரனும் இடம்பெயர்ந்திட்டான்..!
எந்திரன் என்னை தந்திரமாய் ஏமாற்றி
மந்திரம் புரிய எண்ணிடாதே...!!
தந்திரமாய் நானும் உன்னை
மந்திரத்தால் மயங்க வைப்பேன்
எந்திரமாய் என் பின்னே சுழல வைப்பேன்....!


அரசி நிலவன்





Friday 20 December 2013

காலம்...!


கடற்சூரியனின்
கரைத்தொடுகையால் 
கலைந்த கனவுகள்
கடைசி வரைக்கும் 
கூடு திரும்பவில்லை....

கண்ணீரில் முகம் கழுவி 
கழிக்கப்படும் பொழுதுகள் 
கடைசி அத்தியாயமாய் 
கடக்கும் நிகழ் காலத்தருணங்கள்..!   

கண் துடைப்பாய் மீள் குடியேற்றம்..!
காட்டிக்கொடுப்புக்களுக்கு குறைவில்லை...!

காலம் உருண்டு செல்லும் வேகத்திற்கு 
காத்திருக்க தயக்கமில்லை....!

கானகத்தில் கூட  தனித்திருக்கலாம்...
காய்ந்து சருகாய் போன உள்ளத்தோடு 
காலம் உருளத்தான் தயங்கி நிற்கின்றது...!

காவலன் கால அளவின்றி  தனித்திருக்க 
காத்திருக்க முடியுமோ...?
கால வரையறையின்றி....

காலம் இங்கு எனக்கு மட்டும் துரோகியாய்....
காத்திருப்புக்களை தவணை முறையில் 
கழித்து விடிவினை சிறிதாய் வழங்கிடாதோ....?? 



அரசி நிலவன் 




Thursday 19 December 2013

முதுமை...!!!


இன்னோரன்ன தேவைகள் யாவும்
இருந்த இடத்திற்கு தேடி வருகின்றன..
இருந்து அளாவளாவத்தான்
இரத்த உறவுகள் என்று
இல்லை யாரும் பக்கத்தில்...

இல்லாளின் பிரிவில்
இருள் சூழ்ந்து போன அத்தியாயம்
இன்று வரை அஸ்தமனத்தில் தான்....!

இருப்பிடத்தில் - உயிருடன்
இருக்கும் வரை தன்னும்
இருக்க விடாமல் இங்கு
இட்டுச்சென்ற மகன்மார்....!

இடுப்பு வலியிலும் வேதனையிலும்
இஞ்சாருங்கோ ஆம்பிளைப்பிள்ளை
இன்பமாய் சிரித்து , பொத்தி வளர்த்த
இல்லாள் இன்று இருந்திருந்தால்
இரத்தக்கண்ணீர் வடித்திருப்பாள்....!

இருட்டிக்கொண்டு வரும் கண்கள்...
இருந்தாலும் பலன்
இல்லையே...!

இடுப்பில் தூக்கி முதுகில் ஏத்தி வளர்த்த
இளையவனின் பேரன்
இன்னும் கண்ணுக்குள்.....!
இங்கிருந்து மனக்கண்ணில் பார்த்து
இதயத்தில் தூக்கி விளையாடுகின்றேன்...!


இரத்தங்கள் என் இரத்தங்கள்
இடைவெளி அதிகமாகி எங்கோ
இடை நடுவில் விட்டு போய்விட்டனவே...!

இடையிடையே வந்து போகும் மூச்சு
இருந்தால் போல் போனாலும், எட்டிப்பார்க்க
இல்லம் வந்து கூட்டிப்போகவும்
இடம் தராதோ உள்ளம்....?

இருக்க தான் இடம் தரவில்லை...
இதயத்திலும் இல்லையா...?
இதயம் குறுகிப்போனதால்....
இடப்பற்றாக்குறை என்பது
இதயத்திலும் ஏற்பட்டிருக்கலாம்....!!!


இருந்தாலும் விசாலமான
இல்லத்தில் தான் நான்
இருக்கின்றேன்.....!!!
இங்கே இரத்த உறவுகளுக்கு மட்டும் தான்
பற்றாக்குறை....
இதயங்களுக்கு அல்ல....!



அரசி நிலவன்



Wednesday 18 December 2013

எதிர்ப்பு...!

எண்ணிரண்டு ஆண்டாய்
எண்ணிலடங்கா துயரங்கள்...!!
எப்போதும் எதிராய் சதிராடும்

கதிராடும் விடியல்களில்
கனக்கின்ற உள்ளம் தொடங்கி
கரையும் கண்ணீரின் இரவுகள் வரை
கரடு முரடாய் எதிர்ப்புக்கள்...!!!

இயற்கையின் அரவணைப்பு
இறுதி வரை எதிர்ப்பின் பிணைப்போடு
இணைந்து தான் அணைக்கின்றது...!

இயலாமை என்னும் எதிர்ப்பினை
இயன்றவரை எதிர்கொண்டு
இழுத்துச்செல்லும் பயணம்
இடையிடையே மனிதம் என்னும்
குழிகளில் விழுந்து எழும் போதே
குப்புற விழுகின்றது இதயமும்....!!!


அரசி நிலவன் 

கலை...!!!


விலை உலகில் நிர்ணயம் பெற்று விட்ட
கலைக்கடலில் தத்தளிக்கும் சிறு எறும்பிவன்..!
இலையாகி கை கொடுக்க யாருமின்றி - தன்னாலே
சிலையாகி போனவன் - தன் வீட்டு
உலை கொதிப்பதற்காய் கலைகளை
மலையாய் குவித்து ஓரம் தள்ளி
தலை மேல் சுமை தாங்கி பயணிக்கும் மெழுகுவர்த்தி...!
நிலை இல்லாத உலகில் நிரந்தரம் பெற்று விட
மூலை முடுக்கெங்கும் அவன் இசை பரவிட
அலை போல் அலைக்கழிந்து முயல்கின்றான்...!

கலை இங்கு கருவாகி அடங்கி கிடக்கின்றது
உயிர்த்துடிப்போடு மட்டும்...!

அவ்வப்போது சரி பார்க்கப்படும் துடிப்பாய்
அவன் வாயில் மட்டும் இசைக்கப்படும் மெட்டு...!

பிரசவிக்க முடியாமல் வலியோடு திண்டாடும்
தாயினை ஒத்து உள்ளம் குமுறும் கலைஞன்...!

பாடல் வெளியீடுஒன்றிற்காய் ஒவ்வொரு நாளும்
ஒதுக்கி வந்த சேமிப்பும் அன்னையின் அவசர
வைத்தியத்திற்காக புறப்பட்டு போயிற்று......!
மீண்டும் ஒதுக்கி வருகின்றான் துவளாமல்...

கலைஞன் ஒருவன் கை சேர வேண்டும்..!
கடவுளே....!
அவனுக்கு செலவு ஏதும் வைத்திடாதே....!

அரை குறை இசையில் பணம் கொட்டி
அரை குறை ஆடை காட்டி
இசையில்லா ஓசையினை
விளம்பரப்படுத்தும் உலகில்.....

வளமின்றி தளமின்றி மறைந்திருக்கும்
கலைக்கடல்களின் ஆர்ப்பரிக்கும்
அலை ஓசை கேட்டும்....
நிலை மறந்து இருக்காமல்
இலை மறை காய்களின்
குலைகளை இனங்கண்டு சுவைப்போம்....!
கலைகளை நிலை பெறச்செய்வோம்....!


அரசி நிலவன்

 



Monday 16 December 2013

அதிபதி...!!!


என் ஜீவனின் பதியிவன்
என் அரியாசனத்தின் அரசனிவன்...!
எனக்குள் ஒருவனாய் உதிரமாய்
என்றும் இவன் என் அதிபதியிவன்...!

துளித்துளியான பனித்துளிகள்
துள்ளி நிலம் நோக்கி விரையும்
துள்ளலாய் மனம் அள்ளி போகும்
துடிப்பான அவன் பார்வைத்துளிகள்...!

எடுப்பாய் மிடுக்காய் உதிரும் முத்துக்களாய்
தித்திப்பாய் சிந்தும் தேனாய்
கனிவாய் இனிப்பாய் வார்த்தைகள்...!


கண்ணீராய் செந்நீராய் உதிர்வாய்...!
நிலவாய் பாதியாய் தேய்கின்றாய்...!
நிலவா..!
எனக்காய் உனக்காய் நிமிர்வாய்
வழியாய் மலராய் பூத்திருப்பேன்..!

சிரிப்பாய் நிறைவாய் சுழல்வாய் - என்
கருவாய் வருவாய் மலர்வாய் பதியே...!
பிள்ளையாய் நண்பனாய் அன்னையாய்
தெய்வமாய் மிளிர்வாய் அதிபதியே..!

அரசி நிலவன்




  

Thursday 12 December 2013

சஞ்சலம்...!!!



மழையில் நனைந்து பிய்ந்து
மக்கி போகும் கடதாசியாய்
இரவும் பகலும் கண்ணீரில் நனைந்து
இளகிய இதயம் பிய்த்தெறியப்படுகின்றது...!

ஒன்றன்பின் ஒன்றாய் அவசியமாகிப் போன
துன்பங்களின் பிரதிபலிப்பாக தினம் முளைத்து
உள்ளம் துளைத்து முள்ளாய் குத்திடும்...!

செழித்து வளரும் பயிரை உருக்குலைக்கும் புழுவாய்
செம்மை வாழ்வினை கருக்கலைக்கும் இந்த சஞ்சலம்...!

சஞ்சலப்பட்டே
சலித்தும் வலித்தும் போகும்
வாழ்க்கையில்....

விழித்திருந்து கனவு காணும் ஒரு விந்தை..!
விடியல் ஒன்று சஞ்சலம் நீங்கி
விடிந்திடுமோ....??
சஞ்சலத்தோடு ஒரு ஏக்கம்....!
எட்டாக்கனியாய் போன தூக்கம்..!

சஞ்சலத்தால் சுற்றி வளைக்கப்பட்டு
சடுதியாய் தாக்கப்பட்டு பேச்சு மூச்சின்றி
சலனமின்றி கிடக்கும் உயிராய்....

சஞ்சலமே சுதந்திரம் கொடு....!
சரண் அடைந்தும் ஒடிக்கப்பட்ட கரங்கள்...!
சற்று முன் வரை அசைவில்லை.....!


அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "சஞ்சலம் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.



கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/










Wednesday 11 December 2013

கலப்படம்...!!!


மென்று விழுங்க முடியாமலும்
துப்பி போக மனமில்லாமலும் 
தவித்து கிடக்கும் உள்ளம்...!!!

நஞ்சு கலந்த பால் என்று அறிந்து 
அஞ்சி எறிந்திடும் உள்ளத்திற்கு 
வேசம் கலந்த பாசம் தெரிந்தும் 
நாசம் புரியும் உறவுகளை விட்டு 
வாசம் செய்ய தெரியாது நின்று
நித்தம் எண்ணித்துடிக்கின்றது....!!!

பொருட்களில் கலப்படம் அறிவோம்...!  
பொல்லாத மனிதங்களின் 
இதயத்திலும் கலப்படம்..! 
இரத்தத்திலும் கலப்படம்..! 
பேசும் பேச்சிலும் கலப்படம்..!
சுவாசிக்கும் மூச்சிலும் கலப்படம்..!   
காட்டும் அன்பிலும் கலப்படம்...!
காண்பிக்கும் பண்பிலும் கலப்படம்...!
மலரும் சிரிப்பிலும் கலப்படம்..!
மல்கும் கண்ணீரிலும் கலப்படம்...!
மொத்தத்தில் மனிதர்களே கலப்படம்...!

நீர் கலந்த பால் போல 
ஆழ் மனசெல்லாம் குரோதம் நிரப்பி 
மேல் கொஞ்சம் பாசம் மெழுகி 
வேசம் புரிந்து நாசம் செய்யும் 
இரு கால் நரிகள் நாட்டில் மட்டுமல்ல  
இன்று வீட்டிலும் அதிகமாய் தான் உலவுகின்றன...!   


அரசி நிலவன்


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "கலப்படம் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.



கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Tuesday 10 December 2013

பொம்மை....!!!


நிறுத்தி வைத்த பொம்மையாகி
நிலையாகி போன வாழ்வு ...!
நித்தம் அசைவின்றி கடக்கும் பொழுதுகள்..!
நிறுத்திய வாழ்வில் நிம்மதியற்று
நின்று சுழலும் பொம்மையாய் நான்...!

மலரும் பொழுது எதற்காக என
மலைக்கின்ற விடியல்கள்...!
மறந்தாலும் நினைவூட்டும் நிகழ்வுகள்
இறந்தாலும்  பின் தொடரும் வலிமையாக...

சிறந்து வாழ்ந்த தருணங்களை நோக்கி மனம்
பறந்து சென்று சடுதியாய் திரும்புகின்றது - உலகமதை
துறந்து செல்ல ஏதோ ஒன்று தடுக்கின்றது...!


சாவி கொடுத்து ஆட வைக்கும் இறைவன்
பாவி படும் துன்பங்களை சலிக்காது பார்த்து
காவி உடையிலும் இரக்கமற்று சிரிக்கின்றான்..!
கூவி நான் இடும் கூக்குரல் கேட்டும்  மீண்டும்
சாவி திருகும் கொடுமைக்காரனாய் இறைவன்
தாவி ஆடும் பொம்மையாய் நான் - மலர்களை
தூவி விழுந்து கிடக்கின்றேன் அவன் காலடியில்....
ஆவியினை சீவி அரிந்து இறுதி துடிப்பு
அடங்கும் வரை ஆட வைக்கிறானாம்...!!!



அரசி நிலவன்
 


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பொம்மை " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.



கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


தடம் தேடிப் பார்க்கின்றேன்....!


எனக்கென்று ஒரு ஜீவன் துடிக்கின்றது
என்றால் அது நீ மட்டுமே...!

எனக்காய் துடிப்பாய் மூச்சாய் இருப்பாய்..! 
நிழலாய் உயிராய் அன்பாய் தொடர்வாய்..! 
உண்மையின்  உருவமாய் தெய்வமாய் தெரிவாய்..! 

உயிர் தந்தவளே ..!
உதிரம் ஈந்தவளே..! - ஈடு 
இணையில்லா அன்னையே...!
உன்னருகே நான் இருந்தால் 
உலகமும் என் கையில்....!

விலகி போன உன்னால் 
விட்டு விட்டு போகின்றது மூச்சும்...!

தேவதை உன்னைக்காணாது  
தேடுகின்ற விழிகள் தோற்றுப்போய்  
தேம்பி தேம்பி அழுகின்றன...!

பரிவில் மகுடம் சூட்டியவளே  - உன் 
பிரிவில் விழி நீர் முட்டியிவள் 
நெஞ்சம் வெடித்து குமுறுகின்றாள்....!!!

கடிந்து கொண்ட கணங்கள் 
மடிந்து போகாமல் இதயக்கூட்டில் 
உயிர் வாழ்ந்து உதைக்கின்றன உள்ளமதை...

விடிந்திடாத இரவான பொழுதில் 
விழி திறந்து கிடக்கின்றேன்..! 
வழிந்தோடும் கண்ணீரிலும் 
வந்து தாலாட்டிப்போகின்றாய்....!!!

கடல் கடந்து பயணித்து - நீ 
கரை சேர்வதற்கிடையில் 
கடல் மட்டம் உயர்கின்றது - என் 
கண்ணீர் துளிகளால்....!  

தள்ளாடி வந்திங்கு 
தரை மேல் சாய்ந்து விட்டேன்...!
தடக்கி விழும் இடமெல்லாம் 
தாயே உன் விம்பமடி...!
தடவிப்பார்த்து உன் 
தடம் தேடிக்கொள்கின்றேன்....!  

உனக்குள் இன்னமும் மூழ்கி
உறைந்து கிடக்கின்றேன்...!
கருவறை இன்னும் எனக்காய்
கனிந்து நிற்கும் பிறந்த வீடுதான்...!

உருகி நான் ஒளிந்து கொண்டு
உயிர் பெற்று திரும்பிக்கொள்ளும்
உந்தன் அன்பு மடி - இன்று
உலகின் ஒரு மூலையில்
தனித்திருக்க இங்கு நான்
தவித்திருக்கின்றேன்...!

நிழலாடும் உன் 
நினைவுகளை 
நிறுத்தி வைத்து - மீண்டும் 
நினைக்கின்றேன்....!

இணையம் காவி வரும் உன்
இன்ப முகத்தினை காண்பதற்கே
இமை மூடாத விழிகள் தாங்கி
இரவெல்லாம் காத்திருப்பேன்...!

ஆடை போர்த்தி 
ஆனந்தம் கொள்கின்றேன்...!
ஆராரோ பாடி 
ஆற்றுப்படுத்துகின்றது - உன்  
ஆடை கூட.... 
ஆனாலும் 
இழுத்து போகின்றது உன் நினைவுகள் 
இதயம் தடுமாறுகின்றது....
இடம் மாறி போனதாலோ...?

புலம்பெயர்ந்து வந்திங்கு 
புனித அன்னையவளின் அன்பினை இதயத்தினுள் 
புதைத்து நெஞ்சம் ஏங்கித்தவிப்பதிலும்
புதையுண்டு போகலாம் ஈழத்தில்....!




அரசி நிலவன் 

Wednesday 4 December 2013

வெறுமை....!!!


வெள்ளி ஒடமொன்று வானக்கடலை கடக்க,,,
வெண்மேக கூட்டங்கள் தாய் வீடு செல்ல,,,

இதமான இளங்காற்றுக்கு,,,, 
இளஞ்சிவப்பு ரோஜா செடி.. 
இடுப்பை வளைக்க,, 

கருத்தில்லா கவி நான் பாட...
கண்ணுறங்காமல் நீ கேட்டிருக்க,,,

புதியதோர் உலகத்திற்கு 
புட்பக விமானத்தில் நாம் பறக்க ,,,,,

கடவுள் வந்திருந்தால் கூட,
கவனிக்க முடியாதவர்களாய்..

மிக்க வேலைப்பளு...!!
மிதமான ஒரு செருக்கு...!!!

காதலிலே கரை கண்டதாய்,
காவியத்து நாயகர்களாய்...

அர்த்தமில்லாத நினைப்புகள்,,,
தொடர்பில்லாத கனவுகள்,,,

உணராத பலவற்றை - இன்று 
உணர்த்துகின்றது உன் பிரிவு....! 

வெண்ணிலா இன்று வானக்கடலிலே,,,தத்தளிப்பதாய் 
வெறுமையாய் ஒரு காட்சி... 

என்றும் போல,, 
எல்லாமே ஒன்றாயிருக்க,,

எனக்கு மட்டும் ஏன் வெறுமையாய்,,,
என் இதயம் வெறுமையானதாலா..??? 



அரசி நிலவன் 


" இதயம் வெறுமையானதாலா? " என்ற தலைப்பில் எழுதிய எனது கவிதையின் கன்னிப்பயணத்தில் இடம்பெற்ற ஒரு கன்னிக்கவிதை தான் இது. இக்கவிதைக்கு ஐந்து வயது ஆகும் இவ்வேளையில்...உலக தமிழ் இணைய வானொலியின் கவிதையும் கானமும் நிகழ்ச்சியின் " வெறுமை " தலைப்பிற்காக மீண்டும் இன்று பயணிக்கின்றது.. 

Tuesday 3 December 2013

அக்கினி வளர்த்து
அருந்ததி பார்த்து
அம்மி மிதித்து
அடி எடுத்து வைக்கும்
வாழ்வது துலங்கிடும்....
அக்கினி சாட்சியாய்
இரு மனம் ஒரு மனம்
ஆகிப்போகும் திருமணம்
ஆயிரம் காலம் வாழும் என்றால்....
ஆனந்த புரத்தில் பற்றி எரிந்த
அக்கினி குண்டுகளால் பொசுங்கி
அருமந்த உயிர்கள் துடி துடிக்க
படுகொலையானதுக்கும்
பதறி துடித்து சாட்சிக்கு வருமா??
அக்கினி...?

அன்றில் எய்தவர்களை
ஆயிரம் காலம் வாழ வைக்குமா..???

தகிக்கும் அக்கினிக்கு
தரம் தெரிவதில்லை.....
எரியும் எரிபொருளாக்கி
எரிந்து தணியும்.....!!!
வேண்டியது வேண்டாதது
நல்லது கேட்டது நடுத்தரமானது
பிரித்து பார்த்து பேதம் காட்டாமல்
எரித்து தள்ளி சாம்பலாக்கி போகும்....!!!

சுட்டெரிக்கும் சடுதியாய்
பட்டெரிந்து சாம்பலாகி
விட்டெரிந்து போகும்
அக்கினிக்கு நிகர் அக்கினியே...!!!


சொத்து...!!!



செத்து மடிந்தும் உலவும்
பித்து பிடித்த வாழ்வதில் - உள்ளம்
குத்துப்பட்டுக் குதறுப்பட்டு தளர்ந்தாலும்
பூங்கொத்து போல் மலர்ந்தது
பெத்து எடுத்த கண்மணிகள்
முத்துக் கொட்ட சிரித்த போதினிலே...

பத்து உடன் பதினைந்தாய் நிலையில்லா
சொத்து யாவும் போயினும் ஒளி வீசும்
முத்துக்கள் ஆகி வந்த என்
வித்துக்கள் என்றும் நிலையான
சொத்துக்கள் எனக்கு...!!!


அலையில்லா கடல் உண்டோ
தலையில்லா மனிதருண்டோ??
துன்பம் இல்லா வாழ்வுண்டோ...??
இன்பம் இல்லா குழந்தையுண்டோ..??
அள்ளி எடுத்து பருகும் அமுதசுரபிகள்
துள்ளி வரும் பாதம் முகர்ந்து என் வலிகளை
தள்ளி வைக்கின்றேன் தொலை தூரத்தில்...

கொஞ்சி பேசும் பிஞ்சு மொழி
விஞ்சி நிற்கின்றது விம்மல்களைதாண்டி....
வலிகள் பிரசவித்த கண்ணீரோடு
வசந்தங்களை கொட்டும் மழலைகளை
வாரி அணைத்திட அரும்பும் ஆனந்த கண்ணீரும்
மாரி மழையாகி சொத்தாகி போனது...!


செந்தாமரையின் மலர்ச்சி கொண்டு
ரோஜா இதழின் மென்மை கொண்டு
நடை பயிலும் மலர்த்தோட்டங்கள்
தடை இன்றி சிரிக்கும் வரை வாட்டம்
காண்பேனோ...??


மாதுளம் முத்து பற்கள் கொண்டு மெல்ல
நறுக்கி பதம் பார்க்கும் இன்ப வலி தந்து
முகம் மூடி ரசிக்கும் கிளியே...!
கண்ணீர் கொண்டால் கண் பொத்தி
விளையாடும் மான் குட்டியே...!
எந்தன் குயில்களின் மழலை இசை இன்றி
சிறப்படைவதில்லை எனக்கான கவிதையும் கானமும்..


கோடி என்ன கொட்டி கொடுத்தாலும்
கொஞ்சிப்பேசும் வண்ண குஞ்சுகளுக்கு ஈடாகுமோ???
சொத்தான என் முத்துக்களை விட
சொத்து என்று உளதோ இவ்வுலகில்...???



அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "சொத்து " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/





Monday 2 December 2013

பூவிதழ்...!!!


தேன் கொண்ட மலர் ஒன்றின்
தேவாமிர்தம் சுவைக்க நாடி வந்த
தேனீயின் தொடுகையால் வாடி விழுந்த
தேனிதழின் மென்மையிலும் மென்மையாம்
தேடி வந்த தேவதையின் செவ்விதழ்...!!


பூவின் வாசம் நுகர்ந்த செவ்விதழ்
பூவிதழின் வன்மையால் வாடிப்போனது...!
பூவிதழ் புதியதாய் நாணி நின்றது....!

மென்மையின் தன்மையில் வன்மை பெற்ற
மெல்லிய பூவிதழ், மெல்லிடையாளின்
மென்மையில் தொன்மை இழந்தது...!


சின்னத்தேனீகளும் ரீங்காரித்து இகழ்ந்தன....!
சின்னப்பூவின் இதழ்கள் கண்ணீரில் குளித்தன..!
திமிர்கொண்டு நிமிர்ந்த இதழ்கள் தலை குனிந்தன..!
திண்மை பெற்ற மென்மையினை பெண்மையிடம்
தொலைத்து விட்ட பூவிதழ்கள் துவண்டு உதிர்ந்தன...!
தொன்மை இழந்து விட்ட சோகத்தில் மண்ணிலும் புரண்டன...!
தொட்டுச்செல்லும் எறும்புகளிடம் சொல்லிச்சொல்லி அழுதன...!



அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பூவிதழ் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Thursday 28 November 2013

எழுதல்...!!!


எழுதல் தாமதமாகி போன

விழுதல் காரணமாய் விதைகள்
உழுதல் பெற்று தினம்
அழுதல் நிரந்தரமாகி
வாழுதல் வழக்கமாகிப்போனதன்றோ..?

சூழுதல் பெற்ற அதிகாரத்தால் - கை

நழுவுதல் ஆகிய தாய் மண்ணும்
பழுது பெற்ற போராட்டமுமாய்
புழுவாகிப்போன உயிர் மறவர்கள்..!!
பொழுது பிறக்கும் என்ற நம்பிக்கையிலேயே...
மழுப்பிப்போகும் பொழுதுகள்...!!

முழுதும் இருள் சூழ்ந்து - உதிரம் கொண்டு

மெழுகுதல் பெற்ற மண்ணில் வழுக்கி
வழுவுதல்ஆகிப்போன எம்மினத்து வாழ்வு..
எழுந்து கொள்ளட்டும்...!!!
தழுவிப்போன மறவர்களின் மூச்சுக்காற்றினை
நுகர்ந்து.....

கழுவிப்போன உதிரங்களை உரமாக்கி

உழுதிடுவோம் எதிரிகளின் நம்பிக்கையினை
எழுந்து விழுந்த நாம் பழுதாகிடாமல்
விழுந்து மீண்டு எழுந்திடுவோம்...!!!



அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "எழுதல் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Wednesday 27 November 2013

வீரத்தோடு நிமிர்ந்து நிற்கும் வீர மறவர்களே..!!! 






தமிழீழத்துக்காக,

தமிழினத்துக்காக,
துடித்து களம் மீதேறி
தியாக வேள்வியிலே
நீறான திரவியங்களே..!!

பஞ்சணையை தூக்கி எறிந்து

ஏவுகணையை தோள் மீதேற்றி
உயிரை விலை கொடுத்த
உத்தம புத்திரர்களே..!!!



படி தாண்டா கண்மணிகள்

வெடி தாங்கி போயினரோ ..!!


காசினியில் இறைகளாய் 
கார்த்திகையில் திருவிழா காணும் 
காஞ்சனத்து முத்துக்களே....!!!

காங்கையாகிப்போகும் உடல்
காவியத்து நாயகர்களை எண்ணி 
காந்தலித்து போகும் நெஞ்சம்...
காந்தளின் காத்திருப்பை கண்ணுற்று 

உதிரங்களால் காவியம் எழுதிப்போனவரே...!!
உயிரோவியமாய் உயர்ந்தவரே...!!
உயிர் கொடுத்து எங்கள் இனப்பயிருக்கு 
உரமாகி உதிரம் பாய்ச்சி நீராகி தியாகமானவரே...!!

கந்தக நெடி வாசனையோடு..

கல்லும் முள்ளும் கடந்து..
நீவிர் மீட்டெடுத்த - அங்குல
நிலம்  கூட இன்று எம்மிடமில்லை - எம்
நிம்மதிக்காக,,
நித்திரை தொலைத்து..,
நீங்கள் சிந்திய குருதி...,
உங்கள் வித்துடல்களை,,  தானும்
பொத்தி வைக்க முடியா பாவிகள் நாம்
பொல்லாத சிங்களத்தோடு போராடாது
கார்த்திகை மாதத்தில் மட்டும் குரல் கொடுக்கும்
கோழைகள் எம்மை பார்த்து  ஏளனமாய் சிரிக்காதீர்..!!!
வெட்கி தலை குனிந்து அஞ்சலிக்கின்றோம்....!!!



வீறு கொண்டெழுந்து,,

வீர மரணத்தில் வீழ்ந்து,,
வித்தாகி,,
விருட்சமாகி ,,
வீரத்தோடு நிமிர்ந்து நிற்கும்
வீர மறவர்களே..
வீர வணக்கங்கள் உங்களுக்கு...!!!


அரசி நிலவன்



அரும்பதங்கள்

++++++++++++

காசினி - அகிலம்

காஞ்சனம் - தங்கம்
காங்கை - வெம்மை
காந்தல் - எரிந்து
காந்தள் - கார்த்திகை மலர் 

மலரும் தமிழீழமதில்,, மலர்ந்திடுவீர் கார்த்திகை பூக்களாய்.....!!!




கருவறையில் - தமிழீழ
கனவோடு
கருத்தரித்து,,
களமாடி,,
கல்லறையில் துயில் கொள்ளும்
கண்மணிகளே....!!!



புயலாய் புறப்பட்ட - வெஞ்சின

புலி மறவர்களே...!!!

மன்னவன் "கரிகாலன்" பாதையில்,

மனவுறுதியுடன் ஏகி,,
மண்ணுக்காய் வித்தாகி
மண்ணோடு சங்கமமாகி,,
மனக்கனவோடு உறங்கும்..
மரகதங்களே...!!!

சிந்திய குருதி காய்ந்தாலும்,,

சீறிய சன்னங்களின் ஒலி மறைந்தாலும்,,
உம் கல்லறைகள் விறாண்டப்பட்டாலும்,,
கல்லான எம் கடவுள் உயிராவான் -எம்
கனவு நனவாகும்...!!!



கல்லறை பூக்களே - நீவிர்

துயில் நீங்கி எழும் காலம்
வெகு தூரமதில் இல்லை...!!
தங்கப்பதுமைகளே கண்திறந்து பாரீர்...!!
தமிழீழ வேட்கையோடு - உங்கள்
தமிழீழ மக்கள் நாம் என்றும் களத்தில்..
மலரும் தமிழீழமதில்
மலர்ந்திடுவீர் கார்த்திகை பூக்களாய்.....!!!

 - அரசி நிலவன் -


Tuesday 26 November 2013

கார்த்திகை தீபங்களே...!!!

தலைவன் சொல்லை செயலில் நிறுத்தி,
தரணி போற்ற, மாவீரரான கண்மணிகளே...!

சொப்பனத்திலும் தமிழீழம் காணும்,

சொல்லின் வேந்தர்களே...!

களமாடி கனிந்து சென்றிட்ட

கல்லறை தெய்வங்களே...!

சாவின் பின்னும் வாழ்வினை தொடருகின்ற 

சாகா வரம் பெற்ற சரித்திர நாயகர்களே...!



இருண்ட எம் தேசத்தின் மேல், 
விளக்கேற்றி சென்ற கார்த்திகை தீபங்களே - எங்கள்
இதயங்களில் கிளை பரப்பி நிற்கும் பெரு விருட்சங்களே..! 
மண்ணில் விழுந்த வித்துக்களே..!
வரலாறு செப்பிடும் இலட்சிய புருஷர்களே....!


கனவுகள் மெய்ப்பட..காற்றோடு கலந்து விட்ட 
காவிய நாயகர்களே...!
கார்த்திகை நாளில் ஒரு சத்தியம் பூணுகின்றோம்... 
உங்கள் சுவடுகளை தொடர்ந்தபடி,
உங்கள் இலட்சிய நெருப்பாய் நாமும் கொழுந்து விட்டு எரிவோம்....!!!