Search This Blog

Showing posts with label முதியோர். Show all posts
Showing posts with label முதியோர். Show all posts

Thursday 24 October 2013

இலுப்பையடிச்சந்தி "மடம்"


மறந்தும் எட்டிப்பார்த்திடார்...!
மந்தைகளும் காக்காய்களும்
மகிழ்வோடு இளைப்பாறி இரை மீட்டி
மலம் கழித்துப்போகும் கூடம் - துர்
மணம் வீசும் என்னருகே
மறந்தும் மனிதர்கள் எட்டிப்பார்த்திடார்...!

மதிப்பற்று மண்ணாய் போய்
மனம் புண்ணாய் நொந்திருந்தேன்...!!!

மதுரமாய் இனித்தது வாழ்க்கை..!
மங்களகரம் எட்டிப்பார்த்தது வாசலில்...!

மகன்களின் கரிசனை விளங்கி
மதிகொண்ட பெற்றோரின் தெரிவாகி
மதிற்பிற்குரிய இருப்பிடமாகிப்போனேன்..!

அநாதரவற்று போன நானும்
அடைக்கலமற்ற அவர்களுமாய்
ஆனந்தமாய் கழிகின்றது பொழுது...!!!
ஆடுகளும் தங்கித்தான் போகின்றன..!!

தள்ளாடித் தள்ளாடி
தன்னந்தனிமையில்
தவித்து வாழ்வினை வெறுத்து வரும்
தனித்தவர்கள்  தயங்காமல்
தங்கி உயிர்  நீங்கியும் போவதுண்டு...!!

இல்லங்களை வரிசையாய் கட்டி
இருப்பதற்கு ஒன்று கூட
இல்லாமல் போனதற்கு
இயன்றவரை இதைப்போன்று
இன்னும் பல கட்டியிருந்தால்
இல்லாதோர் இன்பமாய்
இருந்திருப்பார்களே...
இங்கிருந்து முணு முணுக்கின்றனர்
இப்போதைக்கு ஒன்றும் இல்லாதோர்...!

இரத்தத்தால் ஒன்று பட்டு
இரு மனங்களால் வேறுபட்டு
இரண்டகம் புரிந்திடும்
இன்றைய மகன்களும் - அச்சம் மடம் எனும்
இலக்கிய நாற்குணங்களும்
இல்லாமல் போன நவீன மருமக்களும்
இதே வழியில் நாளை என்னை நாடி வரலாம்...!
இன்முகத்துடன் வரவேற்கின்றேன் நான்..
இப்படிக்கு மகிழ்வோடு
இலுப்பையடிச்சந்தி "மடம்"



அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மடம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/